பழகுவதற்கு சாரு எப்படி? – 2


ஆர்த்தோ நாடகத்தை முடித்தாயிற்று, இனிமேலாவது பெட்டியோவை எடுத்து முடித்து விடலாம் என்று நினைத்தேன்.  நேற்று ஜெயமோகன் அதைக் கெடுத்தார்.  இன்று வினித் கெடுத்து விட்டார்.  நேற்று நான் எழுதியிருந்த கட்டுரையைப் படித்து விட்டுப் பொங்கி விட்டார் போல.  அவரிடமிருந்து இப்படி செய்தி:

”எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்று சொன்னால் எல்லோரும் என்னை அரக்கனைப் போலவும் பிள்ளைக் கறி சாப்பிடுபவனைப் போலவும் பார்க்கிறார்கள்.”

இது நீங்கள் சொல்லி இருப்பது. சில வருடங்களுக்கு முன்பு உங்கள் நெருங்கிய நண்பர் எனக்குப் பையன் பிறந்திருக்கிறான் சாரு என்று சந்தோஷமாகச் சொன்னபோது கண்ணிமைக்கும் நேரத்தில் “ஓ, சமூகத்தில் புதிதாக இன்னொரு கிரிமினலா?”என்று சொன்னீர்கள். அந்தச் சம்பவத்தை எழுதியும் இருக்கிறீர்கள். இப்போது பேரனுக்கு ஆயுஷ் ஹோமம் என்கிறீர்கள். இதற்குக் கூப்பிட்டதே சில நண்பர்களைத்தான், ஆனால் வந்தது சொற்பமானவர்களே என்கிறீர்கள். குழந்தையை ஆசீர்வாதம் செய்தாலென்ன செய்யவில்லை என்றாலென்ன..? ஒரு குழந்தை என்னவாகும் என்று நீங்களே ஆரூடம் சொல்லிவிட்டீர்கள். I condone your words. இதெல்லாம் போக, வேலைக்காரம்மாளின் மகன் உங்கள் பேரனின் முகத்தில் தலையணை வைத்து அமுக்கியதாகச் சொன்னீர்கள். நானும் அப்படித்தான் செய்வேன்.

இவ்வளவு நாள் நான் வளர்த்தேன், இனி என்னவாகுமெனத் தெரியவில்லை என்பதையெல்லாம் என்னால் சகிக்கவே முடியவில்லை.  நான் தினந்தோறும் உங்கள் ப்ளாகை வாசிக்கிறேன்.  எதற்காக?  இந்தக் குடும்பக் கண்றாவியிலிருந்தெல்லாம் நம்மை விலக்கி வைத்துக் கொள்வதற்காகத்தானே?  என்னால் உங்கள் கட்டுரையைப் படித்து விட்டு எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் தாங்க முடியாத்தாக இருக்கிறது.  உங்கள் பேரனின் பிறந்த நாளை நீங்கள் கொண்டாடுவதை நினைத்தால் எனக்குப் பதறுகிறது.  அவன் உங்களுக்கு ரத்த சம்பந்தம் இல்லாதவன் என்றாலும் இதை என்னால் தாங்க முடியவில்லை.  ஒரு வாரத்துக்கு முன்னால் என் பேரனிடமிருந்து நான் கற்றுக் கொள்கிறேன் என்று எழுதினீர்கள்.  இதையேதான் ஜெயமோகனும் தன் மகனிடமிருந்து கற்றுக் கொள்வதாக எழுதுகிறார்.   

போகன் சங்கர் உங்களைப் பற்றி என்ன சொன்னார்?  பாரதிக்குப் பிறகு தமிழை மடை மாற்றியது நீங்கள்தான் என்று.  மற்ற பலரும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  மொழியில் செய்த புரட்சி என்று அதை சுருக்கமாக அழைக்கலாம்.  ஆனால் அது மட்டுமே உங்களின் அடையாளமா?  கருத்து ரீதியாகவும் நீங்கள் செய்த சாதனைகள்தான் முக்கியம்.  இதுவரை பேசப் படாத்தை நீங்கள் பேசினீர்கள்.  பெரிய தளத்துக்கு அதை எடுத்துச் சென்றீர்கள்.  இதையெல்லாம் செய்த்து நீங்கள் ஒருவர்தான்.  உங்கள் காலத்துக்கு முன்னால் வேறு எந்த எழுத்தாளரும் அதைச் செய்யவில்லை.  எத்தனைதான் பெரிய எழுத்தாளராக இருந்தாலும் குடும்பம் என்று வந்தால் பலஹீனமாகி என் குழந்தை, என் மனைவி என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.  எந்த எழுத்தாளரும் அதற்கு விதிவிலக்கு அல்ல.  நீங்கள் மட்டுமே அவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர். 

உங்கள் சக எழுத்தாளர் ஒருவர் தன் மகன் முதல் மதிப்பெண் எடுத்த்து பற்றிப் பெருமையாக எழுதியபோது “ஒரு எழுத்தாளனாக இருந்து கொண்டு இப்படியெல்லாம் சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா?  உங்கள் மகன் முதல் மதிப்பெண் பெற்ற போதுதான் இருபது மாணவர்கள் கடைசி மதிப்பெண் எடுத்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்?  அவர்களெல்லாம் உங்கள் புதல்வர்கள் இல்லையா?” என்று கேட்டவர் நீங்கள்.  

குடும்பம் என்ற ஸ்தாபனத்தையே உடைத்து எறிந்தவர் நீங்கள்.  நான் உங்களை ஐந்து ஆண்டுகளாகத்தான் படிக்கிறேன்.  உங்களோடு மூன்று ஆண்டுகளாகத்தான் பழகிக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் நீங்கள் நாற்பது ஆண்டுகளாக குடும்பம் என்ற ஸ்தாபனத்தை உடைத்து வருகிறீர்கள்.  ஆனால் என் பேரன் என் பேரன் என்று நீங்கள் பேசும் போது நீங்களே உங்களுக்கு எதிராகப் பேசுவது போல் இல்லையா?  இதை நான் உங்களிடம் நேரில் குறிப்பட்ட போது கார்த்திக்கே என் மரபு அணு வழி வந்த பிள்ளை இல்லையே, அப்புறம் பேரன் எங்கே என்றீர்கள்.  உண்மைதான்.  நான் உங்கள் ரத்தமா?  வளன் உங்கள் ரத்தமா?  அராத்து உங்கள் ரத்தமா?  ஆனால் உங்கள் பேரன் என்று சொல்லி, அவனிடமிருந்து கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லும் போது என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை.  அதாவது, நீங்களே நீங்கள் இதுவரை சொன்னதற்கு எதிராகப் பேசுகிறீர்கள்.  அது எனக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது.  மன உளைச்சல் என்பது சாதாரண வார்த்தை.  என் மன வருத்த்த்தை வார்த்தைகளால் விளக்க முடியவில்லை.  இப்போது பாருங்கள், உங்கள் பேரனுக்கு ஒரு நற்காரியம் நடந்துள்ளது.  நானோ அதற்கு எதிர்மறையாகப் பேசுகிறேன்.  ஆனால் இப்படிப் பேசக் கற்றுக் கொண்ட்தே உங்களிடமிருந்துதானே?  நான் புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.  நீங்கள் எங்களிடம் சொன்னதை நான் திருப்பிச் சொல்கிறேன். 

