இன்று காலை ஜெயமோகன் மாடல் என்ற ஜெயமோகனின் கட்டுரையைப் படித்து விட்டு செம ஜாலியாகி விட்டேன். ஏனென்றால், அதில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்துக்கும் வார்த்தைக்கும் நான் நேர் எதிராக வாழ்கிறேன். ஆம், ஒவ்வொரு வார்த்தைக்கும்.
காலையிலிருந்து அதே நினைவாக இருக்கிறேன். ஒரே ஆச்சரியம், எப்படி இது சாத்தியம் என்று. அந்த அளவுக்கு நேர் எதிர்.
உடனே ஸ்ரீ, ஸ்ரீராம், ஸ்ரீனி, வினித், ராஜேஷ் நால்வரிடமும் ஜெயமோகனின் கட்டுரையை அனுப்பி “சாரு எப்படி?” என்று அபிப்பிராயம் கேட்டேன்.
சீனி சொன்ன கருத்து ஆபாசத் தடைச் சட்டத்துக்குள் வரும் என்பதால் அதை வெளியே சொல்ல முடியாது. அய்யங்கார் என்றாலே இப்படித்தான் போல. ஆனால் நான் ரொம்ப ரசித்த அபிப்பிராயம் அதுதான். நேரில் கேட்பவர்களுக்கு அவசியம் சொல்லுவேன். அதைக் கேட்டால் ஜெயமோகனே குஷியாகி விடுவார். ஆனால் எழுத்தில் எழுத முடியாது.
வினித், அலுவலகத்தில் இருப்பதால் நாளை அனுப்புகிறேன் என்று சொல்லி விட்டார். ஸ்ரீராம் எழுதியிருந்தது இது:
You are a charmer. You attract men and women alike. முதலில் முகத்தில் உள்ள தேஜஸ். அதன் பிறகே எழுத்தாளன் என்ற மரியாதை.
ஏழு மாதங்கள் முன் தாயலாந்தில் தங்களை முதன்முதல் மதுபான விடுதியில் பார்த்த பெண், உங்களுக்கு உதட்டு முத்தம் தரவில்லையா!
அப்புறம் உங்கள் நகைச்சுவை உணர்வு. அவந்திகா உங்களிடம் இந்த வருடம் சாருவின் எழுபதாவது பிறந்த நாளை இதே ஹாலில் நடத்த வேண்டும் என்று சொன்ன போது, நீங்கள் ஒரு நொடி கூட தாமதிக்காமல், அதற்கென்ன, வருபவர் எல்லோருக்கும் தயிர் வடை பரிமாறி விடலாம் என்று சொன்னீர்கள். அவந்திகாவே சிரித்து விட்டார்.
அப்போது ஒரு பெண், என்ன சாருவுக்கு எழுபது வயதா, நம்பவே முடியவில்லையே என்றார். (கணவனுடன் வந்தவர், உங்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் கூட வாங்கினார்.)
Charu model இதுதான். Being young at heart and it reflects in your persona.
இன்னொரு முக்கியமான விஷயம். உங்களுக்கு முகஸ்துதி செய்பவர்களைப் பிடிக்காது. உடனடியாகத் துரத்தி விடுகிறீர்கள்.
ஸ்ரீ சொன்னது ரத்தினச் சுருக்கம். ஆனால் பன்னண்டாம் கிளாஸ் மட்டுமே படித்த ஸ்ரீயின் மெஸேஜுகளுக்கு அகராதியைப் பார்க்க வேண்டும். ஸ்ரீ அனுப்பிய மெஸேஜ்: You are an explosive aficionado of life. Remember Lucifer?
லூசிஃபர் சீரீஸ் பார்த்தபோதே எழுதினேன், லூசிஃபர் என்னைப் போலவே இருக்கிறான் என்று. லூசிஃபர் நரகத்தின் காப்பாளன். பூமிக்கு வந்து விடுகிறான். ஒரு போலீஸ்காரியைக் காதலிக்கிறான். அவளுக்கும் அவள் கணவனுக்கும் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. கணவனும் போலீஸ். ஆனால் அவனுக்கு விவாகரத்துக்கு விருப்பம் இல்லை. அதனால் வழக்கு இழுத்துக் கொண்டு போகிறது.
போலீஸ் பெண்ணுக்கும் லூசிஃபர் மீது காதல்தான். ஆனால் லூசிஃபர் தினமும் ஒரு பெண்ணோடு கலவி கொண்டு அதை போலீஸ்காரப் பெண்ணிடமும் ஆர்ப்பாட்டமாகச் சொல்கிறான். (நான் அந்த அளவு மோசம் இல்லை!) பூமியில் வாழும் ஒரு மானிடப் பிறவி அதைக் கேட்டு கடுப்பாவாளா மாட்டாளா? அதனால் லூசிஃபரின் காதலை அங்கீகரிக்காமலே காலத்தைக் கடத்துகிறாள் போலீஸ்பெண். லூசிஃபருக்கோ அவள் ஏன் தன்னுடைய மனப்பூர்வமான காதலை அங்கீகரிக்க மறுக்கிறாள் என்று ஒரே சம்சயம். தினம் ஒரு பெண்ணோடு நாம் படுத்தால் அதில் அவளுக்கு என்ன பிரச்சினை? அவர்களையெல்லாம் நான் காதலிக்கவில்லையே? இவளை மட்டும்தானே காதலிக்கிறேன்? இது ஏன் இவளுக்குப் புரியவே மாட்டேன் என்கிறது? (நான் பலமுறை கேட்டு பதில் கிடைக்காத கேள்வி இது!)
