டியர் சாரு,
Folie என்னும் ஃபிரெஞ்ச் மொழிச் சொல்லை மொழிபெயர்ப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆங்கிலத்தில், foolishness, insanity, madness, lunacy என்றும், தமிழில் ஒரு படி மேலே சென்று பித்துநிலை என்றும் மொழிபெயர்த்தாலுமே கூட, அந்தச் சொல்லின் சில அடுக்குகள் மிச்சம் இருப்பதாகவே தோன்றுகிறது. இதற்கு, ஃபூக்கோ போன்ற சிந்தனையாளர்கள் வந்து அதன் மீது புதிய அர்த்தங்களை ஏற்றியும், பழைய அர்த்தங்களைக் கலைத்துப் போட்டுவிட்டதும் ஒரு காரணம். குறிப்பாக Histoire de la folie à l’âge classique/ History of madness-ல், பைத்தியக்காரன் என்று அறியப்படுபவனின் சமூக இடம் எப்படிப் பல்வேறு காலகட்டங்களில் மாறி வந்திருக்கிறது என்று விளக்கும் ஃபூக்கோ, நவீன மனிதனை பைத்தியக்காரனுக்கு நேரெதிரில் நிறுத்தி இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பொதுமொழியே இருக்கமுடியாது என்கிறார். மேலும், நவீன மேற்கத்திய மருத்துவம் மனநலம் பிறழ்ந்த ஒருவரை அல்லது ஓர் உடலைக் கட்டுப்படுத்தி, தனிமைப்படுத்தி, ஆய்வுப் பொருளாகப் பார்க்கக் கற்றுக்கொண்டுவிட்டது என்றும் வாதிடுகிறார்.
ஐரோப்பியக் கண்ணோட்டத்தில் இப்படி இருக்கையில், கீழைத்தேய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மனம்பிறழ்ந்தவர்களுக்கென இன்றும் ஒரு சிறப்பிடம் கொடுத்தே வைத்திருக்கின்றன. அவர்களை ஞானிகளாகவும், கலைஞர்களாகவும், நாம் அறிய முடியாத வேறோரு மெய்ம்மையை அறிந்தவர்களாகவும், அதிகாரத்திற்கு எதிராக உண்மைகளை உடைத்துப் பேசுபவர்களாகவும் பார்க்கின்றன. அந்த வகையில், உங்கள் அந்தோனின் ஆர்த்தோ நாடகம், folie-யின் கீழைத்தேயப் பொருளை முற்றிலுமாக உணர்ந்துகொண்ட ஓர் ஐரோப்பியக் கலைஞனின் மீது மேற்கத்திய உலகம் செலுத்திய வன்முறையை ஒரு பெருந்தாண்டவமாடி நிகழ்த்திக்காட்டுகிறது.
இயேசுவிடமிருந்து புனித பேட்ரிக் பெற்றதாகக் கருதப்படும் கைத்தடியை, அது இருக்கவேண்டிய இடமான அயர்லாந்து தேவாலயத்திலே கொண்டு சேர்த்துவிட நினைக்கிறார் ஆர்த்தோ. எல்லாப் புனிதங்களின் மீதும் மூத்திரம் பெய்யும் ஆர்த்தோ புனித பேட்ரிக்கின் கழியைக் குறியீடாக்கி உலகத்திற்கு நற்செய்தி அறிவிக்க நினைப்பதும், அதே புனிதச் சின்னத்தைத் தேடியெடுத்துப் பராமரிக்க வேண்டிய நம்பிக்கையாளர்களானப் பாதிரியார்கள் ஆர்த்தோவை நிந்திப்பதுமான நகைமுரணில் தொடங்குகிறது நாடகப்பிரதி. ஆர்த்தோ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மனநோய்க் காப்பகத்தில் அடைக்கப்பட்டு, அப்போதைய வைத்தியமான மின்னதிர்ச்சி கொடுக்கப்பட்டு செயலிழக்கவைக்கப்படுகிறார்.