உண்மையில் இந்தப் பேரன் விஷயம் என்னை மிகவும் பாதித்து விட்ட்து.  இன்னொன்று சாரு, நீங்கள் சொல்வது எனக்கு வேத வாக்கு மாதிரி.  முன்பு எனக்குக் கர்னாடக இசையே பிடிக்காது.  ஆனால் நீங்கள் சொல்லி விட்டீர்கள்.  இப்போது நான் கர்னாடக இசையைக் கேட்டுக் கேட்டு அதற்கு அடிமையாகி விட்டேன்.  நீங்கள்தான் காரணம்.  அப்படியிருக்கும்போது பேரன் விஷயத்தில் நான் மிகவும் காயமடைந்து விட்டேன்.  உங்களை பதிலுக்குக் காயப்படுத்துவதோ, முட்டுச் சந்தில் நிற்க வைப்பதோ என் நோக்கமே அல்ல.  தனிப்பட்ட முறையில் நான் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டேன்.  அதைத்தான் வெளிப்படுத்த விரும்பினேன்.

வினித்.

வினீத்தின் மேற்கண்ட விமர்சனத்தை ஸ்ரீராமுக்கு அனுப்பினேன்.  அவர் எழுதிய பதில் கீழே:

தெய்வம் மனுஷ்ய ரூபேண என்று சொன்னால், ஸ்ரீராமன் கடவுள் இல்லை என்று ஆகிவிடுமா! ஸ்ரீராமன் நம்மை எல்லாம் தான் ஒரு சாதாரண மானுடன் என்று ஏமாற்றுகிறார்.

இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா நாவலில் ஒரு வரி வரும். ஏன் கிருஷ்ணன் ஒரே நொடியில் கெளரவர்களை அழித்து விடலாமே!

கிருஷ்ணரால் அது முடியும். ஆனால், அவர் மனிதக் கூட்டத்தில் அவர்களின் ஆட்ட விதிகளுக்கு உட்பட்டு  நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்…

குடும்பம் என்ற அமைப்பில் இருந்து கொண்டே ஒருவன் எவ்வளவு சுதந்திரமாக வாழ முடியும் என்று நீங்கள் கண்முன்னே வாழ்ந்து காண்பிக்கிறீர்கள்.

கார்த்திக்குக்கு கல்லூரியில் சேர்க்க நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள். இன்று, அதே கார்த்திக்குடன் நீங்கள் ஹாய், பாய்  உறவில் இருக்க முடிகிறது.

வேதாவின் பிறந்த நாள் வீட்டில் கொண்டாடப்பட்டிருந்தால், நீங்கள் யாரையும் கூப்பிட்டு இருக்க மாட்டீர்கள். பட்டப்பா சமையலுடன் ஒரு சிறிய மண்டபத்தில் நடப்பதால்தான், நம் நண்பர்களும் இந்த சுவையான உணவை சாப்பிட ஒரு வாய்ப்பு என்று எங்களை அழைத்தீர்கள்.

பேரன் பிறந்தான். உங்கள் கூடவே ஒரு வருடம் இருக்கிறான். பிறந்த ஒரு பூனைக் குட்டியைக் கொஞ்சுவது போல், ஒரு மனித சிசுவைத் தூக்கிக் கொஞ்சுவது இயல்பு. இதுவே வேதா மும்பையில் இருந்தால், உங்களுக்கு அந்த ஈர்ப்பே வந்திருக்காது.

***

ஆம், பிறக்கும் எல்லா குழந்தைகளும் கிரிமினல் ஆகத்தான் மாறும். படிப்பதே பணம் சம்பாதிக்க என்று ஆகிவிட்ட பிறகு, அப்படித்தான் நடக்கும்.

வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகன் தலையணை கொண்டு ஒரு குழந்தை முகத்தில் அமுக்கினான் என்று சொன்னதற்கு, வினித் கோபப்படுகிறார். இவர்கள் எல்லாம், ”விளிம்பு நிலை மக்கள் நல்லவர்கள், பணக்காரர்கள் கெட்டவர்கள்” என்ற எண்ணத்தில் உள்ளவர்கள். சென்ட்ரலில் இருந்து  மயிலாப்பூருக்கு  முன்னூறு ரூபாய் கேட்கும் ஆட்டோக்காரர்களை இவர்கள் கண்ணுக்குத் தெரியாது.

***

கிருஷ்ணா கிருஷ்ணாவில் இருந்து:

ராதா ஏழு வயது மூத்தவள். இன்னொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டவள். கிருஷ்ணன், ராதா இருவருக்குமே தங்கள் திருமணம் நடைபெற சாத்தியமில்லை என்று தெரியும். அப்படியிருக்கும்போது இந்த உறவு சரியா என்று நீங்கள் கேட்கலாம். உணர்வுகள் காலண்டர் கணக்கைப் பார்ப்பதில்லை. உடலுறவு, காதலைத் தெரிவிக்கும் பல மொழிகளில் ஒன்று. அவ்வளவுதான். சரீர உறவு கொள்கின்ற தம்பதிகள் ஒருவரிடத்து ஒருவர் காதல் கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ‘ஓங்கி வரும் ஊற்று’ ‘ஒட்டும் இரண்டு உளத்தின் தட்டு’ என்கிறானே பாரதி, அதுதான் காதல். உடலுறவு கொண்டிருக்கலாம், கொள்ளாமல் இருந்திருக்கலாம். காதல் என்கிற மகோன்னத உணர்வு முன் இது மிகச் சாதாரண விஷயம்.

கிருஷ்ணன், தன் ஆருயிர் நண்பன் பார்த்தனிடம் என்ன சொன்னான் தெரியுமா உங்களுக்கு? எனக்கு எட்டு மனைவிகள். ஆனால் ஒரே காதலி என்று. அவனால்தான் இதைப் புரிந்து கொள்ள முடியும் என்று கிருஷ்ணனுக்குத் தெரியும்.

ஸ்ரீராம்

***

வினித் தன் கடிதத்தை வாய்ஸ் மெஸேஜாக அனுப்பியிருந்தார்.  நான்தான் அதை எழுத்தால் எழுதியிருக்கிறேன்.  எதுவும் மாற்றவில்லை. 

வினீத்தின் விமர்சனத்துக்கு நான் நூறு பக்கம் பதில் எழுத வேண்டும்.  எப்படிப் போகிறது பார்ப்போம். 

என்னுடைய பள்ளியின் சிறப்பே இது போல் ஆசிரியரின் உயிர்நாடியையே பிடித்து உருட்டலாம் என்பதுதான்.  அந்த அளவு கருத்துச் சுதந்திரம் இங்கே உண்டு.  வேறு எந்தப் பள்ளியிலும் இது நடக்க வாய்ப்பே இல்லை. 