ஒருநாள் லூசிஃபர் நன்கு குடித்து, ஒரு பெண்ணோடு படுத்து விட்டு, போலீஸ்பெண்ணுக்குக் கொடுத்த நேரத்தின்படி வர வேண்டுமே என்று ஆடை மாற்றிக் கொள்ளாமல் அப்படியே வந்து விடுகிறான். சீச்சீ நீயும் ஒரு மனிதனா, உடனே ஆடையை மாற்று என்கிறாள் போலீஸ். உடனே அவன் பக்கத்திலிருக்கும் ஒரு ட்ரைக்ளீனிங் கடையில் தன் சட்டை பேண்ட் எல்லாவற்றையும் கழற்றிக் கொடுத்து சலவை செய்து கொடுங்கள் என்று கேட்கிறான். (உள்ளாடை அணிந்திருக்கிறான்!)
கிட்டத்தட்ட நான் இப்படித்தான். லூசிஃபராவது உள்ளாடையைக் கழற்றாமல் சட்டை பேண்ட் இரண்டை மட்டும் கொடுத்தான். நான் உள்ளாடையையும் கழற்றி விட்டேன். அதுவும் பத்து இருபது பேருக்கு முன்னால். விவரம் ராஸ லீலாவில் உள்ளது. அப்போது என் கூட இருந்தவர்களில் ஒருவர் தளவாய் சுந்தரம். நம்பாதவர்கள் தளவாய் சுந்தரத்தைக் கேட்டுக் கொள்ளலாம். தளவாய் இப்போது ஒரு இணையப் பத்திரிகையில் பணியாற்றுகிறார்.
முந்தாநாள் என் பேரன் வேதாவுக்கு ஆயுஷ்ஹோமம். அவந்திகாவிடம் நற்சான்றிதழ் பெற்றிருந்த நண்பர்களை மட்டும் அழைத்திருந்தேன். அதில் முக்கால்வாசிப் பேர் வரவில்லை. அழைத்தவர்களிடம் நான் சொன்னது, குழந்தையை ஆசீர்வாதம் பண்ணுகிறீர்களோ இல்லையோ, சாப்பாட்டுக்கு வந்து விடுங்கள். பட்டப்பா சமையல்.
வரும் திங்கள்கிழமை அன்று அவந்திகாவின் உறவினருக்கு சஷ்டியப்த பூர்த்தி. போனால் பல அனுகூலங்கள் உண்டு. திவ்யப் பிரபந்தம் கேட்கலாம். ரம்பா, திலோத்தமா போன்றவர்களையே தோற்கடிக்கும் அய்யங்கார் பெண்களைப் பார்க்கலாம். இது ரெண்டும் எனக்குத் தெரிந்தது. தெரியாததை அவந்திகாவிடம் கேட்டேன். சே, நீயெல்லாம் ஒரு மனுசனா என்றாள். நான் கேட்டது, சாப்பாடு உண்டா? யார் சமையல்?
என்னைப் பொருத்தவரை பெண்களோடு பழகுவதுதான் இந்த உலகிலேயே ஆகக் கடினமான காரியம். ஏனென்றால், பெண்களுக்கு நகைச்சுவை உணர்வே இல்லை. எனக்கோ பகடிதான் மிகப் பிடித்த பொழுதுபோக்கு. எவனொருவன் தன்னைப் பகடி செய்து கொள்கிறானோ அவனே மற்றவர்களையும் பகடி செய்யும் தகுதி படைத்தவன். அந்த வகையில் நான் ஒரு சிறந்த பகடிக்காரன். பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மியாக இருப்பதால் அவர்களோடு பழகும்போது ஏதோ கயிற்றில் நடப்பது போல் இருக்கிறது. ஏதாவது பகடி செய்து, அவர்கள் கோவித்துக் கொண்டால், ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்கிறோமா, அதையே வைத்து மீட்டூவில் மாட்டி விட்டு விடுவார்களோ என்று வேறு அச்சமாக இருக்கிறது. அப்புறம் ஒரு கேள்வி வரும், இவன் தப்பு செய்யவில்லை என்றால் எதற்கு ஆயிரம் மன்னிப்புக் கேட்டிருக்கிறான்? (அப்படிக் கேட்பவர்களுக்கு ஒன்று தெரியவில்லை, பெண்களிடம் பெண்கள் செய்த தப்புக்கே ஆண்தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். சந்தேகம் இருப்பவர்கள் இதில் எக்ஸ்பெர்ட்டாக இருக்கும் அபிலாஷை அணுகவும்.)
அதனால் எனக்கு ராஜேஷ், வினித், ஸ்ரீராம், சீனி போன்ற நண்பர்களோடு பழகுவதே ஜாலியாக இருக்கிறது. இவர்களை நான் என்ன வேண்டுமானாலும் பகடி செய்யலாம். கவலையே பட வேண்டியதில்லை. அந்த அளவுக்கு நான் உரிமை எடுத்துக் கொள்ள முடிகின்ற பெண் ஸ்ரீ மட்டும்தான். அவளும் சீனி மாதிரிதான். ’என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்’ டைப். இல்லாவிட்டால் பெங்களூர் பப்பில் அவள் கேட்ட மொக்கை கேள்வி பற்றி நான் எழுதியிருந்ததை வேறு எந்தப் பெண்ணையாவது வைத்து எழுதியிருந்தால் பத்ரகாளியாகி இருப்பார்கள்.
