சென்ற குறிப்பில் கொஞ்சம் பிழைகள் இருந்தன. இப்போது திருத்தி விட்டேன்.
அந்தக் குறிப்பில் விடுபட்டுப் போன விஷயம் ஒன்று உண்டு. மதுரையில் நடந்த ரெண்டாம் ஆட்டம் நாடகத்தில் ஒரு பள்ளி மாணவியும் நடித்தாள். வயது பதினேழு இருக்கலாம். ஏன் இதில் நடித்தாய் என்று அவளுக்கும் அடி விழுந்தது. பதினேழு வயதுப் பெண் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றுதான் சட்டம் இருக்கிறது. நவீன நாடகத்தில் நடிக்கக் கூடாது என்றுமா சட்டம் இருக்கிறது?
***
நான் எப்போதுமே என்னுடனான சந்திப்புகளைப் பற்றி என் நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி வந்திருக்கிறேன். இங்கேயும் எழுதியிருக்கிறேன். நான் எழுதுவது 25 சதவிகிதம்தான். என் வாழ்விலிருந்து, என் சந்திப்பிலிருந்து நான் வழங்குவது 75 சதவிகிதம். அதை முழுதாகப் பிடித்தவர் சீனி. சும்மா என்னை ஒரு டின்னரில், சவேரா ஓட்டலின் ப்ரூ ரூமில் சந்திப்பதில் அர்த்தம் இல்லை. அம்மாதிரி சந்திப்புகளில் என்னிடமிருந்து எதுவுமே பெயராது. நான் சரளமாகப் பேசக் கூடியவன் அல்ல. நான் பேச வேண்டுமானால் என்னோடு நீங்கள் மூன்று நான்கு தினங்கள் தங்க வேண்டும். இரவு முழுவதும் பேச வேண்டும். இரண்டு தினங்களாவது தங்கினால்தான் என்னிடமிருந்து பெற முடியும்.
எப்போதுமே, உலகம் முழுவதுமே காலம் காலமாக இப்படித்தான் இருந்திருக்கிறது. சாக்ரடீஸ் பேசியதே அதிகம். அதிலிருந்து தொடங்கி மௌனி, நகுலன், தி. ஜானகிராமன் வரை எல்லோருமே மாலையில் தொடங்கி அதிகாலை வரை பேசியிருக்கிறார்கள்.
சமீபத்தில் மிஷ்கின் ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்பினார். என்னைப் பற்றி இதுவரை யாருமே இப்படிச் சொன்னதில்லை. சீனி மட்டுமே விதிவிலக்கு. ஒரு ஏழு நிமிட வாய்ஸ் மெஸேஜ். எந்தவொரு சினிமா கலைஞரும் எந்தவொரு எழுத்தாளரைப் பற்றியும் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருக்க மாட்டார்கள். அதில் மிஷ்கின் ஒரு விஷயம் சொல்லியிருப்பார். “நான் சாருவின் எழுத்தைப் படித்ததில்லை. ஆனால் பழகியிருக்கிறேன். இரண்டு ஆண்டுகள் மிக நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். சாருவின் மணம் எனக்குத் தெரியும். அவர் பேச்சு தெரியும். அவர் நடனம் தெரியும். அவர் எப்படி நாய்களோடு பழகுவார் என்று தெரியும். அவருடைய வாழ்க்கைப் பார்வை தெரியும். அவரது தத்துவம் தெரியும். அவர் சிரிப்பு தெரியும். அவர் அழுகையும் தெரியும்…”
எப்படி ஒருவர் என்னை வாசிக்காமலேயே இந்த அளவு என்னை அறிந்திருக்கக் கூடும்? இரண்டு ஆண்டுகள் – ஒவ்வொரு வாரமும் – மாலை ஏழு மணியிலிருந்து காலை ஐந்து வரை பேசியிருக்கிறோம். ஒரு வாரம் கூட தவறினதில்லை. சில சமயங்களில் வாரத்தில் இரண்டு முறை. மேலே நான் குறிப்பிட்டதுதான். மிஷ்கின் பேச நான் கேட்டதில்லை. நான் பேச அவர் கேட்டதில்லை. எங்களுக்குள் உரையாடல் நிகழ்ந்தது. நாங்கள் உரையாடினோம். இருவரும் பேசி, இருவரும் கேட்டோம். நாங்கள் படித்தது, பார்த்தது, கேட்டது எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டோம்.
இதைத்தான் மேலே குறிப்பிட்டேன். என் வாழ்க்கையை விட என் எழுத்தில் நான் என்னைக் குறைவாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என் நண்பர்களுக்கு அது தெரியும். அதனால்தான் என் நண்பர்களை அடிக்கடி சந்திக்கிறேன்.
”என் வாழ்க்கையை விட என் எழுத்தில் நான் என்னைக் குறைவாகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.” இந்த வாக்கியம் ஒரு மேற்கோள். ஆர்த்தோ சொல்லியிருக்கிறார். நான் அந்த அளவுக்கு இல்லை. ஆர்த்தோவின் வாழ்க்கையே ஒரு பிரதிதான்.