ஆர்த்தோவும் சார்த்தரும் (திருத்தப்பட்டது)

அந்தோனின் ஆர்த்தோ பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு சார்த்தர் பற்றியும் ஞாபகம் வரும்.  ஆர்த்தோவின் காலம் 1896 – 1948.  சார்த்தரின் காலம் 1905 – 1980.  ஆர்த்தோவை விட சார்த்தர் ஒன்பது வயது இளையவர்.  இரண்டு பேரும் சம காலத்தவர்கள்.  சார்த்தர் ஃப்ரான்ஸின் ஹீரோ.  நோபல் பரிசையே மறுத்தவர்.  ஆர்த்தோ வில்லன்.  ஃப்ரான்ஸ் தன்னுடைய வில்லனை என்ன பாடு படுத்தியது என்று இப்போது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். 

ஆர்த்தோ- சார்த்தர் இருவரின் எதிர்முரண் பற்றி யோசிக்கும்போது கூடவே என்னையும் ஜெயமோகனையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வேன்.  ஜெயமோகன் என்னை விட ஒன்பது வயது இளையவர்.  பத்மஸ்ரீ விருதைத் திருப்பிக் கொடுத்தவர்.  அரசாங்கப் பரிசுகளோ விருதுகளோ எதுவும் வேண்டாம் என்று அறிவித்திருப்பவர்.  நானோ ”விருது கிடைத்தால் நாலு பேருக்கு என்னைத் தெரிய வருமே” என்று நினைப்பவன்.    

ஜெயமோகன் எல்லோரையும் அணைத்துக் கொண்டு செல்பவர்.  இப்போது மட்டும் அல்ல.  எப்போதுமே அப்படித்தான்.  நானோ அந்த விஷயத்தில் கிட்டத்தட்ட ஆர்த்தோதான்.  ஒன்பது ஆண்டுகள் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து வதைபட்ட ஆர்த்தோவை படாதபாடு பட்டு அவரது நான்கைந்து நண்பர்கள் வெளியே எடுத்தார்கள்.  அவருக்கு நிதியுதவி அளிப்பதற்காக அவரது கவிதை மற்றும் நாடக வாசிப்பு நடக்கிறது.  இப்படி இரண்டு முறை நடந்தது.  முதல் முறை நடந்த போது பாதுகாவலர்கள் ஆர்த்தோவை அவர் ”நான்தான் ஆர்த்தோ” என்று சொல்லியும் அரங்கத்தின் உள்ளே விடவில்லை.  காரணம், அவர் கோட்டு கிழிந்திருந்தது.  காலில் ஷூ இல்லை.  ஐரோப்பியர்கள் கண்மூடித்தனமாக விதிகளைப் பின்பற்றும் முரட்டு மூடர்கள்.  அமெரிக்கர்களும் அப்படியே.  இரண்டாவது நிகழ்ச்சி அப்படி இல்லை.  ஆர்த்தோவின் கணக்கில் பத்து லட்சம் ஃப்ராங்க் சேர்ந்து விட்டது.  ஆர்த்தோவின் வாசிப்பு நிகழ்ச்சிக்கு எழுநூறு பேர் வந்திருந்தார்கள்.  ஆர்த்தோ மூன்று மணி நேரம் வாசித்தார்.  ஆர்த்தோவின் வாசிப்பு என்றால் க்ளாஸ் கின்ஸ்கியின் நடிப்பு மாதிரி இருக்கும்.  வாசித்து முடிக்கும்போது பார்வையாளர்களைப் பார்த்து நீங்கள் அத்தனை பேரும் பன்றிக்குப் பிறந்தவர்கள் என்றோ அல்லது அந்த மாதிரியோ – சரியாக ஞாபகம் இல்லை, ஆனால் மிகக் கடுமையான வசை – அங்கே வந்திருந்த அத்தனை பேரையும் திட்டி விட்டு மேடையை விட்டு கோபத்தில் கைகால் நடுங்க நடுங்க வெளியேறினார் ஆர்த்தோ.

வந்திருந்தவர்களில் ஆர்த்தோவுக்கு மிகவும் ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த தெரிதாவும் ஒருவர்.

