ஜப்பான்: கனவும் மாயமும் – 2

கீழைத் தேசம், கீழைத் தேசத்து மக்கள், கீழைத் தத்துவம் – சுருக்கமாகச் சொன்னால் ஓரியண்டலிசம் என்றால் என்ன?

ஓரியண்டலிசம் விஞ்ஞானத்துக்கும் நவீனத்துவத்துக்கும் எதிரானது.  தர்க்கத்துக்கு எதிரானது.  புதுமையையும் புரட்சியையும் ஒதுக்கி விட்டு, மரபையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது.  அதன் காரணமாகவே வளர்ச்சி அடையாதது.  அதன் காரணமாகவே பின் தங்கிய நிலையில் இருப்பது.  அதன் காரணமாகவே துக்கத்திலும் துயரத்திலும் வறுமையிலும் உழன்று கொண்டிருப்பது. 

அதிகாரத்துக்குப் பணிதல் என்பது மற்றொரு முக்கியமான ஆசியப் பண்பு.  அதிகாரம் என்பது அரசனாக இருக்கலாம், மதகுருவாகவும் இருக்கலாம்.  திபெத்தில் பக்தர்கள் ஐநூறு மைல் தூரத்துக்குக் கூட தங்களின் புனித ஸ்தலத்தை நோக்கிப் படுத்து வணங்கியபடியே செல்வது மிகச் சமீபத்தில் கூட வழக்கத்தில் இருந்தது.  நின்று, சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்கி, மீண்டும் எழுந்து, மீண்டும் சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்கி – இப்படியே ஐநூறு மைல் தூரத்தைக் கடப்பார்கள் பக்தர்கள். 

இப்படிப்பட்ட கீழைத் தேய நாடுகளிலேயே ஜப்பான் ஒரு உச்சக்கட்ட அதிசய இடத்தில் இருந்தது.  ஜப்பானியப் பெண்கள் தங்கள் பற்களைக் கறுப்பு நிறமாக ஆக்கிக் கொள்வது, ஜப்பானியர்களின் ஓலைத் தொப்பி என்று ஆயிரக்கணக்கான ஜப்பானிய குணாம்சங்களை நாம் விவரித்துக் கொண்டே போகலாம்.

ஜப்பானிய நாவலாசிரியர் கென்ஸாபுரோ ஓஏ (Kenzaburo Oe – 1935 – 2023) ஜப்பானியர் பற்றிய மேற்கத்தியரின் இரண்டு கட்டுக்கதைகள் பற்றிக் குறிப்பிடுகிறார்.  பழைய ஜப்பானின் சாமுராய் மற்றும் ஜென் தோட்டங்கள்.  அதுவே இப்போதைய நவீன ஜப்பானின் மின்னணு சாதனங்கள் மற்றும் ஜப்பானியரின் கடின உழைப்பு என்று மாறி விட்டது.  இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வெற்றிடத்தில்தான் ஜப்பானியர் வாழ்கிறார்கள் என்கிறார் ஓஏ.

1994இல் நோபல் விருது பெற்றார் கென்ஸாபுரோ ஓஏ.  அப்போது அவர் ஒரு நேர்காணலில் சொன்னார்:  

ரால்ஃப் எலிஸனின் இன்விஸிபிள் மேன் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்.  அந்த இன்விஸிபிள் மேன் ஜப்பானியராகிய எங்களுக்கு மிகவும் பொருந்தும்.  ஐரோப்பாவில் நீங்கள் ஜப்பானின் தொழில் நுட்பத்தைக் காண்கிறீர்கள்.  ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியைக் காண்கிறீர்கள்.  ஜப்பானியரின் தேநீர் விருந்து பற்றிக் கேள்விப்படுகிறீர்கள்.  ஆனால் இது எல்லாமே ஜப்பானியரின் முகமூடி.   

இன்றும் கூட (1994) – ஜப்பான் நவீனமயமாகி நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியும் கூட – ஐரோப்பியருக்கும் அமெரிக்கர்களுக்கும் நாங்கள் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறோம்.  ஹோண்டா வாகனங்களைத் தயாரிக்கும் மனிதர்களைப் புரிந்து கொள்வதற்கான முயற்சியே மேற்கில் இல்லை.  ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.  அமெரிக்காவும் ஜப்பானும் மிகுந்த நல்லுறவில்தான் இருக்கின்றன.  இருந்தாலும் ஜப்பான் அவர்களுக்குப் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது.  உண்மைதான், ஜப்பானியர் தனிமை விரும்பிகள்.  ஜப்பானின் புதிர்த்தன்மையை உருவாக்கியதில் ஜப்பானியருக்கே பெரும் பங்கு உண்டு.  ஆனாலும் ஜப்பானைப் பற்றிய மேற்கத்தியரின் குழப்பமான புரிதலை இதெல்லாம் நியாயப்படுத்தி விட முடியாது.”