மற்றபடி என்னோடு பழகுவது புலி சிங்கம் கரடி போன்ற வனவிலங்குகளோடு பழகுவதற்கு ஒப்பானது என்றே நான் நினைக்கிறேன். பல நிபந்தனைகளைப் போடுவேன். நிபந்தனையில்லாத அன்பு என்பதெல்லாம் புல்ஷிட். ஏமாற்று வேலை. என்னுடைய முதல் நிபந்தனை, என் எழுத்தைப் படித்திருக்க வேண்டும். அதை விட முக்கியமான இரண்டாவது நிபந்தனை, என் எழுத்தைப் படிப்பதோடு மட்டும் அல்லாமல் அது உங்களுக்குப் பிடித்திருக்கவும் வேண்டும். என் எழுத்து பிடிக்கவில்லை என்பவர்களோடு நான் ஹலோ கூட சொல்வதில்லை. சென்ற ஆண்டு, ஒரு சக எழுத்தாளர் என் எழுத்து பற்றி மிக மோசமாக எழுதியிருந்தார். அடுத்த நாளே அவருடைய புத்தக வெளியீட்டுக்கு அழைத்தார். என் எழுத்து பிடிக்காதவர்களுக்கு நான் ஹலோ கூட சொல்வதில்லை என்று சொல்லி அவரை என் ஃபோனில் ப்ளாக் பண்ணி விட்டேன்.
இதுவரை நான் சந்தித்த பெண்களிலேயே பேரழகி என்று சொல்லத்தக்க ஒரு பெண். செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த பெண் போல் இருப்பாள். சாரு சாரு என்று உருகுவாள். ஹலோ சொல்லும்போது ஓடி வந்து இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொள்வாள். ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் போலவே நடந்து கொள்வாள். பார்ப்பவர்களும் அவள் என் கேர்ள் ஃப்ரெண்ட் என்றே நினைத்து விடுவார்கள். அப்படி நினைப்பதுதான் அவள் நோக்கம் என்று நினைக்கிறேன். ஆனால் அவள் அறையில் நாங்கள் தனியாக இருக்கும்போது மட்டும் தமிழ்க் கற்பின் உதாரண புருஷி போல் நடந்து கொள்வாள். எனக்கு அப்போது பக்திதான் வருமே தவிர காதலோ காமமோ தோன்றியதில்லை. வயது இருபத்து இரண்டு. பச்சைக் கண்கள். தமிழ்தான். ஒருநாள் ப்ரூ ரூமில் வைத்து தலை வலிக்கிறது என்றாள். உடனே மனம் உருகி அங்கேயே அவளுக்கு ஒரு பத்து நிமிடம் ஹெட் மஸாஜ் செய்து விட்டேன். அதை ஒரு பெண் பார்த்து என் தோழிக்குப் போட்டுக் கொடுத்து பெரிய பிரச்சினை ஆனது வேறு கதை. நான் நிஜமாகவே அவள் தலைவலிக்காகத்தான் மஸாஜ் செய்தேன். வினித்துக்குத் தலைவலி என்றாலும் அப்படித்தான் செய்வேன். சந்தித்த முதல் நாளே லாசரா மகன் சப்தரிஷிக்குக் கால் வலி என்று சொன்னதும் காலை என் மடியில் வைத்துக் கொள்ளுங்கள், பிடித்து விடுகிறேன் என்று சொன்னேன். அதை இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார் சப்தரிஷி. அப்படித்தான் இலங்கையில் ஒரு பெண் காலில் கடும் வலி என்றாள். தரையில் அமர்ந்திருந்தோம். அவள் பாதம் என் அருகில் இருந்ததால் காலைப் பிடித்து மஸாஜ் செய்ய முயன்றேன். உடனே அவள் என்னை சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி என் காலைத் தொட்டு விட்டீர்களே, எப்பேர்ப்பட்ட பாவம் செய்தவள் ஆகி விட்டேன் என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள்.
பச்சைக் கண் பேரழியிடம் இரண்டு ஆண்டுகள் கழித்து எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. நீ என் எழுத்தைப் படித்திருக்கிறாயா என்றேன். ஒரு புத்தகம் கூட படித்ததில்லை என்றாள். என் ப்ளாக் படிக்கிறாயா என்றேன். இல்லை என்றாள். ஆறு மாதம் தருகிறேன், எதையாவது படித்து விட்டு வா என்றேன். இடையில் நான் சந்திக்கவே இல்லை. ஆறு மாதம் கெடு முடிந்தது. படித்தாயா என்றேன். படிக்கவில்லை. நட்பைத் துண்டித்து விட்டேன்.
அவள் என்னை மீட்டூவில் மாட்டாததற்கு இன்று வரை அவளுக்கும் கடவுளுக்கும் நன்றி சொல்கிறேன். அப்படி அவள் என்னை மீட்டூவில் மாட்டி விட்டிருந்தால் எனக்கு அவமானம் ஆகியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஆண்கள் அத்தனை பேருக்கும் என் மீது பொறாமை உண்டாகியிருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை. அப்பேர்ப்பட்ட பேரழகி.
எதற்குச் சொன்னேன் என்றால், ரம்பை ஊர்வசியே என்றாலும் என் எழுத்தைப் படித்து, என் எழுத்து பிடித்தும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னோடு பழக இயலாது.
