பவா விஷயத்தில் அராத்துவுடன் முரண்படுகிறேன். ஃபிலிஸ்டைன் கும்பலால் சமூகத்துக்கு ஏற்படும் தீமைகளை விட பவா செல்லத்துரை போன்ற இலக்கிய ஆர்வலர்களால் ஏற்படும் தீமை அதிகம். இது பற்றி நான் மிக அதிகமாகவே எழுதியிருக்கிறேன், பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. மேன்மையானவை பற்றியே நான் பேசியிருக்கிறேன் என்கிறார் பவா. அந்த மேன்மையெல்லாம் சமூகத்துக்கு விரோதமானவை என்பது என் கருத்து. பவா என் நெருங்கிய நண்பர். அது வேறு விஷயம். நட்புக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அதோடு, வெறும் பிச்சைக்கார காசு ரெண்டு லட்சம் ரூபாய்க்கு அவர் பிக் பாஸுக்குச் சென்றிருப்பது கண்டனத்துக்குரிய விஷயம், அந்தச் செய்தி உண்மையாக இருந்தால்.
மேலும் கண்டிக்கத் தக்கது, அவர் பிக் பாஸில் சொன்ன கதை. ஏற்கனவே சமூகத்தில் எழுத்தாளன் என்றால் பொறுக்கி என்பதாக ஒரு இமேஜ் நிலவுகிறது. இந்த நிலையில் ஒரு எழுத்தாளன் ஒரு பெண்ணை இடுப்பில் கிள்ளினான் என்ற கதையையா சொல்லித் தொலைய வேண்டும்? சார்வாகனின் முடிவற்ற பாதை போன்ற கதைகள் இல்லையா?
பவாவின் கருத்துக்கள் ஏன் சமூக விரோதமானவை என்பதற்கு அவர் சொன்ன நிஜக் கதையான கழைக் கூத்தாடி பற்றிய பேச்சைக் கேட்கலாம். அது பற்றி எழுதியிருக்கிறேன். அதை விட சமூக விரோதமான கதை எதுவும் இல்லை. ஒருவன் நல்லவனாக இருக்க வேண்டுமானால் படிக்கக் கூடாது, படித்தவன் எல்லாம் கெட்டவன், கழைக் கூத்தாடி போன்ற படிக்காதவர்கள்தான் நல்லவர்கள் என்பதுதான் பவாவின் அந்த நிஜக் கதை. அப்படியானால் பவா தன் மகனையும் நான் என் மகனையும் படிக்க வைக்காமல் கழைக் கூத்தாடிகளாக ஆக்கியிருக்க வேண்டும். தவறி விட்டோம்.