ஜப்பான் : கனவும் மாயமும் – 1

In fact, the whole of Japan is a pure invention.  There is no such country, there are no such people.  ஆஸ்கார் ஒயில்ட் 1889இல் எழுதினார்.  ஆனால் அதற்கு அடுத்த வாக்கியத்திலேயே ஜப்பானியர்கள் ஒன்றும் அதிசய மனிதர்கள் அல்ல என்றும் சொல்கிறார்.  ஆனால் நான் அவருடைய முதல் வாக்கியத்தைத்தான் எடுத்துக் கொள்வேன்.  ஆம், ஜப்பானும் ஜப்பானியரும் மேற்கத்தியருக்கு நம்பவே முடியாத ஒரு அதிசயமாகத்தான் இருந்தார்கள், இருந்து வருகிறார்கள்.  உலகில் யார் தன்மானத்துக்காக ஹராகிரி செய்து கொள்வார்கள்? தூக்கு மாட்டிக் கொள்ளலாம், விஷம் அருந்தலாம்.  ஆனால் ஹராகிரி?  ஒருவன் தன் குறுவாளால் வயிற்றை இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாகக் கிழித்துக் கொள்கிறான்.  வயிற்றைக் கிழித்துக் கொள்வதால் உயிர் போகாது.  அதனால் அவன் அருகிலேயே அவனுடைய உயிருக்குயிரான நண்பனோ பணியாளனோ வீரன் தன் வயிற்றைக் கிழித்துக் கொண்டதும் தன் வாளினால் வீரனின் தலையை ஒரு சீவாகச் சீவித் துண்டாட வேண்டும். 

அப்படி ஒரு ஜப்பானிய எழுத்தாளர் செய்தார்.  ஆரம்பத்தில் அவர் ஜப்பானிய வலதுசாரி மாணவர்கள் பத்தாயிரம் பேரைக் கொண்டு ’ஜப்பானிய தேசியப் படை’ ஒன்றை உருவாக்க முனைந்தார்.  ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்ததால் சிறிய அளவிலான ஒரு தனிப்படையை அமைத்தார்.  ஜப்பான் பேரரசருக்கு ஆதரவான வலதுசாரி மாணவர்களைக் கொண்ட படை அது.  ஆரம்பத்தில் ஐம்பது பேரைக் கொண்ட அந்தப் படை பிறகு நூறு பேராக விரிந்தது.  அவர்கள் அனைவருக்கும் போர்க்கலையைப் பயிற்றுவித்தார் எழுத்தாளர்.

25 நவம்பர் 1970 அன்று எழுத்தாளரும் அவரது நான்கு ’தளபதி’களும் மத்திய தோக்யோவில் இருந்த ராணுவத் தலைமையகத்தைக் கைப்பற்ற முயன்றார்கள்.  அந்த முயற்சி தோல்வி அடைந்ததும் எழுத்தாளர் ஹராகிரி செய்து கொண்டார்.

அவர் யுகியோ மிஷிமா.  ஹராகிரி செய்து கொண்ட போது அவர் வயது 45. அதற்குள்ளாகவே அவர் 34 நாவல்களும், 70 நாடகங்களும், பன்னிரண்டு சிறுகதைத் தொகுதிகளும், நூறு கட்டுரைத் தொகுதிகளையும் எழுதியிருந்தார்.  நான் அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் நாடகத்தை எழுதுவதற்கு முன்பாக மிஷிமாவின் Madame de Sade என்ற நாடகத்தைப் படித்தேன்.  மார்க்கி தெ ஸாதின் மனைவி பற்றிய நாடகம் அது. 