இதுவே இப்படியென்றால், இலக்கியம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்பவர்களை நான் மனிதர்களாகவே மதிப்பதில்லை. மனித உருவில் நடமாடும் பன்றிகள். அவர்களோடு எனக்கு என்ன பேச்சு? அவர்கள் பக்கம் கூடத் திரும்ப மாட்டேன். ஹலோ கூட சொல்ல மாட்டேன். அது என் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரி. (அவந்திகாவுக்கு மட்டுமே விதிவிலக்கு. அவள் படித்தால் இப்படி பச்சைக் கண்ணழகி பற்றியெல்லாம் எழுத முடியுமா? ”என்னது, தலைக்கு மஸாஜ் பண்ணினாயா? ஒரே அறையில் இருந்தாயா? எந்தச் சிறுக்கி அந்தப் பச்சைக் கண்?” என்று கேட்டு அவளைத் தேடிக் கண்டுபிடித்து துண்டு துண்டாக வெட்டி விடுவாள். எனவே அவள் படிக்காததே எனக்கு நலம்!)
சென்னையில் ஒரு பெரும் செல்வந்தர். மிகப் பெரிய கோடீஸ்வர்ர். என்னைச் சந்திக்க வேண்டும் என்றார். என் எழுத்தைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். படித்திருக்கிறேன் என்றார். சந்திக்கலாம், ஆனால் என் பயணச் செலவுகளுக்கு ஒரு லட்சம் வேண்டும் என்றேன். விலகிக் கொண்டார். இதுவே ஒரு ஆட்டோக்காரர் என்றால் பணம் வாங்காமல் சந்தித்திருப்பேன். செல்வந்தர்கள் கட்டணம் கட்ட வேண்டும். கட்டணம் செலுத்தாமல் இவர்கள் ஜக்கியையோ ஓஷோவையோ சந்திக்க முடியுமா? நான் அவர்களையெல்லாம் விடப் பெரிய ஆள். என் நேரத்துக்கு விலை தர வேண்டும்.
இப்படி என்னிடம் பல நிபந்தனைகள் உண்டு. இதெல்லாம் தவிர, நான் நண்பர்கள் வீட்டுக்குப் பக்கமே திரும்ப மாட்டேன். ஏனென்றால், அந்தக் குடும்பத்தில் கணவனோ மனைவியோ மட்டும்தான் என் வாசகராக இருப்பார். அப்படியிருக்கும்போது நான் ஏன் என் வாசகராக இல்லாத இன்னொருவரைச் சந்திக்க வேண்டும்? இன்னொரு பெரிய அலுப்பு, அந்த வீட்டில் நான் சந்திக்கப் போகும் கிழடுகள். மாமனார், மாமியார், நாத்தனார், வதினை, கல்லூரி போகும் மகன், மகள். இதுகளைப் போன்ற பன்றி ஜென்மங்களை நான் பார்த்ததே இல்லை. மலம் தின்று, சேற்றில் வாழும் பன்றிகளைக் கட்டிக் கொண்டு அவைகளுக்கு உங்களால் முத்தம் கொடுக்க முடியுமா? பன்றியின் வாயிலும் முகத்திலும் உள்ள பீ உங்கள் முகத்தில் ஒட்டும் இல்லையா? அப்படிப்பட்ட பன்றிகள்தான் நம் நண்பர்களின் மாமனார், மாமியார், நாத்தனார், வதினை, மச்சான் எல்லாம். குழந்தைகளோ நரகத்திலிருந்து வந்தவை. ஒரே ஒரு விஷயம் சொல்கிறேன். இங்கே என் பேரன் இருந்த போது ஒரு பணிப்பெண் வந்தாள். அவளுடைய ஐந்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு வந்தாள். நேநி சமையல் அறையில் ஏதோ வேலையாக இருந்தாள். குழந்தை என் கவனிப்பில் இருந்தான். அப்போது ஏதோ ஏசி சுவிட்சில் பார்த்துக் கொண்டிருந்தேன். அது கொஞ்சம் வேலை செய்யாமல் இருந்தது. வேதா (ஒரு வயது) கட்டிலில் இருந்தான். பணிப்பெண்ணின் மகனும் கட்டிலுக்கு குரங்கைப் போல் ஒரே தாவாகத் தாவினான். நான் ஏசி சுவிட்சில் இருந்தேன். திடீரென்று வேதா மூச்சு விடத் திணறுவது போல் முனகும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு பெரிய தலையணையை வேதாவின் முகத்தில் வைத்து அழுத்தி அதன் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டிருந்தான் ஐந்து வயதுப் பையன். கொஞ்ச நேரம் நான் வேறு இடத்தில் இருந்திருந்தால் வேதாவின் உயிர் போயிருக்கும்.
