ஜப்பானில் பத்து நாட்கள் இனிதே கழிந்தன. எந்த ஊரை விட்டுப் பிரிந்தாலும் அந்த ஊரை நினைத்து நான் ஏங்கினதில்லை. ஆனால் ஜப்பான் அப்படி என்னை ஏங்க வைத்து விட்டது. ஏனென்றால், நான் சென்னையிலேயே ஒரு ஜப்பானியனாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று அங்கே போன பிறகுதான் தோன்றியது.
ரொப்பங்கி இரவுகள் என்று ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். இருநூறு பக்கம் வரும். ஒரு நாளில் இருபது பக்கம் என்று கணக்கு. பத்து நாளில் முடித்து விடுவேன். அதை என்.எஃப்.டி.யில் வடிவமைக்க ஒரு பத்து நாள் ஆகும். ஆக, இருபது நாட்களில் என்.எஃப்.டி.யில் பத்து பிரதிகள் மட்டும் வரும். மீதியெல்லாம் கிண்டிலில் வாங்கிக் கொள்ளலாம். ஏனென்றால், இந்த ஜப்பானியக் கதையை அச்சில் வெளியிட்டால் ஜப்பானில் வசிப்பவர்களுக்கு அது போய்ச் சேருவதில்லை. உதாரணமாக, உலகம் பூராவுமே என்னுடைய எல்லா புத்தகங்களையும் அமேஸான் டாட் காமில் வாங்க ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் ஏற்பாடு செய்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் வெளிநாட்டில் வசிப்பவர்கள் எவருமே அந்த வசதியை உபயோகிப்பதில்லை என்று தெரிந்தது. வளனிடம் நான் அதை சோதித்தே பார்க்கச் சொன்னேன். அமெரிக்காவில் வசிக்கும் அவனால் அமேஸான் டாட் காமில் ஸீரோ டிகிரி நாவலை வாங்க முடிந்தது. நான் சொல்வது கிண்டில் வடிவம் அல்ல. அச்சடித்த புத்தக வடிவம். ஆனால் ரெண்டு டாலருக்குக் கிடைக்காது. கொஞ்சம் டாலர் அதிகம்.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ரொப்பங்கி இரவுகள் நாவலின் பத்து பிரதியை மட்டும் என்.எஃப்.டி.யில் வெளியிட்டு விட்டு அதற்குப் பிறகு ஒரு மாதம் கழித்து கிண்டிலிலும் அச்சிலும் வெளியிடலாம் என்று திட்டம். வழக்கம் போல் ரொப்பங்கி இரவுகள் அச்சு நூல் ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து வெளிவரும். கிண்டில் விற்பனை என் மூலமாக.
பெட்டியோவைப் போல் நூறு பிரதிகளையும் என்.எஃப்.டி.யில் வெளியிடாததற்குக் காரணம், உங்களுக்குப் பணச் செலவு வைக்கக் கூடாது என்றுதான். பெட்டியோ நாவலின் என்.எஃப்.டி. விலை பத்தாயிரம் ரூபாய். அதிக பட்ச விலை ஒரு லட்சம். வடிவமைப்பு வேலை முடிந்து விட்டது. இரண்டொரு நாளில் விற்பனைக்கு வரும். வாங்கத் தயாராகுங்கள்.
Conversations with Aurangzeb நூல் விற்பனை இப்போதைக்கு இந்தியாவில் மட்டும்தான். சர்வதேச அளவில் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் இரண்டு மின்னஞ்சல் எழுத வேண்டும். உங்கள் நாட்டில் உள்ள ஹார்ப்பர்காலின்ஸ் பதிப்பகத்துக்கும், இந்தியாவின் ஹார்ப்பர்காலின்ஸ் அலுவலகத்துக்கும் ஒரு நூறு பேராவது எழுதினால் அந்த நாவல் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் கிடைக்கும். நானும் என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.