தி.ஜானகிராமன் எழுதிய உதய சூரியன் என்ற பயணக் கட்டுரை நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். Pleasure of the Text என்றால் இதுதான். ஆள் பிரமாதப்படுத்தியிருக்கிறார். விரிவாக பிறகு எழுதுகிறேன்.
பெட்டியோவை அனுப்பிய நண்பர்களிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. சீனி பயங்கர பிஸி. அலுவலக வேலை. பொதுவாக அனுப்பிய இரண்டே நாளில் வாசித்து விடுவார். ஆனால் இப்போது கடுமையான வேலை நெருக்கடி போல. நேற்று இரவு ஒரு பப்புக்குப் போய் படிக்கப் போவதாகச் சொன்னார். அந்தக் குறிப்பிட்ட பப் அமைதியாக இருக்கும். கூட நண்பர்களும் இல்லையென்றால் நிம்மதியாகப் படிக்கலாம்.
நேற்று இரவு அழைக்கிறேன் என்றார். நானோ ஒன்பதரைக்கே உறங்கப் போய் விட்டேன். காலையில் – அதுவும் இன்று திங்கள் கிழமை – கடும் வேலை போல. அரை மணியில் அழைக்கிறேன் என்று மெஸேஜ் வந்தது. எனக்கோ சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை. நாவல் எப்படி இருந்தது என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். மதிய உணவு வேளை சமயத்தில் நானே அழைத்தேன். நான் அப்படியெல்லாம் அழைக்கும் ஆள் அல்ல. அவர்களாகக் கூப்பிடுவார்கள் என்றுதான் எதிர்பார்ப்பேன். ஆனாலும் நாவல் பற்றிய அவருடைய அபிப்பிராயம் தெரிய வேண்டும். நானே அழைத்தேன்.
ஒரு தேர்ச்சி பெற்ற சிற்பி செதுக்கிய சிற்பம் போல் இருக்கிறது. இனி இதில் கை வைக்கவே வேலை இல்லை.
இது போதும். பொதுவாக சீனி, காயத்ரி இருவரையுமே நான் Cynic வகையில்தான் சேர்ப்பேன். அப்படிப்பட்ட சீனியே இப்படிச் சொன்ன பிறகு “போதும்” என்ற நிம்மதி வந்து விட்டது. விரைவில் என்.எஃப்.டி.யில் வரும். பணத்துக்கு ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியைப் பார்க்க இருபதாயிரம், முப்பதாயிரம் கொடுத்துப் போய், உள்ளே இடம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். அப்படியிருக்கும்போது ஒரு புத்தகத்தைப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினால் என்ன? அதிலும் படித்து விட்டு அதே விலைக்கோ அல்லது அதிக விலைக்கோ விற்று விடலாம்.