நான் ஒன்றுமே சொல்லாமல் அந்தப் பையனை விலக்கி விட்டேன். யாரிடமும் அது பற்றிச் சொல்லவில்லை. வீட்டில் சிசிடிவி கேமரா இல்லை. நான் சொன்னால் நம்ப மாட்டார்கள். அவந்திகாவிடம் கூட சொல்லவில்லை. ஏனென்றால், தவறு என் மகன் மற்றும் மருமகள் மீது. தங்களால் வளர்க்க முடியாத பிள்ளையை வேறு இடத்தில் கொடுக்கக் கூடாது. நேநியிடம் கொடுத்தும் வளர்க்கச் சொல்லக் கூடாது. அப்போதுதான் என் மகனும் மருமகளும் மும்பைக்குக் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களைத் திரும்ப அழைத்திருக்க வேண்டிய சம்பவம் ஒரு நொடியில் மாறியது. என்னுடைய கூர்மையான கவனத்தினால் வேதாவின் உயிர் பிழைத்தது. பணிப்பெண்ணின் மகன் அதை சினிமாவில் பார்த்திருக்கலாம். என்னால் யூகிக்க முடியவில்லை.
இதனால்தான் எனக்குப் பெரிய கழுதைகளைப் போலவே குழந்தைகளையும் பிடிக்காது. எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்று சொன்னால் எல்லோரும் என்னை அரக்கனைப் போலவும் பிள்ளைக் கறி சாப்பிடுபவனைப் போலவும் பார்க்கிறார்கள். டேய், நீங்கள்தான் இப்படி பிள்ளைகளை வளர்க்கிறீர்கள். தப்பு என் பேரில் இல்லை. இந்தியக் குழந்தைகள் அனைவரும் பெற்றோரின் பிம்பங்கள். பெற்றோரின் ரோபோ மாடல்கள். இதுவரை என் வாழ்வில் நான் பார்த்த ஒரே நல்ல குழந்தை ஜெயமோகனின் மகன் அஜிதன்தான். அவனை நான் மூன்று வயதில் பார்த்தேன். ஐந்து மணி நேரம் அவனோடு இருந்தேன். அதற்கு அடுத்து என் பேரன்தான். ஒரு வயது. எப்போதும் சிரித்தபடியே இருப்பான். எல்லோரிடமும் தாவித் தாவிப் போவான். பூனை நாய்களை அன்போடு தடவிக் கொடுப்பான். மற்ற குழந்தைகள் அடிக்கும். சித்ரவதை செய்யும். என்னுடைய ஆறு மாத வளர்ப்பு. இப்போது மும்பை போய் விட்டான். நேநிகளால் வளர்க்கப்படுவான். எப்படி வளர்வான் என்று எனக்குத் தெரியாது. நடந்த சம்பவம் பற்றி இப்போது எழுதுவதைத் தவிர வேறு யாரிடமும் இதுவரை நான் சொல்லவில்லை. பணிப்பெண்ணிடம் சொன்னால் வேலையை விட்டு நின்று விடுவாள். அத்தனை வேலையும் என் தலையில் விழும்.
இன்னொரு குழந்தை பற்றி அன்பு நாவலில் எழுதியிருக்கிறேன். என் நண்பரின் பேத்தி. என்னுடைய அத்தனை வெறுப்பையும் அவள் மீது கொட்டியிருப்பேன். அத்தனை அருவருப்பான முறையில்தான் பெற்றோர் குழந்தைகளை வளர்க்கிறார்கள். அருவருப்பான பெற்றோர். அருவருப்பான குழந்தைகள். அருவருப்பான தாத்தா பாட்டிகள். இப்படிப்பட்ட அருவருப்பான மனிதர்களிடையேதான் என் எழுத்தைப் படிக்கும் ஒரு வாசகனோ வாசகியோ வாழ்கிறார். ஆயிரத்தில் அல்லது லட்சத்தில் ஒருத்தர். அவர்களைப் பார்க்க நான் அவர்கள் வீட்டுக்குப் போனால், அந்த வீட்டில் வாழும் அத்தனை பன்றிகளையும் நான் பார்த்து இளிக்க வேண்டும். மலம் தின்னும் பன்றிகளுக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்ச வேண்டும். இதெல்லாம் தேவையா என்ன?
ஒரு வீட்டு விசேஷத்தை எடுத்துக் கொள்வோம். அங்கே வரும் என் நண்பர்களைத் தவிர வேறு யாருமே எனக்கு மனிதர்களாகத் தெரியவில்லை. அத்தனை பேருக்குமே பணத்தைத் தவிர வேறு எதுவுமே தெரியவில்லை. அவர்கள் உலகில் பணத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை. இப்படிப்பட்ட பன்றிகளோடு எனக்கு என்ன உறவு? எனக்கு என்ன பேச்சு? ஒரு உறவுக்காரன் அமெரிக்காவில் இருக்கிறான். இங்கே சென்னையில் வீடு வீடாக வாங்கிக் கொண்டே இருக்கிறான். அவனுக்கும் பணத்தைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. இவனுக்கும் மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்?
இங்கே என்னுடைய இரண்டு நண்பர்களைப் பற்றிச் சொல்கிறேன். ஒருவர், யோகா குரு சௌந்தர். தன்னுடைய யோகத்தை அவர் சக மனிதர்களுக்குப் பகிர்ந்து அளிக்கிறார். அனைவரின் உடல் நலத்துக்கும் தேவையான, தகுந்த பராமரிப்பு முறையை வழங்குகிறார். அது ஒரு மகத்தான சேவை. இன்னொருவர் சித்த மருத்துவர் பாஸ்கரன். நோய்மையில் வாடும் மனிதர்களுக்கு மூலிகைகளை அளித்து அவர்களின் வாழ்வை மேம்படுத்துகிறார். இப்படி மனிதனாய்ப் பிறந்தவர்கள் சக மனிதர்களின் நலத்தைப் பேணுபவர்களாக இருக்க வேண்டும். ஆனால் நான் சமூகத்தில் பார்க்கும் அத்தனை பேரும் பணப் பிசாசுகளாக இருக்கிறார்கள். அவர்களோடு நான் ஏன் நட்பு பாராட்ட வேண்டும்?