வினித்திடம் உள்ள சிறப்பு என்னவென்றால், அவரை நான் என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்.  அதிலும் பொதுவெளியில்.  மற்றவர்களைப் போல் ”என்னைப் பொதுவெளியில் வைத்து அசிங்கப்படுத்தி விட்டீர்கள்” என்று ருத்ர தாண்டவம் ஆடி, ஒரு நாளில் பத்து மன்னிப்பு என்ற விகிதத்தில் மாதம் முந்நூறு மன்னிப்பெல்லாம் என்னைக் கேட்க வைக்க மாட்டார்.  எழுதிய கட்டுரையையும் தூக்கச் சொல்லி மிரட்ட மாட்டார். வினித்தோடு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விவாதிக்கலாம், விமர்சிக்கலாம். 

வினித் எழுதியிருக்கும் ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்ல வேண்டும்.  வினித்துக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது.  நான் ஒரு துறவி என்று சொன்னால் அதை முழு மனதாக நம்ப வேண்டும்.  கார்த்திக்குக்குத் திருமணம் ஆகி ஆறு ஆண்டு ஆகிறது.  இந்த ஆறு ஆண்டுகளில் நான் ஒருமுறை கூட மும்பை செல்லவில்லை.  அவந்திகாவும் செல்லவில்லை.  குழந்தை பிறந்த பிறகு குழந்தையைப் பராமரிக்க நேநியைத் தவிரவும் இன்னொரு ஆள் வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டதால் அவந்திகா அங்கே சென்று மூன்று மாதம் தங்கினாள்.  நான் அப்போதும் போகவில்லை.  வேதா இங்கே வராமல் இருந்திருந்தால் இன்னும் பத்து ஆண்டுகள் ஆனாலும் நான் சென்றிருக்க மாட்டேன். 

எனக்கு எந்த மனிதர் மீதும் தனிப்பட்ட பாசம் கிடையாது.  இமயமலையில் கோவணத்துடனோ கோவணம் இல்லாமலோ அலையும் துறவியின் மனநிலை எப்படியோ அப்படித்தான் நானும் வாழ்கிறேன்.  அகோரிகள் கூட கூட்டம் கூட்டமாக அலைவார்கள்.  நான் தனியாக அலையும் துறவிகள் பற்றிச் சொல்கிறேன்.  ஒரு குழுவுக்குள் இருக்கும் துறவி மிகவும் பாதுகாப்பானவன்.  அது ஒரு குடும்பம் மாதிரி. 

ஏன் மனித உறவுகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றால், அது எல்லாமே சுயநலம் சார்ந்த்தாகவோ அல்லது ரத்த பந்தம் சம்பந்தமாகவோ இருக்கிறது.  பெற்றோர் தம் பிள்ளை மீது உயிரையே விடுகிறார்கள்.  காரணம், ரத்தம்.  தத்துப் பிள்ளையானாலும் வளர்த்த பாசம் ரத்த உறவைப் போலவே கொல்லும்.  அதனால்தான் இதையெல்லாம் தவிர்த்த இண்டலெக்சுவல் உறவுகளை நான் பேண விரும்புகிறேன்.  எனக்கும் என் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் உள்ள உறவு இத்தகையானதுதான்.

இங்கே பேரன் எப்படி வந்தான்?  என்னிடம் ஆறு மாதம் வளர்ந்தான்.  அவ்வளவுதான்.  என்னோடு எட்டு ஆண்டுகள் வளர்ந்த ஸோரோ மீது நான் பாசத்தைக் கொட்டவில்லையா?  ஆக, நாய் மீது அன்பு செலுத்தினால் தவறில்லை.  மனிதர்கள் மீது செலுத்தினால் தவறா?  உடனே அந்த மூத்த மார்க்சீய நண்பரைக் கொண்டு வரக் கூடாது.  அவர் எப்போது பார்த்தாலும் பேரன் பேரன் என்று உருகிக் கொண்டிருக்கிறார்.  எனக்கோ எல்லாமே ரயில் சிநேகிதம் மாதிரிதான்.  வேதா இருந்த போது அவனோடு கொஞ்சினேன்.  இப்போது அவன் மும்பை போனதும் அவனுக்கும் எனக்குமான உறவு அறுந்து போயிற்று.  அவ்வளவுதான்.  உதாரணமாக – இதை நான் நேற்று எழுத மறந்து போனேன் –  நான் பார்த்த குழந்தைகளில் மறக்க முடியாதவன் ஆழிமழைக் கண்ணன்.  சீனியின் மகன்.  அவன் ஒரு prodigy என்பது அவனை அறிந்த அனைவருக்கும் தெரியும்.  அப்படியானால் அவன் கதையை எழுத வேண்டியதாகிறது அல்லவா?  அதனால் அவன் சொன்ன கதைகளை ஆழி டைம்ஸ் என்று சீனி எழுதினார்.  அந்தப் புத்தகம் என்சிபிஹெச் பதிப்பகத்தில் ஆயிரக்கணக்கில் விற்றுக் கொண்டிருக்கிறது.  ப்ராடிஜி என்பதே அவனைப் பொருத்தவரை சாதாரண வார்த்தை.  அவன் அதற்கும் மேலே.  ஐயோ, நாம் குடும்ப அமைப்பை எதிர்க்கிறோமே, அதனால் அவனைப் பற்றி எழுதக் கூடாது என்று சீனி நினைத்திருந்தால் அவர் மஹாத்மா காந்தி போல் ஒரு முட்டாள்.  காந்திதான் தன் மகனை அப்படிக் குட்டிச் சுவராக ஆக்கினார்.  அது சரி, உங்களுக்கு ஆழி டைம்ஸ் எழுதிய சீனிக்கும் அந்த மார்க்சீய அறிஞருக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?  அறிஞர் தன் பேரனை நினைத்து பாசமலர் சிவாஜி போல் அல்லவா உருகு உருகு என்று உருகுகிறார்? 

சில கொள்கை வீரர் ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்.  அவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பார்கள்.  பாவம், அந்தக் குழந்தைகள்.  ஒரு கொள்கை வீரருக்குப் பிறக்க நேர்ந்ததால் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டிய துரதிர்ஷ்டம்.   வினித், நீங்கள் பேசுவது அந்த ஐஏஎஸ் அதிகாரிகளைப் போலவும் மகாத்மா செய்தது போலவும்தான் இருக்கிறது.  என் பேரன் என்பதாலேயே – நான் குடும்ப அமைப்புக்கு எதிராக எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதாலேயே பேரனுடன் அன்பு பாராட்டக் கூடாதா என்ன?  என் வீட்டுப் பூனைகளை விடவா அவன் தாழ்ந்து போய் விட்டான்? 

