சில நண்பர்கள் ஆர்த்தோ நாடகத்துக்குப் பணம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மின்னஞ்சல் முகவரி தெரியவில்லை. இதைப் படித்தவுடன் அனுப்பி வையுங்கள்.
***
வணக்கம் சாரு,
இதுவரை உங்களுடைய அ-புனைவுகளைப் படித்துக் கொண்டிருந்த நான் இப்பொழுதுதான் புனைவுகளை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். “அன்பு” நாவல் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். முதலில் எக்ஸிஸ்டன்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் வாசித்தேன். பின்னர் “நேநோ” தொகுப்பில் சில சிறுகதைகள், ஸீரோ டிகிரி, இப்பொழுது எக்ஸைல். ஒரு மாத காலமாக உங்கள் எழுத்துக்களிலேயே மூழ்கிக் கிடக்கிறேன். எல்லாமே pdf தான். உங்களிடமே கேட்டிருக்கலாம். ஏனோ கேட்கவில்லை. எனக்கு டிவி, லேப்டாப், மொபைல் என்று எந்தத் திரையையும் அரை மணி நேரத்திற்கு மேல் பார்த்துக் கொண்டிருந்தால் கண் எரிச்சல் கண்டு நீர் வரும். அப்படி இருந்தும் நாள் முழுக்க உங்கள் எழுத்துக்களை ஏதோ வசியம் வைத்தது போல் கண் எடுக்காமல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். படிக்க ஆரம்பித்தால் நிறுத்தவே முடிவதில்லை. ஒரு நாள் கண்ணாடியில் பார்த்த பொழுது கண் பேய் மாதிரி சிவந்திருந்தது. உங்களுடைய புனைவுகளை இவ்வளவு நாட்கள் வாசிக்காமல் அ-புனைவுகளை மட்டும் வாசித்துக் கொண்டிருந்தது, ஏதோ பாயசத்தை முகர்ந்து மட்டும் பார்த்துக் கொண்டிருந்ததைப் போல் உள்ளது. உங்கள் சிறுகதை மற்றும் நாவல்களை வாசிக்கும்போது எனக்கு நடனத்தைப் பார்ப்பது போல் இருக்கிறது. நடனத்தைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது. திருவிழாக்களில் சாமி வந்து வெறிபிடித்தவர்கள் போல் ஆடுவார்களே, உடம்பிலிருந்து ஆடைகள் அவிழ்ந்தால் கூட தெரியாது… அப்படி. மானுட விடுதலை என்று நீங்கள் பலமுறை உங்கள் தளத்தில் எழுதியிந்தீர்கள். அதனை உங்கள் புனைவுகளில் உணர்ந்தேன்.
உலக வாழ்க்கையின் நிலையாமை குறித்து எனக்கு இருந்த பல கேள்விகளுக்கு ஸீரோ டிகிரியில் எனக்கு கிட்டத்தட்ட விடை கிடைத்தது. 5454 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சரஸ்வதி சமவெளி நாகரிக காலத்தில் புழக்கத்தில் இருந்த எழுத்து வடிவத்தில் இருந்துதான் பிராமி கிரேக்க தேவநாகிரி தமிழ் எழுத்துக்கள் பிறந்திருக்கின்றன என்றபோது அந்தப் பெயர் தெரியாத மொழியை நான் ஏன் எனது தாய்மொழி என கருதக்கூடாது? இந்த வரிகளில் எல்லைகளைக் கடந்து பிரபஞ்சத்தில் ஒரு துகளாய் என்னை உணர்ந்தேன். இரவெல்லாம் சிந்தனையாகவே இருக்கிறது. இந்த வருடத்தில் இதுவரை பத்து புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். நிலவு தேயாத தேசம், அன்பு நாவலெல்லாம் அச்சுப் பிரதியாகத்தான் வாசித்தேன். எனக்கென்று தனியாக சேமிப்பு இல்லை. ஐந்து ரூபாய் பொருளானாலும் வீட்டில் கேட்டு அவர்கள் வாங்கித் தருவதுதான். சில மாதங்களாக ஆர்த்தோவின் நாடகத்தைப் பற்றி உற்சாகமாக எழுதி வருகிறீர்கள். நாடகத்தின் பிரதிக்கு நீங்களே விலை நிர்ணயம் செய்துக் கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தீர்கள். முதலில் அதை வாங்குவதைப் பற்றிய சிந்தனைக்கு முன் நாடகமெல்லாம் நமக்கு புரியாமா என்றுதான் தோன்றியது. ஏனென்றால் நாடகத்தைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு நாடகம் கூட படித்ததில்லை. அப்படியிருக்க, ஆர்த்தோ நாடகம் எனக்கு புரியுமா, அதிலிருந்து நான் ஏதாவது எடுத்துக் கொள்ள முடியுமா என்று கூறுங்கள். நான் இதுவரை தளத்திற்கு சந்தா செலுத்தியதில்லை. மாணவர்கள் பணம் கொடுப்பது எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது என்று பல முறை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அதனால் நானும் உங்களுக்கு பணம் அனுப்பி சங்கடப்படுத்த வேண்டாமென்று இதுவரை அனுப்பியதில்லை. ஆனால் தளத்தில் சில நாட்களாக வெளியான மாணவர்கள் சிலரின் கடிதங்கள் என்னை வருந்தச் செய்தது. போதாக்குறைக்கு pdf ல் வேறு உங்கள் நூல்களை வாசிக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். கண்டிப்பாக என் கையில் பணம் இருக்கும் பொழுது பணம் கொடுத்துத்தான் படிப்பேன். கடிதத்தைப் பார்த்தால், நேரமிருந்தால், பதில் எழுத நினைத்தால் எழுதுங்கள்.
