தி இந்துவில் உலகமயமாக்கல் 25 தொடரில் நேற்று வந்திருந்த சாரு நிவேதிதாவின் கட்டுரை:
ஒரு எழுத்துக் கலைஞனின் கூரிய பார்வைகளைக் கொண்டிருக்கிறது. அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. சிலிக்கன் புகைமூட்டத்தோடும், பாலித்தீன் புழுக்கத்தோடும், ஓயாத சங்கொலி அழைப்புகளோடும் நகரும் சிதறுண்ட வாழ்வின் ஓட்டமிகு தசைகளில் ஒன்றைப் பிளக்க வேண்டும். அப்படியாக இன்று எவரும் ஒரு சிறந்த படைப்புக்கு முயல முடியும். மாற்றம் ஏற்றமென்றல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் நமக்கு ஏமாற்றம்தான். இனி எழுத்தில் நாசூக்கு பார்க்க வேண்டியதில்லை. இங்கே நசிந்த கலாச்சாரப் பின்னணியைப் பற்றிய ஆயிரமாயிரம் பேசாப்பொருள்கள் நமது மக்கள்திரள் சந்தையில் கடை விரிக்கப்பட வேண்டும்.
சாரு நிவேதிதா கட்டுரையில் அவர் நாகூரில் வாழ்ந்த இருபது வருடங்களையும், டெல்லி வாழ்க்கையில் ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் பசுவை நிறுத்தி கறந்து கொடுத்த பாலில் தயிர்தோய்த்து உண்ட நினைவையும் சொல்கிறார். அப்போது கையைக் கழுவ ஒரு முழு சவுக்காரம் வேண்டும் என்கிறார். வறுமையிலும் கூட மின்சாரம் சரிவரப் பகிரப்படாத காலங்களிலும் கூட நமது உணவின் தேவை இப்போதிருக்கும் அளவுக்கு பஞ்சநிலை நேர்ந்ததில்லை என்கிறார். பள்ளிக்கூடம் வதைக்கூடங்களாகவும், அஞ்சரைப் பெட்டி மருத்துவம் காணாது போனதைச் சொல்வதின் மூலம் மருத்துவ கொள்ளையையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
எனது பால்ய காலத்தை நினைத்துப் பார்க்கிறேன். கோவில்பட்டியில் இரவு வேளைகளில் நாங்கள் தங்கியிருந்த பத்துவீட்டுக் காம்பவுண்டில் ஆண்கள் பெண்கள் என்று வெளியில் தான் கயத்தாறு பாய்விரித்துப் படுத்திருப்போம். கோடைகால இரவில் வீசும் சுகமான காற்றில் நித்திரை சுகமாகக் கழிந்தது. சென்னைவாசிகளுக்கு மாடியில் தென்னைகள் விசிறியாக நிலவுகாய ஆழ்ந்து உறங்கியெழுந்த காலங்கள் அப்போதிருந்தது. இப்போது அப்படியெல்லாம் உறங்கிவிடமுடியாத அளவுக்கு கொசுக்களின் தொல்லை. உலகமய கொசுக்கடிகளின் ராஜ்ஜியம் அன்றாட அலுவல்களிலும், இரவிலும் கூட நமது உடலின் இண்டு இடுக்குகளில் எல்லாம் குடியேறி ரத்தம் குடிக்கத் தொடங்கிவிட்டன.
முதலில் சென்னைக்கு வந்தபோது தங்கப் பிடிக்காமல் வெருண்டோடினேன். இப்போது கோவில்பட்டியும் சென்னை போலாகிவிட்டது. கிராமம் நகரம் என்ற எல்லைகள் சுருங்கிவிட்டன. கருப்பட்டிகளும், சீயக்காய்களும், மஞ்சள்பூசுதலும், வேப்பிலை வைத்தியங்களுக்கும் வளரும் தலைமுறை அறியாப் பண்டங்களாகி விட்டன. எதற்கெடுத்தாலும் நீங்கள் மளிகைக் கடைக்கோ, மெடிக்கலுக்கோ செல்லவேண்டும்.
அரசு ஊதியத்தில் காலத்தை ஓட்டி ஓய்வு நாட்களை மாடிக் குடியிருப்புகளில் சேனல்களை மாற்றிமாற்றி அலுப்பு கண்ட நபர்களைக் கண்டிருக்கிறேன். விற்பனைப் பிரதிநிதி பணிநிமித்தமாக செல்கையில் அவர்கள்தான் உட்காரவைத்து அதிகநேரம் பேசுபவர்களாக இருப்பார்கள். பேச யாருமற்ற ஏககாலத் தனிமையின், வெறுமையின் நெடியேற இருக்கையை விட்டு எழவிட மாட்டார்கள். பேச்சின் போக்கில் மோடியைப் புகழுவார்கள். மாமணி என்பார்கள். சீரழிந்து போன மக்களின் வாழ்க்கை தரத்தை அவர்தான் சுடரேற்றி விரட்டப் போகின்றவர் என்பார்கள். அவர்களுக்கு நல்ல பத்திரிகை பற்றிய நல்ல தொலைக்காட்சி சேனல்களைப் பற்றிய அறியாமையை அப்போது புரிந்து கொள்வேன். மாடியைவிட்டு இறங்காத குளிர்ப்பதனவாசிகள் அவர்கள்.
இன்று அப்படித்தான் சாரு நிவேதிதாவின் கட்டுரை பற்றிய சிந்தனையில் அண்ணாநகரின் 4 வது நிழற்சாலையின் டீக்கடையொன்றில் நின்று கொண்டிருந்தேன். ஒரு வறிய முதியவர் ‘ஆங்ரி பேர்ட்’ வண்ண விளம்பரக்குடையைப் பிடித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார். இவ்வண்ணமே நாமெல்லாம் அவர்களின் குடைக்குக் கீழே உண்டிவில் முடுக்கத்திற்கு முதுகுகாட்டி ஒடுங்கிக் கொண்டிருக்கவே இந்த அரிய மானிடப்பிறவி எடுத்தோமா?
***
சாரு, எனது முகநூலில் பதிவிட்டிருக்கிறேன்.எழுதி எழுதி தீரவே தீராத உலகமய தாராளவாத பிரச்சினைகளை நீங்கள் எல்லா பத்திரிகைகளிலும் எழுத வேண்டும் என்பது என் விருப்பமும் வேண்டுகோளும்.
ஆகாசமுத்து.
13.7.2016.