எனக்கோ குழந்தைகளுடன் பழக்கமே இல்லை.  நான் பார்த்துப் பழகிய முதல் குழந்தை, ஒரே குழந்தை வேதாதான்.  அவனோ ”குழந்தை” என்ற தலைப்பில் நான் எதையெல்லாம் மனதில் வைத்திருந்தேனோ அதற்கெல்லாம் எதிராக இருந்தான்.  குழந்தை என்றால் நமக்குப் பைத்தியம் பிடித்து விடும்போல் கத்திக் கொண்டே இருக்கும்.  (இதுவரை நான் செய்த எல்லா விமானப் பயணங்களிலும் அந்த விமானத்தில் மட்டும் குழந்தை இருந்து விட்டால் விமானம் நிற்கும் வரை ஒரு நிமிடம் கூட நிறுத்தாமல் அழுது கொண்டே இருக்கும்.  அது அழுகை அல்ல.  அலறல்.  சில சமயங்களில் மூன்று நான்கு குழந்தைகள் மாட்டும்.  நரகத்தை அந்த விமானத்தில் பார்க்கலாம்.)  வேதா விமானத்தில் ஏறினால் இறங்கும் வரை எல்லோரையும் பார்த்து சிரித்துக் கொண்டே இருப்பான்.  சைகையால் எல்லோருடனும் பேசிக் கொண்டே இருப்பான். இதை ரசிக்காமல் என்ன செய்ய?  இங்கே இருந்த ஆறு மாதமும் அவன் அழுததே இல்லை.  எப்போதும் சிரிப்பும் கும்மாளமும்தான்.  பக்கத்து வீட்டில் குழந்தை என்ற பெயரில் ஒரு பேய் வசிக்கிறது.  ஐந்து வயது.  பூனையைப் பார்த்தால் கல்லால் அடிக்கும்.  ஏனென்றால், அவன் அப்பனும் தாத்தனும் கல்லால் அடிக்கிறார்கள்.  நாலு தெருவுக்குக் கேட்கும்படி அலறிக் கொண்டே இருக்கும் அந்த ஐந்து வயதுப் பேய்.  என் வீட்டு வாசலுக்கு வந்து அலறி அலறி என் வீட்டுப் பூனைகளை அங்குமிங்கும் ஓடுவதை ரசிப்பான்.   அதனால் அவனைப் பார்த்த்துமே கதவைச் சாத்தி விடுவேன்.

வேதா பூனைகளோடு கொஞ்சுவான்.  ஏனென்றால், அவன் என்னைப் பார்த்து வளர்ந்தான்.

வேதாவிடமிருந்து கற்றுக் கொண்டது பற்றி.  ஏன் ஐயா, பூனைகளிடமிருந்தே கற்றுக் கொள்கிறேன் என்கிற போது பூனையை விட பூனைகளை விட ஒன்றிரண்டு அறிவு அதிகமான மனிதக் குழந்தையிடமிருந்து கற்றுக் கொண்டால் குற்றமா?  நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே ஒரு முன்னிரவில் ஒரு ஐந்து வயதுச் சிறுமியோடு சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.  திடீரென்று அவள் நட்சத்திரங்களும் நிலாவும் அழகாக இருப்பதாகச் சொன்னாள்.  எப்படி நீ திடீரென்று அவைகளைப் பார்த்தாய் என்று கேட்டேன்.  உங்களை அண்ணாந்து அண்ணாந்து பார்த்துப் பேசுகிறானா, அப்போது பார்த்தேன் என்றாள்.

அதற்கு முன் நான் நட்சத்திரங்களையும் நிலவையும் பார்த்ததில்லை.  ஏனென்றால், அதற்கு முன் நான் அண்ணாந்தே பார்த்ததில்லை.  அந்தச் சிறுமியிடமிருந்து அன்று நான் அண்ணாந்து பார்த்தால் அண்டத்தைப் பார்க்கலாம் என்று தெரிந்து கொண்டேன்.  அதோடு அண்ணாந்து பார்த்த போது கடவுளையும் பார்த்தேன்.  ஒருவகையில் அந்தச் சிறுமிதான் எனக்குக் கடவுளைக் காண்பித்தவள். 

வேதா இங்கேயே இருந்திருந்தால் நானும் ஆழி டைம்ஸ் மாதிரி ஒரு புத்தகம் எழுதியிருப்பேன்.  நல்லவேளை, மும்பை கிளம்பி விட்டான்.  ஏன் நல்லவேளை என்றால், அவனுக்காக என்னுடைய மூன்று மணி நேரம் செலவாயிற்று.  அதில் எனக்கு உடன்பாடில்லை.  அந்த மூன்று மணி நேரமும் என் வாசகர்களுக்கானது.  வேதா என்ற ஒரே ஒரு ஆத்மாவுக்காக அல்ல.  அதனால் கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்.  நேற்றே குறிப்பிட்டேன் அல்லவா, கடவுளிடம் நான் இம்மாதிரி பிசுக்கட்டான் விஷயத்தை வேண்டினால் உடனே கொடுத்து விடுவார் என்று.  அதேபோல் வேண்டுதல் முடிந்ததுமே வேதா கிளம்பி விட்டான்.   மட்டுமல்லாமல் இந்த ஆறு மாதத்தில் என் வீட்டுக்கு வந்த ஐந்தாறு நேநிகள் பண்ணிய லூட்டியை என்னால் தாங்கவே முடியவில்லை.  இன்னும் ஆறு மாதம் இருந்திருந்தால் நான் ஒரு மனநோயாளியாக மாறியிருப்பேன்.  அதையெல்லாம் நான் பெட்டியோ, தியாகராஜா இரண்டையும் முடித்து விட்டு, மாமியார் மருமகள்: ஓர் இலக்கியப் பனுவல் என்ற தலைப்பில் ஒரு நாவலாக எழுத இருக்கிறேன்.  விரிதியானா சினிமா என் வீட்டில் தினந்தோறும் நடந்தேறியது.  விரிதியானா படத்தில் ஒரு பெண் சித்ரவதை செய்யப்படுகிறாள்.  என் வீட்டில் வதைக்கு உள்ளானது அடியேன். 

பணிப்பெண்ணின் மகன் வேதாவின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கியது பற்றி.   அந்தச் சிறுவன் அப்படித்தான் செய்வான் என்று நானேதான் சொன்னேனே ஐயா?  அப்புறம் என்ன நீங்களும் நான் சொன்னதையே சொல்வது?  உங்களுக்கு ஏதாவது பகுத்தறிவு இருக்கிறதா என்று இப்போது நான் சந்தேகப்படுகிறேன்.  அவன் சமூகத்தின் விளிம்புப் பகுதியில் வளரும் குழந்தை.  இதுவோ 1800 சதுர அடி வீடு.  அவனைப் பொருத்தவரை இது பங்களா.  வேதா ஒரு செல்வந்தர் வீட்டுப் பிள்ளை மாதிரி வளர்ந்தான்.  கார்த்திக் ஒரு மரீன் எஞ்ஜினியர் என்பதால்.  விளிம்பில் வளரும் குழந்தை என்ன செய்யுமோ அதைத்தான் செய்தான்.  நான்தான் அப்போதே எழுதினேனே, தப்பு பெற்றோர் மீது என்று.  அதனால்தான் அந்த விஷயத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை.  நீங்கள் தலையைணையை வைத்து அமுக்க மாட்டீர்கள்.  நீங்கள் பண்ணையாரின் மகன்.  உங்கள் வீட்டு விவசாயக் கூலியின் மகன் வேண்டுமானால் உங்கள் முகத்தின் மீது தலையணையை அமுக்குவானாக இருக்கும்.  ஆனால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால், அதுவும் ஒரு குக்கிராமத்தில் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு இல்லை.  கிராமத்துக் குழந்தைகள் சென்னைக் குழந்தைகளை விட மன ஆரோக்கியம் மிக்கவை.