சிலரிடம் மட்டும் நான் மும்பை தாதாக்கள் மாதிரி பழகுகிறேன். ஒரு உதாரணம் தருகிறேன். ஒரு கோடீஸ்வரர். நான் ஒரு ஜாகுவார் கார் வாங்கியிருக்கிறேன், முதல் பயணம் உங்களோடு போக வேண்டும் என்றார். விலை கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்.
நாங்கள் ஒரு ஆவணப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம், அதற்கு கேமரா வாங்குவதற்கு ஐந்து லட்சம் வேண்டும் என்றேன். கொடுத்தார். கேமராவும் வாங்கியாயிற்று.
அந்தக் கோடீஸ்வர நண்பர் அடுத்து அடுத்து சில கார்கள் வாங்கினார். செய்தியும் சொன்னார். ஆனால் முதல் பயணம் செல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. அவ்வப்போது ப்ரூரூமில் சந்தித்து காஃபி குடிப்பதோடு சரி.
இன்னும் பல விஷயங்கள் சொல்ல இருக்கிறது. ஒரு நண்பர். எக்ஸ் என்று நாமகரணம் சூட்டுவோம். என் எழுத்தைப் படித்து என்னோடு சேர்ந்தவர். நீங்கள் காய்கறி கடைக்குக் கூடப் போக வேண்டாம், நான் போகிறேன், அந்த நேரத்தில் நீங்கள் எழுதுங்கள் என்று சொல்வார். ஒருமுறை அல்ல, நூறு முறை சொன்னார். அதனால் ஒரே ஒருமுறை நான் மிக அவசரமாக ஒரு பத்திரிகைக்கு எழுத வேண்டியிருந்ததால் அவரை மீன் வாங்கித் தர முடியுமா என்று கேட்க வேண்டியதாயிற்று. அவர் பிராமணர். அதுதான் சங்கடம். அரசாங்கக் கடை என்பதால் பேரமெல்லாம் இல்லை. போய் என்ன வேண்டும் என்று சொன்னால் வெட்டி பையில் போட்டுக் கொடுப்பார்கள். மிகுந்த தயக்கத்துடன்தான் சொன்னேன். அவரும் சந்தோஷமாகச் செய்தார். அந்த மீனை நான் எனக்காகக் கேட்கவில்லை. ஒரு பிராமணரை மீன் வாங்கிக் கொடுக்கச் சொல்லி சாப்பிடும் அளவுக்கு நான் மோசம் இல்லை. என் நாய் ஸோரோ மீனைத் தவிர வேறு எதுவும் சாப்பிடாது. அதனால்தான் அவர் உதவியை நாடினேன். இப்போது என்றால் ஸ்விக்கி மூலம் வாங்கி விடலாம். அப்போது அப்படி இல்லை.
அதைத் தவிர அந்த நண்பரிடம் நான் எந்த உதவியும் கேட்டதில்லை. ஆனால் அவருக்காக நான் பல உதவிகள் செய்திருக்கிறேன். அவருடைய கதைகளை வரிவரியாகப் படித்து திருத்தம் செய்து கொடுத்திருக்கிறேன். ஒரு நாவல், ஒரு சிறுகதைத் தொகுப்பு என்று பல. அப்போது அவர் என்னுடன் இருந்ததால் அவருக்கென்று ஒரு அடையாளம் இருந்தது. திடீரென்று அவர் காணாமல் போய் விட்டார். இப்போது அவர் பெயரும் காணாமல் போய் விட்டது. நானாக ஃபோன் பண்ணினாலும் லௌகீக வாழ்வில் – பணம் சம்பாதிப்பதில் மூழ்கி விட்டேன் என்பார். குடும்பத்தை ஓட்ட பணம் தேவைப்படுகிறதே என்பார்.
இரண்டு மூன்று முறை ஃபோன் பண்ணிப் பார்த்து விட்டு நானும் விட்டு விட்டேன்.
அப்புறம்தான் எனக்குத் தெரிந்தது, அவருடைய புத்தகம் ஏதாவது வருவதாக இருந்தால் மட்டுமே அவர் என்னை நெருங்குகிறார் என்பது. பிறகு அதையும் மறந்து விட்டேன்.
இப்போது ஐந்து ஆண்டுகள் கழித்து ஒரு விஷயம் வினித் மூலம் கேள்விப்பட்டேன். வினித் அவரிடம் என்ன ஆளையே காணோம் என்று கேட்டபோது அவர் சொன்னாராம். சாருவோடு பழகுவதில் ஒரு சின்ன பிரச்சினை இருக்கிறது, அவரோடு பழகினால் நம் குடும்ப வாழ்வையும், லௌகீக வாழ்வையும் மறந்து அவருக்கு சேவை செய்வதிலேயே காலம் போய் விடுகிறது, அதனால் அவரை விட்டு விலகி விட்டேன்.
