இரண்டு தினங்களுக்கு முன்பு மதியம் மூன்று மணி அளவில் வினித் ஃபோன் செய்தார். உங்கள் வீட்டின் கீழேதான் அராத்துவும் நானும் நிற்கிறோம், கீழே வருகிறீர்களா?
உடனே கீழே கிளம்பினேன்.
எங்கே கிளம்புகிறாய் என்றாள் அவந்திகா. ஏனென்றால், வேட்டி சட்டையோடு நான் வெளியே போனதில்லை.
ஏற்கனவே நான் திட்டமிட்டு வைத்து விட்டதால் எந்த சுணக்கமும் இல்லாமல் ”செல்வா வந்திருக்கிறார், பார்த்து விட்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டுக் கீழே இறங்கினேன்.
(சீனி என் வாழ்விலிருந்து தடை செய்யப்பட்டவர். வினித் அவந்திகாவை அம்மா என்று அழைக்காமல் அவந்திகா என்று அழைத்ததால் என் வாழ்விலிருந்து முழுமையாகத் தடை செய்யப்பட்டவர்.)
கீழே ஒரு பிரம்மாண்டமான இரும்பு கேட் இருக்கிறது. அதைத் திறந்து கொண்டு வெளியே போனேன்.
நான் என்ன சொல்லி விட்டு வந்தேன் என்பதை அவர்களிடம் சொன்னேன். நீங்கள் இந்தப் பெரிய கேட்டைத் திறந்து கொண்டு வருவதைப் பார்க்கும்போது ஏதோ செண்ட்ரல் ஜெயிலிலிருந்து வருவது போல் தெரிகிறது என்றார் சீனி. (இதனால்தான் இவரைத் தடை செய்து வைத்திருக்கிறாள் அவந்திகா என்று நினைத்துக் கொண்டேன்.)
இன்று ஒரு நண்பரிடம் அவந்திகா நூறு ஆண்டுகள் வாழ்வாள் என்றேன்.
ஓ, அப்படியானால் நீங்கள் தனியாக வாழ ஆசைப்பட்டது நிராசை ஆகி விடுமே என்றார் நண்பர்.
ஆகாது. இப்போது நான் தனியாகத்தான் இருக்கிறேன். எடுபிடி வேலைக்கு ஆள்கள் இருக்கிறார்கள். என்னை அழைப்பதில்லை. மாதத்திற்கு ஒரு வாரம் வெளியூர் ஓடி விடுகிறேன். இதோ, இப்போது மூன்று வாரம் இலங்கைப் பயணம். திரும்பி வந்து சீலே. அதனால் வீட்டில் இருக்கும்போது வீட்டை ஜெயில் போல் நினைத்துக் கொண்டு எந்நேரமும் எழுதுகிறேன். அவந்திகா இல்லாவிட்டால், ஜாலியாக வைன் அருந்திக் கொண்டு, இசை கேட்டுக் கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பேன். இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். இதுதான் வித்தியாசம்.