Asexual

பெட்டியோ இன்னும் சில தினங்களில் – அதிக பட்சம் இரண்டு வாரம் – என்.எஃப்.டி.யில் வெளிவரும். இதற்கு மேல் அதில் கை வைக்க எதுவும் இல்லை. சீனி படித்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருடைய கருத்து என்ன என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.

இங்கே எனக்கு என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் ப்ரியா கல்யாணராமன் ஞாபகத்துக்கு வருகிறார். கடந்த பதினைந்து ஆண்டுகளாக என்னோடு மிக நெருங்கிய நட்பில் இருந்தார். குமுதத்தில் என் தொடர் வருகிறதோ இல்லையோ, வாரம் ஒருமுறையாவது பேசி விடுவார். என் எழுத்தின் தீவிர வாசகர். தினமும் காலையில் என் ப்ளாகைப் படித்து விடுவதாகச் சொல்வார்.

குமுதத்தில் என் கட்டுரைகள் வந்து கொண்டிருந்தபோது சில சமயம் “என்ன சார், உங்களால் என் வேலை போய் விடும் போலிருக்கிறதே?” என்று சிரித்துக் கொண்டே சொல்வார். அதனால் அந்தக் கட்டுரைக்குப் பதிலாக இன்னொன்று கொடுப்பேன். குமுதத்தில் என் தொடரை நிறுத்துவதற்காகப் பலரும் படாத பாடு பட்டார்கள் என்று சொல்வார். யார் என்று பெயர் சொன்னதே இல்லை. ஆனால் எனக்கு யார் என்று தெரியும்.

ஏன் இப்போது ப்ரியா கல்யாணராமன் பற்றி ஞாபகம் வந்தது என்றால், அவர் அடிக்கடி என்னிடம் சொல்லும் ஒரு வாசகம். “ஒரு இருபத்திரண்டு வயதுப் பையன் தன் முதல் கதையைப் பத்திரிகைக்கு அனுப்பி விட்டு அது பற்றி ஆசிரியர் என்ன சொல்லப் போகிறார் என்று எத்தனை ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பானோ அதேபோல் இந்த வயதில் இத்தனை அனுபவத்துக்குப் பிறகும் இருக்கிறீர்கள்… இப்படி ஒரே ஒரு எழுத்தாளரைக் கூட என் சர்விஸில் பார்த்ததில்லை.” இதை அவர் நூறு முறையாவது சொல்லியிருப்பார். நானுமே அதை ஆமோதிப்பேன். இப்போது சீனியின் கருத்தை அறிந்து கொள்வதிலும் நான் அதே ஆர்வத்தோடுதான் இருக்கிறேன். ஒருவேளை அவர் பெட்டியோ பற்றி எதிர்மறையாகச் சொன்னாலும் அது என்னை எந்த வகையிலும் பாதிக்காது. ஏன் என்று விளக்க வேண்டும்.

பியர் க்யூத்தா (Pierre Guyotat) பற்றி இங்கே நான் பலமுறை எழுதியிருக்கிறேன். அவருடைய இரண்டு நாவல்களை சமீபத்தில் படித்தேன். Eden, Eden, Eden மற்றும் Tomb for 500000 Soldiers. ஃப்ரெஞ்ச் மொழியின் வரலாற்றிலேயே பியர் க்யூத்தா தான் முதல் முதலாக அம்மொழியின் கட்டுமானங்களையும் சொல்லாடலையும் அடியோடு மாற்றிப் போட்டவர், மொழியில் புரட்சி செய்தவர் என்று எல்லா ஃப்ரெஞ்ச் அறிஞர்களும் சொல்லியிருக்கிறார்கள். ஃபூக்கோ, ரொலாந் பார்த் போன்றவர்களே அப்படித்தான் சொல்கிறார்கள். ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்த போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

அதேபோல் தமிழின் 2000 ஆண்டு வரலாற்றில் முதல் முதலாக அதன் சிந்தனையிலும் narrativeஇலும் ஒரு தீவிரமான புரட்சியைச் செய்தவர் சாரு என்று விரிவாக எழுதியிருக்கிறார் சீனி. பாரதிக்குப் பிறகு அதைச் செய்தவர் என்று போகன் சங்கர் எழுதியிருக்கிறார். சீனிக்கு பியர் க்யூத்தா தெரியாது. அதனால் அவரை மேற்கோள் காண்பிக்கவில்லை, அவ்வளவுதான்.

