சிங்கப்பூரைச் சேர்ந்த இளங்கோவன் அகஸ்தோ போவால் போன்ற உலகப் புகழ் பெற்ற நாடகக் கலைஞர்களிடம் நாடகம் பயின்றவர். அக்னிக் கூத்து அமைப்பின் இயக்குனர். நாடகாசிரியர். நாடக இயக்குனர். ”அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்” நாடகம் பற்றி அவர் எழுதியிருந்த கடிதத்தை நாடகம் பற்றிய மூவரின் கருத்துரைகளில் சேர்த்திருக்கிறேன். மற்ற இருவர் ஜெயமோகன், அ. ராமசாமி.
இன்று என் நண்பர்கள் முப்பது பேருக்கு நாடகத்தின் பிடிஎஃப் பிரதியை அனுப்பி வைத்தேன். இன்றும் இளங்கோவன் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
Dear Charu,
At this stage in both of our lives, when we are shattering all the miragesthat are trying to overwhelm our existence,your play helps to incinerate the lies swarming around us.
Thank you so much for offering your creative oasis, the play, to help quench the warrior’s thirst in my journey.
Cheers.
Elangovan
என் மதிப்புக்கு உரிய இன்னொரு நண்பரும் நாடகம் உலகத் தரமாக இருந்தது என்று சொன்னதாக அறிந்தேன். இவர்களெல்லாம் உலக நாடகப் போக்கை அறிந்தவர்கள். நாடக இலக்கியத்தைப் பயின்றவர்கள்.
என் யோகா குரு சௌந்தருக்கும் நாடகத்தை அனுப்பினேன். அனுப்பியது மாலை நாலரைக்கு. சரியாக ஆறரை மணிக்கு அவரது செய்தி கிடைத்தது.
ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். குருகுலங்களில் அமைதியே உருவான மகான்களை தரிசிக்கச் செல்வதற்கு இணையாகவே, வடமேற்கிலும், கேரளத்திலும், சந்நதம் கொண்டு ஆடும் தெய்வங்களை தேடித்தேடி சென்று காண்பவன் என்கிற முறையில். இது சாருவின் சந்நதம். சந்நதம் கொண்டோரின் விழிகளில் எப்போதும் நம் ஆழம் ஊருடுவிச்செல்லும் ஒன்று இருக்கும். நம்மை உலுக்கும். இந்த நாடகத்தில் வரும் ஆர்த்தோவின் மின்விசை தாக்கிய உடல், ஒரு தெய்வத்தின் கண்.
சௌந்தர்.
நாடகப் பிரதியின் இறுதியில் ஆர்த்தோ கடைசியாக எழுதிய ஒரு வானொலி நாடகத்தில் அவரது குரல் இருக்கிறது. ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஐந்து பேர் நாடகத்தை வாசித்திருக்கிறார்கள். சாதாரண வாசிப்பு அல்ல. முதலில் பேசுவது ஆர்த்தோ. அதை தயவுசெய்து ஒரு ஐந்து நிமிடம் கேட்டுப் பாருங்கள். ஆர்த்தோ என்றால் யார் என்று தெரியும். ஃப்ரெஞ்ச்தான். நமக்கு ஒரு வார்த்தை புரியாதுதான். வெறுமனே அவர் குரலைக் கேளுங்கள். போதும். கேட்ட பிறகு மீண்டும் ஒருமுறை ஜெயமோகனின் முன்னுரையைப் படித்தால் ஜெயமோகன் கலையின் கூச்சல் என்று எதைச் சொல்கிறார் என்று புரியும். ஆர்த்தோவையும் ஆர்த்தோ குறித்த என் நாடகத்தை இன்னும் சிறப்பாகப் புரிந்து கொள்ளலாம்.
