2010இலிருந்து எனக்குக் கடிதம் எழுதியவர்களுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். 6000 கடிதங்கள். அத்தனைக்கும் பதில் எழுத முடியாது. சுமார் இருநூறு கடிதங்களுக்கு ஒரு வரி பதில் எழுதினேன். அதில் 175 பேரிடமிருந்து பதில் வந்தது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் எழுதுகிறார்கள். ப்ளாகைத் தொடர்ந்து படிப்பதாகவே எழுதுகிறார்கள். அடிக்ஷன் மாதிரி ஆகி விட்டது என்கிறார்கள். அப்படியே நகர்ந்து வந்து கொண்டிருந்த போது 2016, மார்ச் இரண்டாம் தேதி காலை 6.05 மணிக்கு ஒரு கடிதம் வந்திருந்ததைக் கண்டேன்.
Ashoka_mitran <ashoka_mitran@yahoo.co.in> | Mar 2, 2016, 6:05 AM | |
to me |
When you had such ardent enthusiasts from all over the world, I was superfluous. Not only age, but a fracture of hip joint. Can you get me through your friends a small AM/FM radio with or without rechargeable batteries? I will pay. Blessings. A.M
Sent from my iPad
இந்தக் கடிதம் எழுதிய போது அசோகமித்திரன் தி.நகரில் அவர் மகன் வீட்டில் இருந்தார். ரேடியோ கேட்பதை அசோகமித்திரன் கடைசி வரை விடாத பழக்கமாகக் கொண்டிருந்தார். பணம் கொடுத்தார். நான் மறுத்து விட்டேன்.
இதைத் தட்டச்சு செய்யும் போது கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை. அசட்டு செண்டிமெண்ட் உணர்வுகளால் அல்ல. தமிழில் எழுதியதால் மட்டுமே இங்கே எழுத்தாளர்களெல்லாம் அனாதையாகச் செத்தார்கள். புதல்வர்கள் இருவரும் வேலைக்குப் போன பிறகு அசோகமித்திரன் பணத்துக்குக் கவலைப்படவில்லை. ஆனால் அவர் புத்தகங்களை வைத்துக் கொள்ள இடமில்லாமல் எல்லா நண்பர்களிடமும் கொடுத்து விட்டார். அவர் புதல்வரின் வீட்டுக்கு எதிரேதான் ஒரு அரண்மனை இருந்தது. யாருடைய அரண்மனை என்று கேட்டேன். இசை ஞானி என்றார்.
அசோகமித்திரனின் மரணத்துக்கு எண்ணி இருபத்தைந்து பேர் வந்திருந்தார்கள். அதில் பதினைந்து பேர் உறவினர்கள். தமிழ்நாடே கொண்டாடியிருக்க வேண்டிய மரணம்.
அசோகமித்திரன் அளவுக்கு இருக்காது என் மரணம். குறைந்த பட்சம் பத்து இளம் பெண்களாவது மூர்ச்சை அடைவார்கள். அடிதடி ரகளை நடக்கவும் வாய்ப்பு உள்ளது. கொலை நடந்தாலும் ஆச்சரியம் இல்லை. அந்த கலாட்டாவையெல்லாம் பார்க்க நான் இருக்க மாட்டேன் என்பதுதான் மரணம் பற்றிய என் ஒரே கவலை. பேசாமல் ஒரு மரண நாடகம் நடத்தி விடலாமா என்று கூடத் தோன்றுகிறது.
எனக்குத் தெரிந்து சுந்தர ராமசாமியின் மரணம்தான் ஒரு எழுத்தாளனின் மரணத்தைப் போல் கொண்டாடப்பட்டது. சென்னையிலிருந்து மட்டுமே ஒரு நூறு பேருக்கு மேல் சென்றிருப்பார்கள். சு.ரா. தன்னுடைய உடல் அடக்கத்தை சாதி ரீதியாகச் செய்ய வேண்டாம் என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.
நான் அப்படியெல்லாம் என் உடல் மீது சொந்தம் கொண்டாட மாட்டேன். உயிரே போன பிறகு உடல் எவனுக்கு ஐயா வேண்டும்? என்னவாவது செய்து கொள்ளுங்கள். உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என்று வாழும் தமிழன் அல்லவா நான்? என் எழுத்துதான் என் உயிர், என் உடல் எல்லாமே. மற்றபடி சதையையும் எலும்பையும் பார்ஸிகளைப் போல் பட்சிகளுக்குப் போட்டாலும் சரியே. ஆனால் possessiveness யாரை விட்டது? உயிர் போன பிறகும் உடலுக்குச் சொந்தம் கொண்டாடுவது எத்தனை அபத்தம்?
ஆனால் ஒன்று, ஃப்ரெஞ்ச் வைன் படையல் போட்டு விடுங்கள்.
பின்குறிப்பு: என்ன இது, இப்படியெல்லாம் எழுதிக் கொண்டு என்று சிலர் நினைக்கக் கூடும். நான் மரணம் இல்லாதவன். என் எழுத்திலிருந்து எத்தனையோ பேர் உருவாகிக் கொண்டே இருப்பார்கள். என் எழுத்து ஒருபோதும் சாகாது. சமீபத்தில் யோகா குரு சௌந்தரிடம் கேட்டேன். யோகானந்தா ஏன் ஐம்பது வயதிலேயே இறந்து போனார்? அப்படிப்பட்ட ஞானிகளுக்கெல்லாம் மரணமே கிடையாது. யோகானந்தா என்ற பெயர் தாங்கிய உடலுக்குத்தான் மரணம். யோகானந்தாவுக்கு அல்ல. அவர் ஆத்ம சொரூபமாக இருந்து கொண்டே இருக்கிறார். அதேபோல் நான் என் எழுத்தின் மூலம் இருந்துகொண்டே இருப்பேன்.
எப்படி?
சென்ற வாரம் கோவையிலிருந்து ஜெஃப்ரி என்ற நண்பர் பேசினார். என்னை அறிந்தால் என்ற படத்துக்கு நீங்கள்தான் வசனமா என்று கேட்டார். ஏன் கேட்கிறீர்கள் என்று எதிர்க்கேள்வி கேட்டேன். அதில் அஜித் த்ரிஷாவிடம் ஒரு விஷயம் சொல்கிறார். இப்போதே திருமணம் செய்து கொண்டால் பிரச்சினையா என்று கேட்கிறார் த்ரிஷா. அதற்கு அஜித், “என்ன பிரச்சினை, அடிக்கடி மெடிக்கல் ஷாப் போக வேண்டியிருக்கும், காண்டம் வாங்க” என்கிறார்.
இது நீங்கள் எழுதியதுதானே என்றார் ஜெஃப்ரி. எப்படித் தெரியும் என்றேன். எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் வருகிறது என்றார். எந்த இடம்? நாயகன் சூர்யா காதலில் விழுகிறான். காதலிக்கு விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார்கள். விவாகரத்து வழக்கு நடக்கும் போது வயிற்றைத் தள்ளிக் கொண்டு போக முடியுமா? அதற்காக சூர்யா அடிக்கடி மெடிக்கல் ஷாப் போகிறான்.
இப்படி ஒரு சாதாரணமான வணிக சினிமாவில் வரும் வசனத்தில் கூட என்னை அடையாளம் கண்டு பிடித்து விடுகிறார்கள். அதிலும் டைட்டில்ஸில் என் பெயர் போடாமலேயே.
அதனால் சொன்னேன், மரணம் இல்லாதவன் என்று.