என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. நான் யாரையாவது எழுத்தாளரை சந்திக்கச் சென்றால், அவர்களின் ஒரே ஒரு புத்தகத்தையாவது படித்து விட்டுச் செல்வேன். என்னை சந்திக்கும் பலரும் என்னுடைய ஒரு புத்தகத்தைக் கூட படித்ததில்லை என்று சொல்வதால் அதற்கு மாறுதலாக இருக்க வேண்டும் என்று இந்தப் பழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இப்போது நான் ஜப்பான் செல்வதால் என்னை அங்கே வரவழைக்கும் துளிக்கனவு இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த ரா. செந்தில்குமாரின் சிறுகதைத் தொகுதிகள் இரண்டையும் படித்து விடுவோம் என்று முடிவு செய்தேன்.
படித்த பிறகு இத்தொகுதிகள் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இப்போது ஜப்பான் செல்வதால் செந்தில்குமார் பற்றி சிலாகித்து எழுதுகிறேன் என்று ஏசுவார்களே என்ற யோசனையும் ஏற்பட்டது. ஒரு இரண்டு மாதம் கழித்து எழுதலாமா என்று கேட்டுக் கொண்டேன். அப்புறம்தான் தோன்றியது, நான் எப்போது, எதற்காகக் கவலைப்பட்டிருக்கிறேன்? எப்போதுதான், யார்தான் என்னை ஏசாமல் இருக்கிறார்கள்? என் நேர்மையை நான் யாருக்கு நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டும்? அதுவும், எழுபது வயதில்? ஒருவர் என்னைத் தன் தேசத்துக்கு அழைத்து விடுவதாலேயே அவரைப் பாராட்டி எழுதி விடும் அளவுக்கு நான் நேர்மையற்ற ஆளா என்ன?
என் இலக்கிய உலகில் சலுகை என்பதே கிடையாது என்பதை என் எழுத்தை அறிந்தவர்கள் அறிவார்கள். நீங்கள் எனக்குக் கோடி ரூபாய் கொடுத்திருந்தாலும் உங்கள் எழுத்தை, உங்கள் சினிமாவை நான் சிலாகித்து எழுத மாட்டேன். பிடிக்கவில்லை என்றால் எழுதாமல் கடந்து விடுவேன். அது மட்டும்தான் நான் நட்புக்காகச் செய்து கொள்ளும் சமரசம். பிடித்தால் எழுதுவேன். மட்டுமல்லாமல் இப்போதெல்லாம் எனக்குப் பிடிக்காதவை பற்றி எழுதுவதில்லை. சிலாகிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் எத்தனையோ இருக்கும்போது பிடிக்காதவை பற்றி எழுதி ஏன் ஒருவரைப் புண்படுத்த வேண்டும்?
ஆக, ரா. செந்தில்குமாரின் பதிமூன்று மோதிரங்கள் என்ற சிறுகதைத் தொகுதி பற்றி இங்கே என் பதிவுகள் சில. செந்தில்குமாரின் எழுத்தில் நான் முதலில் கவனித்தது, அதில் எந்த விதமான தயக்கமும் கூச்சமும் இல்லை என்பது. மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளிலிருந்து எழுதுபவர்களிடம் இந்தக் கூச்சத்தைப் பார்த்திருக்கிறேன். ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம். பொதுவாகச் சொல்கிறேன். இந்த அவதானம் ஏற்பட்டதும் செந்தில்குமார் எந்த ஊர் என்று வாழ்க்கைக் குறிப்பில் பார்த்தால் மன்னார்குடி என்று இருந்தது. என் சந்தேகம் தீர்ந்தது. தமிழ்நாட்டில் தஞ்சை மண்ணுக்கு மட்டுமே வார்த்தைகளிலும், சம்பவங்களைச் சொல்வதிலும் தயக்கமோ கூச்சமோ இருக்காது.