அந்த அளவுக்கு உயர்வாக என் எழுத்தை மதிப்பிடும் ஒருவருக்கு பெட்டியோ பிடிக்கவில்லை என்று சொன்னால் அதை நான் ஏற்பேன். ஆனால் நான்கு நாட்களுக்கு முன் போகிற போக்கில் ஒரு அன்பர் “உங்கள் ப்ளாக் கட்டுரைகளெல்லாம் தரமாக இல்லை” என்று அடித்து விட்டுப் போனார் அல்லவா, அப்படிச் செய்தால் கோபம் கொள்ளுவேன். அது பற்றிக் காட்டமாக எழுதுவேன். மற்றபடி எல்லாவிதமான விமர்சனங்களுக்கும் செவி கொடுப்பவன்தான் நான்.

இப்போது நான் Pierre Klossowskiயின் Sade My Neighbor என்ற நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்பாக Peter Weissஇன் The Aesthetics of Resistance என்ற மூன்று தொகுதியிலான நாவலின் முதல் தொகுதியை மட்டும் படித்தேன். அச்சு அசலாக ஹராகிரி செய்து கொண்டது போலவே இருந்தது. அவருடைய நடை அப்படிப்பட்டது. அத்தனை சிரமப்பட்டுப் படித்தது ஏன் என்றால், அசெக்‌ஷுவல் நாவலுக்காக. அந்த நாவலில் இருநூறு பக்கம் எழுதி விட்டேன். இன்னும் ஒரு ஐம்பது பக்கம் இருக்கும். (அசெக்‌ஷுவலின் ஒரு அத்தியாயம் சில மாதங்களுக்கு முன் உயிர்மையில் வெளிவந்தது. அதை வாசித்தவர்கள் குடல் வெளியே வந்து விட்டது போல் இருந்தது என்று எனக்கு எழுதியிருந்தார்கள்.)

அசெக்‌ஷுவல் நாவலை முடிப்பதற்கு முன்னால் பீட்டர் வெய்ஸையும், பியர் க்ளொஸோவ்ஸ்கியையும் முடிக்க வேண்டும் என்பது என் திட்டம். அதனால்தான் ஹராகிரி போன்ற பீட்டர் வெய்ஸின் ஏஸ்தெடிக்ஸ் ஆஃப் ரெசிஸ்டென்ஸை முடித்தேன். ஆயிரம் பக்கங்களிலுமே பத்தி கிடையாது. போனால் போகிறதென்று எங்கோ ஒரு இடத்தில் வருகிறது. அவ்வளவுதான். அதிலும் அதன் ஆங்கிலம் படு பயங்கரமாக இருக்கிறது. வார்த்தைகள் புரிகின்றன. ஆனால் அந்த வாக்கியங்களை – அப்படிப்பட்ட வாக்கிய அமைப்புகளை – இதுவரை நான் ஆங்கிலத்தில் வாசித்தது இல்லை. ஒரே ஒரு பக்கத்தை உதாரணத்துக்குத் தருகிறேன். பின்வருவது ஒரு பக்கம். இப்படியே நானூறு பக்கம் படித்தேன். இப்படியே மூன்று தொகுதிகள். ஆயிரம் பக்கங்கள். படித்து முடித்து மூளை கலங்கி நேற்று இரவு ஒன்பது மணிக்கே தூங்கி விட்டேன். புரிகிறதோ இல்லையோ, பின்வரும் பக்கத்தைப் படித்துப் பாருங்கள்.