ஜப்பானின் புதிர்த்தன்மையை விலக்குவதற்குப் பெரும் பங்கு ஆற்றியது ஜப்பானில் உருவாக்கப்பட்ட உலகத் தரமான சினிமா. அதில் ஒரு மகத்தான படம் ஜப்பானிய சினிமா மேதைகளில் ஒருவரான மஸாகி கோபயாஷியின் (1916 – 1996) ஹராகிரி (1962) என்ற படம்.

1620 – 1630 காலகட்டத்தில் நடக்கிறது கதை.  ஹன்ஷிரோ த்சுகுமோ என்ற சாமுராய் ஒரு பிரபுவின் இல்லத்துக்குப் போய் தான் ஹராகிரி செய்து கொண்டு சாக விரும்புவதாகச் சொல்கிறான். காரணம், வறுமை.  அப்போது போர் எதுவும் நடக்காமல் இருந்ததால் சாமுராய்களின் நிலை மிகவும் மோசமாகியிருந்தது. சில சாமுராய்கள் சோற்றுக்கு வழியில்லாமல் ஹராகிரி செய்து கொண்டு சாகிறார்கள்.  ஆனால் பல சாமுராய்கள் பிரபுக்களின் இல்லங்களுக்குச் சென்று “உங்கள் இல்லத்தின் வாசலில் ஹராகிரி செய்து கொண்டு சாக விரும்புகிறோம்” என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டார்கள்.  உண்மையில் அவர்கள் ஹராகிரி செய்து கொள்ளத் தயாராக இல்லாதவர்கள்.  ஆனாலும் தங்கள் இல்லத்தில் ஒரு சாமுராய் ஹராகிரி செய்து கொண்டு சாவதைப் பார்க்க விரும்பாத பல பிரபுக்கள் கொஞ்சம் காசைக் கொடுத்து அந்த சாமுராய்களை அனுப்பி விடுகிறார்கள்.  கொஞ்சம் இரக்க சுபாவம் உள்ள பிரபுக்கள் அவர்களைத் தங்கள் பணியாளர்களாக அமர்த்திக் கொள்வதும் நடக்கும்.  இதையெல்லாம் பார்த்த ஒரு பிரபு (நம்முடைய யுகியோ மிஷிமாவைப் போன்றவர் போல) எப்பேர்ப்பட்ட சாமுராய் இனம் இப்படிப் பிச்சைக்கார்ர்களாகப் போய் விட்டதே என்ற வருத்தத்தில் இருப்பார். 

அவரிடம்தான் ஹராகிரி செய்து செத்துப் போவதற்காக வந்து சேர்கிறான் ஹன்ஷிரோ.   

அப்போது பிரபு ஹன்ஷிரோவிடம் கொஞ்ச நாட்கள் முன்பு அவருடைய இல்லத்தில் நடந்த ஒரு ஹராகிரி பற்றிய கதையைச் சொல்கிறார். 

ஒரு சாமுராய் அவர் இல்லத்துக்கு வந்து ஹராகிரி செய்து கொள்ளப் போகிறேன்; அதற்கு அனுமதி தாருங்கள் என்று சொல்கிறான்.  ஆனால் அவன் காசு வாங்கிக் கொண்டோ அல்லது வீட்டு வேலைக்காரனாகவோ ஆவதற்காக வந்த சாமுராய்.  ஹராகிரி செய்து கொள்வது அவன் நோக்கமே அல்ல.  பிரபுவோ இம்மாதிரி சாமுராய்களைத்தான் வேட்டை நாயைப் போல் தேடிக் கொண்டிருக்கிறார் – குரல்வளையைக் கடித்துக் கொல்வதற்கு.  இவர்கள்தானே சாமுராய் இனத்தின் கௌரவத்தையே களங்கப்படுத்துபவர்கள்? 

பிரபுவிடம் வசமாக மாட்டிக் கொள்கிறான் ஹன்ஷிரோ. 

“வா சாமுராய், உன்னைப் போன்ற மாவீரனைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்.  உன்னுடைய ஹராகிரியினால் சாமுராய் இனமே பெருமை கொள்ளப் போகிறது.  இன்றைய தினம் சாமுராய் இனத்துக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை உன் குருதியினால் சுத்திகரிக்கப் போகும் உன்னை நினைத்து நான் பெருமை அடைகிறேன்” என்று சொல்லி விட்டுப் பணியாட்களை அழைத்து ஹராகிரி சடங்குக்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறார். 