திகைத்துப் போனார்களாம் அத்தனை பேரும்.  அதற்காக உடனே அவர்கள் ஆர்த்தோ மீது அழுகல் முட்டை வீசவில்லை.  ஆர்த்தோவை மீண்டும் பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் அடையுங்கள் என்று கூச்சலிடவில்லை.  அவருக்கு இருந்தது மிகச் சாதாரணமாக எல்லா எழுத்தாளர்களுக்குமே இருக்கக் கூடிய மனப்பிறழ்வு மட்டுமே.  அதனால் அந்தப் பார்வையாளர்கள் ஆர்த்தோவின் வசையைப் புரிந்து கொண்டார்கள்.  ஒன்பது ஆண்டுகள் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைக்கப்பட்டு  ஐம்பத்தோரு மின்னதிர்ச்சிகளைத் தாங்கிய ஒருவனின் கோபம் என்று எடுத்துக் கொண்டார்கள்.   

என்னுடைய சிநேகபூர்வமற்ற தன்மையும் ஆர்த்தோவின் மனோபாவத்தோடு ஒப்பிடக் கூடியதுதான். 

ஆர்த்தோ – சார்த்தர், சாரு – ஜெயமோகன் இரட்டையில் என்ன வித்தியாசம் என்றால், ஜெ.வும் நானும் நண்பர்கள். ஆனால் சார்த்தரின் பெயரை எடுத்தாலே ஆர்த்தோ நிதானத்தை இழந்து விடுவார்.  உண்மையில் ஜெனேவுக்கும் ஆர்த்தோவுக்கும் எழுத்து ரீதியாக பெரிய ஒற்றுமை உண்டு.  ஜெனே ஆர்த்தோவின் நாடகக் கோட்பாடுகளைப் பின்பற்றி நாடகங்கள் எழுதியவர்.  ஆனால் ஜெனேயைத் தன் பக்கமே நெருங்கவிடவில்லை ஆர்த்தோ.  ஒரே காரணம், ஜெனே சார்த்தரின் நெருங்கிய நண்பராக இருந்தார்.  (சார்த்தர் எழுதிய செயிண்ட் ஜெனே புத்தகத்தை நினைவு கூருங்கள்.)

இந்த இரண்டு இரட்டையர் பற்றி நினைக்கும்போது ஞாபகம் வரும் இன்னொரு விஷயம், சார்த்தருக்கு இருந்த ஏராளமான நண்பர்கள்.  ஆர்த்தோவுக்கு இருந்தது ஐந்தே நண்பர்கள்.  அதில் நான்கு பேர் பெண்கள்.  அந்த ஐந்து பேருமே ஆர்த்தோவின் தற்கொலைப்படை.  அதில் ஒருவர் பால் தெவனின் என்ற பெண்.  நாற்பத்து இரண்டு ஆண்டுகள் – தன்னுடைய இறுதி நாள் வரை ஆர்த்தோவின் எழுத்துக்களைத் தொகுத்தார்.  அவர் அதைச் செய்திருக்காவிட்டால் ஆர்த்தோவின் எந்தப் புத்தகமும் நமக்குக் கிடைத்திருக்காது.   

எனக்கு நண்பர்கள் அதிகம் இல்லை.  பத்து இருபது பேர் எனக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களெல்லாம் என்னுடைய சிநேகபூர்வமற்ற தன்மையினால் என்னை விட்டு ஓடி விடவில்லை என்பதுதான் சிறப்பு.  ஆனாலும் நண்பர்கள் விஷயத்தில் நான் ஆர்த்தோ மாதிரிதான் ஆகி விட்டேனோ என்றும் தோன்றுகிறது. 

இந்த விஷயங்கள் எல்லாமே எனக்கு சக்திவேல் அனுப்பியிருந்த ஒரு நாலு வரி மின்னஞ்சலைப் பார்த்த போது நினைவில் ஓடியது.  சக்திவேல் ஜெயமோகன் எழுத்திலிருந்து பிறந்தவர்.  விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்.  எனக்கும் நண்பர்.  அவர் எழுதியிருந்த இந்தக் கடிதம் நான் செய்து கொண்டிருந்த மிக அவசரமான பணியை நிறுத்தி விட்டு இதை எழுதத் தூண்டியது.