அது போக, செந்தில்குமார் விவரிக்கும் பல இடங்கள், பல ஊர்கள் என் வாழ்க்கையோடு பெரிதும் தொடர்புடையவையாக இருந்தன. உதாரணமாக, பாங்காக் சுக்கும்வித், மைலாப்பூர் சித்திரைக் குளம், மைலாப்பூர் அப்புமுதலித் தெரு. அப்புமுதலித் தெருவில்தான் பத்து ஆண்டுகள் ஒரு தனி வீட்டில் வசித்தேன். இப்படிப் பட்டியல் போட ஆரம்பித்தால் நூற்றுக்கணக்கான விஷயங்கள் வரும். பெரும்பாலான இடங்கள், பெயர்கள், மதுவகைகள் எல்லாம் என் வாழ்வோடு தொடர்புடையவை. புத்தகத்தின் முதல் பத்தியைப் பார்த்ததுமே “யார் இது, நம் ஆள் போல் தெரிகிறதே?” என்றுதான் நினைத்தேன்.
ஆனால் அநேகமாக எல்லா கதைகளின் முடிவுகளிலுமே நம் ஆள் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்து விடுகிறார். அந்த மாற்றுப் பாதை பிறழ்வுண்ட கதை சொல்ல்லுக்கு நேர் எதிரான மரபு சார்ந்த முடிவுகளாக இருக்கின்றன. மற்ற கதைகளில் அப்படி இருந்தால் பிரச்சினை இல்லை. செந்தில்குமார் ஒரு பிறழ்வு வாழ்வைச் சொல்ல ஆரம்பித்து, வண்ணதாசனாக மாறி முடித்து விடுகிறார்.
உதாரணமாக சில கதைகளைப் பார்ப்போம். உறுதுயர் என்ற கதையில் முனியாண்டி விலாஸ் ஓட்டலில் ஒரு வயதான தந்தையும் அவர் மகளும் அவர்கள் எதிரே சில இளைஞர்களும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதியவரும் இளைஞர்களும் மதுவும் அருந்துகிறார்கள். குடி போதையில் முதியவர் அந்த இளைஞர்களிடம் தன் குடும்பம் சீரழிந்த கதையைச் சொல்கிறார். வழக்கமான கதைதான். சொத்தை விற்றுப் பையன்களைப் படிக்க வைத்தார். பையன்கள் காப்பாற்றவில்லை. மகள் மட்டும் மேல்படிப்பு படிக்காவிட்டாலும் சிங்கப்பூர் சென்று தந்தையை கவனித்துக் கொள்கிறாள். இப்படியெல்லாம் கண்டவர்களிடமும் தங்கள் வீட்டுக் கதையைத் தன் தந்தை சொல்வது மகளுக்குப் பிடிக்கவில்லை. தந்தையைக் கண்டிக்கிறாள். முதியவருக்கு போதை அதிகமாகிறது. மகள் பேச்சைக் கேட்காமல் மேலும் பேசுகிறார். மகளின் கண்டிப்பு அதிகமாகிறது. அப்போது அந்தப் பெரியவர் ” “நீ கேலாங்க்லே என்ன தொழில் செய்றேன்னு எனக்குத் தெரியாதா? நாயே, இப்படிக் குடும்ப மானத்தைக் கப்பலேத்திட்டியேடி அவிசாரி முண்டை… இதெல்லாம் ஒரு
பொழைப்பா?” என்று பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினார்.
இந்த முடிவில் எனக்கு தமிழ் சினிமாவின் கே. பாலச்சந்தரும், சிவாஜி கணேசனும், எஸ்.வி. சுப்பையா, நடிகை பிரமிளா, கமல்ஹாசன் போன்ற பலரும் ஞாபகம் வந்து விட்டார்கள். ஒரு நல்ல கதையில் இப்படிப்பட்ட துர்நினைவுகள் வரக் கூடாது, இல்லையா?
