ஷிபுயா கிராஸிங்: ரா. செந்தில்குமார்

1

அது மட்டும் தயைகூர்ந்து வேண்டாம் என்று திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்தக் காட்சி விரிந்தது. அகலமான ஷிபுயா கிராஸிங். ஷிபுயா ரயில்நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் எதிரில் குறுக்கும் நெடுக்குமாக ஐந்து மிகப்பெரிய நடைபாதைகள். எதிரில் மிகப்பெரிய திரைகளில் கார்ட்டூன் ஓடிக்கொண்டிருந்தது. திரையின் ஓரத்தில் 7.30 என்று கடிகாரம் மணி காட்டியது. பச்சை விளக்கு எரிந்ததும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும், கறுப்பு கோட்சூட், வெள்ளை சட்டை அணிந்து தோளில் தொங்கும் அலுவலகப் பையுடன் வேகவேகமாக நடந்து செல்லும் அந்தக் காட்சி படர்ந்தவுடன் தொப்பலாக வியர்வையில் நனைந்து போனான் ரிக்கு. வாய்  உலர்ந்திருந்தது. இதயத்துடிப்பு அதிகமானது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் திடீரென்று ரிக்கு நின்று கொண்டிருந்த இடம் நோக்கித் திரும்பினார்கள்.

“லொடக், லொடக்” என்று சத்தம் வந்தது. எங்கிருந்து சத்தம் வருகிறது என்று யோசித்தான் ரிக்கு. திரும்பவும் அதே சத்தம். இந்த முறை பலமாக வந்ததும் சத்தத்தில் உலுக்கப்பட்டு இந்த சத்தம் இதுவரை கண்ட கனவிலிருந்து வரவில்லையென்பதை உணர்ந்து எழுந்து அமர்ந்தான் ரிக்கு.

எப்போதும் போல் “ஷிபுயா கிராஸிங்” கனவுதான் என்று ஒரு நிம்மதி பரவியது. திரும்பவும் லொடக் லொடக் என்று கதவு உலுக்கப்படும் சத்தம். ஒருபக்கம் தன்னைக் கொடுங்கனவிலிருந்து மீட்ட சத்தம் என்று அதை மிக நெருக்கமாக உணர்ந்தான். திரும்பவும் அதே சத்தம் கேட்டபோது எரிச்சலுற்றான்.  மூன்றாவது நாளாக இதே சத்தம். நிச்சயம் மணி காலை ஏழரை ஆகி இருக்கும்.

மண்டையில் ஒலித்தது அந்த சத்தம். மெதுவாக எழுந்து நேரெதிரே இருந்த திரைச்சீலையை நோக்கினான். ஒருபக்கமாக அதை ஒதுக்கி வெளியே பார்த்தான். கண்கள் கூசின. அதை மீறி எழுந்த ஒலி மண்டைக்குள் ஒலித்தது. சூரிய ஒளிக்குக் கண்கள் பழகியபின் காட்சி தெரிந்தது. எதிர்வீட்டின் வாசலில் அந்தப் பெண் கதவை உலுக்கிக்கொண்டிருந்தாள். கதவைப் பூட்டிவிட்டு சத்தம் எழும்பும்படி உலுக்கி பூட்டியிருக்கிறதா என்று பார்த்தாள். பிறகு தோளில் தொங்கும் பையில் சாவியை பத்திரப்படுத்தினாள். படிகளில் இறங்கி சைக்கிள் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு வந்தாள். மிதிவண்டியின் ஸ்டாண்டை தள்ளி சைக்கிளை நகர்த்தினாள். பிறகு திரும்பவும் ஏதோ மறந்தவள் போல் சைக்கிளை நடு பாதையில் நிறுத்திவிட்டு மேலே ஏறி பையிலிருந்து சாவியை எடுத்து பூட்டிய வீட்டை மறுபடியும் பூட்டினாள். அதே போல் உலுக்கி மூடியிருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கினாள்.

ரிக்கு நடந்துவந்து மெத்தையில் அமர்ந்தான். மூன்றாவது நாளாக இது நடக்கிறது. இனி குறைந்தது பத்து நிமிடம் இதேபோல் பூட்டுவதும் கதவை உலுக்கிச் சரிபார்ப்பதும் நடக்கும். ரிக்கு சோர்வாக உணர்ந்தான். எந்த நேரத்தில் விழிக்கக் கூடாதோ, அந்த நேரத்தில் மூன்று நாட்களாக அந்தப் பெண் எழுப்பியிருந்தாள். முன்பெல்லாம் மதியம் பன்னிரெண்டு மணிக்குக் குறைந்து ரிக்கு எழுவதில்லை. விழிப்பு வந்தவுடன் படுக்கையில் படுத்தபடி அறைக்கு வெளியே கேட்கும் பாட்டியின் காலடியோசையைக் கூர்ந்து கவனிப்பான். அவள் காலில் செருப்புடன் நடக்கும் ஓசை கேட்ட பின்பே மனம் அமைதியடையும். ஓரிரு நிமிடங்கள் அந்த ஓசை வரத் தாமதித்தால் என்னவானது என்று மனம் பரபரப்படையும். ஒருவேளை அவள் இறந்திருந்தால் என்ன செய்வது? என்ற கேள்வி எழும். சில நிமிடத்தில் சமையலறையில் அவள் தண்ணீர் திறக்கும் ஒலியெழும். உடனே மீண்டும் அதேபோல் ஒருநாள் என்கிற உணர்வு ஒரே நேரத்தில் மகிழ்ச்சியையும் அலுப்பையும் கொடுக்கும்.

