நாடக வாசிப்பு

கோவாவில் வரும் சனிக்கிழமை 22ஆம் தேதி எந்த நேரத்தில் நாடகம் வாசிப்பீர்கள் என்று கேட்டு ஒரு நண்பர் கடிதம் எழுதியிருந்தார்.

அது 21ஆம் தேதி எப்போது உறங்கப் போகிறேன் என்பதைப் பொருத்தது. வீட்டில் இருக்கும்போது ராணுவ ஒழுங்குடன் வாழ்கிறேன். இரவு பதினோரு மணி அதிக பட்சம். அதற்கு மேல் கண் விழிக்க மாட்டேன். காலையில் நாலரை அல்லது ஐந்து. அதற்கு மேல் உறங்க மாட்டேன். உறங்க நினைத்தாலும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் குயில்களும் கிளிகளும் என்னை உறங்க விடாது. என் வீட்டுக்கு அருகில்தான் குயில் தோப்பு என்ற இடம் இருக்கிறது. அதுவும் தவிர வீட்டைச் சுற்றிலும் மரங்களாக இருப்பதால் ஆயிரக் கணக்கான கிளிகளும் அதை விட அதிகமான குயில்களும் வசிக்கின்றன. ஒரு மனிதனுக்கு ஆறு மணி நேர உறக்கம் போதும். அதற்கு மேல் தூங்குபவர்கள் சமூகத்தின் மேல்தட்டுக்கு வருவது சிரமம். இது விஷயத்தில் ஜெயமோகன் சொல்வது, அவருடைய கற்பனையாக இருக்கலாம். எழுத்தாளர்களுக்கு அவர்களைக் குறித்த இது போன்ற பல கற்பனைகள் உண்டு. அல்லது, அவர் மட்டும் விதிவிலக்காக இருக்கலாம்.

எனக்கெல்லாம் ஐந்து மணி நேர உறக்கமே போதுமானதாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து கருணாநிதியும் இளையராஜாவும் ஐந்து மணி நேரம் உறங்கியவர்கள். அவர்கள் என்ன தூங்கி வழிந்து கொண்டா இருந்தார்கள்?

ஆனால் நான் அரை மணி நேரம் ஆழ்நிலை தியானமும் அரை மணி நேரமும் பிராணாயாமமும் செய்கிறேன். அது முக்கியம்.

ஆனால் வெளியூர் போனால் தியானமும் பிராணாயாமமும் கையோடு இருக்கும் என்றாலும் உறக்கம் என் கையில் இல்லை. அது அன்றைய தினத்துக்கான விவாதப் பொருளைப் பொருத்தது. அதிகாலை நான்கு வரை பேசிக் கொண்டிருப்பேன். சமயங்களில் ஆறு மணி வரை கூடப் போகும். அப்படியானால் விழிக்க பதினொன்று ஆகி விடும். ஆகவே, நாடக வாசிப்பு மாலையில்தான் இருக்கும். காலையில் இருக்க வாய்ப்பு இல்லை.

மேலும், கோவாவில் இது கடும் மழைக் காலம். மழையை ரசிப்பதற்காகவே கோவா செல்கிறோம். சென்னையில் இருந்தால் மழையை ரசிக்க முடியவில்லை. நாய்களுக்கான, பூனைகளுக்கான உணவை எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக அலைய வேண்டியிருக்கிறது. மழையை ஜன்னல் வழியாக ரசிக்கும்போது பட்டினி கிடக்கும் பூனை, நாய்கள் பற்றிக் கவலை வந்து விடுகிறது. அப்போதெல்லாம் மழையை வெறுக்க வேண்டியிருக்கிறது. ஆடு மாடுகளுக்குக் கவலையில்லை. அவைகளை போஷிக்க மனிதர்கள் உண்டு. ஆனால் நாய் பூனைகளை கவனிக்க யார் இருக்கிறார்கள்? அந்த வகையில் மைலாப்பூர் பரவாயில்லை. இங்கே வசிக்கும் பிராமண இளம் பெண்கள் இந்த விஷயத்தில் என்னைப் போலவே ஜீவகாருண்யம் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

கோவா போனால் நாய் பூனை பற்றிய கவலை இல்லாமல் மழையை ரசிக்கலாம். அதற்காக மட்டுமே கோவா செல்கிறேன். பப்பில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். நாங்கள் ஆறு பேர்தான் இருப்போம். எங்களைப் போல் சில பைத்தியங்கள் வர வாய்ப்பு உண்டு. தனியாகப் போனால் பெண் பைத்தியங்கள் பேசும். மந்தையாகப் போனால் ஒதுங்கி விடுவார்கள். அதற்கு கோவாவிலேயே ஒரு மாதம் ரெண்டு மாதம் தங்க வேண்டும். அதற்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். கடவுள் அனுக்கிரஹம் பண்ண வேண்டும். கடவுள் என் விஷயத்தில் கொஞ்சம் கிறுக்குப் பிடித்தவராகவே இருக்கிறார். கெட்டது கேட்டால் உடனே அனுக்கிரஹம் செய்து விடுகிறார். தகப்பா, வைன் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆயிற்று, ஏற்பாடு செய்யும் என்றால் அடுத்த நாளே ஏதாவது வெளியூர்ப் பயணம் வந்து வைனும் கிடைத்து விடுகிறது. ஒரு பெண்ணுக்கு ஹலோ சொல்லியே ஆறு மாதம் ஆகிறது, அந்த அளவுக்கு ஒரு gay club சூழலில் வினித்தோடும் சீனியோடும் ஸ்ரீராமோடும் ராஜேஷோடும் இன்ன பிற தடிமாடுகளோடும் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது என்று மனம் உருகிப் பிரார்த்தித்தால் அடுத்த நாளே என் முன்னே ஒரு பேரழகி வந்து நின்று, ”உங்கள் எழுத்துக்கு நான் அடிமை, என் ஆயுளில் பாதியை எடுத்துக் கொள்ளுங்கள்” என்கிறாள்.

ஆனால் நல்லது (ஒரு புக்கர், ஒரு நோபல்) கேட்டால் கடவுள் காதிலேயே விழாதது போல் ஒதுங்கிக் கொண்டு விடுகிறார். கலி காலம் என்பதால் கடவுளும் இப்படி மாறி விட்டார் போலிருக்கிறது.