அம்மன் சிற்பம் என்ற கதையிலும் அதன் முடிவு இப்படித்தான் இருக்கிறது. ஒரு புரோக்கர். பல தில்லுமுல்லுகள் செய்து பணம் சம்பாதிக்கிறான். அப்படி ஒரு ஸ்தபதியிடமிருந்து ஒரு பெரிய வீட்டை அடிமாட்டு விலைக்கு வாங்கி விடுகிறான். அந்த வீட்டில் ஒரு அம்மன் சிற்பம் இருக்கிறது. அந்த அம்மன் ஸ்தபதியின் மூன்றாவது மகளாக புரோக்கரின் கனவில் வருகிறாள். மிரண்டு போன புரோக்கர் அந்த வீட்டுப் பக்கம் வருகிறான். ஸ்தபதியிடம் பேச்சுக் கொடுக்கிறான். ஸ்தபதிக்கு மூன்றாவது மகளே இல்லை என்று தெரிந்து அதிர்ந்து போகிறான். ஏனென்றால், அவன் முந்தின நாள் ஸ்தபதியிடம் பேசிக் கொண்டிருந்த போது அதே சிறுமி ஸ்தபதி வீட்டிலிருந்து வெளியே செல்வதை புரோக்கர் பார்த்திருக்கிறான். படிக்கும்போதே நம்மை மயிர்க்கூச்செரியச் செய்யும் கதைதான் என்றாலும் இப்படி எல்லா கதைகளிலுமே அம்மன் மாதிரி ஏதோ ஒரு மரபு சார்ந்த விஷயம் வந்துதான் கதையை முடித்து வைக்கிறது. உறுதுயரில் pathos (பரிதாபம், அவலம்) வந்து கதையை முடித்து வைத்தது. இந்தக் கதையில் அம்மன்.
இன்னொரு கதை சர்வம் சௌந்தர்யம். இதில் வரும் கௌதம் என்ற இளைஞன் என்னுடைய ஆட்டோஃபிக்ஷன் புனைவுகளில் வரும் பெருமாள்தான். அமெரிக்காவில் வசிக்கும் அவன் ஒரு கட்டத்தில் தன் செக்ரட்டரியிடம் பாலியல் உறவு கொண்டதாக சிக்கி, நீதிமன்றத்துக்கு வெளியே நடக்கும் சமரசத்தில் தன் சொத்து அனைத்தையும் இழந்து தமிழ்நாடு திரும்புகிறான். அவன் தன் நண்பனிடம் (கதைசொல்லி) சொல்கிறான்:
ஒரு டைம்லே எனக்கு ஆறு பெண்களோட தொடர்பு இருந்துச்சுடா. இத எப்புடி நான் சொன்னாலும் சரியா சொல்ல முடியாதுன்னுதான் நெனைக்குறேன். நான் திட்டம்போட்டு எதையும் செய்யலை. எந்த பொண்ணையும் என்னால ரெசிஸ்ட் செய்யமுடியலை. என்னை மீறி, நான் அவங்ககிட்டே விழுந்துறேன். காலேஜ் டேஸ்லேருந்து, இதுதான் நடக்குது. என்னை இதெல்லாம் கீழ இழுக்குதுன்னு தெரியுது. குடும்பத்தை, குழந்தைகளை லூஸ் பண்ணிட்டேன். இப்படி ஒரு உமனைசரை அப்பான்னு சொல்லிக்க, இனிமே நிவி விரும்பபோறதில்லை. ஆனா, இப்போ இதோ, இங்கே உட்கார்ந்து இருக்குற அந்த பொண்ணோட டிரஸ்ஸிங் சென்ஸ் அவ்வளோ நல்லா இருக்கு. அவளோட தெத்துப் பல் சிரிப்பு மனசை இழுக்குது. இதையெல்லாம் கொண்டாடத் தோணுது. மனுசனுக்கு இதெல்லாம் இல்லாம வேற என்னதான் இருக்கு இந்த உலகத்துலே?
இப்படியில்லாம, வேறு எப்படியும் என்னால இருக்க முடியும்ன்னு தோணலைடா” என்றான் கெளதம். கண்கள் கலங்கியிருந்தன. கைகள்
நடுங்கின.
கௌதமும் நண்பனும் ஒரு பெண் சித்தரைக் காணச் செல்கிறார்கள். சித்தருக்கு கௌதமை நேரில் பார்ப்பதற்கு முன்னாலேயே அவன் பிரச்சினை தெரிந்து விடுகிறது. சித்தர் தன் பணியாளனிடம் “அந்த வல்லார ஓழியை உள்ள வரச் சொல்லு” என்று கத்துகிறாள். இவன் உள்ளே போனதும் இப்படி நடக்கிறது:
”அந்தம்மா கண்களை மூடி ஒருபக்கமாக சிரித்தார். திடீரென்று கண்களை திறந்து கெளதமை உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையில் கெளதம்
உறைந்திருந்தான். சட்டென்று இருகைகளாலும் புடவையை தூக்கி, தன்னுடைய யோனியைக் காட்டினாள். கெளதம் கண்களில் கண்ணீர் வழிய, அம்மா, அம்மா என அரற்றியபடி அந்தம்மாவின் கால்களில் விழுந்திருந்தான். “எந்திரிடா, போ… போ… போய் பொழப்பைப் பாரு” என்றார் அம்மா.”
