One Man Army – 1

இந்த ஆர்மரி ஸ்கொயர் விவகாரத்தில் நான் ஒன் மேன் ஆர்மியைப் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.  இப்படிச் சொல்வதன் மூலம் இந்த விஷயத்தில் என் தோளோடு தோள் நின்று எனக்கு ஆதரவு அளிப்பவர்களை நான் அவமதிப்பதாக அவர்கள் நினைத்து விடக் கூடாது.  நான் இப்படி ஒன் மேன் ஆர்மி என்று சொல்வதன் காரணம், ஆர்மரி ஸ்கொயர் செய்த அவமானகரமான காரியம் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தவிர வேறு எந்த ஆங்கில ஊடகத்திலும் செய்தி வரவில்லை.  நடந்திருக்கும் விஷயங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில்.  ஆனால் ஒரே ஒரு செய்திதான் வந்தது. 

நடந்திருக்கும் விஷயம் என்ன?  ஆர்மரிக்காரர்கள் ராஸ லீலாவில்  ஆட்சேபணைக்குரிய பகுதிகள் இருக்கின்றன என்று கருதினால் என்னை அல்லவா கேட்டிருக்க வேண்டும்?  அவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை.  தொடர்பு கொண்டது, என்னை பயமுறுத்தும் வகையில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதற்காக மட்டுமே.  நான் என்ன செய்ய முடியும்?  உன்னை நியூயார்க் கோர்ட்டில் வைத்து ”செய்வோம்” என்றால் என் கதி என்ன?  நியூயார்க்குக்கு கோர்ட் கேஸுக்காகப் போய் வரும் அளவில் உள்ள ஆளா நான்?  நோட்டீஸைப் பார்த்த நண்பர்கள் வாயையும் சூவையும் மூடிக் கொண்டு கிடங்கள், தப்பு நம் மீதுதான் என்று அறிவுரை கூறுகிறார்கள்.  அதாவது, நாம்தான் அவர்களிடம் நாவலில் உள்ள தாய்லாந்து பகுதியைச் சொன்னோமாம்.  சரிதான்.  இந்தக் காலத்திலும் ராமரைப் போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள்.  அதையும் பார்த்து விட்டுத்தானே ஆர்மரிக்காரர்கள் ராஸ லீலாவை குறும்பட்டியலில் சேர்த்தார்கள்?  அதைப் பார்த்து விட்டுத்தானே ராஸ லீலாவை நாங்கள் ஜூரிகள் அனைவரும் ஒருமனதாக விருதுக்குத் தேர்ந்தெடுக்கிறோம் என்று மொழிபெயர்ப்பாளருக்குக் கடிதம் எழுதினார்கள்?  ஆங்கில எழுத்தாளர் நண்பர் ஒருவர் 900 பக்கங்களில் ஒரு நாவல் எழுதினார்.  ட்ராஃப்டை எனக்கு அனுப்பினார்.  நாவல் வெளிவராத நிலையில், அதைப் படித்த முதல் ஆள், ஒரே ஆள் நான்தான்.  நான் கருத்து சொன்ன பிறகு பதிப்பகத்துக்கு அனுப்பினார்.  உலகின் பிரபலமான பதிப்பகம்.  நாவலில் 300 பக்கத்தை எடுக்க வேண்டும் என்றது பதிப்பகம்.  நண்பரும் ஒப்புக் கொண்டார்.  நாவலும் வந்து விட்டது.  பதிப்பகம் சொன்ன காரணம், இப்போதெல்லாம் எல்லோரும் 300 பக்கத்துக்குள்ளே இருந்தால்தான் படிக்கிறார்கள், பெரிதாக இருந்தால் வாங்குவதில்லை.

அப்படி ஒரு உலகப் பிரபல பதிப்பகம்தான் என்னுடைய மார்ஜினல் மேனில் பாதியை வெட்ட வேண்டும் என்றது.  நான் மறுத்து விட்டு ஸீரோ டிகிரி மூலம் வெளியிட்டேன்.  உலகம் அதை செல்ஃப் ப்ப்ளிஷிங் என்கிறது.  அதனால் இப்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.  எதையெல்லாம் நீக்கச் சொல்கிறார்களோ அது நூறு பக்கத்துக்கு மேலே இருந்தால் அதை ஒரு தனி நாவலாகக் கொடுத்து விடுவது.  அதனால் இனிமேல் நாவலைப் பாதியாக வெட்ட வேண்டும் என்றாலும் வெட்டத் தயார். 

ஆனால் ஆர்மரிக்காரர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை.  எல்லாமே மொழிபெயர்ப்பாளரோடுதான்.  ஆனால் வக்கீல் நோட்டீஸில் மட்டும் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.

உலகம் ரொம்பச் சின்னது.  ஆர்மரி ஸ்கொயரின் நடுவர் தலைவர் ஜேஸன் க்ரூனேபாம்.  இந்த ஜேஸன் என் நண்பரும் ஹிந்தி எழுத்தாளருமான உதய் ப்ரகாஷின் மொழிபெயர்ப்பாளர்.  உதய் மூலமாக ஜேஸன் எனக்கும் நண்பர்.  ஸீரோ டிகிரி நாவலைப் படித்தவர்.  படித்து விட்டு “உங்களுக்காகவே நான் தமிழ் படிக்க விரும்புகிறேன்” என்று எனக்குக் கடிதம் எழுதியவர்.  பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். அவர்தான் இன்று ஆர்மரி ஸ்கொயர் விருதுக் குழுவின் தலைவர். 