ஏன் சென்னைக் குழந்தைகள் என்கிறேன் என்றால், சென்னை நகரமே ஒரு மனநோய்க் கூடாரம்.  ஒன்றரை நிமிடம் முடி வெட்டி இங்கே மைலாப்பூரில் ஒரு பிராமணர் 300 ரூ கட்டணம் வாங்குகிறார் என்று எழுதினால் வடசென்னையில் சாரு நிவேதிதாவைக் கைது செய் என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். 

இங்கே ஆறு மாதத்தில் என் வீட்டுக்கு மாதம் ஒருவராக ஆறு நேநிகள் வந்தார்கள்.  ஆறு பேருமே விரிதியானாவில் வரும் கொடூரர்கள் மாதிரியே நடந்து கொண்டார்கள்.  அதில் ஒருத்தி குழந்தையைக் கண்ட இடங்களில் கிள்ளிக் கிள்ளி வைப்பாள்.  உடம்பு பூராவும் நகக்காயமாக இருக்கும்.  ஒருநாள் நான் அந்த நேநியிடம் என் நகவெட்டியைக் கொடுத்து உங்கள் நகத்தையெல்லாம் வெட்டித் தொலையுங்கள் என்று சொல்ல வேண்டி வந்தது.  எல்லாம் நாவலில் வரும்.  பலஹீன இதயம் படைத்தவர்கள் நாவலைப் படிக்கவே முடியாது.  குழந்தை மும்பைக்குச் செல்லும் முதல் நாள் ஒரு நேநி குழந்தையைக் கீழே போட்டு ஒரு கண்ணில் நாற்காலியின் கம்பி குத்தி கடுமையான காயம்.  கண்ணே போயிருக்கும்.  ஒற்றைக் கண் மாயாவியாகத் திரிந்திருப்பான்.  நல்லவேளை, கண் தப்பியது.   

ஏன் எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்று சொல்கிறேன்?  என் வீட்டுப் பணிப்பெண் தன் ஆறு வயது மகனிடம் சொல்கிறாள், தம்பி நல்லா படி, இந்த வீட்டை விடவும் பெரிய வீடாகக் கட்டலாம்.

இப்படி சொல்லிக் கொடுத்துத்தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள்.  வர்க்க பேதம் இல்லாமல், ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் இந்தியா பூராவும் குழந்தைகள் இப்படித்தான் வளர்க்கப்படுகின்றன.  அதனால்தான் நான் குழந்தைகளை வெறுக்கிறேன்.  அன்பு நாவலில் எழுதியதை இங்கே சொல்கிறேன்.  என் நண்பர் பேத்தியோடு இளநீர் வாங்கச் செல்கிறார்.  பேத்திக்கு ஐந்து வயது.  பேத்தி இளநீர்க்காரரிடம் சொல்கிறாள்.  ”இனிப்பா இருக்கணும், நெறையா இருக்கணும், நாப்பது ரூபா தர மாட்டோம், முப்பது ரூபாதான் தருவோம்.”  எனக்கு அந்தக் குழந்தையை வளர்க்கும் எல்லோரையும் செருப்பால் அடிக்க வேண்டும் என்று தோன்றியது.  இதை அந்த நண்பரே என்னிடம் சொன்னார்.  இப்போது அவரையும் நட்புப் பட்டியலிலிருந்து எடுத்து விட்டேன்.  ஐந்து வயதிலேயே இப்படிப்பட்ட கொடூர சிந்தனையுள்ளவர்களாகக் குழந்தைகளை வளர்க்கிறார்கள். 

ஆனால் நான் ஞானி.  துறவி.  என்னிடம் வளரும், என்னால் வளர்க்கப்படும் குழந்தை எப்படி இருக்கும்?  மட்டி வினீத், உங்களுக்கு இதற்கெல்லாமா விளக்கம் சொல்ல வேண்டும்?  என்னிடம் வளரும் குழந்தை குழந்தைப் பருவத்திலேயே ஞானி போல் வளரும்.  ஃப்ரான்ஸில் தெருவில் கிடந்த பர்ஸை அதற்கு உரியவரிடம் ஒப்படைத்த பத்து வயதுச் சிறுமியிடம் பர்ஸுக்கு உரியவர் நூறு ஃப்ராங்கை நீட்டி ”மெ(ஹ்)ர்ஸி” சொன்ன போது அந்தச் சிறுமி என்ன கேட்டாள், நினைவு இருக்கிறதா?  அவருடைய பணத்தை அவரிடம் கொடுத்ததற்கு அவர் ஏன் எனக்கு நூறு ஃப்ராங்க் தருகிறார்?  அந்தச் சிறுமிக்குப் புரியவே இல்லை.  என்னிடம் வளரும் குழந்தை அப்படித்தான் இருக்கும்.

ஆனால் நான் குழந்தைகளை வளர்ப்பதாக இல்லை.  நான் அதற்கு ஆனவன் இல்லை.

”இவ்வளவு நாள் நான் வளர்த்தேன், இனி என்னவாகுமெனத் தெரியவில்லை என்று நீங்கள் எழுதுவதை என்னால் சகிக்கவே முடியவில்லை.”

ஏன் வினீத், இத்தனை மூடராக இருக்கிறீர்?  இவ்வளவு நாள் ஒரு ஞானியால் வளர்க்கப்பட்ட குழந்தை இனிமேல் நேநி என்ற கிரிமினல்களால் வளர்க்கப்பட இருக்கிறது.  அதனால்தான் என்ன ஆகும் என்று தெரியவில்லை என்று எழுதினேன்.  இதில் உங்களால் சகிக்க முடியாமல் போவதற்கு என்ன இருக்கிறது? 

***

ஆயுஷ் ஹோமம் ஏன்?

இதற்கு நான் ஒரு நாவலையே பதிலாக எழுத வேண்டும்.  ஆயுஷ் ஹோம்ம் நட்த்தியது அவந்திகா.  நான் இல்லை.  என் நண்பர்களை அழைத்தது மட்டுமே நான்.  அதுவும் குழந்தையை ஆசீர்வதிக்க அல்ல.  அதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்.  பட்டப்பா சமையலைச் சாப்பிடுவதற்காக அழைத்தேன். ஆயுஷ் ஹோமத்தை வைத்து ஒரு கொண்டாட்டம்.  ஏன் ஐயா, நாம் மட்டும் வைன் குடித்து கோவாவில் கொண்டாடலாம்?  அவந்திகாவுக்கு ஒரு கொண்டாட்டம் வேண்டாமா? 

