பெட்டியோ… நாவலை நேசமித்திரனுக்கும் அனுப்பியிருந்தேன். ஒரே நாளில் படித்து விட்டார். நாவலின் வடிவத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைச் சொன்னார். அதே மாற்றத்தை பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அராத்துவும் சொல்லியிருந்ததால் இப்போது அந்த மாற்றத்தைச் செய்து முடித்து விட்டேன். இப்போதைய வடிவத்தில் நாவல் இன்னும் காத்திரமானதொரு பின்நவீனத்துவப் பிரதியாக மிளிரும். பாவம் ஸ்ரீராம்தான், இதோடு நாவலை ஐந்தாறு முறை படித்து விட்டார். ஒவ்வொரு மாற்றம் செய்யும் போதும் இதுவே கடைசி என்று தோன்றும். இந்த நாவலைப் போல் வேறு எந்த நாவலிலும் நான் இத்தனை சிரமம் எடுத்துக் கொண்டதில்லை. இன்னும் கூட சேர்க்கலாம். சேர்த்தால் ஆயிரம் பக்கத்தைத் தொட்டு விடும். தொட்டால் ஆங்கிலத்துக்குப் போகும்போது பாதியை வெட்ட நேரிடும். அதனால் சேர்க்க வேண்டியதை வேறொரு நாவலாக எழுதி விடலாம் என்று முடிவு செய்து விட்டேன். நாவல் 43,096 வார்த்தைகள் வந்துள்ளன. நாளை இரவு டிஸைனரிடம் கொடுத்து விடுவேன். ரோஹினி மணி அட்டைப்படம் வரைந்து தர இசைந்திருக்கிறார். ரோஹினியின் ஓவியங்களின் தீவிர ரசிகன் நான். நாவலை என்.எஃப்.டி.யில் வாங்கத் தயாராகிக் கொள்ளுங்கள். நாவலை இப்போது நான் ஐந்தாவது முறையாக வாசிக்கிறேன். அப்போதும் ரோலர்கோஸ்டர் மாதிரிதான் இருக்கிறது. சலிப்படைய வைக்கவில்லை. நீங்கள் படித்து விட்டுச் சொல்லுங்கள்.
கீழே நேசமித்திரனின் மதிப்பீடு:
ஃபோனில் வாசித்தால் 475 பக்க நாவல். புத்தகத்தில் குறையும். பத்து மணி நேர வாசிப்பு .
நடையொழுக்கு என்பார்களே அது அப்படி இருந்தது. தரவுகளைப் படைப்பாக்குவது கலை. அதைத் துருத்தாமல் எழுதிச் செல்லும் விரல்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை.
நிலப்பரப்பை மிகப் புழங்கிய இடமாக மாற்றி வாசிப்பவனையும் தோளில் கைபோட்டு அழைத்துச் செல்கிறது சொல்முறை.
காதல், அரசியல்,போர், இரத்தம், நிணம்,வல்லாங்கு, சிறை இலக்கியம், மனித நடத்தையின் அபத்தங்கள் என வரலாற்றின் உண்மைக்கு நெருக்கமான பக்கங்களை ஒரு காலப்பயணி குறிப்பெழுதுவது போல் உசாத்துணை நூல்கள் மீது பகடைகளை வீசி சாத்தியங்களைக் கொண்டு அமரத்துவமான காதல் கதையாக இணங்கவும் முரண்படவும் திறப்புகள் கொண்ட புனைவாக எழுதியிருக்கிறார் சாரு நிவேதிதா.
- நேசமித்திரன்