இதையெல்லாம் இதுவரை நான் சொல்லவில்லை.  அதனால்தான் இந்த விஷயத்தில் நான் தலையிடவே இல்லை.  இப்போது எனக்கும் வக்கீல் நோட்டீஸ் வந்திருப்பதால் எழுதுகிறேன்.

இந்த நடுவர் குழு குறும் பட்டியலில் ஒரு நூலை விருதுக்குத் தேர்ந்தெடுத்து ஓப்பன் லெட்டர் பதிப்பகத்துக்குக் கொடுக்கிறது.  அந்தப் பதிப்பகத்தின் தலைவர் Chad W Post ஸீரோ டிகிரி நாவல் ஆங்கிலத்தில் வந்த போதே அதற்கு ஒரு மதிப்புரை எழுதி, ஸீரோ டிகிரியைத் தனது ரோச்சஸ்டர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலும் சேர்த்தவர். 

ஓப்பன் லெட்டர் பதிப்பகத்தின் மூலம் ஆண்டுக்குப் பத்து நூல்கள் வெளிவருகின்றன.  அதில் என்னுடைய ராஸ லீலாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள், ஆர்மரி ஸ்கொயர் சொல்வது போல் நாவலில் ஆட்சேபணைக்குரிய பகுதியே எதுவும் இல்லை என்று நான் சாத்-க்கு நேரடியாகவே கடிதம் எழுத முடியும்.   

நீங்களே சொல்லுங்கள், ஒரு நாவலில் பத்து பக்கத்தைப் படித்து விட்டு அது பற்றி ஒருவர் எப்படி முடிவுக்கு வர முடியும்?  ஆர்மரி நிறுவனத்துக்கு என்னுடைய கேள்வி மிக எளிமையானது.  பத்து பக்கத்தைப் படித்து முடிவு செய்கிறீர்கள்.  முடிவை அறிவித்து நாவலைப் பிரசுரத்துக்கு ஏற்றுக் கொண்ட பிறகு அதன் வேறு பக்கங்களில் ஆட்சேபணைக்குரிய பகுதி இருந்தால் என்ன செய்வீர்கள்?  அந்த ஆசிரியரிடம் கேட்டு அதை நீக்குவீர்கள்தானே?  அதை ஏன் எனக்கு செய்யவில்லை?  பயம்தானே?  இங்கேயிருந்து உங்களை பயமுறுத்தியவர்கள் சொன்னவுடன் பயந்து விட்டீர்கள்?  அதுதானே உண்மை?  இப்படி மொட்டைக் காடுதாசிக்கெல்லாம் அஞ்சுபவர்கள் இப்படி சர்வதேச அளவில் ஒரு போட்டி நடத்தலாமா?

என் நண்பர் சொன்னார், வேண்டாம் சாரு, விட்டு விடுங்கள்.  உங்களுடைய எழுபது வயதில் நீங்களே உங்களுக்காக வாதாடுவதை நிறுத்துங்கள்.  நான் வாதாடுகிறேன். 

அந்த நண்பர் தமிழ்நாட்டில் வலுவானவர்.  ஆனால் நியூயார்க்கிலிலிருந்து ஒருவன் சென்னை எழுத்தாளனை மிரட்டுகிறான்.  அதற்கு நியூயார்க்கில்தானே எதிர்வினை வர வேண்டும் நண்பா என்கிறேன்.  நேற்று நியூயார்க்கில் இருந்து வரும் ஒரு பத்திரிகையிலிருந்து அழைப்பு வந்த்து.  அது என் முயற்சியால் மட்டுமே நடந்தது. 

பெருமாள் முருகனுக்கு நடந்ததும் எனக்கு நடப்பதும் ஒன்றுதான் என்கிறேன்.  முருகனுக்கு உயிர் அச்சுறுத்தல்.  எனக்கு நடந்தது, என் நாவலைக் கொன்று விட்டார்கள். இன்னமும் ஆர்மரி ஸ்கொயர் பக்கத்தில் ராஸ லீலாவை அசிங்கப்படுத்தியது வெளிப்படையாக இருக்கிறது.  அதற்காகவே நான் அவர்கள் மீது மான நஷ்ட வழக்குப் போடலாம்.  என்னிடம் அதற்கான பணமும் நேரமும் இல்லை.  ஒரு புத்தகத்தைக் கொல்வதும் அதை எழுதியவனைக் கொல்வதும் ஒன்றுதானே?  அதை நீங்கள் ஒப்புக் கொண்டால் முருகனுக்கு நடந்ததும் எனக்கு நடந்ததும் ஒன்றுதான்.  

அதனால்தான் ஒன் மேன் ஆர்மியாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறேன்.  இப்படித்தான் நாற்பது ஆண்டுகளாக தமிழ்ச் சூழலில் சண்டையிட்டேன்.  இப்போது அமெரிக்காக்காரனோடு சண்டையிடுகிறேன்.   

https://www.armorysv.com/a-note-about-the-prize