***
இன்று இன்னொரு மாணவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம்:
சாருவுக்கு,
நான் சிவசங்கரன். மதுரையில் இருநது கிளம்பி உங்களுடைய உரையை அண்ணா நூலகத்தில் கேட்பதற்காகவே சென்னை வந்தவன். உங்களையும் சந்தித்தேன். தங்களுக்கு என்னை ஞாபகம் இருககும் என்று நம்புகிறேன். அன்று, நான் சிவில் சர்வீஸ் தேர்விற்குப் படித்துக் கொண்டிருப்பதைப் பற்றி உங்களிடம் சொன்ன போது கிடைத்த வார்த்தைகளை என்றும் நினைவில் கொள்வேன். தற்போது வேலை இல்லை. என்ன செய்வதென்று அறியாத நிலை. இந்த நேரத்தில் மதுரையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனக்கென அமைந்த ஒரு அறிவுப் பெட்டகம் போலவே தென்படுகிறது. அங்கே, உங்களுடைய “நரகத்திலிருந்து ஒரு குரல், கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன்” போன்ற பல நூல்களைப் படித்து வருகிறேன். இதற்கு முன்பு, “அ-காலம்” என்ற முக்கியமான ஒரு நூலை நான் வாங்கிப் படித்து பெற்ற அனுபவத்தை எழுதி உங்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். ஸீரோ டிகிரியையும் மறுவாசிப்புக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறேன். இவ்வளவும் ஏன் சொல்கிறேன் என்று தெரியவில்லை. ஆனாலும் என்னவென்று புரியாத ஒரு ஆதங்கம் என்னை உங்களுக்கு எழுதத் தூண்டியது.
உங்களுடைய இணையதளத்தைத் தொடர்ந்து வாசித்து வருபவன் நான். பெட்டியொ நாவல் எழுத ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் ஆர்த்தோ உங்களைத் தொந்தரவு செய்வதாகவும், அவரைப் போலவே வாழ்ந்து வருவதாகவும் நீங்கள் எழுதியிருந்த சொல்லாடலைப் பார்த்த போது, ஆஹா ஏதோ ஒன்றை சாரு எழுதப்போகிறார் என்று அப்போதே கணித்தேன். அது ஒரு நாடகப் பிரதியாகவும் மெருகேறி வர, அதற்கு ஜெமோ அவர்களின் முன்னுரையும் எழுத – எனக்குள் இன்னமும் ஆர்வம் பெருகியது. ஆனால், ஐயாயிரம் ஆறாயிரம் என்று அனுப்புபவர்களுக்கு மத்தியில் நம்முடைய முந்நூறு நானூறு எல்லாம் இப்படி தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் உங்களுக்கு எப்படி அனுப்புவது என்று யோசித்தேன். ஏனெனில் இந்தத் தொகை உங்களைக் கொச்சைப்படுத்துவதாகத் தோன்றியது.
உங்களுடைய நேற்றைய பதிவில் சில மனிதர்கள் என்னைப் போன்ற ஒரு சூழலில் இருந்து முடிந்ததை அனுப்பிப் படிக்க நினைக்கிறார்கள என்பதைப் படித்தவுடன் என் தயக்கம் நீங்கியது. நானும் என்னால் முடிந்த 400 ரூபாயை அனுப்பி இருக்கிறேன், சாரு. உங்களுக்கு சரி எனப்பட்டால் அனுப்பவும், படிப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
இப்படிக்கு
சிவசங்கரன்.
இதற்கு என்ன பதில் எழுதுவது என்று தெரியவில்லை. இந்தக் கடிதத்தைப் பிறகு என்னால் கொஞ்ச நேரம் எதுவுமே செய்ய இயலாமல் போனது. சிவசங்கரன் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டேன்.
நேற்றே எழுதியிருந்தேனே, நடைபாதையில் வசிக்கும் ஒரு அனாதைப் பெண், மழையில் சென்று கொண்டிருந்த இன்னொரு அனாதைக்கு மழைக் கோட்டு கொடுத்தாள் என்று?
நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ தெரியாது, எனக்கு பணம் என்பது ஒரு காகிதம். அவ்வளவுதான். பயணம் செல்வதற்கு அந்தக் காகிதம் தேவைப்படுகிறது. கூடிய வரை சேர்க்கிறேன். நான் இலங்கையில் இருந்த போது ஒரு பெண் தன் சம்பளப் பணம் முழுவதையும் அனுப்பினார் என்று எழுதியிருந்தேன். இப்போது கூட அதைத் திருப்பி அனுப்பி விடலாமா என்றுதான் தோன்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது அவரைப் புண்படுத்தி விடுமோ என்றுதான் அனுப்பவில்லை.
தட்டில் விழும் தட்சிணையை குரு பார்க்க மாட்டார். உங்கள் அன்பும் அக்கறையும்தான் முக்கியம்.
