ஆர்த்தோ: சில எதிர்வினைகள்

வணக்கம் சாரு.         

எனக்கு நாடகத் துறையைப் பற்றி ஏதும் பெரிய அளவில் தெரியாது, ஆனால் ஒரு வாசகன் என்ற நிலையிலிருந்து ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். நாடகம் எப்பொழுதும் நம்மிடையே மிகவும் நேரடியாக உரையாடுகிறது . நான் பெரிய அளவில் நாடகங்களை வாசித்ததும் இல்லை. ஆனால் உங்களுடைய நாடகத்தை படித்தவுடன் என் மனதில் எழுந்த கேள்வி, எப்பொழுதும் அந்த கேள்வியே என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது,நாம் சரியாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா?

நீங்கள் எனக்கு அனுப்பிய உடனேயே நாடகத்தை நான் படித்து விட்டேன், ஆனால் இரண்டு நாட்களாக யூடியூபில் ஆர்த்தோவின் பேட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன், மற்றும் அவருடைய டாக்குமென்டரி காணொலியும் youtube மூலம் பார்த்தேன். அவருடைய நிலை மிகவும் மோசமாக இருந்தாலும், அவர் ஒருபொழுதும் உண்மையைப் பேச அஞ்சவில்லை. அவர் இயேசுவைப் போல் தான் வாழ்ந்துள்ளார். தன்னை மிகவும் மோசமாகத் துன்புறுத்திய டாக்டரிடமும் அவர் உண்மையைப் பேச சிறிதும் அஞ்சவில்லை. என்னுடைய நன்றி எல்லாம் முதலில் தங்களுக்கும், ஆர்த்தோவை மனநோய் விடுதியிலிருந்து வெளியே கொண்டு வந்த நண்பர்களுக்கும் தான்.

ஆர்த்தோவை மிகவும் எளிமையாகப் புரிந்து கொள்ளும்படி எங்களுக்குத் தந்ததற்கு மிக்க நன்றி சாரு.

இப்படிக்கு,

ப.லட்சுமி நாராயணன்.

***

இப்படி சுமார் ஒரு ஐம்பது கடிதங்கள் வந்துள்ளன. சென்ற மாதம் கூட தமிழ்நாட்டில் அந்தோனின் ஆர்த்தோவின் பெயர் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இப்போது ஆர்த்தோவின் பெயர் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலம். இப்படித்தான் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஃப்ரெஞ்ச் இலக்கியத்தைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி வருகிறேன். ஆனால் ஃப்ரெஞ்ச் தூதரகத்தில் போய் வீசா கேட்டால் என்னை விரட்டி அடிக்கிறான். என்ன சொல்ல?

சாரு

***

நாடகம் படித்து முடித்து விட்டேன். பிரமிப்பாக இருந்தது. உங்களது நாவல் வடிவத்திற்கும் நாடக வடிவத்திற்குமிடையே இருக்கின்ற consistency வியக்க வைக்கிறது.
ஒரு வகையான பித்து பிடித்த நிலையில் ஒரே அமர்வில் இது எழுதப்பட்டது போலிருக்கிறது. உணர்ச்சிகளை உலுப்பிக் கொண்டு கதை தீவிரமாக நகரும் போது இடையிடையில் வரும் சுயபகடிகள் புன்னகையையும் சில சமயஙகளில் அடக்க முடியாமல் வாய் விட்டுச் சிரிப்பதையும் விளைவிக்கின்றன. 

இது போன்ற ஒரு படைப்பு புத்தகமாகப் பதிக்கப்பட்டிருந்தால் 200 பிரதிகள்தான் விற்கும் என்று நீங்கள் சொன்னது இப்போது மனதை மிகவும் வருத்துகிறது. 

அருள் விக்டர் சுரேஷ்

***

புத்தகம் வந்த கையோடு சுமார் இருபதாயிரம் பிரதிகள் விற்கும், விவாதிக்கப்படும் என்ற சூழ்நிலை இருந்தால் நான் நிச்சயமாக பிடிஎஃப்பில் புத்தகத்தைக் கொடுக்க மாட்டேன். அப்படிக் கொடுத்தால் அது ஒரு குற்றம். 200 பிரதிதான் என்பதால் பிடிஎஃப்பில் கொடுத்தேன். சொல்லப் போனால் 200 என்பது அதிகம். நூறுதான் போகும். அதுதான் நிஜம். நாவல் என்றால் ஒரு ஆயிரம் பிரதி இரண்டு ஆண்டு இடைவெளியில் போகும்.

சாரு.

***

நாடகம் படித்தேன் சாரு. a divine cosmic experience. நீங்கள் நாடகத்தில் சொல்லியிருப்பது போல இந்தப் பிரபஞ்சத்தின் முன்னே மனிதன் ஒரு துகள். அப்படியிருக்கும்போது அவனுடைய மதிப்பீடுகளுக்கெல்லாம் என்ன மதிப்பு இருக்கிறது? நாடகம் எல்லாவற்றையுமே கேள்விக்குள்ளாக்குகிறது. சந்தேகமே இல்லாமல் ஆர்த்தோ ஒரு யோகிதான். அவர் துரதிர்ஷ்டம் அவர் இந்தியாவில் பிறக்காமல் வேறு எங்கோ பிறந்து விட்டார். Tarahumara இனக்குழுவினர் பற்றிய இடங்களைப் பெரிதும் ரசித்தேன். அவர்கள் உலகின் மிகச் சிறந்த ஓட்டக்காரர்கள் என்ற அளவில் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தேன். ஆனால் நாடகத்தைப் படித்த போதுதான் அவர்களின் வாழ்வு ஐரோப்பியர்களால் பறிக்கப்பட்டதை அறிந்து கொள்ள முடிந்தது. அமெரிக்காவில் அவர்கள் பல ஓட்டப் பந்தயங்களுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இப்போதுதான் அவர்களின் வாழ்க்கை எப்படி வணிக நோக்கத்துக்காக சீரழிக்கப்படுகிறது என்பது தெரிகிறது. ஆன்மாவையும் உடலையும் காசுக்காக விற்பது போன்றது அது. ஆர்த்தோ அதை மிகச் சரியாக சுட்டிக் காட்டுகிறார். Once again you are awesome!!!

ப்ரவீன்.

வெளிநாடுகளில் வசிக்கும் வாசகர்களுக்குத் தேவையெனில் எழுதுங்கள். நாடகத்தின் பிடிஎஃப் பிரதியை அனுப்பி வைக்கிறேன். இந்தியாவில் வசிப்பவர்கள் அடுத்த மாதம் முதல் ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து நாடகத்தைப் புத்தகமாக வாங்கிக் கொள்ளலாம்.

சாரு