த.செந்தமிழ்.
அன்புள்ள செந்தமிழ்,
உங்கள் கடிதங்கள் அனைத்துமே மற்ற வாசகர்களும் படிக்கத் தகுந்தாற்போலவே அமைகின்றன. அதனாலேயே தளத்தில் வெளியிட்டு பதில் எழுதுகிறேன். நீங்கள் எனக்குப் பணம் அனுப்ப வேண்டாம்.
நீங்கள் என்னைப் படிப்பதே எனக்குப் பெரிய உற்சாகம்தான். என் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள். நாள் முழுவதும் இந்தக் கணினிக்கு முன்னால் உட்கார்ந்து தட்டச்சு செய்து கொண்டே இருக்கிறேன். பேய் பிசாசு மாதிரி. வெளியுலகத் தொடர்பே இல்லை. யாரோடும் பேசுவதில்லை. பழகுவதில்லை. ஃபோன் செய்வதில்லை. சீனியோடு மட்டும்தான் பேசுவது. அதிலும் அவர் உலகத்திலேயே யாரிடமும் இல்லாத ஒரு ஃபோன் வைத்திருக்கிறார். நான் ஏர்பாட் போட்டுப் பேசினால் அவருடைய நூதனமான அந்த ஃபோனில் கேட்காது. வெறுமனே பேசினாலும் சிங்கம் உறுமுவது போல்தான் கேட்கும். அவர் பேசுவதோ எனக்குக் கேட்கவே கேட்காது. சரி, கடவுளின் அனுக்கிரஹத்தால் இரண்டு பேருக்குமே இரண்டு பேரின் குரல்களும் சரியாக்க் கேட்டுத் தொலைத்து விட்டால், “என்ன சாரு, ஏதோ ஃபேக்டரி சத்தம் மாதிரி, ஏதோ மாவு மெஷின் ஓடுவது போல் கேட்கிறது?” என்று கேட்பார் சீனி. எனக்குப் புரிந்து விடும். என் அறையில் உள்ள மின்விசிறியின் சத்தம். உடனே அதை அணைத்து விட்டுப் பேசுவேன்.
”ஏங்… இப்போ சரியா இருக்கு…”
அப்புறம் வேர்க்க விறுவிறுக்கப் பேசத் தொடங்குவேன். இப்போது என் குரல் அவருக்குத் தெளிவாகக் கேட்கும். அவர் குரல் எனக்குக் கேட்காது.
இப்படி இருவரும் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் போதே அவந்திகா வந்து விடுவாள். அவள் இருக்கும்போது சீனியுடன் பேச முடியாது. அவ்ளோதான் கதை. அந்த ஒரே ஒரு தொலைபேசி உறை(!)யாடல் தவிர வேறு எந்தப் பேச்சும் கிடையாது.
நாள் முழுவதும் கணினிக்கு முன்னால் தட்டச்சு செய்து கொண்டே இருக்கிறேன். இல்லாவிட்டால் வாசிக்கிறேன். ஆக, அப்படி வாழும் ஒரு எழுத்தாளனுக்கு இப்படி ஏதோ ஓர் ஊரிலிருந்து யார் என்றே தெரியாத ஒரு வாசகர் இத்தனை வரிந்து வரிந்து எழுதுவதும், இப்படி விழுந்து விழுந்து படிப்பதும் எவ்வளவு உற்சாகத்தைத் தருகிறது, தெரியுமா? நீங்கள் பணம் அனுப்ப வேண்டாம். படியுங்கள், அதுவே போதும்.
ஆனால் ஒரு வேண்டுகோள். நேற்று நான் எழுதியிருந்தது போல, மாதம் ஒரு லட்சம் ரெண்டு லட்சம் என்று சம்பாதிக்கும்போது மற்றவர்களைப் போல் மாயமான் போல் மறைந்து விடாதீர்கள். இப்போது நீங்கள் இத்தனை வெறியுடன் படிப்பதே எனக்கு மகிழ்ச்சி.
உங்களுக்கு நாடக வாசிப்பு இல்லை என்று எழுதியிருக்கிறீர்கள். ஒன்றும் பிரச்சினை இல்லை. எந்த ஒரு நாடகத்தை வாசித்திருக்காவிட்டாலும் இந்த நாடகம் புரியும். மேலதிகமாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நாடகத்தின் இடையிடையே வரும் குறிப்புகளை கூகிளில் தேடிப் படித்தால் நாடகத்தை இன்னும் அதிகமாக ரசிக்கலாம்.
நீங்களும் பூசாரி சாமி வந்து ஆடுவது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மற்றவர்களும் அதையேதான் சொன்னார்கள். நாடகம் உங்களுக்கு அனுப்பி விட்டேன். கடன்தான். வேலைக்குப் போய் சம்பாதிக்கும்போது கடனைத் திருப்ப வேண்டும்.
நாடகத்தைப் படித்த பிறகு ஆர்த்தோவின் வானொலி நாடகத்தில் ஆர்த்தோ குரல் கொடுத்திருப்பதைக் கேளுங்கள். பிறகு ஜெயமோகனின் முன்னுரையைப் படியுங்கள். பிரமாதமாகப் புரியும்.
சாரு