மிஷிமா ஒரு பேரரசனை விட ஆடம்பரமாக வாழ்ந்தவர்.  அவர் வாழ்ந்த இல்லம் விலை மதிக்க முடியாத பழம் பொருட்களால் (antique) அமைந்த ஒரு baroque மாளிகை.  அவர் வைத்திருந்த வாள் ஒரு லட்சம் யென் மதிப்புள்ளது.  அவர் பெயர் மூன்று முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.  அவர் நாவல்கள் வெளிவந்தவுடன் மூன்று லட்சம் பிரதிகள் விற்பனை ஆயின.  ஜப்பான் மக்கள் தொகை பன்னிரண்டரை கோடிக்கு மூன்று லட்சம்.  இப்போதைய முராகாமியின் புத்தகங்கள் முதல் பிரதியே ஜப்பானில் ஒரு லட்சம் பிரதிகள் விற்கின்றன.  அடுத்தடுத்த பிரதிகளைச் சேர்த்தால் இருபது லட்சத்தைத் தாண்டும்.  இங்கே எட்டரை கோடித் தமிழ் மக்கள் என் புத்தகங்களை இருநூறிலிருந்து முந்நூறு பிரதிகள் வாங்குகிறார்கள். 

தொலைக்காட்சி நிலையத்துக்கு முன்கூட்டியே தகவல் சொல்லி அவர்களை அழைத்து, தன் இறுதி உரையையும் (ராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தால் இந்தத் திட்டம்), ஹராகிரியையும் ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்திருந்தார் மிஷிமா.  தன் எழுத்தும் தன் வாளும் ஒன்று என்றே எழுதிக் கொண்டிருந்தார்.  பழைய சாமுராய் கலாச்சாரத்தை மீட்டுருவாக்கம் செய்யும் கனவில் இருந்தார். 

ராணுவப் புரட்சி படுதோல்வியில் முடிந்தது.  அங்கேயிருந்த ஜப்பானிய ராணுவ வீரர்கள் மிஷிமாவைப் பார்த்து ஊளையிட்டுக் கேலி செய்தார்கள்.  மிஷிமா பேசியது எதுவுமே அவர்களுக்குப் புரியவில்லை. 

மிஷிமா தன் வாளால் வயிற்றைக் கிழித்து ஹராகிரி செய்தார்.  உடனடியாக உதவியாளன் அவர் தலையைத் துண்டாட வேண்டும்.  மூன்று முறை முயன்றான்.  மூன்று முறையும் தலை தனியாகத் துண்டாகவில்லை.  இந்தத் தலை துண்டிக்கும் காரியமே ஹராகிரியினால் ஏற்படும் வலியை உடனடி மரணம் கொண்டு நிறுத்துவதற்கான ஏற்பாடுதான்.  ஆனால் மிஷிமாவின் ஹராகிரியின் போது தலை துண்டிக்கும் காரியமே மூன்று முறை தோல்வியில் முடிந்து பிறகு இன்னொரு உதவியாளன்தான் அதைச் செய்து முடிக்க வேண்டியிருந்தது.

மிஷிமாவின் ஹராகிரி

நேற்று Paul Shrader இயக்கிய Mishima: A Life in Four Chapters என்ற படத்தைப் பார்த்து விட்டு உறங்கினேன்.  மிஷிமாவைப் போலவே நானும் ஒரு விளம்பரப் பிரியன் மற்றும் ஹெடோனிஸ்ட் என்பதால் கனவில் நான் ஹராகிரி செய்து கொள்கிறேன்.  அதற்கு முன் மிஷிமாவைப் போலவே நான் என்று சொன்னதற்கான விளக்கத்தைக் கொடுத்து விடுகிறேன்.  நான் எந்த பப்புக்குப் போனாலும் நீங்கள் ராக் பாடகரா, கிடாரிஸ்டா என்பது போன்ற கேள்விகளைத்தான் கேட்கிறார்கள்.

மிஷிமாவும் அவர் நண்பரும் ஒருமுறை ஒரு டாக்ஸியில் செல்கிறார்கள்.  மிஷிமா டாக்ஸி டிரைவரிடம் “என் தொழில் என்னவாக இருக்கும் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?” என்று கேட்கிறார்.  உடனடியாக டிரைவர் கொஞ்சமும் யோசிக்காமல், “இதில் என்ன சந்தேகம்? நீங்கள் ஒரு ராக் ஸ்டாராகத்தான் இருக்க வேண்டும்…” என்றாராம்.   

