கடந்த நான்கு நாட்களாக ஒரு முக்கியமான, மிக அவசரமான பணியில் ஈடுபட்டிருக்கிறேன். அதன் விவரத்தை அக்டோபர் இறுதியில் அறிவிப்பேன்.
இதற்கிடையிலேயே ஒரு நீண்ட சிறுகதை எழுதினேன். அதில் கொக்கரக்கோவின் பெயரை மிஸ்டர் மாற்றுக் கருத்து என்று மாற்றி விட்டேன். எதைச் சொன்னாலும் மாற்றுக் கருத்தை மேஜையில் வைத்துக் கொண்டிருந்தான் கொக்கரக்கோ. அதனால் இந்தப் பெயர் மாற்றம். நக்கீரனுக்கும் சிவபெருமானுக்கும் பெண்களின் கூந்தல் மணம் பற்றி விவாதம் வந்தது போல் எனக்கும் மிஸ்டர் மாற்றுக் கருத்துவுக்கும் ஒரு விவாதம் வந்து விட்டது. சில ஆண்களுக்கு ஆண்குறி முழங்கால் வரை இருக்குமா, இருக்காதா என்று. இருக்கும் என்பது என் கட்சி. மிஸ்டர் மாற்றுக் கருத்து பாலியல் படங்கள் பார்த்தில்லை போல. அதனால் அவர் இல்லை கட்சி. (பெயர் மிஸ்டர் மாற்றுக் கருத்து என்று மாறி விட்டதால் ‘ன்’ விகுதி போய் ‘ர்’ விகுதி ஒட்டிக் கொண்டது.) இந்த அவசர வேலை மட்டும் குறுக்கிட்டிருக்காவிட்டால் இந்நேரம் அந்தத் தரமான கதையைப் பதிவேற்றம் செய்திருப்பேன். இன்னும் இரண்டொரு நாளில் செய்வேன். அவசர வேலை இன்று இரவுக்குள் முடிந்து விடும் என்று நம்புகிறேன்.
ஆர்த்தோ நாடகத்தை பணம் அனுப்பி வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டிருந்தேன். மூன்று பேர் பணம் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு இன்னும் நாலைந்து நாட்களில் அனுப்புகிறேன். நாடகத்தில் அ. ராமசாமி கூறியிருந்த சில திருத்தங்களைச் செய்ய வேண்டும். சில புகைப்படங்களைச் சேர்க்க வேண்டும்.
நான் புதுமைப்பித்தன் போல் ஆகாமல், கோபி கிருஷ்ணன் போல் ஆகாமல் ஒரு dandyயாக வாழ்வதற்குக் காரணமாக இருக்கும் நண்பர்கள் முப்பது பேர் உண்டு. அவர்களுக்கு முதலில் அந்த நாடகத்தை அனுப்பி வைக்க வேண்டும். ராம்ஜியிலிருந்து தொடங்கி புவனேஸ்வரி வரை. காயத்ரியிலிருந்து தொடங்கி ஸ்ரீராம் வரை. இப்போது கற்பகம் என்ற நண்பரும் சேர்ந்திருக்கிறார். முப்பது மைல், நாற்பது மைல் என்று ஓடுபவர்.
இதற்கிடையில் அடுத்த மாதம் பெங்களூர் செல்கிறேன். ஆகஸ்ட் 15 பெங்களூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். ஆகஸ்ட் 11 சென்னையிலிருந்து வந்தே பாரத் ரயிலில் பெங்களூர் சென்று அங்கிருந்து பகல் பதினோரு மணி அளவில் கூர்க் பயணம். காரில். கார் வைத்திருக்கும் நண்பர்கள் கார் கொடுத்து உதவலாம். அல்லது, அவர்களும் என்னோடு வரலாம். வாடகைக் கார் செலவைக் குறைக்க இந்த ஏற்பாடு. 11, 12 இரண்டு தினங்களும் கூர்க். 13ஆம் தேதி கிளம்பி ஸ்ரீரங்கப்பட்டணம். 14 காலையில் கிளம்பி பெங்களூர். 14 மதிய உணவுக்கு நான் பெங்களூரில் இருக்க வேண்டும். ஆக, 11ஆம் தேதி பகல் பதினோரு மணியிலிருந்து 14ஆம் தேதி மதியம் வரை என்னோடு இருக்கலாம். வர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு எழுதுங்கள். ஒன்றிரண்டு நிபந்தனைகள்தான். பேசிக் கொண்டே இருக்கக் கூடாது. பகலில் குடிக்கக் கூடாது. இரவில் குடித்தாலும் அளவோடு குடிக்க வேண்டும். ஏனென்றால், பகலில் குடிக்காமல் இருப்பவர்கள் இரவில் குடித்து விட்டு பகலில் பேசாமல் இருந்ததையும் சேர்த்துப் பேசிக் கொண்டே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். குடித்து விட்டு வாந்தி எடுக்கும் பழக்கம் உள்ளவர்கள் என் வட்டத்தில் சேரவே வாய்ப்பு இல்லை. ஒரு முதுபெரும் இயக்குனரோடு நான் பேசிக் கொண்டிருந்த போது (அப்போது நான் குடிப்பதை நிறுத்தியிருந்தேன்) இயக்குனரின் நண்பர் (அவர் ஒரு பிரபலம்!) எடுத்த வாந்தியை என்னால் ஏழு ஜென்மத்திலும் மறக்க முடியாது. அந்த இயக்குனரைப் போன்ற தாராள மனம் எனக்குக் கிடையாது.
சீனி சில நண்பர்களைக் கேட்டாராம். கேட்ட அத்தனை பேரும் வரவில்லை என்று சொல்லி விட்டார்கள் என்றார். ரொம்ப நல்லது. எனக்கு புக்கர் கிடைத்த பிறகு யாராவது வருகிறேன் என்று சொன்னால், யாரையும் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று இப்போதே எச்சரிக்கிறேன்.
charu.nivedita.india@gmail.com