என்னுடைய இருபதாவது வயதிலிருந்து இந்த அறுபத்தொன்பதாவது வயது வரை நாற்பத்தொன்பது ஆண்டுகளாக ஃப்ரெஞ்ச் இலக்கியத்தையும் தத்துவத்தையும் சினிமாவையும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். என் அளவுக்கு இந்த மூன்றிலும் பாண்டித்யம் பெற்றவர்கள் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. இதையெல்லாம் நான் ஆணவத்தில் பேசவில்லை. தத்துவத்திலும் இலக்கியத்திலும் சினிமாவிலுமாக முறையே மூன்று பி.ஹெச்.டி. பட்டம் பெற்ற ஒருவர் அதை சொல்லிக் கொள்வது எப்படியோ அப்படியே இதைச் சொல்கிறேன். ஃப்ரெஞ்ச் தத்துவத்திலும் இலக்கியத்திலும் பாண்டியத்யம் பெற்ற பல ஃப்ரெஞ்ச் அறிஞர்கள் உண்டு. ஆனால் நான் குறிப்பிடும் மூன்று துறைகளிலும் கற்று அறிந்தவர்கள் இருக்க சாத்தியம் இல்லை. ஃப்ரான்ஸில்தான் சொல்கிறேன். நம் ஊரைப் பற்றிப் பேசுவதற்கே வழி இல்லை. இங்கே ஃபூக்கோவுக்குப் பிறகான ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்களான Gilles Deleuze, Félix Guattari ஆகிய இருவரையும் படித்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஃப்ரெஞ்ச் சினிமாவோ ஃப்ரெஞ்ச் இலக்கியமோ தெரியாது. ஃப்ரெஞ்ச் இலக்கியம் அறிந்தவர்கள் ஜார்ஜ் பத்தாயை அறிய மாட்டார்கள். எல்லோரும் ஜான் ஜெனே காலத்திலேயே இருக்கிறார்கள். ஜெனேயை அறிந்தவர்களுக்குக் கூட லூயி ஃபெர்தினாந் செலின் தெரியாது. ஃப்ரெஞ்ச் குடிமகன்களாக இருக்கும் ஃப்ரெஞ்ச் இலக்கிய வாசகர்களுக்கே சேர்ஜ் துப்ரோவ்ஸ்கியைத் (Serge Doubrouvsky) தெரியாது.
இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நான் ஃப்ரெஞ்ச் இலக்கியத்தையும் தத்துவத்தையும் சினிமாவையும் பயின்று கொண்டிருக்கிறேன்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் மதுரையில் ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகத்தை இயக்கி அரங்கேற்றிய போது நடந்த ரகளை எல்லோருக்கும் தெரியும். நாடகத்தில் நடித்தவர்களையும் இயக்கிய என்னையும் பார்வையாளர்கள் தாக்கினார்கள். நாடகம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பார்வையாளர்கள் அனைவரும் நாடகத் துறையில் ஈடுப்பட்டவர்கள். இயக்குனர்கள். பிஹெச் டி வாங்கியவர்கள். பேராசிரியர்கள். என் உயிருக்கே அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டது. முதல் நாளே ரகளை நடந்ததால் மற்ற இரண்டு தினங்களும் நான் நாடக வளாகத்துக்கே செல்ல முடியவில்லை. அவன் வந்தால் அடிப்போம் என்றார்கள்.
அந்த நாடகத்தைப் போட்ட போது எனக்கு அதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ரான்ஸிலும் அப்படி நடந்திருக்கிறது என்று தெரியாது. பல முறை நடந்திருக்கிறது. ஆர்த்தோவின் நாடகங்களை சர்ரியலிஸ்டுகள் தாக்கியிருக்கிறார்கள். கலவரம் செய்த பார்வையாளர்கள் மீது போலீஸ் வந்து கண்ணீர்ப் புகைகுண்டுகளைப் பிரயோகித்துக் கலைத்திருக்கிறது. இந்தக் கலவரத்தை உலகப் புகழ் பெற்ற சர்ரியலிஸ்டான ஆந்த்ரே ப்ரெத்தோன் (Andre Breton) தலைமை தாங்கி நடத்தியிருக்கிறார்.
இப்போது நான் இந்த வயதில் ஒரு முக்கியமான transformationஇல் இருக்கிறேன். அது உங்களுக்குப் போகப் போகத் தெரியும்.
இப்போது நான் சொல்லப் போகும் பெயர் தமிழ் இலக்கிய உலகில் யாராலும் சொல்லப்பட்டதில்லை. ஃப்ரான்ஸிலேயே பலரும் மறந்து போன பெயர். இந்தப் பெயரை நீங்கள் கூகிளில் தேடினால் இருக்கும். அதற்குப் பிறகு அந்தப் பெயர் உங்கள் நினைவில் தங்கும். ஆனால் தமிழில் அந்தப் பெயரை முதல் முதல் உச்சரித்தவன் நான்தான். அதனால் இந்தப் பெயரை அறியும் உங்கள் அனைவருக்கும் நான் ஆசான் ஆகிறேன்.