மிஷிமாவின் துண்டிக்கப்பட்ட தலை

இப்போது என் கனவுக்கு வருவோம்.  நான் ஹராகிரி செய்து கொண்டு விட்டேன்.  இப்போது என் தலையை சீவித் துண்டாட வேண்டும். அந்தக் காரியத்துக்கு நான் சீனியைத்தானே ஏற்பாடு செய்திருக்க வேண்டும்? ஆனால் இப்போதெல்லாம் சீனி யாருக்கும் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று சபதம் செய்து தொலைத்து விட்டதால் என் தலை துண்டிக்கும் காரியத்தை செல்வாவிடமும் செல்வா தவறினால் ஸ்ரீராமிடமும் கொடுத்திருந்தேன்.  நான் வாளை எடுத்து வயிற்றைக் கிழித்துக் கொள்கிறேன்.  நன்றாகவே செய்கிறேன்.  உடனே செல்வா தன் வாளை எடுத்து என் தலையைச் சீவுகிறார்.  ஆனால் வாளோ என் தோளில் பாய்ந்து விடுகிறது.  வயிறு போக இப்போது தோள் வலியிலும் துடிக்கிறேன்.  வயிறும் கிழிந்து தோளும் சிதைந்து விடுகிறது. மீண்டும் போடுகிறார் செல்வா.  ஆனால் இந்த முறை வாள் கழுத்தில் பட்டதே தவிர கழுத்தில் பத்து சதவிகிதம் கூட வாள் பாயவில்லை.  இப்போது கழுத்திலும் காயம்.  ஆக, வயிறு, தோள், கழுத்து எல்லா இடத்திலும் படுகாயம்.  அடுத்து ஸ்ரீராம் முயற்சி செய்கிறார்.  வாளை ஓங்கும் போதே மயக்கமடித்து விழுந்து விடுகிறார்.  அப்புறம்தான் சீனி அந்த வாளை வாங்கி பக்கவாட்டில் ஓங்குகிறார்.  அலறிக் கொண்டே எழுந்து விடுகிறேன். 

அச்சு அசலாக அந்த வலி அவ்வளவையும் என் மனம் வாங்கியிருந்தது.  கனவு அத்தனை நிஜம்.  கனவு தொடர்ந்திருந்தால் சீனி நிச்சயம் என் தலையைத் துண்டாடியிருப்பார்.  பொதுவாக எதையும் செவ்வனே செய்யக் கூடியவர். 

மிஷிமா ஹராகிரி செய்து கொண்டால் தாங்களும் செய்து கொள்வோம் என்று அவருடைய துணைத் தளபதிகள் நால்வரும் பிரதிக்ஞை செய்திருந்தனர்.  அவர்களில் ஒருவனுக்குக் காதலி இருந்ததால் அவனை மட்டும் ஹராகிரி செய்து கொள்ள வேண்டாம் என்று தடுத்திருந்தார் மிஷிமா.  ஆனால் அதையும் மீறி அவனும் ஹராகிரி செய்து கொண்டான். 

மிஷிமாவின் வாள்

இதை விடுங்கள்.  பால் ஷ்ரேடர் யார் தெரியுமா?  லாஸ்ட் டெம்டேஷன் ஆஃப் ஜீஸ்ஸ் க்றைஸ்ட், ரேஜிங் புல், டாக்ஸி டிரைவர் போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களை இயக்கியவர்.  படத்துக்கு இசை, Philip Glass.    

ஒரு ஜப்பானிய எழுத்தாளனைப் பற்றிய வாழ்க்கைச் சரிதத்தை ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் இயக்குகிறார்.  உலக சினிமாவின் முதல் இடத்தில் இருக்கும் இசையமைப்பாளர் இசை அமைக்கிறார்.  இன்னொரு செய்தி, அந்தப் படத்தை இன்றளவும் தடை செய்திருக்கிறது ஜப்பானிய அரசு. 