of the figurations, there had been the bondage, the enclosure in stone. In the marble quarries on the mountain slopes north of the castle, the master sculptors had pointed their long sticks at the best blocks while eying the Gallic captives toiling in the sultry heat. Shielded and fanned by palm branches, squinting in the blinding sun, the sculptors took in the rippling of the muscles, the bending and stretching of the sweating bodies. The defeated warriors, driven here in chains, hanging from ropes on the rock faces, smashing crowbars and wedges into the strata of glittering, bluish white, crystalline-like limestone, and transporting the gigantic ashlars on long wooden sleds down the twisting paths, were notorious for their savagery, their brutal customs, and in the evenings the lords with their retinues passed them timidly when the stinking prisoners, drunk on cheap rotgut, were camping in a pit. Up in the gardens of the castle, however, in the gentle breeze wafting up from the sea, the huge, bearded faces became the stuff of the sculptors’ dreams, and they remembered ordering one man or another to stand still, opening his eye wide, pulling his lips apart to view his teeth, they recalled the arteries swelling on his temples, the glistening nose, zygomas, and forehead emerging from the cast shadows. They could still hear the lugging and shoving, the stemming of shoulders and backs against the weight of the stone, the rhythmic shouts, the curses, the whip cracks, the grinding of sled runners in the sand, and they could see the figures of the frieze slumbering in the marble coffins. Slowly they scraped forth the limbs, felt them, saw forms emerge whose essence was perfection. With the plundered people transferring their energies into relaxed and receptive thoughts, degradation and lust for power produced art. Through the noisy maelstrom of a school class we pushed our way into the next room, where the market gates of Miletus loomed in the penumbra. At the columns flanking the gates, which had led from the town hall of the port to the open emporium, Heilmann asked whether we had noticed that inside, in the altar room, a spatial function had been inverted, so that exterior surfaces had become interior walls. In facing the western perron, he said, we had our backs to the eastern side, the rear of the temple, that is, in its merely rudimentary reconstruction, and the unfolded southern frieze stretched out to the right while the relief on the northern cornice ran to the left. Something the viewer was to grasp by slowly circling it was now surrounding him instead. This dizzying procedure would ultimately make us understand the Theory of Relativity, he added when, moving a few centuries deeper, we walked along the clay brick walls that had once stood in the cluster of Nebuchadnezzar’s Babylonian towers, and we then suddenly stepped into an area

ஆனால் க்ளொஸோவ்ஸ்கியின் ஸாத் மை நேபர் அப்படி இல்லை. சுவாரசியமாகவே இருக்கிறது.

இந்த வாசிப்பு எல்லாமே அசெக்‌ஷுவல் நாவலுக்காகத்தான். இன்னும் இரண்டு மாதங்களில் அச்சு நூலாக ஸீரோ டிகிரி பதிப்பகம் மூலம் வெளிவரும்.

அதற்குப் பிறகுதான் தியாகராஜா. முன்பே வந்திருக்க வேண்டும். ஆனால் ஒரே ஒரு இடத்தில் நாவல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. தியாகராஜாவிடம் ஒரு ஆங்கிலேயப் பாதிரி கிறித்தவத்தின் அருமை பெருமைகள் பற்றிப் பேசுகிறார். அந்த இடம் தமிழ் இலக்கியத்தின் ஒரு உச்சமாக இருக்கும். அதற்கு இணையாக சனாதன தர்மம் பற்றி தியாகராஜா பேச வேண்டும். அதற்காகத்தான் ரமணரிலிருந்து மகா பெரியவர் வரை படித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் கூடவே ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அசெக்‌ஷுவலில் ரத்த ஆறு. இன்னொரு பக்கம், தியாகத்தில் ஒரு ஆன்மா கரைந்து கொண்டிருக்கும் கதை. இடையில் சனாதன தர்மம் பற்றி தமிழ்நாட்டில் கிளம்பிய விளக்கங்களையும் கேட்டேன். தியாகராஜா நாவலை பழைய பாணியில் எழுதுகிறேன். இல்லாவிட்டால் இந்த சமகால விளக்கத்தையும் போட்டு பூந்து விளையாடியிருக்கலாம். வேண்டாம். தியாகராஜாவின் கதையை அவர் பாணியிலேயே சொல்லுவோம் என்பது முடிவு.