இடையில் குளிக்கப் போவதும் சாப்பிடுவதும் தவிர, காலை ஒன்பது மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கிறேன். காலையில் ஒரு மணி நேர நடை. மற்றபடி எதற்குமே வெளியே செல்வது இல்லை. இப்படியே ஆறு ஏழு நாள் போனால் மனம் சோர்வுறும் இல்லையா? அப்போது ஏதாவது ஒரு வெப்சீரீஸ் பார்ப்பேன். அதுவும் முக்கால் மணி நேரத்துக்கு மேல் இல்லை. இப்படியே பத்து எபிசோட் உள்ள சீரீஸைப் பார்த்து முடிக்க மூன்று மாதம் கூட ஆகும். இடையிலேயே விட்டாலும் விட்டு விடுவேன். ஆக, பொழுதுபோக்கு என்றால் வாரத்தில் முக்கால் மணி நேரம். அதிலும் மூளைக்கு வேலை கொடுக்கும் சீரீஸைப் பார்க்க மாட்டேன். த்ரில்லர் மட்டுமே.
அப்படி ஒரு வெப் சீரீஸைப் பார்த்த போது அதில் ஒரு காட்சி என்னைக் கவர்ந்தது. அது ஒரு ஜெர்மன் சீரீஸ். இடம் பெர்லின். நாயகன் வீட்டிலிருந்து வெளியே வந்து விட்டான். இருக்க இடம் இல்லை. ஒரு தோள்பைதான் சொத்து. ஒரு மழை நாள். மழையில் நனைந்து கொண்டே போய்க் கொண்டிருக்கிறான். ஐரோப்பிய நகரங்களில் வீடற்றவர்கள் சாலையோரங்களையே தங்கள் இருப்பிடமாகக் கொண்டு வசிப்பார்கள். அப்படி ஒரு தெருவில் சாலையோரவாசிகளின் இடையே போகிறான். அப்போது சாலையோரத்தில் படுத்துக் கிடக்கும் ஒரு பெண் அவனிடம் “உனக்குக் குடை வேண்டுமா?” என்று கேட்கிறாள். இவன் பதில் சொல்லாமல் அவளைப் பார்க்கிறான். அவள் தன்னிடம் உள்ள மழைக் கோட்டை அவனிடம் விட்டு எறிகிறாள். இவன் அதை வாங்கிக் கொண்டு நன்றி கூட சொல்லாமல் அதை மாட்டிக் கொண்டு போகிறான்.
இதை ஏன் சொல்கிறேன் தெரியுமா? எனக்குப் பணம் அனுப்பும் பெரும்பாலான வாசகர்கள் அந்த சாலையோரத்துப் பெண்ணின் நிலையில் இருப்பவர்கள்தான். நானும் அந்த நாயகன் மாதிரிதான்.
நேற்று சக்திவேலின் கடித்த்தைப் பார்த்தோம் இல்லையா? இன்று இன்னொரு நண்பரின் கடிதம். இவர் எனக்குத் தெரிந்தவர். சிவில் சர்விஸ் பரிட்சைக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்.
சாரு,
இத்துடன் இருநூறு ரூபாய் அனுப்பியிருக்கிறேன். ஆர்த்தோ நாடகத்துக்காக. நீங்கள் அந்த நாடகத்துக்காக எடுத்துக் கொண்ட சிரமத்துக்கு இது தூசு கூடப் பெறாது என்று தெரியும். ஆனாலும் நான் மாணவனாக இருப்பதால் இப்போதைக்கு இதுதான் முடிந்தது. நான் வேலைக்குப் போனதும் நிலைமை மாறும். ஒருவேளை இந்தப் பணம் போதாது என்று தோன்றினால், நான் உங்கள் தளத்தை வாசிப்பதற்கான கட்டணமாக இதை எடுத்துக் கொள்ளவும்.
நன்றி.
—————
எத்தனையோ நண்பர்கள், சென்னையிலேயே மாதம் ஐந்து லட்சம் ஊதியம் பெறுபவர்கள் என் தளத்தைப் படித்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும். அவர்களால் நாடகத்தை வாங்குவது பற்றி யோசிக்க முடியவில்லை.
இன்று 200 ரூ. அனுப்பி வைத்த மாணவருக்காகவும், சக்திவேல் போன்ற தீவிர இலக்கியப் பித்தர்களுக்காகவும், மற்றும் என்னுடைய முப்பது நண்பர்களுக்காகவும்தான் நான் எழுதுகிறேன் என்று தோன்றுகிறது.
இத்தனைக்கும் இடையில் நேற்று பெர்லினிலிருந்து ஒரு ஜெர்மன்காரர் ஸீரோ டிகிரி ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்ததாகவும் அது அவரை மிகவும் பாதித்ததாகவும் எழுதியிருக்கிறார். அப்படியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜெர்மன் மாணவர் ஸீரோ டிகிரியை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கி, காசு இல்லாததால் (ப்ரெட் வாங்க) அந்தப் பணியை பாதியிலேயே நிறுத்தியது ஞாபகம் வந்தது.