ஒன் மேன் ஆர்மி – 2

ஒவ்வொரு விருதுக்குப் பின்னாலும் ஏகப்பட்ட ஊழல் கதைகள் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.  அது தெரிந்தும் ஏன் விருது பற்றி இத்தனை கவலைப்படுகிறீர்கள்?

இது என்னிடம் பலரும் முன்வைக்கும் கேள்வி. 

என்னுடைய எளிமையான பதில்: 

நான் ஒரு சர்வதேச எழுத்தாளன்.  என் எழுத்து தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரித்தானது அல்ல. 

எல்லா எழுத்தாளர்களுமே சர்வதேச அளவில் வாசிக்கப்பட வேண்டியவர்கள்தான்.  மற்ற மொழி எழுத்தாளர்களுக்கெல்லாம் அது வாய்த்திருக்கிறது.  தமிழ் எழுத்தாளனுக்கு மட்டும் ஏன் அது நடப்பதில்லை?

ஒரு ஹாருகி முராகாமி சர்வதேச அளவில் வாசிக்கப்படுகிறார்.  அவரை விட நன்றாக எழுதும் நான் மட்டும் ஏன் தமிழ்நாட்டில் மட்டுமே ஆயிரம் பேரால் வாசிக்கப்பட வேண்டும்? 

விருது வாங்கினால் மட்டுமே ஒரு எழுத்தாளர் அவருடைய மண்ணைத் தாண்டி போகிறார்.  அதனால்தான் விருதுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நேற்று சிமாமந்தா ந்கோஸி அதிச்சி என்ற நைஜீரிய எழுத்தாளரின் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.  அவருடைய “A private experience” என்ற கதையை விட பல நூறு மடங்கு முக்கியமான கதை என்னுடைய திர்லோக்புரி. 

அதிச்சிக்கு நாற்பத்தைந்து வயது ஆகிறது.  அமெரிக்கக் குடியுரிமையும் நைஜீரியக் குடியுரிமையும் வைத்திருக்கிறார்.  அமெரிக்காவில் பதினைந்து பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறது.  ஐரோப்பாவில் ஐந்தாறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கிறது.  இங்கே நான் அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பித்தால் ஐந்து முறை மறுக்கப்பட்டிருக்கிறேன்.  ஜெர்மன் தூதரகமும் என் வீசாவை மறுத்து விட்டது.  கனடா தூதரகமும் என் வீசாவை மறுத்து விட்டது.  பிரிட்டிஷ் தூதரகமும் என் வீசாவை மறுத்து விட்டது. 

இதையெல்லாம் வெளியே சொன்னால் அதற்குப் பெயர் அரற்றுவதா? 

எனக்கெல்லாம் ஃப்ரான்ஸ் ஷெவாலியே விருது தரக் கூடாது.  குடியுரிமை தர வேண்டும். ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் எனக்கு கௌரவ டாக்டர் பட்டம் தர வேண்டும். அந்த அளவுக்கு ஃப்ரெஞ்ச் த்த்துவம், ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றி எழுதியிருக்கிறேன்.  ஆனால் என் பெயர் கூட இங்கே சென்னையில் உள்ள ஃப்ரெஞ்ச் தூதரகத்துக்குத் தெரியாது. 

இது எதுவும் ஏன் நடக்கவில்லை?  இது அவர்களின் தவறு அல்ல.  நம்முடைய பண்டத்தை நாம்தான் விற்க வேண்டும்.  உங்களுக்கே உங்கள் பொக்கிஷங்களைப் பற்றித் தெரியவில்லை என்பதால் பொக்கிஷங்கள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.  

இதைத்தான் நான் நேற்று பேச விரும்பினேன்.  ஆனால் கடைசி நிமிடத்தில் ஏன் இலக்கியம் என்று பேசுவது நல்லது என்று தோன்றியதால் பேசுபொருளை மாற்றி விட்டேன்.