இன்று அறைக்கு வெளியே பாட்டியின் ஓசை இல்லை.

தாளில் செய்யப்பட்ட அந்தக் கதவை ஒருபக்கமாக மெதுவாகத் தள்ளி வெளியே பார்த்தான். பாட்டி இல்லை. குப்பை வைக்க வெளியே சென்றிருப்பாள். வெளியே நடந்து கழிப்பறைக்குச் சென்று வந்தான். திரும்ப வந்தபோது அறையின் வாயிலில் கடிதம் வைக்கப்பட்ட வெள்ளை உறையைப் பார்த்தான். இதோடு ஒரு மாதமாக இப்படி கடிதம் வைக்கப்படுகிறது. எட்டு வருடங்களுக்குப் பிறகும் தன்னை மீட்டுவிட முடியும் என்று நம்பும் பாட்டியை நினைத்து உள்ளுக்குள் வருந்தினான். பாட்டியின் ஏற்பாட்டில் இப்படி தன்னைத் தொடர்புகொள்ள முயலும் வாடகைச் சகோதரிகள் இதற்கு முன்பும் இப்படிச் செய்ததுண்டு. பெரும்பாலும் மூன்று மாதகாலம் வாராவாரம் வீட்டுக்கு வந்து அறைக்கு வெளியே கடிதம் வைப்பார்கள். எந்த பதிலுமில்லையென்றால் கதவைத் தட்டிப் பார்ப்பார்கள். ரிக்கு திட்டத் தொடங்கியவுடன் சத்தமில்லாது வெளியேறி விடுவார்கள். ரிக்குவைப் போல் ஒரு அறைக்குள் தமது வாழ்க்கையை சுருக்கிக் கொண்டவர்கள் ஜப்பானில் பதினைந்து லட்சத்துக்கும் மேல் ஆனபோது இத்தகைய சேவை இயக்கங்கள் தோன்றின. இப்போது முயலும் பெண் யாரென்று தெரியவில்லை.

இப்படியே தன்னை விட்டுவிடுவதில் யாருக்கு என்ன பிரச்சினையென்று யோசித்தான் ரிக்கு. தனக்குப் பின்னான அவனது வாழ்க்கை குறித்தே பாட்டி கவலைப்படுகிறாள். ரிக்குவுக்கும் அது பயம் தந்தது. டோக்கியோவிலிருக்கும் தந்தை மாதாமாதம் பாட்டிக்குப் பணம் அனுப்பி விடுகிறார். தாய் எங்கிருக்கிறாள்?  தெரியவில்லை. அறையின் மூலையில் கிடந்த கிடாரைப் பார்த்தான் ரிக்கு. பள்ளி மாணவனாக கிடார் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னபோது தந்தை உற்சாகமாகவே ஆசிரியருக்கு ஏற்பாடு செய்தார். பிறகு அதில் மூழ்கிக் கிடந்தபோது கிடாரின் காரணமாகவே படிப்பில் கவனம் குறைகிறது என்று எரிச்சலுற்றார். தன்னைப் போலவே நன்கு படித்து டோக்கியோ பல்கலைக்கழகத்தில் ரிக்கு சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார். தாய் கோசேகியும் டோக்கியோவில் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தாள். தந்தையும் தாயும் சந்தித்துக் கொண்டதே ஆராய்ச்சிப் படிப்பில் இருந்தபோதுதான். மாணவனாக இருக்கும்போது வீட்டுக்கு வரும் தந்தையின் நண்பர்கள் இரண்டு டின் அசாஹி பீர் குடித்தவுடன் ரிக்குவும் டோக்கியோ பல்கலைகழகத்தில் படித்து பெரிய நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புக்கு வர வேண்டும் என்றார்கள்.

பள்ளியிலேயே பிரச்சினைகள் ஆரம்பித்து விட்டன. ரிக்கு கிடார் வாசிக்க வந்தால் மட்டும் ஓவென்று கத்தி கூச்சலிட்டனர். பெண்கள் தான் நடந்து சென்றபின் உரத்த குரலில் சிரிப்பது ஏன் புரியாமல் தூக்கமிழந்தான் ரிக்கு. பள்ளி முடிந்தவுடன் குமோன் போக வேண்டுமென்று சேர்த்து விட்டாள் அம்மா.

அங்கு திரும்பத் திரும்ப கணக்குகளை வேகமாகப் போட பயிற்சியளித்தார்கள். தடிமனாகக் கண்ணாடி அணிந்த ஆசிரியர் யோசிதா உரத்த குரலில் தவறாகப் போட்ட கணக்கு குறித்து திட்டுவது அவ்வப்போது கனவில் வருவதுண்டு.

பள்ளியை முடிப்பதே பெரும்பாடாக இருந்த நிலையில் டோக்கியோ பல்கலைக்கழகமெல்லாம் செல்வது குதிரைக்கொம்பு என்பதை தந்தை உணர்ந்த அன்று அவர் நம்பிக்கையிழந்திருக்கக் கூடும். தன்னை முட்டாள் என்று திட்டத் தொடங்கியது அதற்குப் பிறகுதான். அம்மாவும் அப்பாவும் பிரிந்தது கூட தன்னை முன்னிட்டுத்தான் என்று காண்பித்துக் கொண்டார்கள்.