அவந்திகா பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?  அவளைப் போன்ற ஒரு பெண்மணியை நான் பார்த்ததே இல்லை.  இந்த முப்பது ஆண்டுகளில் அவளும் நானும் எண்ணி ஒரு எட்டே தடவைதான் உணவகத்துக்குப் போயிருக்கிறோம்.  அதிலும் அவளுடைய பிறந்த நாள் அன்று.  மஹாமுத்ரா.  அதையும் இப்போது மூடி விட்டதால் கடந்த மூன்று ஆண்டுகளாகப் போவதில்லை.  வேறு உணவகங்களில் சாப்பிட்டால் அவளுக்கு ஒத்துக் கொள்ளாது.

அதேபோல் இதுவரை – இந்த முப்பது ஆண்டுகளில் – நாங்கள் மூன்று சினிமாதான் பார்த்திருக்கிறோம்.  மின்சாரக் கனவு, பாபா, மூன்றாவது படம் மறந்து விட்டது.  அநேகமாக ராகவேந்திராவாக இருக்கலாம்.  ரஜினி பாபாவைப் போல் இன்னொரு படம் கொடுத்தால் போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

கோவிலுக்குப் போனதில்லை.  கடற்கரைக்குப் போனதில்லை.  (வீட்டிலிருந்து கல்லெறி தூரத்தில் மெரீனா பீச்).   ஜவுளிக் கடைக்குப் போனதில்லை.  இதுவரை நான் மின்சார கார்டு, ரேஷன் கார்டு எதையும் கண்ணாலேயே கண்டதில்லை. 

அவந்திகாவுக்கு வீடே சொர்க்கம்.  முப்பது ஆண்டுகளாக நாங்கள் இருவரும் சேர்ந்து எந்த வெளியூருக்கும் சென்றதில்லை.  எனக்கு உணவே மதம்.  அவந்திகா போல் அசைவமும் சைவமும் சமைக்க ஆள் இல்லை.  பட்டப்பாவே அவளை விட கம்மிதான்.  எந்த பிராமணப் பெண் மீன் சந்தைக்குப் போய் கணவனுக்காக மீன் வாங்கிக் கொண்டு வந்து சமைத்துக் கொடுக்கிறாள் சொல்லுங்கள்?  மீனைச் சுத்தம் செய்வது கூட அங்கேயே சந்தையில் செய்து கொண்டு வர மாட்டாள்.  மீனைச் சுத்தம் செய்ய ஒரு மணி நேரம் ஆகும்.  அங்கே சுத்தமான தண்ணீரில் சுத்தம் செய்ய மாட்டார்களாம். வீட்டுக்கு மீனை எடுத்து வந்து இங்கே இவளேதான் சுத்தம் செய்கிறாள். இன்று வரை அப்படித்தான் இருக்கிறாள் அவந்திகா.  மீன் சமைப்பதை கூட விடுங்கள்.  எனக்குக் கருவாடு பிடிக்கும் என்று கருவாடு போட்டுக் கொடுக்கிறாள்.  கருவாடுதான் கடையில் விற்கிறதே என்றால், அதில் உப்பு அதிகமாக இருக்கும், அவ்வளவு உப்பு சாப்பிட்டால் உனக்கு ரத்த அழுத்தம் ஏறும் என்கிறாள்.  இவளே போட்டால் உப்பு கம்மியாகப் போட்டு காய வைப்பாள். 

அன்பு நாவலில் வருவது ஒரு அவந்திகா என்றால், இதுவும் அவந்திகாதான். 

எல்லாவற்றையும் விட, முப்பது ஆண்டுகளாக என்னை வெளியிலேயே அழைத்துப் போகச் சொல்லாமல், கட்டாயப்படுத்தாமல் ஒரு பெண் இருப்பாளா, அவள் ஒரு தவப்பெண்தான்.  சில தம்பதிகளைப் பார்க்கிறேன், தினமுமே வெளியே போகிறார்கள்.  தினமும்.  நானும் அவந்திகாவும் இந்த முப்பது ஆண்டுகளில் ஒரு நாள் கூட எங்கேயும் சென்றதில்லை.   

இப்படி ஒரு வாழ்க்கை எனக்குக் கொடுப்பினை இல்லையா?

இப்படி வாழும் ஒருத்தி ஆயுஷ் ஹோம்ம் நடத்தினால் அதை நடத்தாதே, நான் குடும்ப அமைப்புக்கு எதிரான ஆள் என்று சொன்னால் என்னை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பேன். 

எல்லாவற்றையும் விட பெரிய கொடுப்பினை, அவந்திகாவும் ஒரு புத்திஜீவியாக இருந்து என் எழுத்தைப் படித்துத் தொலைக்காமல் இருப்பதுதான்.  அதற்காக நான் வாராவாரம் திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுக் கொள்ளத் தயார்.  அவள் என் எழுத்தைப் படித்தால் நான் இப்படியெல்லாம் எழுதிக் கொண்டிருக்க முடியுமா? 

ஏனென்றால், சில பெண்கள் என் எழுத்தைப் படித்து விட்டு செய்யும் அக்குறும்புகளை சகிக்கவே முடியவில்லை.  உடனே அந்தப் பதிவை நீக்குங்கள் என்று உத்தரவு.  ”ஒரே நெகட்டிவ் வைப்ஸ்.  எல்லாவற்றுக்கும் அராத்துதான் காரணம்” என்று போடு போடு என்று போடுகிறார்கள்.   

இப்படி சொல்லிச் சொல்லி ஒரு கட்டத்தில் எனக்கு மனநலமே பாதிக்கப்பட்டு விட்டது.  எப்படி என்று சொல்கிறேன். 

நான் இருபத்தெட்டு வயதிலிருந்து மது அருந்துகிறேன்.  இந்தியர்களைப் போல் அல்ல.  ஐரோப்பியர்களைப் போல.  இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது.  இந்தியர்கள் 300 ரூபாய் சரக்கைக் குடித்து விட்டு ஐம்பதிலேயே ஹார்ட் அட்டாக் வந்து டிக்கட் வாங்கிக் கொள்கிறார்கள்.  நான் குடித்த ரெமி மார்ட்டின் விலை 6000 ரூ.  முந்நூறு எங்கே, ஆறாயிரம் எங்கே?  இப்போது சீலே வைன் அருந்துகிறேன்.  சீலேயர்களின் சராசரி வயது 95.  சீலே கவிஞர் நிகானோர் பார்ரா 105 வயது வரை வாழ்ந்தார்.  வைன் அவர்களை ஒன்றும் செய்யவில்லை.  அதிலும் இடையில் நான் ஐந்து ஆண்டுகள் குடிக்கவில்லை.  பிறகு கொரோனா சமயத்தில் மூன்று ஆண்டுகள் குடிக்கவில்லை.  குடிக்க வேண்டும் என்று தோன்றக் கூட இல்லை. 