அன்புள்ள சாரு,

ஆர்த்தோ நாடகத்தின் பிடிஎஃப் பெற பணம் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்து விட்டீர்கள். என்னைப் போல நடுத்தர வர்க்கப் பிச்சைக்காரர்களுக்கு பெரிய பிரச்சினை அது. வீட்டில் சும்மாவே இருக்கிறேன். என் பராமரிப்பு முதல் எல்லாமே குடும்பம்தான். அவர்கள் இதற்கெல்லாம் பணம் கொடுப்பதில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான அரசாங்க உதவித் தொகை பெறுகிறேன். எனவே அதிலிருந்து 300 ரூபாய் அனுப்பியுள்ளேன். ஆர்த்தோவிற்கு‌ இது சிறிய தொகையே. உங்களுக்கு விருப்பமிருந்தால் அனுப்பி வைக்கவும். அப்படியே நேரமிருந்தால், என் முந்தைய கடிதத்தில் நான் கேட்டிருந்த கேள்விகள் தகுதியானவை என்றால் பதில் அளிக்க கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,

சக்திவேல்.

ஆர்த்தோ நாடகத்தை எழுதி முடித்து அதன் பிடிஎஃப் வேண்டுமானால் பணம் அனுப்புங்கள் என்று எழுதினேன்.  ஒரே ஒரு நண்பர் 5000 ரூ. அனுப்பினார்.  அத்தோடு சரி.  வேறு எந்த ஆத்மாவிடமிருந்தும் ஒரு வார்த்தை இல்லை.  கிணற்றிலே போட்ட கல் போல் கிடந்தது என் வேண்டுகோள்.  இத்தனைக்கும் அந்த நாடகம் பற்றி வரிந்து வரிந்து எழுதினேன்.  ஜெயமோகனின் முன்னுரையையும் வெளியிட்டேன்.  ஆர்த்தோ பற்றித் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தேன்.  ஆனாலும் ஒரே ஒரு ஆத்மாவிடமிருந்துதான் எதிர்வினை. 

பிறகு மீண்டும் ஒரு பதிவு எழுதினேன்.  மூன்று பேர் பணம் அனுப்பியிருந்தார்கள். ஆக, மொத்தம் நான்கு பேர். 

இப்போது சக்திவேலின் இந்தக் கடிதமும் முன்னூறு ரூபாய் பணமும்.  அந்தக் கடிதத்தின் தீவிரம் ஏன் மற்ற வாசகர்களிடம் இல்லை?  மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை எவ்வளவு என்று தெரியுமா?  1500 ரூ.  ஒரு நண்பர் தன்னுடைய மாத வருமானமான 1500 ரூபாயிலிருந்து 300 ரூபாயை அனுப்பி உங்கள் நாடகத்தை அனுப்பித் தாருங்கள், படிக்க வேண்டும் என்று சொல்கிறார் என்றால் அந்தத் தீவிரம் ஏன் மற்ற வாசகர்களிடம் இல்லை?  உங்கள் சம்பளம் 70000 என்றால் அதில் ஒரு துளியை அனுப்பி நாடகத்தை அனுப்பி வையுங்கள் என்று சொல்ல ஏன் யாருக்கும் மனம் வரவில்லை?

நாடகத்தை இறுதியாக செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  அதற்கு முன்னால் கோவா என்று ஒரு குறுநாவல் முடியும் தறுவாயில் உள்ளது.  கோவா குறுநாவலை இணையதளத்தில் வெளியிடுவேன்.  அதன் காரணமாகத்தான் நாடகம் தாமதம்.  பணம் அனுப்பிய நான்கு நண்பர்களுக்கும் இரண்டொரு நாளில் நாடகத்தை அனுப்பி வைக்கிறேன். 

சக்திவேலிடமிருந்து பணம் பெறுவது ஹராம்.  அதனால் அந்தப் பணத்தை அவருக்கே திருப்பி அனுப்பி விட்டேன்.  அவர் பதினைந்து நாட்களுக்கு முன்பே ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார்.  கோவா பயணத்தினாலும் நேற்று குறிப்பிட்ட அவசர வேலையினாலும் அவருக்கு பதில் எழுதவில்லை.  அந்தக் கடிதம் வந்த போதே நாடகத்தை அவருக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.  இப்போது இந்தக் கடிதம். 

