சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் எழுதி வந்த கதை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிய கதைதான். இதில் நல்லது இல்லாமால் இல்லை. சீலே சாந்த்தியாகோ நகரில் இருந்து இன்னும் என்னிடம் பத்து தினங்கள் உள்ளன. ஆனால் கையில் காசு இல்லை. இந்த நகரிலேயே தெருத் தெருவாகச் சுற்றி வரலாம். அதற்குக் காசு வேண்டாம். கையில் ஒரு நாலு ஐந்து லட்சம் இருந்தால் சீலே முழுவதும் சுற்றலாம் என்றதும் ஒரே வாரத்தில் ஐந்து லட்சம் அனுப்பியிருந்தார்கள் பெயர் தெரியாத வாசகர்கள். உண்மை. அவர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் நான் அதுவரை அறிந்திராதவர்கள். மட்டுமல்ல. இன்று வரை அவர்கள் அதற்குப் பிறகு என்னைத் தொடர்பு கொள்ளவும் இல்லை. இதெல்லாம் ஒரு எழுத்தாளனாக வாழ்வதன் பலன். ஆனால் இதோ பாருங்கள், அந்தோனின் ஆர்த்தோ பற்றி ஒரு உலகத் தரமான நாடகம் எழுதியிருக்கிறேன். மூச்சுப் பேச்சைக் காணோம். என் வாசகர்கள் நூறு பேர் வாசித்தார்கள். அவர்கள் வாசகர்கள் மட்டும் அல்ல. என்னோடு தொடர்பில் உள்ள நண்பர்கள். பதிப்பகத்தில் வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு எத்தனையோ புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடலில் கரைத்த பெருங்காயமாகி விட்டது ஒரு உலகத் தரமான நாடகம். ஏன் இந்த ‘உலகத் தரமான’ என்ற வார்த்தையை இரண்டு முறை சொல்கிறேன் என்றால், அதைப் படித்த அத்தனை பேரும் அப்படியே சொன்னார்கள். ஆனாலும் கடலில் கரைத்த பெருங்காயம்தான். நூறு பேருக்கு எழுதுவதா எழுத்து? இதற்கு நாட்குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் கொண்டு போகலாமே?
இந்த யோசனையெல்லாம் எனக்குக் கடந்த ஒரு வார காலமாக ஓடிக் கொண்டே இருக்கிறது. எழுத்து எந்த வகையில் வாசகரைச் சென்று அடைய வேண்டும்? ஹார்ப்பர்காலின்ஸ் பதிப்பகத்திலிருந்து ஒரு செய்திக் குறிப்பு ஒரு வாரத்துக்கு முன்பு வந்தது. அதில் ”Conversations with Aurangzeb” என்ற நாவல் அக்டோபர் இருபதாம் தேதி வரப் போவதாக செய்தி. அந்த செய்திக் குறிப்பு வந்த மறுதினமே சூரத்தில் உள்ள ஒரு கல்வி நிலையத்தின் இலக்கிய அமைப்பிலிருந்து எனக்குக் கடிதம். நவம்பர் முதல் வாரத்தில் நடக்கும் எங்கள் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு ஔரங்ஸேப் நாவல் பற்றி உரையாடுங்கள் என்று அழைப்பு. என்னைப் பற்றிய செய்திகளும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. என்னுடைய எழுத்தோடு அவர்களுக்குப் பரிச்சயம் இருந்ததும் கடிதத்திலிருந்து தெரிந்தது. இன்னும் நாவல் வெளிவரவே இல்லை. அதற்குள் இந்த நிலை. தமிழில் நினைத்துப் பார்க்கிறேன். எந்த நாவலுக்கு இப்படி நடந்தது? அன்பு நாவலை நூறு பேருக்கு அனுப்பினேன். பலரிடமிருந்தும் கிடைத்தது என்ற தகவல் கூட இல்லை. நாவல் அச்சில் வந்தும் கூட அது பற்றிய சிறிய சலனம் கூட இல்லை. ஆனால் தமிழ் தெரிந்த ஒன்பது கோடி மக்களும் படிக்க வேண்டிய நாவல் அது. இப்படிப்பட்ட சூழலில்தான் என் முன்னோடிகளும் உழைத்தார்கள் என்பதுதான் எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.
இப்போது நடப்பது குறைந்த பட்சம் என் ஐம்பதாவது வயதிலாவது நடந்திருக்க வேண்டும். பரவாயில்லை. இப்போதாவது நடந்ததே என்பதுதான் திருப்தி.