காலை ஏழரை மணியை எப்படியாவது கடந்துவிட வேண்டும் என்று நினைப்பான் ரிக்கு. தொடர்ந்து இப்படிக் கதவை பூட்டிவிட்டு மீண்டும் மீண்டும் அதை இழுத்துப் பார்த்துச் சத்தம் எழுப்பி மூன்று நாட்களாக எதிர்வீட்டுப் பெண் எழுப்பிக் கொண்டிருந்தாள். எழுந்தபின் கடிகாரம் பெரிய எதிரியாக மாறி முள்ளின் ஒவ்வொரு அசைவும் தான் மறந்து போன எட்டாண்டுகளுக்கு முன்பான வாழ்க்கையை ஞாபகப்படுத்திக் கொல்லும். ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் உலக அரசியலை முக்கியப் பாடமாக எடுத்து எப்படியோ அதை முடித்த பின் வீடுகளில் பயன்படுத்தப்படும் மர மேஜை நாற்காலிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் முதல் வேலை கிடைத்தது. பிலிப்பைன்ஸிலும் தாய்லாந்திலும் இருக்கும் விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு மரங்களை வாங்கி அங்கேயே வேலைப்பாடுகளுடன் கூடிய தளவாடங்களாக உற்பத்தி செய்து கப்பலில் கொண்டுவந்து கொள்ளை லாபத்துடன் இங்கு விற்கும் வேலை.

ரிக்குவின் வேலை கப்பலில் வரும் பொருட்களைத் துறைமுகத்தில் இறக்குமதி செய்து அதற்குண்டான அரசாங்க ஆவணங்களைத் தயார் செய்யும் துறையில் குமாஸ்தா. ஒரு வருடமே வேலை பார்த்தான் ரிக்கு. காலை ஏழரை மணிக்கு பாட்டியின் வீட்டிலிருந்து கிளம்பி டோக்கியோ சென்று அங்கிருந்து மீண்டுமொரு ரயில் பிடித்து சிம்பாசி செல்ல வேண்டும். பாட்டி வீடு இருந்த கசாய் ரயில் நிலையத்தில் ஏழரை மணிக்கு சென்று டோக்கியோ செல்லும் ரயில்கள் நிற்கும் தளத்தின் வரிசையில் நின்றால் மூன்று ரயில்களுக்குப் பின் ரிக்குவின் முறை வரும்.

இதற்கெனவே உள்ள ரயில்வே ஊழியர்கள் ரயில் வண்டியில் ஒவ்வொரு வாசல் அருகே நிற்பார்கள். ரயில் வந்து நின்று வாசல் கதவு திறந்தவுடன் இருபக்கமும் கூட்டம் தள்ளிக்கொண்டு ஏற முற்படும். ஒரு நிமிடம் மட்டுமே நிற்கும் அந்த ரயிலின் ஒவ்வொரு வாசலிலும் ஒரு நூறுபேர் ஏற முயல்வார்கள். ஏறியும் ஏறாமலும் அந்தரத்தில் நிற்கும் மனிதர்களை உள்ளே தள்ளுவதுதான் அந்த ஊழியர்களின் வேலை. ரிக்கு உள்ளே நுழைந்தவுடன் எப்படியாவது தள்ளிக்கொண்டு இருக்கைகள் இருக்கும் வரிசையில் ஏதாவது ஒரு இருக்கையின்முன் செல்ல விரும்புவான். அந்த இடம் மட்டுமே அடுத்துவரும் நிறுத்தங்களில் தவறுதலாக வெளியே தள்ளப்படுவதிலிருந்து காப்பாற்றும்.

முதியவர்கள், கர்ப்பிணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் முன்னுரிமை இருக்கைகளில் உட்கார்ந்திருப்பவர்கள் பெரும்பாலும் தூங்கும் பாவனையில் இருப்பார்கள். அதுவே கண்ணெதிரே வந்து நிற்கும் முதியவர்களுக்கு எழுந்து இடம் கொடுக்காமலிருக்க உதவும். இப்படி இருக்கை சுகமெல்லாம் வண்டி புறப்படும் முதல் நிறுத்தத்தில் ஏறும் பயணிக்களுக்கானது. ரிக்கு போன்றோர் ஏறும் நிறுத்தங்கள் இப்படி இருக்கைகள் முன் நிற்கும் வாய்ப்பிருந்தாலே அதிர்ஷ்டம் எனச் சொல்லத் தக்கவை.

அப்படித்தான் அன்று வரிசையில் நின்று மூன்றாவது ரயிலில் ஏற்றப்பட்டபோது சுவாசிக்கும் மூட்டைபோல் உணர்ந்தான் ரிக்கு. திடீரென்று பின்புறம் இருதோளிலும் கம்பி வைத்துக் குத்தியது போல் வலி ஊடுருவியது. எதனால் வலி என்று திரும்பிப் பார்க்கக் கூட இடமில்லாத கூட்டம். நகர்ந்து நிற்க முயற்சித்தபோது அருகிலிருந்தவர் உச்சுக் கொட்டினார். கோட்சூட்டையும் தாண்டி குத்தல் வலி ஊடுருவியது. அதற்குப் பின் வந்த நிறுத்தத்தில் பின்புறம் நிற்பவர் இறங்கிவிடக்கூடும் என்று பல்லைக் கடித்துக்கொண்டு நின்றிருந்தான். மூன்று நிறுத்தங்களில் அவர் இறங்குவதாக இல்லை. பத்து நிமிடத்திற்குப் பின் வந்த நான்காவது நிறுத்தமான கயபாச்சோவில் நிறையபேர் இறங்கினார்கள். இவனும் இறங்கி வலது பக்கக் கதவு அருகே நின்று கொண்டான். இவனுக்குப் பின் இருந்த ஐம்பது வயது ஆள் தோளில் கறுப்புநிற டியுமி அலுவலகப் பை மாட்டியிருந்தார். தலைமுடி நல்ல கருமையுடன் முன்பக்கம் சரிந்து விழுந்திருந்தது. கண்கள் தூக்கத்தில் இருப்பவர் போல் சொருகியிருந்தன.  இரு கைகளையும் முன்பக்கம் மடக்கி நடுவிரலை மட்டும் முன்னோக்கிக்குத்துவது போல் வைத்தவண்ணம் இறங்கினார். வலியின் காரணம் ரிக்குவிற்கு புரிந்தது. புதன்கிழமை காலை அலுவலகம் செல்லும் ரயிலில் தனக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத ஒருவனை இப்படிக் குத்தித் தள்ளி வெளியே வைத்திருப்பவரைப் பற்றி யோசித்தான் ரிக்கு. எவ்வளவு கூட்டத்திலும் தன்னை யாரும் நெருங்கிவிடக் கூடாது என்று நடுவிரலால் தனக்குத் தானே அவர் வரைந்துகொண்ட வட்டம் கண்ணுக்குத் தெரிந்தது. இந்த நகரத்திலுள்ள அனைவரும் இது போன்ற ஒரு வட்டத்தைவரைந்தே வைத்துள்ளனர். ஒருபோதும் மற்றொருவரை அதற்குள் விடுவதில்லை. தோள்பட்டை இன்னும் வலித்தது. கண்ணீர் வழிந்தது. மூடப்போகும் கதவின் வெளியே நின்று கொண்டிருந்த ரிக்கு ரயிலுக்குள் திரும்பவும் ஏறாமல், கண்ணீர் வடித்தபடி எதிர்ப்பக்கம் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் ரயிலில் ஏறுவதற்கு நடந்தான். அன்று முதல் அவன் வேலைக்குச் செல்வதில்லை. 

பாட்டிக்கு எதிர்வீட்டுப் பெண் பற்றித் தெரிந்திருக்கும் என்று நினைத்தான் ரிக்கு. பாட்டி அதிகம் வெளியில் செல்பவளல்ல. ஆனால் அவளால் வீட்டுக்குள் இருந்தபடி தெருமுனையில் எப்போதும் குடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பும் இதாபாஷி சென்ற வாரம் இறந்துவிட்டதைக் கூறமுடியும். பக்கத்துவீட்டு சிக்கியின் பூனை காணாமல் போனதைப் பற்றி வருந்த முடியும். அவள் எல்லாவற்றையும் அறிந்துவைத்திருப்பவள். ஆனால் அவளிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்தான் ரிக்கு.

வீடியோ கேம்ஸ் விளையாடினான். எழுந்து வந்து கப் நூடுல்ஸில் வெந்நீர் ஊற்றிச் சாப்பிட்டான். மணி பத்தரையைத் தாண்டவில்லை. தலை வலித்தது. அந்த எதிர்வீட்டுப் பெண் மீது கோபம் வந்தது. சென்ற வாரம் வரை இந்தத் தொல்லை இல்லை. புதிதாகக் குடிவந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு காலியாக இருந்தது இந்த இடம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் யமாசித்தா தாத்தா தனியாக வசித்தார். ஒரே மகன் ஒகினாவா தீவில் வேலை பார்த்தார். வருடத்துக்கு ஒருமுறை குடும்பத்துடன் வந்து செல்வார். பகல் நேரங்களில் அவர் ஏற்பாடு செய்திருந்த முதியோர் காப்பக ஆசாமிகள் வேனில் வந்து அழைத்துச் சென்று மாலை கொண்டுவந்து விடுவார்கள். இரண்டு நாட்களாக அவர் வராதது கண்டு அவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் அனுப்பிவிட்டு வீட்டைத் திறந்து பார்த்தபோது படுக்கையில் இறந்து கிடந்தார் யமாசித்தா தாத்தா. அவருடைய வளர்ப்பு பூனை அருகில் அமர்ந்திருந்ததாம். அவருக்குப் பின் இந்த இடத்தை மகன் விற்றுவிட்டுச்  சென்றுவிட, புதியதாக வாங்கிய கட்டுமான நிறுவனம் ஆறு வீடுகளாக மாற்றி விற்றது. இதில் கீழ்த்தளத்தில்தான் இந்தப் பெண் வசிக்கிறாள். இவள் மட்டும்தானா, அல்லது வேறு யாரும் இருக்கிறார்களா? எங்கு வேலை பார்க்கிறாள்? திரும்பத் திரும்ப ஏன் பூட்டுகிறாள்?

பாட்டிக்கு மட்டும் என்ன தெரியும் என்று நினைத்துக் கொண்டான் ரிக்கு.

2

யுகிகோ மழையை பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள்.

கண்ணாடிக் கதவின் ஓரத்தில் குளிர் இருந்தது. முற்றிலும் தன்னைப் போர்வைக்குள் நுழைத்துக் கொண்டு, கதவுக்கு வெளியே சீராகப் பெய்யும் மழையின் ஓசை கேட்பது மனதுக்கு இதமானதாக இருந்தது. மழைநாட்களின் ஈரம் பெரும்பாலும் பள்ளிக்கால நினைவுகளுக்குக் கொண்டுசெல்லும். அப்போது அரகவா ஆற்றின் ஓரத்தில் அவர்களது பூர்வீக மரவீடு இருந்தது. நாற்பது வருடங்களுக்கு முன் யுகிகோவின் தாத்தாவால் கட்டப்பட்ட வீட்டின் தோட்டத்தில் சகுரா மரங்கள் இருந்தன. அந்த மலர்கள் பூக்கும் காலத்தில் ஆற்றின் ஓரத்தில் நடைக்குச் செல்பவர்கள் நின்று பார்ப்பது, யுகிகோவுக்குப் பெருமையாக இருக்கும். தனது சுமி பூனைக்குட்டியுடன் பெருமையாக வெளியே நிற்பாள். யுகிகோவின் தாய் ஜப்பானிய மேளம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியை. மாலைவேளைகளில் அவள் அருகிலிருக்கும் சமூகக்கூடத்தில் குழந்தைகளுக்கு மேளம் கற்றுக்கொடுக்கச் சென்று விடுவாள்.

தந்தை நக்கமுராவின் வேலை பற்றி பள்ளியில் கேட்கும்போது ஜப்பானிய உணவகம் வைத்திருக்கிறார் என்று பெருமையாகச் சொல்வாள். அந்த உணவகம் எங்கிருக்கிறது என்று யாரேனும் கேட்டால் முடிந்தவரை அந்த முகவரியை தவறாகவே சொல்வாள். பன்னிரெண்டு மணிக்குத் திறந்து காலை ஏழுமணிக்கு மூடப்படும் உணவகத்தை எப்படி பள்ளியில் விவரிப்பது என்று புரியாமல் விழிப்பாள்.

இந்த மழையில் தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எழுந்து சென்று நீர் கொதிக்க வைத்து, பச்சைத் தேயிலையை வடிகட்டியில் போட்டாள். நன்கு கொதித்தவுடன் ஒரு பீங்கான் கோப்பையில் வடிகட்டியை இட்டு அது நிறையும் வரை நீர் ஊற்றினாள். கையில் தேநீரை எடுத்துக்கொண்டு திரும்பவும் கண்ணாடிக் கதவின் அருகே வந்து அமர்ந்தாள்.

நொபுதோமோ இப்போது எங்கே இருப்பான்? அவன் திருமணம் ஒகினாவாவில் நிகழ்ந்ததாக ஷிக்கி சொன்னாள். அவன் அழைப்பு தரவில்லை. பள்ளி நாட்களுக்குப் பின் பெரும்பாலான நட்பு அறுந்துவிட்டது. ஒன்பதாவது படிக்கும்போது முதன்முதலாக நொபுதோமோ வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அழகான தனிவீடு. அவன் தந்தை ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார். நொபுதோமோவுடன் சென்றபோது அவனது தந்தை வீட்டு ஹாலில் கணிப்பொறி இயக்கிக் கொண்டிருந்தார். அறிமுகப்படுத்தியபோது சிரித்தார். மேலே அவனது அறைக்குச் சென்று பள்ளிப்பாடங்கள் செய்கிறோம் என்று அவன் சொன்னபோது சத்தம் அதிகம் செய்யவேண்டாமென்று கண்ணடித்துச் சொன்னார்.

நொபுதோமோவின் வாசம் ஞாபகத்துக்கு வந்தது. தொடர்ந்து அவனது மெத்தையின் ஸ்பரிசம். அவன் அணிந்திருந்த உள்ளாடையில் மிக்கி மவுஸின் படம். அதைப் பரிகாசம் செய்ததும் வெட்கத்தில் சிவந்த அவன் முகம். முதன்முதலாக ஒரு ஆணுடல் அறிமுகமானது அன்றுதான். ஒரு வருடத்தில் அந்த உறவு பிரிந்தது. உண்மையில் அந்த உறவு அவ்வளவு நாட்கள் நீடிக்கக் காரணமே கூட நொபுதோமோதான்.

யுகிகோவின் உயரமும் உடல்வாகும்தான் பள்ளியில் அவள் பிரபலமாகக் காரணம். எந்தப் பையனும் அவளிடம் பழக விரும்புவான். யுகிகோவின் தோழிகள் நொபுதோமோவை விரும்பினார்கள். அதனாலயே யுகிகோ அவன் மீது நாட்டம் கொண்டாள். அவனை வென்றெடுத்த பின் அது சலிப்பாக மாறியிருந்தது. ஒரு மாடல் ஆகிவிடுவோம் என்று வெகு நிச்சயமாய் நம்பிக்கொண்டிருந்த காலம் அது. படிப்பில் கவனம் நிலைக்கவில்லை. எங்கு சென்றாலும் ஆண்கள் உற்றுநோக்கினர். தோழிகளுடன் பள்ளி முடிந்தபின் சுற்றுவதற்காகவே பள்ளிக்குச் சென்றாள். பள்ளி திடீரென்று முடிந்த பின்பு, செய்வதற்கு எதுவுமில்லாது திகைத்தாள்.

நொபுதோமோ, எப்போதாவது என்னைப் பற்றி நினைப்பானா? யார் கண்டது, என் படங்களைக் கூட அவன் பார்த்திருக்ககூடும். என்னுடன் கொண்ட முதல் உறவு பற்றிப் பெருமையாக நினைத்திருப்பானா? பள்ளி முடித்தவுடன் அவனுக்கு டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. பாரிஸ் சென்று சிலவருடம் கட்டிடப் பொறியாளராகப் பணிபுரிந்தான். அவன் மனைவி என்னைவிட அழகாக இருப்பாளா? தெரியவில்லை. பள்ளி நட்பில் ஓரிருவருக்கு அவன் அழைப்பு விடுத்திருக்கக்கூடும். அவர்கள் யாருடனும் தொடர்பில்லை. ஆனால் ஒருபோதும் அவன் மனைவியிடம் யுகிகோவைத் தெரியுமென்று அவன் சொல்லப் போவதில்லை என்று நினைத்தபோது கண்ணீர் துளிர்த்தது.

தன்னுடைய புகைப்படங்களைப் பார்த்துவிட்டு இயக்குனர் ஷிமோமுரா அழைத்தபோது ஷிக்கியும் கூட வந்தாள். டெஸ்ட் ஷூட் எடுத்தபோது கூட கேமரா முன் தன்னுடைய உடலைக் காட்டுவதில் பெருமையே இருந்தது. அவ்வளவு எளிதாக ஷிமோமுரா யாரையும் அழைப்பதில்லை என்று வரவேற்பறை பெண் சொன்னாள். முதல் ரெக்கார்டிங்கிற்குச் சென்ற நாள் நினைவில் இருக்கிறது. கோட்சூட் அணிந்து வந்த சுஷுகி முறையாக வணக்கம் செலுத்தி ”உங்களுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி” என்று சொல்லிச் சென்றான். பள்ளி மாணவிக்குரிய சீருடையில் யுகிகோ உள்ளே வரவேண்டும். அந்த அறையில் சுஷுகிதான் கணித ஆசிரியர்.  வகுப்பறையில் யாருமில்லாததைக் கண்டு யுகிகோ தயங்கி  நிற்பாள். அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று, இன்று வேறு பாடங்கள் எடுக்க இருப்பதாகச் சொல்வான் சுஷுகி.

பிறகு மெதுவாக பள்ளி மேஜையில் அவளை உட்கார வைத்து ஆடைகளைக் களைவான். பதின்மூன்று மணி நேரம் அந்தப் படப்பிடிப்பு நடந்தது. கவரில் வைத்து சம்பளம் வழங்கினார்கள். இருபது லட்சம் யென் அந்தக் கவரில் இருந்தது. அந்த இரவு முழுவதும் பர்கண்டி ஒயின் வாங்கி வந்து அவளது அறையில் குடித்துக் கொண்டாடினாள்.

அவளுடைய உடலைக் கொண்டாடினார்கள் ரசிகர்கள். அடுத்த பத்து நாட்களில் மீண்டும் வேறொரு நிறுவனம் அழைத்தது. அந்த முறை யுகிகோவுக்கு மருத்துவத் தாதி வேடம். நோயாளியாகப் படுத்திருக்கும் சுஷுகியை எழுப்ப வேண்டும். திரும்பவும் இருபது லெட்சம் யென். யுகிகோவின் போர்னோ சீடிக்கள் எல்லா கடைகளிலும் கிடைத்தன. அப்பா முழுவதுமாகப் பேச்சை நிறுத்திக் கொண்டார். அம்மாவுடன் எப்போதாவது வெளியே காபி அருந்துவது மட்டும் எஞ்சியிருந்தது.

ஒரே வருடத்தில் ஆடி கார் வாங்கினாள். ரொப்பங்கியின் புகழ்பெற்ற அபார்ட்மெண்டில் வீடு வாடகைக்கு எடுத்தாள். ஏகப்பட்ட தோழர்களும் தோழிகளும் அந்த உலகில் கிடைத்தனர். ஒரு நிறுவனம் யுகிகோவை மாடலாக வைத்து சிந்தடிக் யோனியைத் தயாரித்து பிளாஸ்டிக் குழாயில் வைத்து விற்றது. படத்தில் யுகிகோவின் அளவுகள் மிகச் சரியாகக் குறிப்பிடபட்டு, அவளுடன் புணரும் உண்மை அனுபவத்திற்கு வாங்கச் சொல்லித் தூண்டியது. மாணவர்களும், வயதானவர்களும் யுகிகோவின் யோனியை வாங்கித் தொடர்ந்து புணர்ந்தனர்.

ஒரே வருடத்தில் சம்பளம் பாதியாக குறைந்தது. இரண்டாவது வருடத்தில் மீண்டும் பாதியானது. மூன்றாவது வருடத்தில் ஹார்ட்கோர் போர்னோவிற்கு அழைத்தனர். சில வருடங்கள் கழித்து ஒரு ஏப்ரல் மாத இறுதியில் ஒரு வாய்ப்பு கூட அந்த மாதத்தில் இல்லை என்று உணர்ந்தபோது யுகிகோ தனது வாழ்க்கை முற்றுப் பெற்றதை உணர்ந்தாள்.

ரொப்பங்கியின் அபார்ட்மெண்டைக் காலிசெய்து டோக்கியோவைத் தாண்டியிருந்த இகாசி முராயமாவிற்குச் சென்றவுடன் தனது தொலைபேசி எண்ணை மாற்றினாள். முழுவதுமாக பழைய தொடர்புகளைத் துண்டித்தாள். சிகையலங்காரத்தை மாற்றினாள். வீட்டிலிருந்து மருந்துக் கடைகளுக்கு பை தயார் செய்யும் பணியைச் செய்தாள்.  இரவில், தூக்கம் என்பதே கொடும் கனவுகளுக்கு இடையில்தான் என்பதாக மாறியிருந்தது. இரவுகளைத் தவிர வாழ்க்கை இயல்பானதாக மாறியதுபோல் இருந்தது.

ஆனால் பகுதிநேரப் பணிகளுக்குச் சென்றபோது எல்லா இடங்களிலும் அவளைப் புணர்ந்த சிலர் மிச்சமிருந்தனர்.

உடைகளைத் தலைமுதல் கால்வரை உடுத்தத் தொடங்கியது அப்போதுதான்.

3

2011 மார்ச் 11 அன்று கணினியில் மங்கா படித்துக்கொண்டிருந்தான் ரிக்கு. பாட்டி வெளியில் போயிருந்தாள்.

மணி மதியம் 2.45 ஆகியிருந்தது. கதவில் கட்டியிருந்த மணி ஆடியது. முதலில் பாட்டி திரும்பவும் வந்து கதவைத் திறக்கிறாள் என்று நினைத்தான். அறையிலிருந்த விளக்கு ஆடியபோதுதான் அதை பூகம்பமென்று உணர்ந்தான். நின்றுவிடும் என்று விளக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். சற்று நேரமான பிறகும் ஆடும்பொருட்கள் நிற்கவில்லை. மாறாக இன்னும் பலமாக ஆடியபோது பயமடைந்தான். உடனடியாக திரையை விலக்கிச் சாலையைப் பார்த்தான். எதிர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் முன்னும் பின்னும் வேகமாக அசைந்தது. மின்சாரக் கம்பங்கள் கீழே விழுவது போல் வளைந்தன. இண்டர்நெட்டில் செய்திகளை வாசித்தான். செண்டாய் பூகம்பம் அளவு 9.1 என்று காட்டியது. தொடர்ந்து எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியது. அனைவரும் வீடுகளிலிருந்து இறங்கி சாலையில் நிற்பதைப் பார்த்தான்.

மார்ச் மாதம் என்பதால் குளிர் அதிகமாக இருந்தது. ஜெர்கினை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே வந்தான். ஒரு பள்ளி மாணவன் தனது கைபேசியில் தகவல் அனுப்பிக்கொண்டிருந்தான். வயதான ஒரு பெண் ஆபத்து, ஆபத்து என்று கத்திக்கொண்டு சாலையில் குறுக்கும் நெடுக்குமாக ஓடினள். ரிக்கு தொடர்ந்து நடந்தான். அந்தத் தெருவைத் தாண்டி நடப்பது பல வருடங்கள் கழித்து இதுதான் முதல் தடவை என்பதால் அனைத்தும் புதிதாகத் தோன்றியது.

சாலையில் சில இடங்களில் பிளவு ஏற்பட்டிருந்தது. ரயில் நிலையம் நோக்கிச் சென்றபோது பாட்டி கையில் பை நிறைய காய்கறிகளுடன் பதற்றமாக வந்து கொண்டிருந்தாள். ரிக்குவை அதிசயமாகப் பார்த்தாள். ரிக்கு, வீட்டுக்குப் போய் விடலாம் என்றாள்.  “நீங்கள் வீட்டுக்கு செல்லுங்கள்” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தான் ரிக்கு. ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தன. சாலைகளில் பயணிகள் நின்று கொண்டிருந்தனர். ஒரு நடுத்தர வயது ஆசாமி தண்ணீர் கேன்களை செவன்லெவனில் வாங்கிக் கட்டிக்கொண்டு சைக்கிளில் விரைந்தார்.

ரயில் நிலையம் அருகே இருந்த வணிக அங்காடியில் தொலைக்காட்சி தெரிந்தது. சுனாமி அலைகள் கடலோர கிராமத்தைத் தாக்கும் காட்சி அதில் வந்தது. நின்று பார்த்தான். செண்டாய் விமான நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் கடல் நீரில் படகுகள் போல மிதந்து சென்றன. மரவீடுகள் தெப்பம் போல் நீரில் சென்றன. அப்படிச் சென்ற வீட்டின் ஜன்னலில் ஒரு கிழவர் கைகளை ஆட்டியபடி சென்றார்.

சாலை முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டிருக்க படகு போல் இழுத்துச் செல்லப்பட்ட காரின் ஓட்டுனர் இருக்கையில் ஒரு பாட்டி செய்வதறியாது ஸ்டியரிங்கைச் சுற்றிக்கொண்டிருந்தாள்.

அலுவலகத்திலிருந்து பாதியில் திரும்பிய ஆண்களும் பெண்களும் கறுப்பு நிற சூட் அணிந்து வீடுகளை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். பகல்பொழுதில் அப்படி அவர்கள்திரும்பி வருவதைப் பார்ப்பது நடுக்கம் தரவில்லை. மாறாக அமைதியை உணர்ந்தான் ரிக்கு.

செண்டாய்க்குச் செல்வது என்று உடனடியாக முடிவெடுத்து வீட்டுக்கு (வீட்டுக்குத்) திரும்பினான் ரிக்கு. அன்றிரவு முழுவதும் தொடர்ந்து நிலம் நடுங்கிக் கொண்டிருந்தது. ஃபுக்குசிமோ அணு உலை வெடித்துச் சிதறுவதைத் தொலைக்காட்சியில் தொடர்ந்து காண்பித்துக்கொண்டிருந்தார்கள்.

மூன்று நாட்கள் கழித்து மார்ச் 14 அன்று செண்டாய்செல்லும் ரயிலில் ஏறினான் ரிக்கு. பாட்டி முதலில் மறுத்துப் பார்த்தாள். ரிக்குவின் உறுதியைக் கண்டதும் பணம் கொடுத்தாள்.

மியாகி மாவட்டத்திலுள்ள ஒகாவா நகரில் இறங்கி தன்னார்வலராகப் பதிவு செய்து கொண்டதும் நீலநிறத்தில் ஒரு பேட்ச் கொடுத்தார்கள்.  மையப்பள்ளியொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த வீடு இழந்தவர்களுக்கு உணவு வழங்கும் குழுவில் அவனது பெயர் இணைக்கப்பட்டது. வேனில் ஏறினான். அனைவரும் உரத்த குரலில் காலை வணக்கம் சொன்னார்கள். அவ்வளவு பேரும் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து தலையை அசைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் ஒரு இருக்கையில் ஒதுங்கிக் கொண்டான். அந்த மூன்று நாட்களில் ஏகப்பட்ட விசித்திரங்களைப் பார்த்து விட்டவர்கள் ரிக்கு அப்படி எதுவும் சொல்லாமல் அமர்ந்ததையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தங்களுடைய செல்போனைப் பார்க்கத் தொடங்கியிருந்தனர்.

மொத்தம் அறுநூறு பேர் அந்தப் பள்ளியின் உள்ளரங்கு மைதானத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். குடும்பமாகத் தங்கியிருந்தவர்கள் டெண்ட் போட்டு அதனுள் குளிர் ஊடுருவாமல் இருக்க கார்ட்போர்டு அட்டைகளை இட்டு அதில் படுத்திருந்தனர். உணவு வழங்கியபின் அங்குள்ள முதியவர்களுக்குக் கழிப்பிடம் செல்ல உதவினான். ஒரு முதியவரை அப்படிக் கழிப்பிடம் கொண்டு செல்ல அழைத்துச் செல்லும்போது எதிரே வந்த பெண் பாதையில் வந்தது குறித்து மன்னிப்புக் கேட்டு ஒதுங்கி நடந்தாள். அவளைக்கண்டு ஒருக்கணம் திகைத்தான் ரிக்கு. நன்கு தெரிந்த முகமாகத் தோன்றியது. அவள் கரும் நீலநிறத்தில் ஸ்கர்ட்டும் வெளிர்நீல நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தாள். ரிக்குவைக் கடந்து கதவைத் திறந்த நொடியில் அவளை அடையாளம் கண்டு கொண்டான்.

மதிய இடைவேளையில் தங்கியிருந்தவர்களுக்கு உணவு வழங்கிவிட்டு தனியாக அமர்ந்து அரிசிக்குள் பொதிக்கப்பட்டிருந்த மீனை கடல்பாசியுடன் சேர்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் யுகிகோ. அவள் அருகே சென்று கொஞ்சம் தயங்கி “மதிய வணக்கம்” என்றான் ரிக்கு. அவளும் ஒருக்கணம் தயங்கி பதில் வணக்கம் சொன்னாள். தன்னிச்சையாக முழுவதும் ஆடை அணிந்திருக்கிறோமா என்று சரிபார்த்தாள் யுகிகோ. எந்த நிமிடமும் அவன் தன்னுடைய படங்கள் பற்றி பேசக்கூடுமென்று உள்ளூர நடுங்கினாள்.

“கசாயில், உங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கிறேன்” என்றான் ரிக்கு.

“அப்படியா? அங்கு ஒரு பாட்டியை அல்லவா பார்த்திருக்கிறேன்?”

“அவளை மட்டுமே தெருவாசிகள் பார்த்திருக்கக் கூடும். நான் பெரும்பாலும் வெளியே வருவதில்லை.”

யுகிகோ உடனடியாகப் புரிந்து கொண்டாள். 

“காபி அருந்துவோமா?” என்று கேட்டாள்.

இருவரும் அருகிலிருந்த தானியங்கி இயந்திரத்தில் காபி கேன் எடுத்தார்கள்.

“முதியவர்களும் குழந்தைகளும் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றான் ரிக்கு.

“ஆம். இதே ஓகாவா நகரில் சுனாமியிலிருந்து தப்பிக்க பாலத்தைக் கடக்க முயற்சி செய்கையில் பள்ளிக் குழந்தைகள் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.”

“அது தெரிந்துதான் இங்கு வந்தேன்.”

ஐந்து வயது சிறுமி சசாகி கால் சட்டையணிந்து இருபக்கமும் போனிடெயில் தொங்க கூடாரங்களுக்கிடையே புகுந்து ரிக்குவுக்கும் யுகிகோவுக்கும் இடையில் வந்து ஒளிந்து நின்று கொண்டு எட்டிப் பார்த்தாள். வலது கையில் சாப்ஸ்டிக் குச்சிகளுடன் பொக்கை வாய் சிரிப்பு பொங்க சசாகியைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.

“இந்தச் சூழலிலும், இந்த முகாமிலுள்ளவர்கள் ஒருவர்மீது மற்றொருவர் காட்டும் பரிவும், அன்பும் நம்பமுடியாதபடி இருக்கிறது” என்றான் ரிக்கு.

“ஓய்வெடுக்க முடியாதபடி தொடர்ந்து செய்ய இங்கு வேலை இருக்கிறது. ஆனால் இந்த ஏழு வருடங்களில் இந்த மூன்று தினங்களாகத்தான் கனவுகள் இல்லாமல் உறங்குகிறேன்” என்றாள் யுகிகோ.

புன்னகைத்தான் ரிக்கு.

***

இச்சிறுகதையை எழுதிய ரா. செந்தில்குமாரின் மின்னஞ்சல் முகவரி:

senthil.rethan@gmail.com

இந்தச் சிறுகதை இசூமியின் நறுமணம் என்ற தொகுதியில் வெளிவந்தது. வெளியீடு யாவரும் பப்ளிஷர்ஸ். விலை ரூ.180.

தொடர்பு முகவரி:

Yaavarum Publishers,
214, Bhuvaneshwari Nagar IIIrd Main Road
Velachery, Chennai-600 042
90424 61472 / 98416 43380
editor@yaavarum.com
Url : www.yaavarum.com, www.be4books.com