ஆர்த்தோவாக வாழ்தல்…

பேய் பிடித்தவனைப் போல் படித்து, குறிப்புகள் எடுத்து, நாடகத்தை எழுதி முடித்து விட்டேன். ஆங்கிலத்தில்தான் தலைப்பு அமைந்தது. தமிழில் இன்னும் கை கூடவில்லை. ஆங்கிலத்தில் Antonin Artaud: The Insurgent என்று வைத்திருக்கிறேன். வங்காளத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். தமிழில் சாத்தியம் இல்லை. நாற்பத்தைந்து ஆண்டுகளாக நான் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயரைக் குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். அந்த அளவுக்கு எனக்குத் துணிச்சல் இல்லை.

நீங்கள் நாவலில், சிறுகதையில் – மதத்தில் கை வைக்காமல் – என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். ஆனால் நாடகத்தில் எதுவுமே செய்ய முடியாது. காரணம், நாடகம் கண்ணுக்கு முன்னே நடக்கும் ஒரு புரட்சி. காட்சிக் கலைகளில் இசையையும் சினிமாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். மைக்கேல் ஜாக்ஸனுக்கு இருந்த புகழையும், சினிமா நடிகர்களுக்கு இருக்கும் புகழையும் யோசித்துப் பாருங்கள். இசை, சினிமா இரண்டையும் விட பார்வையாளரோடு நெருக்கமான உறவு பூண்டது நாடகம். நடிகன் அங்கே உங்கள் கண் முன்னே நிஜமாக ரத்தமும் சதையுமாக நின்று கொண்டிருக்கிறான். சினிமாவில் வெறும் நிழல்தான். எனவே நாடகம் வெறும் கேளிக்கையாக இருந்தால் சிரித்து விட்டுப் போய் விடுவார்கள். ஆனால் அது உங்கள் நம்பிக்கைகளை சிதைப்பதாக இருந்தால் அடிதடிதான்.

ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், என்ன, திடீரென்று ஆர்த்தோ மீது ஆர்வம் என்று. என்னது, திடீரென்றா? கிரணம் நடத்திய காலத்திலிருந்து ஆர்த்தோ என் ஆசிரியர் ஆயிற்றே என்றேன். நண்பருக்குத் திருப்தி இல்லை. ”உங்களுடைய புதிய நண்பர்களின் காரணமாக இருக்கலாம்?” என்றார் நக்கலாக. அதாவது, புதிய நண்பர் நயநதினி ஆர்த்தோவின் நாடகக் கோட்பாடுகளைப் பின்பற்றி நாடகம் போடுவதால் நான் ஆர்த்தோவின் மீது ஈடுபாடு கொண்டு விட்டேனாம். அடப் பாவிகளா, ஒரு இருபத்திரண்டு வயது கல்லூரி மாணவி சொல்லியா நான் ஆர்த்தோவின் மீது ஈடுபாடு காண்பிக்க வேண்டும்? நான் ரெண்டாம் ஆட்டம் நாடகத்தை இயக்கியபோது அந்தப் பெண் பிறந்து கூட இருக்க மாட்டாளே?

காரணம் என்ன தெரியுமா? என் எழுத்தை, என் பேச்சைப் பின்பற்றுவதில்லை. அதனால்தான் இப்படிப்பட்ட நோனாவெட்டுப் பேச்செல்லாம் வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் கோபி கிருஷ்ணனின் எழுத்து பற்றிப் பேசினேன். முதல் நாள் நான்கு மணி நேரம். இரண்டாவது செஷனில் நான்கு மணி நேரம். மொத்தம் எட்டு மணி நேரம். இதில் இரண்டு மணி நேரம் அந்த்தோனின் ஆர்த்தோ மற்றும் நெர்வால் பற்றித்தான் பேசினேன். ஆர்த்தோவை எல்லோரும் நெர்வாலின் மறுபிறவி என்பார்கள்.

என்னைக் கிண்டல் செய்த நண்பர் கோபி பற்றி நான் பேசிய உரையைக் கேட்கவில்லை. கேளுங்கள் என்று நூறு முறையாவது சொல்லியிருப்பேன். கேட்காமல் இப்போது சிறுபிள்ளைத்தனமான கிண்டல். கேட்டிருந்தால் இந்தப் பேச்சே வந்திருக்காது.

