ஆயுஷ் ஹோமம் சம்பந்தமான பிரச்சினைகள் தீராது போல் இருக்கிறது. இப்போது ஒரு வாழ்நாள் முழுதும் நீடிக்கும் ஒரு தடை போடப்பட்டிருக்கிறது.
நான் பொதுவாக வீட்டில் என் நண்பர்களைப் பார்ப்பதில்லை. காரணம், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வந்த நண்பர் சத்தமாக, “நீங்கள் பைசெக்ஷுவலா சாரு?” என்று கேட்டார். சமையல் அறையில் இருந்த அவந்திகா சாரூஊஊஊ என்று அலறினாள். ஓடிப் போய் என்னவென்று கேட்டேன். அந்த ஆளை முதலில் வீட்டை விட்டு வெளியே போகச் சொல் என்றாள். பிறகு ஒரு மாதிரி சமாளித்து அந்த நண்பரை வெளியே அனுப்பினேன். அவளுக்கு பைசெக்ஷுவல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்றே நினைக்கிறேன். ஆனால் ஏதோ செக்ஸ் சம்பந்தமாகக் கேட்கிறான் என்று புரிந்து விட்ட்து.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தச்சு வேலை செய்வதற்காக ஒரு நண்பர் என் வீட்டுக்கு வந்தார். நல்ல வாசகர். அவரை சாப்பிட அழைத்தாள் அவந்திகா. எனக்கோ உள்ளுக்குள் விதுக் விதுக் என்று அடித்துக் கொண்டது. ஐயோ, இந்த ஆள் சாப்பிடும்போது எதையாவது உளறி வைத்தால் நாம் செத்தோமே என்று. அதேபோல் அந்த நண்பர் சாப்பிட்டுக் கொண்டே “அராத்துன்னா உங்களுக்கு ரொம்ப்ப் பிடிக்குமா சார்?” என்று கேட்டார். வீட்டில் நிலைமை எப்படி என்றால், அராத்து எனக்கு ஃபோன் செய்தால் ஃபோனை எடுத்து “இனிமே சாருவுக்கு ஃபோன் பண்ணாதீங்க” என்று கடுமையான குரலில் சொல்லி ஃபோனை வைப்பாள் அவந்திகா. அதேபோல் ஒருமுறை எனக்கு எதிரேயே செய்தும் இருக்கிறாள்.
ஆக, இன்னொரு பாடம். அவந்திகாவே வற்புறுத்தினாலும் யாரையும் சாப்பாட்டு மேஜையில் உட்கார வைக்கக் கூடாது. யாரையும் வீட்டுக்கு அழைக்கக் கூடாது.
ஆயுஷ் ஹோமத்துக்கும் நான் எந்த நண்பரையும் அழைப்பதாக இல்லை. ஏனென்றால், அவந்திகாவுடன் நான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் என் நண்பர்களை அழைக்க எனக்கு அச்சமாக இருக்கிறது. அதனால்தான் நான் புத்தக வெளியீட்டு விழாக்களையே முழுமையாக ரத்து செய்து விட்டேன். மட்டுமல்ல, என் இறுதி நாள் அன்று குறைந்த பட்சம் இரண்டு கொலைகளாவது நடக்கும் என்று இப்போதே சொல்கிறேன். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், பாலு மகேந்திராவின் இறுதி யாத்திரையில் அப்படித்தான் நடந்தது. கொலை விழும் போலத்தான் இருந்தது நடந்த அடிதடியெல்லாம். என் விஷயத்தில் இன்னும் அதிகமாக இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.
அவந்திகா என் அருகில் இருக்கும்போது என் நண்பர்கள் மிகவும் ஏடாகூடமாக நடந்து கொண்டு விடுகிறார்கள். வினித் செய்த காரியங்களை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஒருமுறை அல்ல. பலமுறை செய்தார் வினித். அதிலிருந்து வினித்தையும் ரகசியமாகத்தான் சந்தித்து வருகிறேன்.