அதற்குள் ஹன்ஷிரோ பீதியிலேயே இறந்து விடுவான் போலிருந்தது.  அவன் வந்ததோ கொஞ்சம் காசு வாங்குவதற்காக.  வேலை கிடைத்தால் பெரும் அதிர்ஷ்டம்.  ஆனால் இங்கு என்னவென்றால் ஹராகிரி செய்து கொள் என்று மிரட்டுகிறார்களே? 

ஹராகிரி சடங்குக்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டன.  சாமுராய் ஹராகிரி செய்து முடித்தவுடன் அவன் தலையைச் சீவி எடுப்பதற்காக ஹன்ஷிரோவின் பக்கவாட்டில் பிரபுவின் தலைமைச் சேவகன் நீண்ட வாளுடன் நிற்கிறான்.  அப்போது அந்தச் சேவகன் ஹன்ஷிரோவிடம் சொல்கிறான்:

”இப்போதெல்லாம் ஹராகிரி என்ற அற்புதம் வெறும் கேலிக் கூத்தாகி விட்டது.  யாரும் வயிற்றைக் கிழிப்பதே இல்லை.  வாளைக் கையில் எடுத்து வயிற்றில் வைப்பதற்குள்ளாகவே அருகில் இருக்கும் உதவியாளன் சாமுராயின் தலையைச் சீவி விடுகிறான்.  ஆக, குடல் சரியாமலேயே எல்லா ஹராகிரிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.  சாமுராய் இனத்துக்கே அவமானம்.  ஆகவே நீ உன் வாளை எடுத்து இடமிருந்து வலமாக வயிற்றை முழுதுமாகக் கிழித்து குடல் அத்தனையும் வெளியே வந்து விழுந்தால்தான் உன் தலையை வெட்டுவேன்.”

“எனக்கு இரண்டே தினங்கள் கொடுங்கள்.  ஒரு வேலையை முடித்து விட்டு வந்து விடுகிறேன்.  சாமுராய்க்கு வார்த்தைதான் உயிர்.  நான் வார்த்தை தவற மாட்டேன்” என்கிறான் ஹன்ஷிரோ. 

பிரபு ஹன்ஷிரோவின் வேண்டுகோளைப் புறக்கணிக்கிறார். 

தப்பி ஓட முயலும் ஹன்ஷிரோவை வாள் வீர்ர்கள் சூழ்கிறார்கள். 

“ஒரு சாமுராயைப் போல் ஹராகிரி செய்து கௌரவமாகச் சாக விரும்புகிறாயா?  அல்லது, ஒரு மிருகத்தை வெட்டுவது போல உன்னைக் கண்டதுண்டமாக வெட்டிப் போடட்டுமா?” என்கிறான் ஒரு வீரன். 

அதன் பிறகு ஹன்ஷிரோவின் வாள் பரிசோதிக்கப்படுகிறது.  பார்த்தால் அது இரும்பு வாள் அல்ல.  மூங்கிலால் செய்யப்பட்ட வாள்.  மூங்கில் குச்சியால் எப்படி வயிறு முழுவதையும் கிழித்து குடலைச் சரிப்பது?

வேறு ஒரு வாள் தாருங்கள் என்று கெஞ்சுகிறான் ஹன்ஷிரோ.

அப்போது பிரபு சொல்கிறார்.  ”வாள்தான் ஒரு சாமுராயின் ஆன்மா.  (இதே வார்த்தைகளை யுகியோ மிஷிமாவும் சொல்கிறார்.  வாளும் எழுத்தும்தான் என் ஆன்மா என்பது மிஷிமாவின் வார்த்தை.)  அப்படியிருக்கும்போது உன் ஹராகிரி உன்னுடைய வாளினால் மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும்.  அந்த வாள் எதனால் செய்யப்பட்டதாக இருந்தாலும் சரி.”

அப்போது மூங்கில் வாளினால் ஹன்ஷிரோ ஹராகிரி செய்து கொள்ளும் இடம் உலக சினிமாவின் உச்சங்களில் ஒன்று. 

என் தலையை வெட்டு, வெட்டு என்று உதவியாளனிடம் கெஞ்சுவான் ஹன்ஷிரோ.

“இல்லை, உன் குடல் முழுதுமாகச் சரிவதைப் பார்த்தால்தான் தலையை வெட்டுவேன்” என மறுக்கிறான் வாளை ஓங்கியபடி நின்று கொண்டிருக்கும் பணியாளன்.

ஹன்ஷிரோவின் வாள் ஏன் மூங்கில் வாளாக இருந்தது?  ஏன் அவன் இரண்டு தினங்கள் அனுமதி கேட்டான்?

நாளை சொல்கிறேன்…