ஆனாலும் ஒன்றைச் சொல்லி விடுகிறேன். நான் கூடியவரை ஆர்த்தோவிடமிருந்து ஒதுங்கியிருந்தேன். காரணம், ஆர்த்தோவிடம் சென்றால் நான் நாடகம் எழுதுவேன். நாடகம் எழுதினால் அது நான் ஹராகிரி செய்து கொள்வது போல. தேவையா இந்த வயதில்? ஆனாலும் எழுதி விட்டேன். அதே சமயம் புத்திசாலித்தனமாக தமிழ்நாட்டில் நாடகத்தைத் தயாரித்து, இயக்கி மக்கள் முன்னே கொடுக்காமல் ஆரோக்கியமான கலாச்சார சூழல் நிலவும் வங்கத்திலும் கேரளத்திலும் அதை அரங்கேற்றுவதற்கு முயற்சி எடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன். கன்னடத்திலும் செய்யலாம். முதலில் மொழிபெயர்க்க வேண்டும்.

என்ன பிரச்சினை என்றால், நாடகத்தின் ஒரு காட்சியில் ஒரு பத்துப் பன்னிரண்டு பேர் – ஆண்களும் பெண்களும் – வெறும் லங்கோட்டுடன் வருகிறார்கள். இன்னொரு காட்சியில் நிழல்ரூபமாக – mimeஇல் – சரி, வேண்டாம். தமிழில் அரங்கேற்றப் போவதில்லை என்று சொல்லி விட்டு எதற்கு விவரம் எல்லாம்?

லண்டனில் – ஆங்கிலத்தில் – ஒரு நாடகத்தில் mimeஇல் ஒரு தன்பாலின உறவுக் காட்சி இடம் பெற்று பெரும் ரகளையாகி விட்டது.

ஏற்கனவே நான் எழுதிய ஒரு நாடகத்தை ஒரு நாடக விற்பன்னரிடம் காண்பித்தேன். மிகவும் நல்லவர். அடுத்தவர் மனதைப் புண்படுத்தவே மாட்டார். மிகவும் பணிவுடன் நாடகம் பற்றிக் கருத்து சொன்னார். ”நாடகம் என்றால் அதில் ஒரு conflict இருக்க வேண்டும். உங்கள் நாடகத்தில் அது இல்லாததால் நாடகம் நாடகமாக வரவில்லை.”

நான் அவருக்கு பதில் சொல்லவில்லை. காரணம், அவர் சொன்னது மிகப் பழைய ஒரு கோட்பாடு. வஜைனா மோனலாக்ஸ் என்று ஒரு நாடகம். உலகில் அதிக இடங்களில் அரங்கேற்றப்பட்ட நாடகம் என்று ஒரு கணக்குப் போட்டால் வஜைனா மோனலாக்ஸாகத்தான் இருக்கும். காரணம், எழுதியவர் ஒரு ஆங்கிலேய மங்கை. அதை சமர்ப்பணம் செய்ததே ஒரு ‘புரட்சி’. என் யோனியை அடித்துத் துவைக்கும் என் பார்ட்னர் என்று போட்டு ஒரு பெண்ணின் பெயரைப் போட்டிருந்தார். அந்த நாடகத்தில் ஒவ்வொரு பெண்ணாக வந்து தன் யோனி பற்றிப் பேசுகிறார்கள். அவ்வளவுதான் நாடகம். அதன் வலிகளைப் பற்றியும், தாபங்கள் பற்றியும், முடி நீக்குவது பற்றியும், இன்னும் பல்வேறு பிரச்சினைகள் பற்றிப் பேசுவார்கள். மூக்கு பற்றியோ மூக்குச் சளி பற்றியோ நாடகம் வரவில்லை. காரணம், மூக்கு கலாச்சார ரீதியாக, மத ரீதியாக தடை செய்யப்பட்ட உறுப்பு இல்லையே? யோனிதானே அந்தத் தடைக்கு உள்ளான, ஒடுக்கப்பட்ட உறுப்பு? ஆகவே, அந்த ஒடுக்கப்பட்ட உறுப்பு அதன் பிரச்சினைகளைப் பேசுகிறது.