இதுதான் என் வாழ்வில் சந்தித்த மிகப் பெரிய துரோகம். அவராகத்தான் என்னிடம் வந்து என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார். அப்படியும் நான் அவரிடம் அந்த மீன் விஷயத்தைத் தவிர வேறு எந்த உதவியும் கேட்டதாக ஞாபகம் இல்லை. அவ்வப்போது அவரோடு சேர்ந்து உணவகத்துக்குப் போய் சாப்பிட்டிருக்கிறேன். அதிலும் நான்தான் பணம் கொடுப்பேன். அவர் பணத்துக்குக் கஷ்டப்படுகிறார் என்று தெரியும். அதுகூட அவரிடம் பைக் இருந்ததால் போனேன். இப்போது இப்படி ஒரு புகார். ஏன் துரோகம் என்று சொல்கிறேன் என்றால், அவரை நான் ஸ்ரீராம் போல, வினித் போல, சீனி போல என்னுடைய மிக நெருக்கமான நண்பராக நினைத்திருந்தேன். ஆனால் ஒன்று, ஒரு சக எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரைப் போல் சாரு அயோக்கியன் அல்ல, ஆனால் சாருவுக்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது, அதுதான் கஷ்டம் என்றாராம். அந்த வகையில் அவருக்கு நன்றி. ஆனால், அவருக்காக நான் செய்த, நான் செலவிட்ட எத்தனையோ மணி நேரத்தை எந்தக் கணக்கில் சேர்ப்பது? மேலும், ஒரு குருவிடம் பணிந்து – என்னோடு அவர் பேசும்போது முதுகை ’ட’வைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்ட வடிவில் வளைத்து நின்று கொண்டுதான் பேசுவார். அத்தனை பணிவு. அப்போதே நான் உஷாராகியிருக்க வேண்டும். – அப்படி ஒரு குருவோடு நீங்கள் பழகும்போது நீங்களாக விரும்பி அவருக்கு ஏதாவது செய்தால் அதைப் போய் புகாராகச் சொல்வீர்களா? அது பெரும் பாவம் இல்லையா? குருத் துரோகம் இல்லையா? நான் உங்களைக் கேட்டேனா? நான் யாரிடமாவது உதவி கேட்பதற்கு ஆயிரம் முறை யோசிப்பவன். இப்போது கூட கோவா செல்வதற்கு வெப் செக் இன் என்று ஒரு கண்றாவி காரியம் இருக்கிறது. அதை எனக்கு செய்யத் தெரியாது. சீனியிடம் நிச்சயம் கேட்க முடியாது. ஊர் பூராவும் அவரை இதுபோல் கேட்டுக் கேட்டு அவர் எல்லோர் மீதும் கொலைவெறியில் இருக்கிறார். சமீபத்தில் கூட நான் பெங்களூர் சென்ற போது கோரமங்கலாவில் தங்கினேனா, அங்கே நல்ல உணவகம் எது என்று சீனியைத்தான் கேட்க நினைத்தேன். அப்புறம் இந்த விஷயம் ஞாபகம் வந்து இன்னொரு நண்பரைக் கேட்டேன். அவர் பெங்களூர்க்கார்ர். அவர் “பூ, இவ்வளவுதானே, இதோ சீனியிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்றார். உடனே அவர் குரல்வளையைப் பிடிப்பது போல் போனிலேயே பிடித்து “யோவ், சீனியைக் கேட்டால் அவர் உங்கள் வீடு தேடி வந்து உதைப்பார், எனக்கு சாப்பாடே வேண்டாம், நான் பட்டினி கிடந்து கொள்கிறேன்” என்று சொல்லி விட்டேன். ஆனால் சொல்லி இரண்டு நிமிடத்தில் சீனியே தொலைபேசியில் அழைத்து உணவகம் ஒன்றைச் சொன்னார். கேரள உணவு எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தக் கேரளத்து உணவு நன்றாகவே இருந்த்து.
ஆக, இப்போது வெப் செக் இன் போடச் சொல்லி யாரிடம் கேட்பது? வினித்திடம் கேட்டால் குளறுபடி பண்ணி விடுவார். இலங்கைக்கு டிக்கட் போடும்போது என் பிறந்த தேதியைத் தப்பாகப் போட்டு கொழும்பு விமான நிலையத்தில் எனக்குப் பெரிய பிரச்சினை ஆகி விட்டது. வேறு யாரைக் கேட்பது என்று கடுமையாக யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படித்தான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் மடிக்கணினியில் ஒரு சிறிய பிரச்சினை. மிகச் சிறிய பிரச்சினை. என் நண்பர்களிடம் கேட்டால் டீம் வியூவரில் வந்து ஒரு நொடியில் சரி செய்து விடுவார்கள். கார்த்திக்கிடம் (என் மகன்) கேளேம்ப்பா என்றாள் அவந்திகா. நான் தயங்கினேன். அவள் வற்புறுத்தினாள். கேட்டேன். ஒரு நொடியில் சரி பண்ணி விட்டு, இதையெல்லாம் நீங்களே கற்றுக் கொண்டு செய்ய வேண்டும் டாடி என்று சலிப்புடனும் வெறுப்புடனும் ஆக்ரோஷத்துடனும் சொன்னான்.