அவந்திகா என்னிடம் அடிக்கடி சொல்வாள், உன்னோடு என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணாலும் வாழ முடியாது என்று.  இது குறித்து நான் சுமார் நூறு கணவர்களிடம் கள ஆய்வு செய்தேன்.  நூறு பேருமே தங்கள் மனைவிகளும் இப்படித்தான் சொல்கிறார்கள் என்றார்கள்.  உடனே அதை மறந்து விட்டேன்.  ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அவந்திகா மூன்று மாதம் மும்பை சென்றிருந்த போது என் வழக்கத்துக்கு மாறாக சென்னையிலும் வைன் சாப்பிட்டேன்.  வாரம் ஒருநாள்.  அப்போது ஒரு தோழி என்னிடம் ஏடாகூடமாகப் பேசி என்னை ரௌடியாக மாற்றி விட்டார்.  பேட்டை ரௌடி போல் நடந்து கொண்டேன்.  காரணம், அவந்திகா சொன்னதுதான்.  வேறு எந்தப் பெண்ணாலும் என்னோடு பழக முடியவில்லை.  அவந்திகா சொன்னது சரிதான். 

நான் சீனியோடும் மற்ற நண்பர்களோடும் பதினைந்து ஆண்டுகளாக மாதம் ஒருமுறை குடித்து வருகிறேன்.  ஒவ்வொரு இரவும் படு அமர்க்களமாக, கொண்டாட்டமாகவே இருந்திருக்கிறது.  சொல்லப் போனால், சாதாரணமாக இருக்கும் சாரு வைன் அருந்தினால் படு சுவாரசியமான மனிதராக மாறி விடுகிறார். காரணம், ஒரு போதும் இன்னொருவரை எரிச்சல் படுத்துவது போல் யாரும் பேசுவதில்லை.  ஒரே ஒரு சமயம், ஒரு அஜித் ரசிகர் அஜித்தைக் கடவுள் ரேஞ்ஜில் வைத்துப் பேசியபோது அங்கேயிருந்த நாற்காலிகளை எடுத்து உடைத்து விட்டு அறைக்குப் போய் விட்டேன்.  தாய்லாந்தில் நடந்தது.  அதிலிருந்து ரசிகக் குஞ்சாமணிகளை சேர்ப்பதில்லை. 

அதே மாதிரி ரகளைதான் அன்று ஒருநாள் அவந்திகா மும்பை சென்றிருந்த போது நடந்து விட்டது.  எப்படி ஆரம்பமாயிற்று என்று ஞாபகம் இல்லை.  ஆனால் கல்லால் அடிக்காமல் நான் குரைக்க மாட்டேன்.  சீனி சீனி சீனி என்று சீனியைப் போட்டு அடி அடி என்று அடித்ததால் தாண்டவம் ஆடி விட்டேன்.  ஆக, அவந்திகா சொன்னது சரியாகப் போயிற்று.  என்னால் எந்தப் பெண்ணோடும் வாழ முடியாது.   

அதேபோல் இன்னொரு நண்பரோடு வெளியூர் போயிருந்தேன்.  எனக்கு யாரும் யாரையும் பண்ணையார் போல் நடத்துவது பிடிக்காது.  கொலைவெறி ஆகி விடுவேன்.  கூட வந்த நண்பர் என் வாசகர்கள் அனைவரையும் அப்படி நடத்திக் கொண்டிருந்ததை கவனித்துக் கொண்டே இருந்தேன்.  கொஞ்சம் பியர் உள்ளே போயிற்று.  ங்கோத்தா ங்கொம்மா என்று ஆரம்பித்து விட்டேன்.  மறுநாளே அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு விட்டேன்.  ஆனால் அந்த நண்பர் வினித்திடம் அவந்திகா பற்றியும் சீனி பற்றியும் படு மோசமாகப் பேசியிருக்கிறார்.  அதையும் அவரிடம் கேட்டேன்.  ஆமாம் என்று சொல்லி அதற்குக் காரணம் சொல்லி நியாயப்படுத்தினார்.  நட்பைத் துண்டித்து விட்டேன்.  முப்பது வருட நட்பு.  அவந்திகா என்னை எவ்வளவோ நன்றாக கவனித்துக் கொள்கிறாளாம், நான் குடித்துக் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொள்கிறேனாம்!  அடப் பரதேசிப் பயலே, என்னை ஒரு குடிகாரன் என்று நினைத்துக் கொண்டா இத்தனை நாள் நீ பழகினாய்?  உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்று வாழ்பவன் நான்.  அந்த அன்பருக்கோ நான் குடிகாரன் என்று தோன்றியிருக்கிறது.  இப்படிப்பட்ட ஆள் என்னோடு முப்பது ஆண்டுகளாகப் பழகியிருக்கிறார்!   

சரி, வினித் விட்ட இடத்துக்கு வருகிறேன். நான் குடும்ப அமைப்புக்கு எதிரான ஆள்தான்.  ஆனால் குடும்பத்திற்குள்ளேதானே உட்கார்ந்து குளிர் காய்ந்து கொண்டிருக்கிறேன்? மேலும், அவந்திகாவின் விருப்பப்படி நடக்க விடாமல் தடுக்க நான் யார் ஐயா?  என் நண்பர் ஒருவர் வெளிநாடு செல்ல விரும்பினார்.  அவர் மனைவி தடுத்து விட்டார்.  பெரும் அராஜகமாக இருக்கிறதே என்று மிகவும் கோபப்பட்டேன்.  பிறகு அவர் மெதுவாகச் சொன்னார், தர்ம பத்தினி அறுபதாம் கல்யாணம் கொண்டாடலாம் என்று சொன்னாராம்.  இவர் செலவாகும் என்று தடுத்து விட்டாராம்.  இப்போது அந்தப் பெண்மணி பழி வாங்குகிறார்.  இதற்குப் பெயரா குடும்பம்? 

மேலும், குடும்பம் என்ற அமைப்புக்குள் எத்தனை கொண்டாட்டங்கள் உண்டோ அனைத்தையும் செய்ய வேண்டியதுதான்.  தப்பே இல்லை.  எல்லோரும் வந்து குழந்தையை ஆசீர்வாதம் செய்தால் அதில் நமக்கு என்னய்யா பிரச்சினை?  நான் நாஸ்திகன், எனக்கு தீபாவளி வேண்டாம், கிருஷ்ண ஜெயந்தி வேண்டாம் என்று சொன்னால் பட்சணம் கிடைக்காது ஐயா.  ஆயுஷ் ஹோமம் எனக்குப் பிடித்திருந்த்து.  நீண்ட நாட்களாகப் பார்க்காத நண்பர்களைப் பார்க்க முடிந்தது.  பட்டப்பா சாப்பாட்டை எல்லோரும் ரசித்தார்கள்.  குழந்தைக்குக் காது குத்தினார்கள்.  மொட்டை அடித்தார்கள்.  மொட்டை அடிக்கும் போது பெரிய ரகளை நடக்கும் என்று எதிர்பார்த்தேன்.  கத்தி தலையில் ஏற்படுத்தும் சர் சர் என்ற சத்தத்தைக் கேட்டு பயல் குதூகலமாகி சிரித்துக் கொண்டே இருந்தான். 

