ஒரு பெண் என்னை அவமதித்தாள்
அதை என்னிடம் நீ
சொன்னாய்
புகாரொன்றுமில்லை
ஆனால் அதைச்
சொன்னபோது நீ
சிரித்தாய்
அதனால்தான் காயமுற்றேன்
பிறகு எல்லாம்
மறந்தும் போனேன்
ஆனால் அன்று மாலை
என் கைகால்கள்
நடுங்கத் தொடங்கின
நா உலர்ந்து போனது
கண்களிலிருந்து
கொட்டிய நீரை
அடக்கவும் திறனற்றேன்
செய்து முடிக்கக்
காத்துக் கிடந்த
பணிகள் ஏராளம்
எதுவும் நடக்கவில்லை
அசைவற்றுக் கிடந்தேன்
உன்னைத் தொலைபேசியில்
அழைத்துப் பேசினேன்
வார்த்தை எழவில்லை
ஆனால் உன் குரல்
கொஞ்சம்
இதமளித்தது
குரல் நின்றதும்
மீண்டும் அதே வாதை
அவமதிப்பில் வலியில்லை
உன் சிரிப்பே எனக்கு
நோய்மை தந்தது
எதுவும் செய்ய இயலாமல்
அப்படியே கிடந்தேன்
வழக்கம் போல் காலையில்
பேசினாய்
முந்தின நாள் நடநததெதுவும்
தடயம் வைத்துச் செல்லவில்லை
ஆனால் அன்று மாலையும்
அதே நோய்மை
அதே நடுக்கம்
அதே கண்ணீர்
மனமொரு பக்கம்
தேகமொரு பக்கமென
இழுபறி
ஏழரை ஆண்டுகள்
என்னை வீட்டுச் சிறையிலடைத்த
வேசிமகன் என் தகப்பன்
மீளவே இயலாதபடியென்னைச்
சிதைத்து விட்டானா
என்ன நடக்கிறது எனக்கு?
ஆனாலும்
உன் அணைப்பு என்னை
சொஸ்தம் செய்யலாம்
உன் மூச்சுக் காற்று
இந்தப் பாழ்குழியிலிருந்து
என்னை
மீட்டெடுக்கலாம்
Come soon
You bastard