ஆர்த்தோவின் உடல் மொழி: கலாமோகன்

அன்புடன் சாருவிற்கு,

நீங்கள் அனுப்பி வைத்த  ஆர்த்தோ மீதான நாடகத்தை வாசித்து மீண்டும் ஓர் சிந்தனை உலகில் வீழ்ந்தேன். உங்களது எழுத்தில் ஆர்த்தோ தனது விதத்தில் ஓர் தியானம் செய்கின்றார் எனவும் சொல்லலாம். பல சிந்தனைகளிற்கான வீதிகளைத் தயாரிக்கும் கச்சிதமானது உங்கள்   படைப்பு.

உங்களது எழுத்து மிகவும் கவித்துவமானது. சில வேளைகளில் நான் இதனை ஓர் கவித்துவச் சிருஷ்டிப்பு என்றே கருதுகின்றேன். எது எப்படியோ நாடக இலக்கியம் ஓர் கவித்துவ உயிர்ப்பே.

ஆர்த்தோவின் முகத்தை நீங்கள் காட்டும் விதத்தில் பிரான்ஸினது “போலிக் கலாசார” விளம்பரங்களை  நீங்கள் உடைத்தமை மிகவும் மேலானதே. “எமக்கு யாவும் தெரியும்”  என்பது ஓர் மோசமான நோய்.  தெரிந்தவைகளில் இருக்கும் புண்களை  உடைப்பது எமது நெறி சில வேளைகளில் நாம் உடைக்கும் புண்களும் நம்மைக் கவர்ச்சிக்கும் தேவர்கள் தேவகிகள் ஆகலாம்.

முகங்கள் என்பன  முகங்கள் அற்றவை. எமது கலைத்துவம் என்பது கொடிய விதிகளால் கண்காணிக்கப்படுவனே. கொலைத்துவமும், கோழைத்துவமும் உள்ளனவே எமது அதிக கலை விதிகள். இந்த விதிகளை உடைக்கும் போராளி ஆர்த்தோவினது  பேனாவின் தோழன் நீங்கள் என்பதை உங்களது படைப்பு  அறிவிக்கின்றது.

உங்களது ஆர்த்தோ மீதான எழுத்துப் பரிணாமம், முதலாளித்துவ இருப்புகளது எதிர்ப்பு மட்டுமல்ல, சூழலியல் மீது நடத்தப்பட்ட, நடத்தப்படும் இம்சைகளைத் தெளிவாகக் காட்டுகின்றது.  இது அவசியம்.

இந்த நாடக நூலை வாசித்த பின்பு தத்துவ இலக்குகள் இதனுள் உள்ளதை நான் ரசித்தேன். மத உலகு எமக்குத் தேவை இல்லை, உடல் உலகு எமக்குத் தேவை என்பதை நாம் எப்போது அறிவோம்?

உடல் என்பது ஓர் மொழி, இது பல வளையங்களைக் கொண்ட ஓர் மொழி. ஆர்த்தோ நமக்குத் தரும் வளையம் பலருக்குப் பீதிகளைத் தரும்.  இந்தப் பீதிகள்தாம்  எமது உடல்களை இப்போதும் அடிமைப்படுத்துவன.

க.கலாமோகன்

(கலாமோகன் மிக நீண்ட காலமாக பாரிஸில் வசிக்கிறார். தமிழிலும் ஃப்ரெஞ்சிலும் எழுதுகிறார். தமிழ் எழுத்துச் சூழலிலிருந்து ஒதுங்கி நிற்பவர். என் நெருங்கிய நண்பர்.)

அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் என்ற என் நாடகம் பிடிஎஃப்பாக தேவைப்படுபவர்கள் எனக்கு எழுதுங்கள். புத்தகம் அடுத்த மாதம் வரும். எனவே இந்தியாவுக்குள் இருப்பவர்கள் புத்தகமாக வாங்கிக் கொள்ளலாம். வெளிநாடுகளில் வசிக்கும் என் வாசகர்கள்/நண்பர்கள் எனக்கு எழுதினால் பிடிஎஃப் பிரதி அனுப்புகிறேன்.

charu.nivedita.india@gmail.com