நிர்வாணம் என்பது ஆடைகளைக் களைந்து விட்டு அம்மணமாக நிற்பது மட்டும் அல்ல. இந்தியாவில் நிர்வாணம் ஒரு தத்துவம். துறப்பு என்பதன் குறியீடு. உலகிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக இருந்த சந்திரகுப்த மௌரியர் ஒருநாள் தன் ஆடை அணிகலன்கள் அனைத்தையும் கழற்றி எறிந்து விட்டு நிர்வாணமாக சரவண பெலகொலா வந்து சேர்ந்தார். சமணத் துறவிகள் இன்றளவும் திகம்பரமாகவே இருக்கிறார்கள். லங்கோடு கூட அணிவதில்லை.
Beat writersஇல் ஒருவரான ஆலன் கின்ஸ்பெர்க் வங்காளத்துக்கு வந்து அங்கே உள்ள நாகா துறவிகளோடு நிர்வாணமாக அலைந்தார். அவருடைய கவிதைத் தொகுதியின் முன்னட்டையில் அவருடைய முன்பக்கத்து நிர்வாணத்தோடு நிற்கும் புகைப்படம் வந்தது.
இப்படி நிர்வாணத்தை ஒரு தத்துவமாகக் கண்ட ஒரு தேசத்தில் நிர்வாணம் என்பது அருவருப்பான, அசிங்கமான விஷயமாகக் கருதப்படுவது மிகப் பெரிய நகைமுரண். மேற்கத்திய நாடுகளில் நீச்சல் குளங்களிலும் கடல்கரைகளிலும் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் குளிப்பது அதிர்ச்சியாகப் பார்க்கப்படுவதில்லை. ஆனால் இந்தியாவில் பெண்ணின் ஆடை ஒரு இஞ்ச் விலகினாலே அத்தனை கண்களும் விலகிய இடத்தையே மொய்க்கின்றன.
ஜப்பானில் சில காலம் வாழ்ந்த நண்பர் கிருஷ்ணமூர்த்திதான் எனக்கு ஆன்சென் என்ற வெந்நீர் ஊற்றுகள் பற்றிச் சொன்னார். ஜப்பானில் கிட்டத்தட்ட 2500 வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. இங்கே குளிப்பதாக இருந்தால் உடலில் எந்த ஆடையும் ஆபரணமும் இருக்கலாகாது. ஆண் பெண் பேதமில்லாமல் இருபாலரும் ஒரே இடத்தில் நிர்வாணமாகவே குளிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஆன்சென் குளியல் இடங்களில் நான் ஒருமுறை கூட ஒரு இந்தியரைக் கூட கண்டதில்லை என்றார் கிருஷ்ணா.
பத்து நாள் பயணத்தில் என்னால் அந்த ஆன்சென்னுக்குப் போக இயலாது என்றே நினைக்கிறேன். எனக்கு என்னுடைய நிர்வாணமும் பிரச்சினை இல்லை. மற்றவர்களின் நிர்வாணமும் பிரச்சினை இல்லை.
நிர்வாணமாகக் குளிப்பது கூட சமாளித்து விடலாம். ஆனால் வரவேற்பறையிலேயே ஆடைகளைக் களைந்து விட்டு நீரூற்று இருக்கும் இடம் வரை நிர்வாணமாகவே நடந்து போக வேண்டும் என்று சில பயணிகள் எழுதுகிறார்கள். ஏன் இந்த நிர்வாணம் என்றால், துணிமணிகளோ மற்ற அந்நிய வஸ்துக்களோ அந்த நீரூற்றுகளின் மருத்துவ குணத்தை மாசுபடுத்தி விடும்.
அந்தக் காலத்தில் போரில் காயமடைந்த சாமுராய் வீரர்கள் இந்த வெந்நீர் ஊற்றுகளில்தான் நிர்வாணமாகக் குளித்துத் தங்கள் காயங்களை ஆற்றிக் கொள்வார்கள்.
இப்படிப்பட்ட ஒரு ஆன்சென் ஊற்றுக்கு வருகிறான் ஷிமாமுரா. அந்த ஆன்சென் விடுதியில் தங்கியிருக்கும்போது ஷிமாமுராவுக்கும் கொமாகோ என்ற கெய்ஷாவுக்கும் ஏற்படும் காதல் கதைதான் ஸ்நோ கண்ட்ரி.
இந்த நாவலும் திரைப்படமாக வந்திருக்கிறது. 1957இல் வந்தது. டோக்யோ டிகேடன்ஸ் 1992இல் வந்தது. இடைப்பட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் திரைமொழியில் நூற்றாண்டு வித்தியாசங்களைக் கொண்டிருக்கிறது. ஸ்நோ கண்ட்ரி மோகமுள் என்றால், டோக்கியோ டிகேடன்ஸ் எக்ஸைல். உதாரணமாக, பிந்தைய பட்த்தில் வரும் எஸ் பெண் தன் இடுப்பில் டில்டோவைக் கட்டிக் கொண்டு எம் ஆணைக் குனியச் செய்து குதப் புணர்ச்சி செய்கிறாள். இந்தக் காட்சி அப்பட்டமாகப் படத்தில் வருகிறது.
ரியூ முராகாமியின் திரைப்படங்களோடு ஸ்நோ கண்ட்ரி திரைப்படத்தையும் மஸாகி கோபயாஷியின் ஹராகிரி (1962), Kwaidan (1964) ஆகிய இரண்டு படங்களையும் ஒப்பிட்டு எழுதலாம் என்று இருக்கிறேன். ஜப்பானிய சமூகத்தில் மதிப்பீடுகளின் மாற்றம் ஒரு ஐம்பது ஆண்டுகளில் எந்த அளவுக்கு நிகழ்ந்திருக்கிறது என்பதை இந்த்த் திரைப்படங்களின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இன்று அதற்கு நேரம் இல்லை. காலையில் விமான நிலையம் கிளம்ப வேண்டும். நாளை பகல், இரவு முழுவதும் பயணத்திலும் காத்திருப்பிலும் போய் விடும். நாளை மறுநாள் (28) காலை பத்து மணி அளவில்தான் தோக்கியோ விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியும் என்று நினைக்கிறேன். முழுசாக இருபத்து நான்கு மணி நேரம். தோக்கியோ சென்ற பிறகு தொடர்கிறேன்.