நான் யார்?

நான் யார் என்று தெரியாத சிலர் றியாஸ் குரானா என்னை ஏறாவூருக்கு அழைத்தது பற்றி அவருக்கு உளவியல் நெருக்கடி கொடுப்பதை ஃபேஸ்புக் மூலம் அறிந்தேன்.  நான் ஒன்றும் நீயா நானா கோபிநாத் போலவோ திண்டுக்கல் லியோனி போலவோ இங்கே இலங்கை வரவில்லை.  நான் வந்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆயிற்று.  இதுவரை ஆன செலவு பூராவும் என்னுடையது.  இப்போது இங்கே பாசிக்குடாவில் தங்கியிருக்கும் செலவும் என்னுடையதுதான்.  என் வாசகர்களிடம் நான் பெற்ற சன்மானத்தினால் மட்டுமே இது எனக்கு சாத்தியமானது. இதுவரை ஊர் சுற்றியதில் பாதிக்கு மேற்பட்ட செலவை ஏற்றுக் கொண்டு என்னையும் சீனியையும் இந்தப் பத்து நாட்கள் வரையும் வடக்கும் வட கிழக்குமாகத் தன் காரில் கொண்டு சென்றது பூராவும் சீனியின் நண்பர்களான அனோஜனும் ப்ரசாந்தும்தான்.  விமான டிக்கட் உட்பட இதுவரை எல்லாமே என் செலவு.  இலங்கை வந்த பிறகு என்னையும் சீனியையும் கவனித்துக் கொண்டவர்கள், செலவில் பாதிக்கு மேல் ஏற்றுக் கொண்டவர்கள மேற்கண்ட இரண்டு நண்பர்கள் மட்டுமே.

ஆனால் றியாஸ் அழைத்திருக்காவிட்டால் இலங்கையைப் பார்க்காமலேயே என் வாழ்க்கைப் பயணம் முடிந்திருக்கும்.  கடும் எதிர்ப்புகளுக்கு இடையே என்னை ஏறாவூருக்கு அழைத்த றியாஸுக்கு என் நன்றி.

இந்த நிலையில் நான் யார் என்றே தெரியாத சிலர் அவதூறு கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் என்றாலே தீவிரவாதிதான் என்று அமெரிக்க ஊடகங்கள் உலகம் பூராவும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன.  அதையே இந்திய ஊடகங்கள் பலவும் எதிரொலிக்கின்றன.  தமிழில் நான் மட்டுமே அதை எதிர்த்து இலக்கியத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.  அ. மார்க்ஸ் செய்வது அரசியல் தளம்.  என்னுடைய வேலை இலக்கியத்தில்.  கேரளத்தில் மலபார் பகுதி முஸ்லிம்கள் வாழும் பிரதேசம்.  அங்கே கொண்டாடப்படும் ஒரே தமிழ் எழுத்தாளன் சாரு நிவேதிதாதான்.  அங்கே உள்ள ஆட்டோ ஓட்டுநருக்குக் கூட என் முகம் தெரியும், என் பெயர் தெரியும்.  காரணம், அங்கேயிருந்து வெளியாகும் மாத்யமம் என்ற பத்திரிகையில் பல ஆண்டுகள் அரபி மொழியில் வெளியாகிக் கொண்டிருக்கும் சமகால இலக்கியப் படைப்புகள் பற்றி எழுதி வந்தேன்.  மாத்யமம் ஜமாத் ஏ இஸ்லாமி அமைப்பினரால் நடத்தப்படும் பத்திரிகை.  அதில் நான் பல ஆண்டுகள் எழுதியதால் கேரளத்தின் ஹிந்து புத்திஜீவிகள் பலர் என்னை இஸ்லாமிய அடிப்படைவாதி என்று முத்திரை குத்தியது உண்டு.  இன்று என்னை சங்கி என்று உளறும் மண்டைகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க நியாயம் இல்லை.  குறைந்த பட்சம் தப்புத் தாளங்கள் என்ற நூலையாவது படித்திருக்கலாம்.  மம்முட்டிக்கு நான் அறிமுகப்படுத்தப்பட்ட போது அவர் மாத்யமம் இதழில் நான் எழுதி வந்த தொடர் பற்றிக் குறிப்பிட்டார்.  அதில் நான் லெபனான், ஈரான், ஈராக், சவூதி அரேபியா, சிரியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் அரபியில் எழுதிக் கொண்டிருக்கும் சமகால இலக்கியவாதிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பற்றி எழுதியிருக்கிறேன்.  இப்போது கூட அ-காலம் என்ற நூலில் பல சிரிய எழுத்தாளர்கள் பற்றி எழுதினேன்.  இதற்காக நான் படித்த நூல்கள் ஏராளம் ஏராளம்.  என் வாழ்வில் முப்பது ஆண்டுகளை அரபி இலக்கியத்துக்காக செலவிட்டிருக்கிறேன்.  இந்தப் பணிகளுக்காக எம்.எஃப். ஹுஸைனுக்குக் கொடுத்தது போல அரபு நாடுகள் எனக்குக் குடியுரிமை வழங்கியிருக்க வேண்டும். இப்போது கூட நான் எழுதியிருக்கும் நான் தான் ஔரங்ஸேப் என்ற நாவல் ஔரங்ஸேப் மீது கட்டமைக்கப்பட்டுள்ள வில்லன் என்ற பொய்யான இமேஜை உடைத்திருக்கிறேன். ஆயிரம் பக்க நாவல் அது.

ஃபேஸ்புக்கில் என்னைத் தூற்றும் மண்டைகள் இதை அறிந்து கொள்ள வேண்டும்.