நாடகத்தைப் பார்த்தேன். மூன்று இடங்களில் அரங்கேற்றப்பட்டதை முழுமையாகப் பார்த்தேன். ஒன்று, ஐஐஎம் கோழிக்கோடு. குப்பை. நாடகமே குப்பை என்பதால் அதை அரங்கேற்றியதும் குப்பை. மற்ற இரண்டு அமெரிக்காவில். அதுவும் குப்பை. உலகில் எழுதப்பட்ட நாடகங்களிலேயே படு குப்பையான நாடகம் எது என்றால், அது வஜைனா மோனலாக்ஸாகத்தான் இருக்கும். அதில் என்ன கான்ஃப்லிக்ட் இருந்தது? ஒரு வெங்காயமும் இல்லை. ஆனாலும் உலகம் பூராவும் (சென்னை தவிர) அரங்கேற்றம் ஆகியிருக்கிறது. உலகில் வஜைனா மோனலாக்ஸ் நாடகத்தைப் பற்றிக் கேள்விப்படாத கல்லூரி மாணவியே கிடையாது.

என் நாடகத்தில் conflict – முரண்பாடு என்று வைத்துக் கொள்வோம் – இல்லை என்று சொன்ன நண்பருக்கு நான் என்ன சொல்ல நினைத்தேன் என்றால்,

நாடகத்துக்கு எந்தக் கோட்பாடும் தேவையில்லை. உதாரணமாக, இஸ்ஸிதோரே இஸ்ஸோவின் (Isidore Isou) Venom and Eternity என்ற இரண்டு மணி நேரப் படத்தைப் பாருங்கள். அது நான்கு மணி நேரப் படம். அது கான் திரைப்பட விழாவில் விசேஷ விருது பெற்றிருக்கிறது. விருது அளித்தவர் Jean Cocteau. சர்வதேச அளவில் பிரபலமான இயக்குனர். அந்தப் படத்தில் இஸ்ஸோ சாலைகளில் நடந்தபடி பேசிக் கொண்டே இருப்பார். பேச்சும் சுவாரசியமாக இருக்காது. அவருடைய சினிமாக் கோட்பாட்டைப் பற்றிப் பேசியபடியே இரண்டு மணி நேரம் பாரிஸ் தெருக்களில் நடப்பார். அவ்வளவுதான் படம். இசை என்ன தெரியுமா? உத்தாஞ்சலி உத்தாஞ்சலா என்ற எந்த அர்த்தமும் இல்லாத வார்த்தைகளைப் படம் பூராவும் உச்சாடனம் செய்வார்கள். அது எந்த மொழியையும் சேர்ந்த வார்த்தை அல்ல. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஃபிலிம் ரோல்கள் பழசாகி விட்டால் திரையில் கோடு கோடாக வரும் அல்லவா? அப்படியெல்லாம் வேண்டுமென்றே செய்திருப்பார்கள்.

கீழே ஏழு நிமிடத்துக்கான யூட்யூப் காணொலி கொடுக்கிறேன்.

(31) Traité de Bave et d’éternité (by Jean-Isidore Isou), Marcel Achard – Original Trailer – YouTube

இப்படி நான் ஒரு படம் இயக்கினால், “இதில் என்ன முரண்பாடே இல்லையே, கதையே இல்லையே?” என்றெல்லாம் ஒருத்தர் சொன்னால் அதை எப்படி எடுத்துக் கொள்வது? ஐயா, நான் ஒரு புதிய சினிமா மொழியை உருவாக்கியிருக்கிறேன். பிடித்திருந்தால் இதை ஏற்றுக் கொள். இல்லையேல் தூக்கி எறி. ஆனால் கதை இல்லை, முரண்பாடு இல்லை என்றெல்லாம் சொல்லக் கூடாது. ஏனென்றால், நான் உருவாக்கியிருப்பது ஒரு புதிய கோட்பாட்டை.

எனவேதான் ரெண்டாம் ஆட்டம் நாடகத்தின் முதல் காட்சியில் அதன் இயக்குனரான நான் எடுத்த எடுப்பில் மேடையில் அமர்ந்து இசை கேட்டபடி (யானி) ஒரு முழு சிகரெட்டையும் குடித்து முடிப்பேன். பார்வையாளர்கள் என்னை அடிக்காமல் என்ன செய்வார்கள்?