அப்படியே மடிக்கணினியைத் தூக்கிப் போட்டு சுக்கு நூறாக உடைத்து விட்டேன். 60,000 ரூ காலி. என்னுடைய ஐந்து ஆண்டு எழுத்தும் காலி. “நான் உன்னை தால்ஸ்தாயைப் படி, தஸ்தயேவ்ஸ்கியைப் படி என்று சொன்னேனா? நீ எப்படி எனக்கு அறிவுரை சொல்லலாம்?” என்று நாலு தெருவுக்குக் கேட்கும்படி கத்தி விட்டு வீட்டை விட்டுப் போய் விட்டேன். (கார்த்திக்குக்கு புத்தகம் படித்தால் தலையில் பூரான் நெளிகிறது என்பான்.) இரவு பத்து மணி. ஏன் இப்படி நடந்தது தெரியுமா? அப்போது நான் ஒரு மாத காலமாக இரவு பகலாக ஏதோ படித்து எழுதிக் கொண்டிருந்தேன். நள்ளிரவுதான் வீடு திரும்பினேன். அதிலிருந்து கார்த்திக்கிடம் எந்த உதவியும் கேட்பதில்லை. அதுவே முதலும் கடைசியும் ஆனது.
ஆக, எனக்கு யாரும் அறிவுரை சொன்னால் என் சுவாதீனத்தையே இழந்து விடுவேன். எனக்கு அறிவுரை சொல்ல வேண்டுமானால் நானாக உங்களிடம் வர வேண்டும். அறிவுரை சொல்லுங்கள், ஆலோசனை சொல்லுங்கள் என்று நானாக உங்களிடம் கேட்க வேண்டும். சீனியிடம் நான் வாரம் ஒரு ஆலோசனை கேட்கிறேன். அது நானாகக் கேட்பது. கார்த்திக் சொல்வது போல் ஐம்பத்தைந்து வயதில் நான் மடிக்கணினி பற்றிய விஷயங்களைக் கற்றுக் கொண்டால் என் எழுத்து என்னிடமிருந்து அகன்று விடும். இப்போதும் சொல்கிறேன், நானே வெப் செக்கிங் செய்யக் கற்றுக் கொண்டால் என்னால் ஆர்த்தோ நாடகத்தை எழுத முடியாது. இது வந்தால் அது போய் விடும். ஏனென்றால், லௌகீக காரியங்களில் சமர்த்தராக இருப்பவர்கள் பன்றிகளைப் போல் வாழ்கிறார்கள். (சீனி போன்ற விதிவிலக்குகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.) மேலும், லௌகீக காரியங்களில் சமர்த்தராக இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் அடிப்படை விஷயங்களில் கோட்டை விட்டுவிட்டு குஷ்டரோகிகளைப் போல் வாழ்வதையும் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த சமர்த்தர்களின் நிலை மிகப் பரிதாபமாக இருக்கிறது.
ஆகவே, நான் எக்ஸிடம் வேலை சொல்லியிருந்தால் – ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் – நீங்கள் என்னிடம் பழகும்போது அதற்கான விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் நண்பரே! என் வாழ்வில் சம்பந்தப்பட்ட சிலர் இருக்கிறார்கள். அன்பைப் பொழிவார்கள். என்னிடமிருந்து அவர்களுக்கு எல்லா உதவியும் – பண உதவி உட்பட – கிடைக்கும். இனிமையுடன் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் எல்லாமே எப்போதுமே ஒருவழிப் பாதையாகவே இருக்கும். எனக்கு அவர்களிடமிருந்து எதுவுமே கிடைக்காது.
சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு பெண் சொன்னார். அந்தப் பெண் என்னைப் போல் பணத்தைப் பணமாக மதிக்காமல் வள்ளலைப் போல் பிறருக்குக் கொடுத்து உதவுபவர். அவர் தன் தமக்கையோடு ஒரு நாள் முழுவதும் தமக்கையின் காரில் தன்னுடைய வேலையாகச் சுற்றியிருக்கிறார். வேலை முடிந்து ஆயிரம் ரூபாயை தமக்கையிடம் கொடுக்க, அவரும் வாங்கிக் கொண்டாராம். பெட்ரோல் செலவு. தமக்கைக்கு சென்னையில் நான்கு வீடு இருக்கிறது. கோடீஸ்வரி. இந்தப் பெண் தனக்கென்று எதையுமே வைத்துக் கொள்ளாமல் ஊராருக்குக் கொடுப்பவர். பிச்சைக்காரி. தன் தங்கைக்காக ஆயிரம் ரூபாய் பெட்ரோல் செலவைக் கூட ஏற்றுக் கொள்ள மனம் இல்லாத இம்மாதிரி பன்றி ஜென்மங்களுக்கு நான் ஏன் ஹலோ சொல்ல வேண்டும்?
என்னோடு பழகுவது பற்றிச் சொல்ல இன்னும் ஏராளம் உண்டு. ஒன்றே ஒன்று கடைசியாக.
என்னோடு நெருங்கிப் பழகும் ஆண் பெண் யாவரும் சொல்லும் ஒரு விஷயம், நான் ஒரு குழந்தையைப் போல் பழகுகிறேன் என்பது. லூசிஃபரும் ஒரு குழந்தை மாதிரிதான் சிந்திக்கிறான். இலங்கை சென்றிருந்த போது ஆண் பெண் பேதமின்றி என்னோடு பழகிய அத்தனை பேரும் சொன்னது அந்த வார்த்தைதான்.
ஆனால் நான் ஒரு குழந்தையைப் போல் பழகினாலும், எனக்கு நண்பர்கள் என்று நான்கைந்து பேர்தான் இருக்கிறார்கள். என்னுடைய முன் நிபந்தனைகளே பலரையும் தூரத்தில் தள்ளி விடுகிறது என்று நினைக்கிறேன். பச்சைக் கண் ஒரு உதாரணம்.