ஆயுஷ் ஹோமத்துக்கு என் நண்பர்களை அழைக்கப் போவதில்லை என்றேன் அவந்திகாவிடம். அவள் ”நீ அழைக்காவிட்டால் நான் அழைப்பேன்” என்று சிலரை அழைக்கவும் செய்தாள். அதற்குப் பிறகு நான் சும்மா இருக்க முடியுமா? பிள்ளைப் பூச்சி போல் எந்த வம்புக்கும் போகாத பத்து பேரை ஞாபகப்படுத்தில் கொண்டு வந்து அவர்களை அழைத்தேன். அந்தப் பிள்ளைப் பூச்சிகளில் எந்தப் பூச்சி இந்த வார்த்தையைச் சொல்லி அவந்திகாவுக்கு டார்ச்சர் கொடுத்தது என்று தெரியவில்லை.
நடந்தது இதுதான். அவந்திகா அன்று செம குஷியாக இருந்தாள். அதனால், “இதேபோல் சாருவின் எழுபதாவது பிறந்த நாளையும் கொண்டாடி விடலாம்” என்றாள். நான் சட்டென்று, “வருபவர்களுக்கெல்லாம் தயிர் வடை கொடுத்து விடலாம்” என்று பகடி அடித்தேன். அதாவது, வைனோடு கொண்டாட வேண்டிய பிறந்த நாளை தயிர் வடையோடு கொண்டாட வேண்டுமே என்பது உள்குத்து. அது புரிந்தாலும் நான் சொன்ன டைமிங் காரணமாக அவந்திகாவுமே வெடித்துச் சிரித்தாள். அப்போது அங்கே இருந்த ஒரு அழகி “என்னது, சாருக்கு எழுபது வயதா, நம்பவே முடியவில்லையே?” என்று சொல்லி என் பாதம் தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். தெரியாத கதையை இன்று சற்று முன்பு அவந்திகா சொன்னாள். எங்கள் வீட்டுப் பணிப்பெண்ணும் சொன்னார். அவரும் அதைக் கேட்டாராம்.
என் நட்பு வட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளைப்பூச்சி “பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நீங்கள் இருக்க மாட்டீர்கள், நாங்கள்தான் இருப்போம்” என்று சொல்லியிருக்கிறது. பகடி என்றால் ரசிக்கும்படி இருக்க வேண்டும். தயிர் வடை பகடி போல. ஒருத்தரின் இடுப்புக்குக் கீழே தாக்குவது பகடி அல்ல. பிள்ளைப்பூச்சி செய்த பகடி என் காதில் விழவில்லை. எந்தப் பிள்ளைப்பூச்சி சொன்னது என்று அவந்திகாவுக்கும் தெரியவில்லை.
அதன் விளைவு என்னவென்றால், இன்று அவந்திகா அறிவித்தாள். ”டேய், சாருவை உருவாக்கியது நான். நீங்களெல்லாம் நேற்று வந்தவர்கள். இனிமேல் சாரு, உன் பிறந்த நாளுக்கு உன்னை உன் நண்பர்களோடு அனுப்ப நான் சம்மதிக்க மாட்டேன். என்னோடு மட்டும்தான் நீ இனிமேல் உன் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். இனிமேல் நீ உன் நண்பர்களைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் நானும் கூட வருவேன். உன் சுதந்திரத்தைக் கெடுக்க வேண்டாம் என்றுதானே நான் இதுவரை உன்னோடு வராமல் இருக்கிறேன்? இனிமேல் வருவேன்.”
ஆஹா, எப்பேர்ப்பட்ட ஆயுள் காலத் தடை பாருங்கள். பிள்ளைப்பூச்சியின் வாய்.
அவந்திகா மேலும் ஒன்று சொன்னாள். அவளுடைய ஆன்மீக சங்க நண்பர்கள் அத்தனை பேரும் வந்திருந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் அவளிடம் “நீங்கள் இந்த உயரத்தில் இருக்கிறீர்கள் என்றால், அதற்கு உங்கள் கணவரின் ஆதரவுதான் காரணம் என்று உன்னை உயர்த்திப் பேசினார்கள். ஆனால் உன் இலக்கிய நண்பர்களைப் பார், என்னை விலக்கி வைக்கிறார்கள்” என்றாள்.