ஆனால் ஆர்த்தோ நாடகத்தில் நான் அப்படியெல்லாம் செய்யவில்லை. மிகச் செம்மையாக எழுதியிருக்கிறேன். பல இடங்கள் கவிதை போல் இருக்கும்.

ஒரு கல்லூரி மாணவி சொல்லி நான் ஆர்த்தோவிடம் ஈடுபாடு காட்டுகிறேன் என்று சொன்ன நண்பரின் பேச்சைக் கேட்டு நான் ரொம்பவே ஆடிப் போய் விட்டேன். சீனியிடம் ”’நீங்கள் ஏன் இப்படிக் கேட்கவில்லை? ஃபூக்கோ பற்றித்தானே அடிக்கடி பேசுகிறீர்கள்? ஏன் ஆர்த்தோ பற்றிப் பேசவே இல்லை?’ என்று ஏன் என்னைக் கேட்கவில்லை சீனி?” என்று கேட்டேன்.

அவர் சொன்ன பதிலை அப்படியே சொல்கிறேன்.

“நான் ஒரு லெஜண்டுடன் பழகிக் கொண்டிருக்கிறேன். அந்த அச்சம் மனதில் எப்போதும் இருக்க வேண்டும். அவர் ஆர்த்தோ பற்றி எழுதியிருப்பார். நான் படித்திருக்க மாட்டேன். அல்லது, அவர் எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார், எழுதுகிறார். அதையெல்லாம் ஏன் செய்கிறார் என்றா நோண்டிக் கொண்டிருக்க முடியும்? அதனால் எந்த அளவுக்கு வாயையும் சூ… வையும் மூடிக் கொண்டிருக்கிறோமோ அந்த அளவுக்குக் கற்றுக் கொள்ளலாம்.”

ஆம், என் அளவுக்கு நீங்கள் படிக்க வேண்டுமானால் உங்களுக்கு மூன்று ஆயுள் போதாது. எனவே என்னிடம் உளறக் கூடாது.

இது பற்றி ஸ்ரீயிடமும் கேட்டேன். நீ ஏன் இப்படிக் கேட்கவில்லை?

”நீங்கள் ஃபூக்கோவை விட ஆர்த்தோ பற்றித்தான் அதிகம் பேசியிருக்கிறீர்கள். கோபி கிருஷ்ணனின் எழுத்து பற்றிப் பேசும் போது. இரண்டு மணி நேரம். நான் சமைக்கும்போது ஒரு நாள் கூட கருக விட்டதில்லை. அன்றைய தினம் கோபி பற்றிய உங்கள் பேச்சின் சுவாரசியத்தில் வாழ்வில் முதல் முதலாகக் கருக விட்டு விட்டேன்.” இது ஸ்ரீ சொன்னது.

நாடகத்தை என் நெருக்கமான நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறேன். பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம். ஆனால் படிக்கிறார்கள் என்பதே எனக்குப் பெரிய கௌரவம்.

இந்த நாடகத்துக்காக நான் ஒரு மாத காலம் ஆர்த்தோவாகவே வாழ்ந்தேன். ஆர்த்தோவாக வாழ்வது என்றால், பாதாள சாக்கடையில் வேலை செய்வது போல. ஆர்த்தோ மரணத்தோடு வாழ்ந்தார். நான் ஒரு மாத காலம் அந்த மரணவெளியில்தான் இருந்தேன். இப்போது வெளியே வந்து விட்டேன். மிகவும் ரசிக்கத்தக்க, ராஸ லீலாவைப் போன்ற பெட்டியோ நாவலுக்குள் நுழைந்து விட்டேன்.

கட்டுரையைப் படித்துப் பார்க்காமல் பதிவேற்றம் செய்கிறேன். பிழைகள் இருந்தால் திருத்திப் படித்துக் கொள்ளுங்கள். கடந்த நான்கு நாட்களாக விடாமல் தட்டச்சு செய்து செய்து தோள்பட்டை கழன்று விட்டது.