***

இப்படிப்பட்ட ஒரு தேசத்தையும் அதன் மக்களையும் தன்மானம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் மேற்கத்தியரால் புரிந்து கொள்ள முடியுமா? ஆனால் வான் கோ, Édouard Manet, Camille Pissarro, Paul Gauguin போன்ற ஃப்ரெஞ்ச் ஓவியர்களுக்கு ஜப்பானியக் கலாச்சாரம் ஒரு மாபெரும் மாய உலகமாகவும், கனவாகவும் இருந்தது.  ஜப்பானியப் பெண்களின் கிமோனோ உடை, ஜப்பானியர்களின் பிரத்தியேகமான பூ அலங்காரம் (இது பற்றியே தனியாக புத்தகங்கள் வந்துள்ளன), இந்திய தேவதாசிகளை ஒத்த கெய்ஷா போன்ற மாயாஜாலமெல்லாம் அந்த ஓவியர்களின் வண்ணங்களில் உயிர் கொண்டு எழுந்தன.

***

இப்போது என்ன ஜப்பானைப் பற்றி திடீரென்று?

வரும் இருபத்தேழாம் தேதி பத்து நாள் பயணமாக ஜப்பான் செல்கிறேன்.  இந்த ஜென்மத்தில் ஜப்பான் செல்ல மாட்டேன் என்றே நினைத்திருந்தேன்.  ஏனென்றால், உலகம் முழுவதிலும் இருந்து எனக்கு மின்னஞ்சல் வந்தாலும் ஜப்பானிலிருந்து இதுவரை எந்த வாசகரும் எழுதியதில்லை.  எனவே எனக்கு ஜப்பானில் யாரும் வாசகர் இல்லை என்றே நினைத்திருந்தேன்.  ஜப்பான்வாழ் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போலவே சாலமன் பாப்பையா போன்ற தமிழ் மொழித் தியாகிகளைத்தான் தெரியும் என்பதால் ஜப்பானியரிடம் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிச் சொல்வதற்கும் அறிமுகம் செய்வதற்கும் ஆட்கள் இல்லை.  இல்லாவிட்டால் இதற்குள் நான் ஏழெட்டு முறையாவது தோக்யோ பல்கலைக்கழகத்தில் ஜப்பானிய இலக்கியம் பற்றியும் ஜப்பானிய சினிமா பற்றியும் உரையாற்றியிருக்க வேண்டும்.  இங்கே நாம் தமிழில் மிஷிமாவிலிருந்து முராகாமி வரை மொழிபெயர்த்து வைத்திருக்கிறோம்.  ஆனால் ஜப்பானில் அருந்ததி ராய் தவிர வேறு யாரையும் தெரியாது. தமிழ் எழுத்தாளனைப் பற்றிப் பேசவே வேண்டாம்.  இது ஜப்பானியரின் தவறு அல்ல.  நம் எழுத்தாளர்கள் பற்றி ஜப்பானியரிடம் எடுத்துச் சொல்வதற்கு நம் மனிதர்களுக்கே முதலில் அவர்கள் தாய்மொழியின் எழுத்தாளர்களைத் தெரியாதே, என்ன செய்ய?

இதற்கு விதிவிலக்காக விரல் விட்டு எண்ணக் கூடிய மிகச் சில பேர் ஒரு அமைப்பு வைத்திருக்கிறார்கள்.  துளிக்கனவு இலக்கிய வட்டம் என்பது அதன் பெயர்.  அந்த அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள் ரா. செந்தில் குமார் மற்றும் கமலக்கண்ணன்.  கமலக்கண்ணனை இன்று நேரில் சவேரா ப்ரூ ரூமில் சந்தித்தேன். தன்மையான மனிதர்.  அளவாக, அமைதியாக, கத்தாமல் பேசினார்.  இப்போதெல்லாம் இந்தியர்களைச் சந்திக்கவே அச்சமாக இருக்கிறது.  நாலு தெருவுக்குக் கேட்கிறாற்போல் கத்துகிறார்கள்.  மட்டுமல்லாமல் எதிராளியைப் பேசவே விடாமல் தாமே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  கமலக்கண்ணன் அப்படிப்பட்ட நற்குணங்கள் இல்லாமல் இருந்தார்.  ரொம்பவும் பிடித்திருந்தது. 

