வழக்கமாக
நான் செல்லும்
பெங்களூர் ரயில்
சென்ற முறை
சிறிய பெட்டி
சிறிய பெட்டியில்
பொருட்களைத் திணீப்பது
சிரமமாக இருந்தது
இந்த முறை
பெரிய பெட்டி
பெரிய பெட்டியை
தலைக்கு மேலிருந்த
கட்டையில் வைக்க
சிரமமாக இருந்தது
அருகில் நின்ற ஒருவர்
நான் வைக்கவா என
ஆங்கிலத்தில்
கேட்டார்
அவரைப் பார்த்தேன்
ஒடிசலான தேகம்
நவநாகரீகத் தோற்றம்
நாற்பதிலிருந்து ஐம்பதோ
அதற்கு ஒன்றிரண்டு
கூடுதலாகவோ
இருக்கலாம்
வேண்டாம், ஒரு கை
கொடுத்தால் போதுமென்
றேன்
கொடுத்தார்
சுலபமாக
வைத்தாயிற்று
என் இருக்கையில்
அமர்ந்தேன்
அவரென் பக்கத்து
இருக்கை
என்னவென்றறியாமல்
வெங்கி ராமகிருஷ்ணனின்
ஞாபகம் வந்தது
சென்ற முறை
இதே ரயிலில்
என்னெதிர்
இருக்கையில்
வெங்கி
நோபல் பரிசு
பெற்ற
அவர் நூல் பற்றி
தஞ்சாவூர்க் கவிராயர்
சொல்லியிருந்தார்
புத்தகம் படித்துக்
கொண்டிருந்த
வெங்கியிடம்
தயக்கத்துடன்
ஹலோ சார்
என்றேன்
நிமிர்ந்தென்னைப்
பார்த்தவர்
ஒரு கேளிக்குறியை
அனுப்பினார்
ஓரிரண்டு வார்த்தையில்
அறிமுகம் சொன்னேன்
ஒரு மில்லிமீட்டருக்கும்
குறைவான
தலையாட்டலுடன்
மீண்டும் புத்தகத்தில்
ஆழ்ந்தார்
இப்போது என்
பக்கத்திலிருந்தவருக்கும்
வெங்கிக்கும்
எனக்கும்
என்ன சம்பந்தம்?
பயணத்தில்
எனக்கு வாசிக்கப்
பிடிக்காது
இசை கேட்கப்
பிடிக்கும்
இன்று அதுவும்
பிடிக்காமல்
சும்மாவே இருந்தபோது
பெங்களூர் வந்தது
இறங்கும்போது
உதவி தேவையில்லாமல்
பெரிய பெட்டியை
இறக்கி விட்டேன்
பக்கத்து இருக்கைக்காரர்
தன் இரண்டு பெட்டிகளோடு
இறங்கத் தயாராக
நின்றார்
அவர் என்னைப்
பார்த்தார்
நானும் பார்த்தேன்
கதவு திறந்தது
ஒவ்வொருவராக
இறங்கி
நடந்தோம்