இந்தக் கதையின் இந்த முடிவில் திருப்தியுறாத நான் இந்தக் கதையை எழுதியிருந்தால் எப்படி முடித்திருப்பேன் என்று யோசித்தேன்.
கதையில் கதைசொல்லியின் மனைவி கௌதமைக் கடுமையாக வெறுக்கிறாள். செக்ரடரி மீது கை வைத்த கயவன் என்றும் இன்னும் பலவாறாகவும் திட்டுகிறாள். என் முடிவின்படி, கதைசொல்லியின் மனைவியும் கௌதமும் கதைசொல்லிக்குத் தெரியாமல் ஓடி விடுகிறார்கள். ஒரு இரண்டு ஆண்டுகள் சென்று அந்தப் பெண் கதைசொல்லியிடமே திரும்பி வந்து, “கௌதம் என்னை ஏமாற்றி விட்டான், உன் அருமை தெரியாமல் ஓடி விட்டேன், எனக்கு மீண்டும் வாழ்வு கொடு” என்று அழுகிறாள். பொதுவாகக் கதைசொல்லி மாதிரி ஆட்கள் கேணப்பயல்களாகத்தான் இருப்பார்கள் என்பதால் அவனும் அவளைச் சேர்த்துக் கொள்கிறான்.
கடைசிப் பத்தியில் கௌதமும் கதைசொல்லியும் ஒரு பாரில் அம்ருத் சிங்கிள் மால்ட் விஸ்கி அருந்துகிறார்கள்.
***
ரா. செந்தில்குமாரிடம் இன்னும் சில விஷயங்கள் குறிப்பிடத் தகுந்ததாக இருந்தன. இப்போதைய பல இளைஞர்களைப் போல் கதையில் முறுக்குப் பிழியாமல் தெளிவாகச் சொல்கிறார். இந்த முறுக்கு சமாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது ஜே.ஜே. சில குறிப்புகள். இப்போது அது ஒரு பாணியாகவே மாறி பலரும் அப்படி எழுதுகிறார்கள். அதில் அவர்களுக்கு லாபம் என்னவென்றால், ஒரு படு சாதாரணமான கதைக்கு முறுக்குப் பிழிவதாலேயே இலக்கிய அந்தஸ்து கிடைத்து விடுகிறது. இம்மாதிரி போலித்தனம் ரா. செந்தில்குமாரிடம் அறவே இல்லை.
இன்னொரு விஷயம், ஒரு தேர்ந்த கதாசிரியரைப் போல் அனாயாசமாகக் கதை சொல்கிறார்.
அடுத்ததாக, எல்லோரும் ரா என்ற முதல் எழுத்துக்கு இ என்ற எழுத்தை வேறு போட்டு முட்டுக் கொடுக்கிறார்கள். ஆபாசமாக இருக்கிறது. ராமசாமி என்றால் ராமசாமிதான். இராமசாமி என்று கேட்டாலே ரசக் குறைவாக உள்ளது. அந்த வகையில் ரா. செந்தில்குமாரின் இலக்கண மீறலை வரவேற்கிறேன்.
இறுதியாக, தோக்கியோ சென்றதும் Kabukicho செல்கிறேனோ இல்லையோ, முதல் வேலையாக ரா. செந்தில்குமாரை வண்ணதாசன் தோட்டத்திலிருந்து என் பள்ளிக்கு இழுப்பதற்கான தந்திரோபாயங்கள் அனைத்தையும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
பதிமூன்று சிறுகதைகள், விலை ரூ.170
M/s. Yaavarum Publishers
24, Shop no – B, S.G.P Naidu Complex,
Dhandeeswaram Bus Stop
Opp: Bharathiar Park
Velachery Main Road
Velachery, Chennai – 600 042
90424 61472 / 98416 43380
editor@yaavarum.com
Url : www.yaavarum.com; www.be4books.com