பெட்டியோ நாவல் இன்னும் ஐந்தாறு தினங்களில் என்.எஃப்.டி.யில் விற்பனைக்கு வரும். நான் சுமார் நூறு பேருக்குக் கடன்பட்டிருக்கிறேன். வாஸ்தவத்தில் அவர்கள் அனைவருக்கும் நான் பெட்டியோவை இலவசமாகவே வழங்க வேண்டும். ஆனால் என் சீலே, மெக்ஸிகோ பயணத்துக்குப் பணம் தேவைப்படுகிறது. சீலே செல்லும் வழியில் லண்டனில் ஐந்து நாட்கள், மாத்ரித்தில் நாலு நாட்கள், அடுத்து மத்திய அமெரிக்காவில் மெக்ஸிகோ, அங்கிருந்து தென்னமெரிக்கா நகர்ந்து கொலம்பியாவில் மூன்று நாட்கள். பிறகுதான் சீலே.
நான்கு பேர் செல்கிறோம். ஒன்றரை மாதம். ஃபெப்ருவரி. நான், சீனி மற்றும் இரண்டு நண்பர்கள். அந்த இருவரும் எங்களுடன் ஒன்றரை மாதமும் இருப்பார்களா என்று தெரியவில்லை. அவரவர் விருப்பப்படி கிளம்பிச் செல்லலாம் என்று திட்டம்.
இதற்கு எனக்கு மட்டுமான செலவுக்காகத்தான் பெட்டியோவை என்.எஃப்.டி.யில் விற்பனை செய்கிறேன். இலங்கை சென்றேன். பெட்டியோ நாவல். ஜப்பான் சென்றேன். ரொப்பங்கி இரவுகள் நாவல். இந்த உலகச் சுற்றுப் பயணத்திலும் பல நாவல்கள் கிடைக்கும். இது இன்பச் சுற்றுலா அல்ல. நாவல்களுக்கான பயணம். உதாரணமாக, ஜப்பானில் தினமுமே 21000 அடிகள் நடந்தேன். சிரமம்தான். ஆனால் நாவல் கிடைத்தது. பெட்டியோ விலை விவரம் கீழே.
முதல் பிரதி 2 லட்சம் ரூபாய்
2ஆவது பிரதியிலிருந்து 9ஆவது பிரதி வரை 10000 ரூ.
பத்தாவது பிரதி ஒரு லட்சம் ரூபாய்.
11ஆவது பிரதியிலிருந்து 24ஆவது பிரதி வரை 10000 ரூ.
25ஆவது பிரதி – ஒரு லட்சம் ரூபாய்
26இலிருந்து 49 வரை 10000 ரூ.
50ஆவது பிரதி – ஒரு லட்சம் ரூபாய்.
51இலிருந்து 74 வரை 10000 ரூ.
75ஆவது பிரதி – ஒரு லட்சம் ரூபாய்.
76இலிருந்து 90 வரை – 10000 ரூ.
91 முதல் 99 வரை – ஒரு லட்சம் ரூபாய்.
100ஆவது பிரதி – 5,00,000 ரூபாய்.
ஒரு முக்கிய விஷயம். புத்தகத்தை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி விட்டு இதே விலைக்கோ இதை விட அதிக விலைக்கோ விற்று விடலாம். என்.எஃப்.டி.யில் அப்படித்தான். நூறு பிரதிக்கு மேல் புத்தகம் கிடைக்காது.
இந்த என்.எஃப்.டி.யில் எனக்கு சம்மதம் இல்லை. ஜப்பானில் ஒரு எழுத்தாளரின் முதல் பதிப்பு இருபது லட்சம் பிரதிகள் போகின்றன. இப்போதும் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இலக்கியம் வாசிக்கிறார்கள். ரயிலில் முன்பு புத்தகமாகப் படித்தார்கள். இப்போது மொபைல் ஃபோனில் புத்தகம் படிக்கிறார்கள். எல்லோரையும் எட்டி எட்டிப் பார்த்து விட்டே சொல்கிறேன். எனக்கோ இருநூறு பிரதிகளே விற்கின்றன. ராயல்டி 4000 ரூ. ஒரு ஆண்டுக்கு. அதற்கு மேல் அந்த நூல் விற்காது. இப்படிப்பட்ட நிலையில்தான் என்.எஃப்.டி.க்குப் போகிறேன். உங்கள் ஆதரவு தேவை.