எதிர்மறை அலைகள், நேர்மறை அலைகள் போன்றவற்றை நான் நம்புகிறேன்.  இமயமலையில் வேனில் செல்லும் போது டிரைவர்கள் கஞ்ஜா புகைப்பார்கள்.  சென்னையில் புகைத்தால் வண்டி இன்னொரு வண்டியில் மோதி விடும்.  அங்கே அதுதான் உயிர் காக்கும் மருந்து.  அதைப் புகைக்காவிட்டால் டிரைவர்களால் ஒழுங்காக அந்த மரணப் பாதையில் ஓட்ட முடியாது.  இன்னொன்று, வழியில் தென்படும் கடவுள்களையெல்லாம் வணங்கிக் கொண்டே செல்வார் டிரைவர்.  கடவுள் என்ன தெரியுமா?  ஏழெட்டு கருங்கல்லை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்திருப்பார்கள். 

அதெல்லாம் மூட நம்பிக்கை என்று சொன்னால் வேன் அதல பாதாளத்தில் கவிழ்ந்து விடும்.  அப்படிப்பட்டதுதான் ஆயுஷ் ஹோமம். 

மேலும், கொண்டாட்டமே இல்லாத அவந்திகாவுக்கும் ஒரு கொண்டாட்டம் வேண்டாமா?  வேண்டாம் என்று சொன்னால் நான் ஒரு கொலைகாரன் என்று பொருள். 

எல்லாவற்றையும் விட இரண்டு மணி நேரம் காதார திவ்யப் பிரபந்தம் கேட்டேன்.  அது ஒன்றுக்காகவே வருடா வருடம் ஹோமம் செய்யலாம். 

நான் எழுதியதற்கு எதிராக எதுவுமே பேசவில்லை.  நான் எழுதியதை நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லை வினித்.  இதோ ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்.  புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 

இந்தக் கதை அசோகா நாவலில் வருகிறது.  இப்போது இங்கே சொல்லி விட்டால் எல்லோரும் சாரு ப்ளாகில் எழுதியதையே திரும்பவும் எழுதி நாவல் என்று கொடுத்து ஏமாற்றி விட்டார் என்பார்கள்.  பழி உங்கள் மீதுதான் போடுவேன்.  ஏனென்றால், இந்தக் கதையைச் சொன்னால்தான் உங்கள் புகார்களுக்கு எல்லாம் பதில் கிடைக்கும்.

அசோகர் தன் 99 சகோதரர்களை குரூரமான முறையில் கொன்று விட்டுப் பதவிக்கு வந்தார்.  ஒரே ஒருவனைக் கொல்லவில்லை.  திஸ்ஸா.  அவன் மட்டும் அசோகரின் தாய்க்குப் பிறந்தவன்.  திஸ்ஸாவும் அசோகாவும் ஒருமுறை காட்டுக்குச் சென்றிருந்த போது திஸ்ஸா அங்கே தவம் செய்யும் பிராமணத் துறவிகளைப் பார்க்கிறான்.  ஒருவர் ஆறு மாதமாகத் தலைகீழாக நின்று தவம் செய்கிறார். ஒருவர் பல மாதங்களாக நீர் கூட அருந்தவில்லை.  எலும்பும் தோலுமாக இருக்கிறார்.  ஒருவரைச் சுற்றி புற்றே கட்டி விட்டது.  பல ஆண்டுகளாக தவம்.  திஸ்ஸா அண்ணனைக் கேட்கிறான்.  ”இந்த பிராமணர்கள் எவ்வளவு கடும் தவம் செய்து தங்கள் மதத்தைக் காப்பாற்றுகிறார்கள்?  நம் துறவிகளோ அரண்மனையில் நன்றாக வெண்ணையும் பாலுமாகத் தின்று கொழிக்கிறார்களே?  எப்படி பௌத்தம் வளரும்?”

அரண்மனைக்கு வா, பதில் சொல்கிறேன்.

அரசவையைக் கூட்டி அசோகா அறிவிக்கிறார்.  இன்றிலிருந்து திஸ்ஸாதான் நம் பேரரசர்.  ஒரு மாத காலம்.  அதற்குப் பிறகு அவருக்கு மரண தண்டனை.  ஏனென்றால், நான் உயிரோடு இருக்கும்போது இந்த அரியணைக்கு ஆசைப்பட்டால் மரணம்தான் தண்டனை.  திஸ்ஸாவும் ஆசைப்பட்டான்.  கொடுக்கிறேன், அரியணையையும் மரணத்தையும்.

ஒரு மாதம் ஆயிற்று.  அரசவை கூட்டப்பட்டது. 

என்ன தம்பி திஸ்ஸா, வெண்ணையும் பாலுமாகத் தின்று அரியணை சுகம் கண்டாயா?

ஐயோ அண்ணா, செத்து செத்துப் பிழைத்தேன்.  சாப்பிடவே இல்லை.  உயிரை மீட்டுத் தரச் சொல்லி ததாகதரைத்தான் ஒரு மாதமாகப் பிரார்த்தனை செய்தேன்.  ஒரு மாத காலமும் பிரார்த்தனையைத் தவிர வேறு எதையுமே செய்யவில்லை. 

அதையேதான் நம் துறவிகளும் இங்கே செய்து கொண்டிருக்கிறார்கள். சாதனாவில் இருக்கும்போது அவர்கள் வெண்ணைய் சாப்பிடுகிறார்களா மலத்தைத் தின்கிறார்களா என்பது அவர்களுக்கே தெரியாது.

அந்த பௌத்தத் துறவிகளைப் போன்றவன் நான்.  தாமரையிலையில் கிடக்கும் தண்ணீர்.  என்னைச் சுற்றிலும் பெண்கள்.  கையில் வைன்.  ஆனால் எதுவுமே என் மீது படிவதில்லை.  ஏன்?

நாற்பது ஆண்டுகளுக்கு முன் கடும் பட்டினியில் அரை மயக்கத்தில் பனகல் பார்க்கில் அருகம் புல்லைக் கடித்த போது அதில் நாய் மூத்திரம் வாசம் அடித்தது.  பக்கத்தில் ஒரு பசித்த நாய் காய்ந்த மனித நரகலை முறுக்கு போல் தின்று கொண்டிருந்தது.

இப்போது 2000 ரூபாய்க்கு சீலே வைன் அருந்துகிறேன்.

இரண்டும் எனக்கு ஒன்றுதான்.  இரண்டும் என் எழுத்துக்குக் கச்சாப் பொருள்.  ஏனென்றால், என் வாழ்க்கையே என் எழுத்தின் கச்சாப் பொருளாக இருந்து கொண்டிருக்கிறது.