துளிக்கனவு நண்பர்கள்தான் என்னை ஜப்பானுக்கு அழைத்திருக்கிறார்கள்.  வரும் இருபத்தேழாம் தேதி காலை பதினொன்றரை மணி அளவில் மலேஷியன் ஏர்லைன்ஸில் கிளம்புகிறேன். 

உண்மையில் இருபத்தேழாம் தேதி நான் கொழும்புக்கு விமானம் ஏறியிருக்க வேண்டும்.  கேகே (சிங்கள எழுத்தாளர்) அழைத்திருந்தார்.  இருபது நாள் பயணம்.  நல்லவேளை, டிக்கட் போடாமல் இருந்தேன்.  அங்கே நதீகா பண்டார என்று ஒரு நாடகக் கலைஞர் இருக்கிறார்.  ஆர்த்தோவின் பெண் வடிவம் என்று கருதப்படுபவர்.  இங்கே தமிழ்நாட்டில் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவுக்கு சிங்கள மொழியில் நாடகங்களை இயக்கி, நடித்துச் செயல்படும் போராளி.  அவரது நாடகம் இப்போது ஒத்திகையில் இருக்கிறது.  நான் செல்லும்போது அக்டோபர் முதல் வாரம் அரங்கேற்றலாம் என்று இருந்தார்கள்.  நாடகத்தின் பெயர்: ஹாஹாஹா உல்லாஸ விஷாத.  இது ஆர்த்தோவின் குரூர அரங்கக் கோட்பாட்டைப் பின்பற்றி எழுதப்பட்டது.  முழுக்க முழுக்க பெண்ணின் பாலியல் பிரச்சினைகளைப் பற்றியது.  சிங்களத்தில் உமாத்துப் பிரக்ஞா என்கிறார்கள்.  Transgressive wisdom, cunt wisdom, blood wisdom, whore wisdom என்று விளக்குகிறார் நதீகா.  இப்போது நான் ஜப்பான் செல்வதால் நாடகத்தின் அரங்கேற்றத்தை நவம்பர் முதல் வாரம் ஒத்தி வைத்திருக்கிறார்.  ஜப்பானிலிருந்து திரும்பியதும் கொழும்புக்கு டிக்கட் போட வேண்டும்.  அக்டோபர் இறுதியில் கிளம்புவேன்.

சரி, இப்போது ஜப்பான் விஷயம்.

நான் இருபத்தேழாம் தேதி கிளம்பி ஏழாம் தேதி தமிழ்நாடு திரும்புகிறேன்.  பத்து நாள்.  இன்னும் நான்கு நாள் பயணத்தை நீட்டிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.  அங்கே அத்தனை வேலை இருக்கிறது.  ஆனால் அவ்வளவையும் செந்தில்குமார் மற்றும் கமலக்கண்ணன் தோளில் சுமத்த முடியாது.  பணத்தை விட நேரம் முக்கியம்.

இப்போது என் வேண்டுகோள் என்னவென்றால், யார் யாரால் ஜப்பானில் எனக்கு நேரம் ஒதுக்க முடியும்?  பணம் ஒரு யென் வேண்டாம்.  என்னிடம் இருக்கிறது.  துளிக்கனவு நண்பர்களும் கவனித்துக் கொள்வார்கள்.  ஆனால் என்னால் தனியாகப் பயணம் செய்ய முடியாது.  தெரியாது, அவ்வளவுதான். எனக்காக நேரம் ஒதுக்க இயன்றவர்கள் எனக்கு எழுதுங்கள்: charu.nivedita.india@gmail.com