ஜப்பான்: கனவும் மாயமும் (11)

கதையைத் தொடர்வதற்கு முன் ஒரு குறுக்கீடு. 

நாளை கிளம்பி நாளை மறுநாள் (28) தோக்கியோ சேர்கிறேன்.  அங்கே என்னைச் சந்திக்க நேரும் தமிழ் நண்பர்களுக்கு என் வேண்டுகோள் சில:

தமிழ் சினிமா பற்றியோ இளையராஜா பற்றியோ என்னிடம் பேச வேண்டாம்.  அவை எனக்கு மிகவும் அலுப்பூட்டக் கூடிய விஷயங்கள்.

யாரும் என்னைத் தங்கள் வீட்டுக்கு அழைக்க வேண்டாம்.  காரணம், உங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாரும் என்னை வாசித்திருக்க மாட்டார்கள்.  அதனால் உங்கள் மாமனார் என்னை எழுத்தாளன் என்று அறிந்து “என்ன மாதிரி கதை எழுதுவீர்கள்?” என்று கேட்பார்.  எனக்கு அம்மாதிரி அறிவுபூர்வமான கேள்விகளுக்குப் பதில் தெரியாது.  நீங்களே படித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உளறுவேன்.  அடுத்து அவர் டிடக்ட்வ் ஸ்டோரீஸா, சோஷல் ஸ்டோரீஸா, பொன்னியின் செல்வன் மாதிரியா என்று கேட்பார்.  நான் திருதிருவென்று விழிப்பேன்.  பாவம் நான். 

என்னை உணவகங்களுக்கு அழைத்துச் செல்லும் நண்பர்கள் இந்திய மற்றும் தமிழ் உணவகங்களுக்கு இட்டுச் செல்லாதீர்கள்.  சென்னையிலேயே நான் ஜப்பானிய மற்றும் தாய்லாந்து உணவகங்களைத் தேடித் தேடிப் போகும் ஆள்.  அங்கே வந்து சாம்பார், ரசம் என்று போவது அபத்தம்.  மட்டுமல்லாமல் வீட்டில் 365 நாளும் சாம்பார் ரசம்தான்.  மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் மீன் என்று ஆகி விட்டது.  ஜப்பான் வந்தும் சாம்பாரா?  வேண்டாம்.

ஆனால் இதற்கெல்லாம் வாய்ப்பே இருக்காது என்று நினைக்கிறேன். ஒரு மாதத்துக்கு முன்பே தமிழர்களின் சபைகளில் இன்ன மாதிரி சாரு நிவேதிதா இங்கே வருகிறார், அவருடன் நேரம் செலவிட விரும்பும் யாரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்று செந்தில்குமார் சொல்லியிருக்கிறார்.  ஒரு சலனமும் இல்லை.  ஏனென்றால், நான் சினிமா நடிகர் சந்தானம் இல்லையே?  யாருக்குத் தெரியும் சாரு நிவேதிதாவை?  செந்தில்குமாருக்கு என் எழுத்து நன்றாகத் தெரியும்.  அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் கவனித்துக் கொள்வார்.