ஆர்த்தோ என்னும் நாடகக் கலைஞனின் உடல் மீது எல்லா அதிகார அமைப்புகளும் செலுத்தும் வன்முறை ஒட்டுமொத்தமாக எல்லாப் பைத்தியங்களின் மீதான – எனவே, எல்லாக் கிளர்ச்சிக்காரர்களின் மீதான – வன்முறையாகத் தொழிற்படுகிறது. வாழ்க்கை சிதறுண்ட போதிலும், கடைசிவரை எதிர்க்குரல் எழுப்புகிறார் ஆர்த்தோ.
எதையும் தர்க்கத்தின் கண்கொண்டு பார்க்கும் மேற்கத்தியரின் ஒற்றைத்தன்மையை விமர்சிக்க, ருராமுரி இன மக்களின் கதையைப் பேசும் ஆர்த்தோ, அவர்களில் ஒருவனே வந்து தன் கதையைச் சொல்ல, விலகிக்கொள்கிறார். இப்படி சிறுசிறு உபகதைகள் சேர்ந்து நாடகத்திற்கு ஒரு polyphonic தன்மையை வழங்குகின்றன.
குரல் மாற்றி மாற்றிப் பேசும் ஆர்த்தோ அந்தத் தன்மையை, உணர்வுகளைக் கடத்தவும் தம்மைப் பைத்தியம் என்று நினைப்பவர்களைப் பகடி செய்யவும் உபயோகிக்கிறார்.
தன்னைத்தானே கட்டியெழுப்பிக் கலைத்துவிடும் பின்நவீன நாடகமாக மட்டுமன்றி, theatre of cruelty-ஐ அறிமுகப்படுத்திய ஒரு நாடகக் கலைஞைனின் வாழ்க்கையைச் சொல்லும் இந்நாடகமுமே அதே வகைமையில் எழுதப்பட்டிருக்கிறது.
இந்நாடகத்தின் இசை பற்றிப் பேசவேண்டும். ருராமுரி இசைக்கலைஞன் ஒருவன் நகரத்திற்கு வந்து வயலின் இசைத்து அதில் வரும் வருமானத்தில் வாழ நேர்கிறது. இசையை மகிழ்ச்சிக்காகப் பயன்படுத்திய ஓர் ஆதி இனம் இன்று அதை வாழ்வாதாரத்திற்காகப் பயன்படுத்தத் தள்ளப்படுகிறது. பிரதியின் ஊடே இயக்குனரின் குறிப்பாக வரும் இசையோ அவ்வப்போது குறுக்கிட்டு ஆர்த்தோவைப் பேசவிடாமல் செய்கிறது, குரல்வளையை நெறிக்கிறது. அதிகாரம் கொடுக்கும் மின்னதிர்ச்சியால் கலைஞர்கள் போடும் கூச்சலும், அவர்களின் அலறலும், இரைச்சலுமே இங்கே இசை.
நாடகங்களை ”வாசிப்பது” முழுமையான அனுபவம் இல்லைதான். அவற்றை நிகழ்த்திப் பார்க்க வேண்டும். ஆனால், அந்தோனின் ஆர்த்தோ நாடகத்தின் எழுத்துப்பிரதி ஒரு நாடக-நாவல் வடிவத்தில் இருப்பதால், pleasure of the text-உடன் ஒளி/ஒலி அமைப்பும் சேர்ந்து நல்ல காட்சியனுபமாகவும் இருக்கிறது. அதிகாரத்திற்கு எதிரான உங்கள் புனைவெழுத்தில், நிச்சயம் இந்நாடகத்திற்கு மிகச்சிறப்பானதொரு இடம் இருக்கும், சாரு.
Thank you so much for giving me this extraordinary opportunity to read your play. Love you, Charu!
ஈஷ்வர்
(வெளிநாடுகளில் வசிக்கும் நண்பர்கள் ஆர்த்தோவின் நாடகம் தேவைப்பட்டால் எழுதுங்கள். பிடிஎஃப்பில் அனுப்பி வைக்கிறேன். உள்நாட்டில் இருப்பவர்கள் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் புத்தகமாக வாங்கிக் கொள்ளலாம். இன்னும் புத்தகம் வெளிவர பத்துப் பதினைந்து தினம் ஆகலாம்.)
charu.nivedita.india@gmail.com