இன்னொரு ஆச்சரியமான விஷயத்தையும் கவனிக்கிறேன். மாணவப் பருவத்தில் என் மீது உயிரையே விடுபவர்கள் பிறகு வேலைக்குப் போனதும் என்னையும் என் எழுத்தையும் அறவே மறந்து விடுகிறார்கள். கல்யாணம் ஆகி மறந்தால் கூட அதைப் புரிந்து கொள்வேன். வேலைக்குப் போனதுமே மறந்து விடுகிறார்கள். அதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு மாணவர் என் வீட்டுக்கு வந்து நூறு ரூபாய் கொடுத்தார். அதைத் தொடுவது ஹராம் என்றேன். மாணவர்களிடமிருந்து பணம் வாங்கக் கூடாது என்பது என் தர்மம். குருவுக்குக் கொடுப்பது என் தர்மம் என்று சொல்லி வலுக்கட்டாயமாகக் கொடுத்து விட்டுப் போனார். அடிக்கடி வருவார். பெரிய படிப்பு படித்தார். பெரிய வேலைக்குப் போனார். அத்தோடு சரி. இரண்டு லட்சம் ஊதியம் பெறும்போது அறவே மறந்து விட்டார். அவர் கொடுத்த நூறும் ஐம்பதும் எனக்குக் கோடி ரூபாய் மாதிரி.
இப்படி ஒருவர் அல்ல. சுமார் ஐம்பது பேர் இருக்கும். ஒரு மாணவர் எனக்கு வேட்டி சட்டை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பார். இப்போது மாதம் முப்பது லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம். உண்மையில் ஆண்டுச் சம்பளம் எத்தனையோ கோடி. அமெரிக்காவில் ஏதோ ஒரு நிறுவனத்தில் சி.இ.ஓ. அவருக்குக் கீழே ஆயிரம் பேர். என்னை அவர் இப்போது திரும்பிக் கூட பார்ப்பதில்லை. ஒரு ஃபோன் கூட இல்லை. இங்கே வந்தாலும் பார்ப்பதில்லை. மாணவப் பருவத்தில் என் தற்கொலைப் படை மாதிரி இருந்தவர்.
இந்த மனநிலையை என்னால் கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியவில்லை. அரசு உதவித் தொகை ஆயிரம் ரூபாய் பெறும் போது அதில் இருநூறு ரூபாயைக் கொள்ளை மகிழ்ச்சியுடன் கொடுக்கும் மாணவன் மாதம் முப்பது லட்சம் சம்பாதிக்கும் போது திரும்பியே பார்க்காமல் போகிறான்! புரியவே இல்லை. ஒருவர் இருவர் அல்ல, சுமார் ஐம்பது பேர் இப்படி.
இவர்களிலிருந்து ஒரே ஒருவர்தான் விதிவிலக்கு. குமரேசன். அவர் சிவில் சர்விஸுக்குப் படிக்கும்போது என் வீட்டுக்கு வருவார். வரலாற்றில் என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி, என் புத்தகங்களையும் கொடுத்திருக்கிறேன். தேர்வு பெற்றார். இன்றளவும் என் பெறாத மகனைப் போலவேதான் நடந்து கொள்கிறார். அற்புதமான மனிதன். இப்படி என்னால் குமரேசன் ஒருவரைத்தான் சொல்ல முடிகிறது. சிவசங்கரனும் அப்படித்தான் இருப்பார் என்று உள்ளுணர்வு சொல்கிறது.
***
உங்களுக்கு வாக்களித்தபடி இன்று கோவா நடனம் நெடுங்கதையை முடிக்க முடியவில்லை. குறுநாவல் மாதிரி நீள்கிறது. இன்னும் சில நாட்களில் முடித்து நம் தளத்திலேயே வெளியிடுவேன். எல்லோரும் படிக்கலாம்.
***
நாடகப் பிரதி தேவைப்படுபவர்கள் அதற்கான கட்டணத்தை நீங்களே தீர்மானித்துக் கொண்டு அனுப்பி வையுங்கள். வங்கி விவரம் வைர சூத்திரத்தின் விலை என்ற பதிவின் கீழே உள்ளது. அல்லது, எனக்கு எழுதுங்கள்.
charu.nivedita.india@gmail.com