சக்திவேலின் கடிதத்தில் நான் காண்பது ஒரு தீவிரத்தை.  இந்தத் தீவிரம்தான் ஒரு இலக்கிய வாசகருக்கும் எழுத்தாளருக்கும் தேவை. இதே தீவிரத்துடன்தான் ஒரு சமூகம் எழுத்தாளர்களை அணுக வேண்டும்.  நான் இதே தீவிரத்துடன்தான் என் வாழ்நாள் பூராவும் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.  சமீபத்தில் என் ஆங்கிலப் பதிப்பாளர் ஏழு நாட்களில் முடித்துத் தரும்படி ஒரு வேலையைக் கொடுத்தார்.  இரண்டு நாட்களில் அனுப்பி விட்டேன்.  இறுதிப் பிரதியை அனுப்புங்கள், சரி பார்க்க வேண்டும் என்றேன்.  இரண்டு தினங்களில் அனுப்பி விட வேண்டும், பரவாயில்லையா என்றார் பதிப்பாளர்.  இரண்டு மணி நேரத்தில் அனுப்பினேன்.  இப்படியெல்லாம் அந்தப் பதிப்பாளரின் அனுபவத்தில் வேறு யாரையும் பார்த்திருக்க மாட்டார்.  உலகத்தில் தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி நடக்கும்.  அதேபோல் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு புத்தகம் 200 பிரதி விற்கும்.  தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு நாடகப் பிரதியின் பிடிஎஃப்பை வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் எண்ணி நாலே பேர் வாங்குவார்கள்.  ஆனால் ரீல்ஸில் என் நடனம் வெளியானது. கோவாவில் ஆடியது. மூன்று நாளில் 30000 பேர் பார்த்திருக்கிறார்கள்.  வாழ்க்கை.

ஆக, நீங்களெல்லாம் டான்ஸ் பார்க்கத்தான் லாயக்கு என்ற முடிவுக்கு வருகிறேன். அது கிழவன் ஆடினாலும் சரி, கிழவி ஆடினாலும் சரி, சினிமாக்காரன் ஆடினாலும் சரி, எழுத்தாளன் ஆடினாலும் சரி, அரசியல்வாதி ஆடினாலும் சரி, சாமியார் ஆடினாலும் சரி, முலை தெரிந்தாலும் சரி, தொடை தெரிந்தாலும் சரி… டான்ஸ் என்றால் பார்ப்போம். மூணு நாளில் முப்பதாயிரம் பேர். அடேங்கப்பா. எனக்கே தொழிலை மாற்றிக் கொண்டு டான்ஸராகப் போகலாமா என்று இருந்தது. இந்தச் சூழலில் ஒரு தீவிரமான நாடகம் எழுதியிருக்கிறேன், ஜெயமோகன் போன்று என் ரசனைக்கு எதிர்நிலையில் இருப்பவரே பாராட்டியிருக்கிறார், அ.ராமசாமி மற்றும் இளங்கோவன் போன்ற நாடகக் கலைஞர்களும் பாராட்டியிருக்கிறார்கள், பிடிஎஃப் அனுப்புகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் என்றால் நாலு பேர் பதில் அனுப்புகிறார்கள்! என்ன ஒரு அபத்தமான சூழலில் வாழ்கிறேன் பாருங்கள்! ஆனாலும் ஒரு காலம் இருந்தது, நாடகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னதுமே நூறு பேர் அந்த ஆசிரியருக்குக் கடிதம் எழுதி “எங்களுக்கு அனுப்ப முடியுமா?” என்ற கேட்ட காலம் அது.

நான் வாழும் காலம் அபத்தத்தின் உச்சம். இங்கேதான் சக்திவேலும் நானும் வாழ வேண்டியிருக்கிறது. எத்தனை முடியுமோ அத்தனை தீவிரத்துடன் இயங்கவும் வேண்டியிருக்கிறது. மாற்றுத் திறனாளிக்கு அரசு அளிக்கும் மாதாந்திர உதவித் தொகையான 1500 ரூபாயில் முந்நூறை அனுப்பி இந்த மிகக் குறைந்த தொகைக்கு நாடகத்தை அனுப்ப முடியுமா என்று கேட்கும் ஒரே ஒரு ஆத்மாவுக்காக நான் தொடர்ந்து இப்படியே தீவிரமாக இயங்குவேன்.