இலக்கியம் தெரியாதவர்களை பர்த்ருஹரி விலங்குகள் என்கிறார். ஆனால் எதார்த்த வாழ்வில் அதற்கு நேர் மாறாக இருக்கிறது.
ஆனால் அவந்திகாவுக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. எனக்கு 365 நாளுமே பிறந்த நாள்தான். தினமுமே கொண்டாட்டம்தான். இதோ இப்போது வெளியூர் போகிறேன் அல்லவா, அதுவும் கொண்டாட்டம்தான். ஆர்த்தோ நாடகம் எழுதியதும் கொண்டாட்டம்தான். பிறந்த நாள் கொண்டாடுபவர்களுக்கு மற்ற நாட்களெல்லாம் வேலை நாள். எனக்கோ வேலையே கொண்டாட்டம். வேலையில்லாத நாளும் கொண்டாட்டம்.
அவந்திகா பற்றி மேலும் சில. நேற்று எழுதியதன் தொடர்ச்சி. மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டினால் அதை அவர்கள் ஒரே வாளியில்தான் போட்டுக் கழுவுவார்கள். நூறு பேர் வாங்கினால் நூறு பேருக்கும் அதே வாளித் தண்ணீர்தான். தண்ணீரை மாற்றும் அளவுக்கெல்லாம் அவர்களுக்கு வசதி இருக்காது. டீக்கடையில் டீ கிளாஸ் கழுவுவார்கள் அல்லவா, அந்த மாதிரி ஒரே வாளித் தண்ணீரில்தான் நூறு பேருக்கும் கழுவுவார்கள். அதனால்தான் வீட்டுக்குக் கொண்டு வந்து கழுவுகிறாள் அவந்திகா. அதனால்தான் எங்கள் வீட்டில் மட்டும் மீன் குழம்பு கவுச்சி அடிப்பதில்லை. சங்கரா, வௌவ்வால் போன்ற பெரிய மீன் என்றால் கழுவுவது சுலபம். நெத்திலி, மத்தி எல்லாம் வீட்டில் கழுவிச் சுத்தம் செய்வதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும்.
ஏன், கொரோனா காலத்தில் நடந்ததை எழுதியிருக்கிறேனே? எனக்கு நண்டு பிடிக்கும் என்று போரூரில் அவளுடைய ஆன்மீக சங்க நண்பரிடம் சொல்லி எனக்காக நண்டு வாங்கி வரச் சொன்னாள். அதுவோ உயிர் நண்டு. என்னால் அதைக் கொல்ல முடியவில்லை. அவள் அதைக் கொல்லும் போது “என் செல்லமே, என்னை மன்னித்து விடு, என் கணவனுக்காக உன்னைக் கொல்ல வேண்டியிருக்கிறது” என்று சொல்லி விட்டுக் கொன்றாள். லைஃப் ஆஃப் பை என்ற படம் எனக்கு ஞாபகம் வந்தது. இனிமேல் உயிர் நண்டே வாங்கக் கூடாது என்று அன்றைய தினம் முடிவு செய்தேன். நண்டு மட்டும் அல்ல, உயிரோடு இருக்கும் எந்த ஜீவனையும் உணவுக்காகக் கொல்வதில்லை என்றும் முடிவு செய்தேன். அதனால்தான் மீன் மட்டும் உண்கிறேன். மீன் உயிரற்ற உடலாகத்தான் கிடைக்கும் என்பதால். அதிலும் விரால் சாப்பிடுவதில்லை. அதை உயிரோடு இருக்கும்போதுதான் அடித்துக் கொன்று நமக்குக் கொடுப்பார்கள்.
எனக்கு வாழ்நாள் தடை வாங்கிக் கொடுத்த அந்தப் பிள்ளைப்பூச்சி யார் என்று பார்த்து அதன் கைகளுக்கு ஒரு முத்தம் கொடுக்கி வேண்டும் போல் இருக்கிறது. எத்தனை ஜாக்கிரதையாக இருந்தும் எப்படி வினை வந்து சேர்கிறது பார்த்தீர்களா?