புத்தகத் திருவிழா


வணக்கம் சாரு
ஜப்பான் கட்டுரை வாசித்தேன். குருவி போல பறந்து கொண்டே இருக்கிறீர்கள். பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்.
நேற்று தருமபுரி புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன்.ஏதோ கைவிடப்பட்ட பேய் பங்களா போல் இருந்தது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கூட்டமே இல்லை. பதிப்பாளர்களிடம் பேசியபோது அவர்களும் விற்பனை மிகவும் குறைவாக இருப்பதாகவே சொன்னார்கள்.

மாலை 5 மணியளவில் ஒன்றிரண்டு பேர் தெரிந்தனர். பக்கத்தில் வெறிச்சோடியிருந்த அரங்கில் தனியாக ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். ஈரோடு,சேலம் புத்தகத் திருவிழாக்களை விட கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

சென்ற வருடம் வரை புத்தக திருவிழாவில் புனைவுகள் எதுவும் வாங்கியதில்லை. அபுனைவுகளே வாங்குவேன். நேற்று தி.ஜா.வின் அம்மா வந்தாளும் லா.ச.ரா.வின் அபிதாவும் வாங்கினேன். உங்களின் நூல்களைத் தேடிப் பார்த்தேன். ஒரேயொரு இடத்தில் லத்தீன் அமெரிக்க சினிமாவும் ரெண்டாம் ஆட்டமும் இருந்தன. சமகால எழுத்தாளர்களின் நூல்கள் குறைவாகவே தென்பட்டன.

காலச்சுவடு பதிப்பத்தில் ஒருவர் தி.ஜானகிராமன் குறித்து அரைமணிநேரம் பேசினார்.

மற்ற ஊர்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்து வருவதனால்தான் கூட்டம் அதிகமாக இருப்பது போல் தெரிகிறது என்று நினைக்கிறேன். வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க அரசு சில முன்னெடுப்புகளை எடுத்தாலும் பெரிதாக பயனளிப்பதில்லை என்று நினைக்க வேண்டியிருக்கிறது. பக்கத்தில் இருந்த திரையரங்கில் ஜெயிலர் படம் இன்னும் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

த.செந்தமிழ்