ஏன் இந்தப் பெயர் அத்தனை முக்கியம் என்றால், 3000 ஆண்டு மானுட சிந்தனை வரலாற்றில் அதுவரையில் நடந்திராத அளவுக்கு அந்த்தோனின் ஆர்த்தோ எப்படியெல்லாம் புரட்சி செய்து எழுத்திலும் நாடகத்திலும் ஓவியத்திலும் சினிமாவிலும் தலைகீழ் மாற்றத்தைக் கொண்டு வந்தாரோ அதை அடியொற்றி ஆர்த்தோ நினைத்ததைச் செய்தவர் இவர். இவருடைய முதல் படம் கான் திரைப்பட விழாவில் 1951இல் திரையிடப்பட்ட போது பார்வையாளர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டார்கள். ஆனாலும் நடுவர்களில் ஒருவராக இருந்த Jean Cocteau அந்தப் படத்துக்கு முக்கியமான avant-garde படம் என்ற பரிசை அளித்தார். கானில் திரையிடப்பட்ட நான்கு மணி நேரப் படத்தை பிறகு அதன் இயக்குனர் இரண்டு மணி நேரமாகச் சுருக்கினார்.
அவர் பெயர் Isidore Isou (1925 – 2007). ருமானியாவில் பிறந்து ஃப்ரான்ஸுக்குப் புலம் பெயர்ந்தவர். 55 வயதில்தான் இவருக்கு ஃப்ரெஞ்ச் குடியுரிமை வழங்கப்பட்டது. இவர் திரைப்பட இயக்குனர் மட்டும் அல்ல. Letterist இயக்கத்தை அறிமுகப்படுத்தியவர். இருபதாம் நூற்றாண்டின் சிந்தனை உலகில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தியவர் இஸ்ஸிதோரே இஸ்ஸோ.
ஒருமுறை ஆர்த்தோ அவருக்கு மிக நெருக்கமான ஒரு பெண்ணின் படத்தை வரைந்து அவளிடம் கொடுக்கிறார். கொடுக்கும்போது சிரித்துக் கொண்டே (அவர் சிரிப்பது மிகவும் அரிது) “இதன் விலை ஒரு லட்சம் ஃப்ராங்க்” என்கிறார். அந்தப் பெண் மறுநாள் அவருக்கு ஒரு பூங்கொத்தைக் கொண்டு வருகிறாள். நடந்தது 1946இல்.
அதேபோல் சொல்கிறேன், இப்போது நான் அறிமுகப்படுத்தும் இஸ்ஸிதோரே இஸ்ஸோவின் பெயர் என்னுடைய ஐம்பது ஆண்டுக் கால தீவிர வாசிப்பின் பயன். இதை உங்களுக்கு தங்கத்தட்டில் வைத்துத் தந்திருக்கிறேன்.
கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இஸ்ஸிதோரே இஸ்ஸோவின் முதல் படம் Venom and Eternity. கோவா சந்திப்புக்கு வரும் நண்பர்கள் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு வந்தால் நலம். இல்லாவிட்டால் அங்கே நான் போட்டுக் காண்பிப்பேன். இந்தப் படம் பற்றிய என்னுடைய ஒரு உரையும் இருக்கும். நான் குறிப்பிட்டேன், இப்பொது நான் ஒரு transformationஇல் இருக்கிறேன் என்று. அதனால் இந்தச் சந்திப்பு இதுவரையிலான சந்திப்புகளை விட முக்கியத்துவம் கூடுதலானது. ஒரு நண்பர் என்னிடம் இப்போதைக்குப் பணம் இல்லை, நான் வரவில்லை என்றார். நீங்கள் இல்லாவிட்டால் அந்த இழப்பைப் பத்து லட்சம் ரூபாயினால் கூட ஈடு செய்ய முடியாது, அதனால் பணத்தை நான் கடனாகத் தருகிறேன், எப்போது முடியுமோ அப்போது தாருங்கள் என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டேன்.
Venom and Eternity வெளிவந்த 1951 வரை அல்லது இன்று வரையிலான கலைப்படங்கள் (பெர்க்மன் உட்பட) மற்றும் போக்கிரி மாதிரி மசாலா படங்கள் எல்லாவற்றையும் ஒரு பக்கம் வையுங்கள். வெனம் அண்ட் எட்டெர்னிட்டியை ஒரு பக்கம் வையுங்கள். வெனம் அண்ட் எட்டெர்னிட்டியை வேறு எந்தப் படமும் நெருங்க முடியாது. ஏனென்றால், இப்படி ஒரு படம் அதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ வந்தது இல்லை.
கோவாவுக்கு வர விருப்பமுள்ள நண்பர்களை அழைத்திருந்தேன். யாருமே வரவில்லை. எதிர்பார்த்ததுதான். என் நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேர்தான் வருகிறார்கள். ஆனால் இதுவே தங்குமிடம், உணவு, விமானம் அல்லது ரயில் டிக்கட் எல்லாம் போட்டாயிற்று, இவ்வளவு தொகை என்று தெரிவித்தால் ஒரு பதினைந்து பேர் வர வாய்ப்பு உண்டு. சீனியிடம் கேட்டேன். ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்லி, “நாம் என்ன ட்ராவல் ஏஜெண்டா சாரு? ஏன் இந்த வயதிலும் இப்படி ஏமாந்தாங்குளியாக இருக்கிறீர்கள்?” என்று திட்டினார். கடுமையான Negative vibe உள்ள ஆள். அப்படித்தான் பேசுவார்.
இஸ்ஸிதோரே இஸ்ஸோவை உங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்திய இந்தத் தருணம் எனக்கு முக்கியம்.