சொர்க்கம் என்றால் என்ன? இனிமை என்றால் என்ன? மகிழ்ச்சி என்றால் என்ன? உன்னதம் என்றால் என்ன? அற்புதம் என்றால் என்ன? அதிசயம் என்றால் என்ன?
இன்று என் சிநேகிதியுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது நான் எப்போதுமே சொல்லும் வசனத்தை ஒரு தொள்ளாயிரமாவது தடவையாகச் சொன்னேன். இந்த உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் நான்தான். என்னை விட மகிழ்ச்சியாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் துறவிகள், ஞானிகள், ரிஷிகள். நான் பேசுவது இப்படி ஒரு அமைப்பில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களைப் பற்றி. அவர்களில் நான்தான் மகிழ்ச்சியான மனிதன். காரணம், நான் யாரிடமிருந்தும் எதுவுமே எதிர் பார்ப்பதில்லை. இந்த வார்த்தையை நீங்கள் பதினைந்து வயதிலிருந்து கேட்டுக் கொண்டேதான் இருக்கிறீர்கள். நானும்தான் கேட்டேன். இப்போது அதைப் பின்பற்ற ஆரம்பித்து விட்டேன். ரஜினி மாதிரி எழுபத்தைந்து வயதில் உடல் ஒத்துழைக்கவில்லை என்றதும் ”குடிக்காதீர்கள், பிள்ளைக் குட்டிகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று நான் அறிவுரை சொல்லவில்லை. பலதையும் பலரிடமிருந்தும் எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருக்கும் நான் எதையும் எதிர்பார்க்காமல் வாழ்கிறேன். சுயநலம்தான் காரணம். பக்கா சுயநலம். எதிர்பார்க்காமல் வாழ்ந்தால் எது பற்றியும் ஏமாற்றம் இல்லாமல் இருக்கிறது. கோபம் அகன்று விடுகிறது. ஒரு நண்பருக்கு ஒரு கடிதம் எழுதினேன். பதிலே இல்லை. முன்பென்றால், மனதில் ஏமாற்றம் பதிந்திருக்கும். இப்போது எதுவுமே தோன்றவில்லை.
எல்லையற்ற மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணம், வெங்கடேஷ் குமார் என்ற ஒரே ஒரு ஆள். மனதில் தனிமை தோன்றும் போதெல்லாம் வெங்கடேஷ் குமார் என்ற அந்த அதிசய மனிதனைக் கேட்க ஆரம்பித்து விடுகிறேன்.
இன்னொன்றும் கவனித்தேன். என்னால் வைன் அருந்தும்போதுதான் இசை கேட்க முடிகிறது. சாதாரணமாக இசை கேட்க முடிவதில்லை. அப்போது “எழுதலாமே?” என்ற கடமை உணர்ச்சி தோன்றி விடுகிறது. ஆனால் வீட்டில் வைன் அருந்த முடியாது. நண்பர்களுடன்தான் அருந்த முடியும். நண்பர்களுக்கு இசை பிடிக்காது. வினித் விதிவிலக்கு. ஆனால் ஒரு சபையில் வினித்தும் நானும் மட்டும் இசை கேட்க முடியாது. கலவரம் ஆகி விடும். அதனால் எல்லோரும் அதிகாலை நான்கு மணிக்கு உறங்கச் சென்ற பிறகு நானும் ராஜேஷும் மட்டுமே இசை கேட்க முடியும். ராஜேஷுக்கு ஹிந்துஸ்தானி இசை பிடிக்குமா என்று தெரியாது. வினித் காலை நான்கு மணிக்கு உறங்கப் போய் விடுவார். அதற்கு மேல் அவருக்கு உடம்பு தாங்காது. ராஜேஷும் நானும் காலை ஏழு வரை நவீன இசையும் ஜனரஞ்சக இசையும் கேட்டுக் கொண்டிருப்போம். நான் ஏழு மணிக்குத் தூங்கப் போவேன். அவர் எப்போது போவார் என்று தெரியாது.
ஆக, வெங்கடேஷ் குமாரை எப்போது கேட்பது? காலையில் என்னோடு பேசும் பெண்களுக்கு யோகா வகுப்பு இல்லாத போதுதான்.
ஆனாலும் இடையிடையே எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு வெங்கடேஷ் குமாரைக் கேட்க ஆரம்பித்து விடுவேன். அப்படி ஒருநாள் இன்று. ஒரு மணி நேரமாக யமன் ராகம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது கூட எப்படி நடந்தது என்றால், ரீல்ஸில் ஒரு எட்டு வயதுப் பெண் யமன் ராகத்தில் ரகளை பண்ணிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டு முடித்து விட்டு வெங்கடேஷ் குமாரில் உட்கார்ந்து விட்டேன். தலை போகிற வேலை இருக்கிறது. அதை விட்டு விட்டுத்தான் வெங்கடேஷ் குமார்.
என் அன்புள்ள சிநேகிதி, உனக்கு எத்தனையோ வேலை. பிச்சுப் பிடுங்கல். நூற்றுக்கணக்கான ஃபோன் அழைப்புகள். பைத்தியம் பிடித்து விடும் போன்ற நிலை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு இதைக் கேட்டுப் பார். சொர்க்கத்தைக் காண்பாய்.
பின்வருவது சிறுமியின் யமன்: https://m.facebook.com/17841436173943820/videos/1006823087229375/
பின்வருவது வெங்கடேஷ் குமார்: