நிழல்களின் கூட்டம்

மனைவியின் குடும்ப

சுபவிழா ஒன்றிற்கு

அவனும் சென்றிருந்தான்

செங்குத்தான படிக்கட்டுகளில்

ஏறி எல்லோரும்

முதல் மாடியிலிருந்த

மண்டபத்துக்குச் செல்வதைக் கண்டான்

மத்திம வயதுக்காரர்களால்கூட

இளைஞர் துணையின்றி

ஏற முடியவில்லை

எழுபத்து மூன்று வயதான

அவனால் அந்தப் படிக்கட்டுகளில்

லகுவாகவே ஏற முடிந்தது

ஆண்களில் பலர்

நெற்றியில் குலச்சின்னம் தரித்து

மெல்லிய

வேட்டியணிந்து அதனொரு பாகத்தை

இடுப்பில் செருகியிருந்தார்கள்

மேலே சட்டையில்லை

இதைத்தான் அக்காலத்து ஐரோப்பியர்

அரைநிர்வாணப் பக்கிரிகளென்றார்கள்

போலும்

இந்த வெய்யிலுக்கு இதுதான் உகந்த

உடை

தடையேதுமில்லை

ஆண்களும் பெண்களும்

ஐம்பது வயதில் தொண்ணூறின்

முதுமை கொண்டிருந்தார்கள்

எல்லோருக்குமே நகரில்

இரண்டு மூன்று வீடுகளிருந்தன

பத்து குடும்பங்கள் வாழக்கூடிய

ஊதியம் வந்தது

செல்வம் திரட்டத் தேவையான

மூளை தேகமெல்லாம்

திரண்டிருந்தது

எல்லோரும் இன்புற்றேயிருந்தார்கள்

அந்தக் கூட்டத்தில்

அவன் அந்நியனாயிருந்தான்

அவன் பேசிய மொழி

அவர்களின் மொழியென்றாலும்

அதில் வேறோர் பண்பாட்டின்

வாசனையிருந்தது

செல்வம் கொட்டும் வழி

தவிர வேறெந்த வழியிலும்

பயணித்திராத நிழல்கள்

கூட்டத்தில்

இலக்கியமறிந்த ஒரே ஒருவர்

இருந்தார் நாற்பது வயதுக்காரர்

அவனிடம் கேட்டார்

ஏன் களைப்பாகத் தெரிகிறீர்களென்று

தொடர்ந்து கேட்டார்

தினமும் வாக்கிங் செல்கிறீர்களா

தொடர்ந்து சொன்னார்

ஹெல்த் முக்கியம்

எத்தனை நாள் வாழப் போகிறோம்

ஹெல்த் முக்கியம்