நான் சமீபத்தில் எழுதிய அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கலகக்காரனின் உடல் என்ற நாடகத்தை வாசித்திருந்தால் நதீகாவின் புகைப்படங்களை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும்.
நான் நாடகத்தின் பக்கமே வராமல் இருந்ததற்குக் காரணம், என் நாடகம் மனித உடல் பற்றியதாக இருக்கும் என்பதால். அங்கே ஆடை இருக்காது. நிர்வாணம்தான். ஜப்பானிய ஆன்செனில் எல்லோரும் நிர்வாணமாக நீராட வேண்டும். (ஆண்கள் தனியே, பெண்கள் தனியே.) அந்த நிர்வாணம் உடலின் வாதையைப் பேசவில்லை. அது பற்றி விரிவாக ரொப்பங்கி இரவுகள் நாவலில் விளாசியிருக்கிறேன். முதல் குறிப்பாக, என் நாடகத்தில் பலருக்கும் ஆடையே இருக்காது. இதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை. அமெரிக்காவிலேயே அது வெகுஜன நாடகத்தில் கிடையாது. மாற்று நாடகங்களில் மட்டுமே உள்ளது.
ஆனால் இலங்கையில் சிங்களத்தின் ஆர்த்தோ என்று அழைக்கப்படும் நதீகா பண்டார என்ற பெண் நான் நினைத்ததை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். செப்டம்பர் 27 நான் இலங்கை செல்வதாகவும் அக்டோபர் முதல் வாரத்தில் நதீகாவின் நாடக அரங்கேற்றம் என்றும் முடிவு செய்யப்பட்டது. நாடகத்தின் பெயர் உல்லாஸ விஷாத. இந்த நாடகத்தின் கருப்பொருள், யோனியின் அறம், யோனிக் குருதியின் அறம், விபச்சாரியின் அறம். ஆனால் செந்தில்குமார் அப்போதுதான் என்னை ஜப்பானுக்கு அழைத்தார். அதுவும் அதே செப்டம்பர் 27ஆம் தேதி. அதனால் நான் கேகேயிடம் (சமன் குமார) நவம்பரில் வருவதாகக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். ஆனால், என் வருகைக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. நல்லவேளை, டிக்கட் மட்டும்தான் எடுக்கவில்லை. எடுக்கலாம் என்று இருந்த அன்றுதான் செந்திலின் அழைப்பு வந்தது.
2002இலேயே செந்தில் என்னை ஜப்பானுக்கு வரும்படி அழைத்தார். நானும் ஜப்பான் செல்வதாக என் தளத்தில் எழுதி விட்டேன். ஆனால் விதி விளையாடி நான் ஜப்பான் செல்ல முடியாமல் போய் விட்டது. அடுத்த அழைப்பு இது. அதே செந்திலிடமிருந்து. இந்த முறை நம்முடைய முறைக்கு நாம் தள்ளிவிட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். சீலே என் தாய் தேசம்தான். ஆனால் அங்கே என்னால் சாப்பிட முடியாமல் இருபது நாள் பட்டினி கிடந்து கால் சராய் இடுப்பில் நிற்கவில்லை. பெல்ட் அணிந்தும். ஆனால் சென்னையிலேயே நான் ஜப்பானியனாக வாழ்பவன். ஜப்பானிய உணவு விடுதிகளுக்குச் சென்று பச்சையான, சமைக்காத சுஷியை உண்பவன். இன்னும் இப்படி நூறு விஷயங்கள்.
கே.கே. பதிலே எழுதவில்லை. பரவாயில்லை என்று ஜப்பான் கிளம்பி விட்டேன். கோபம் தணிந்தோ என்னவோ பத்துப் பதினைந்து தினங்கள் கழித்து கே.கே.யிடமிருந்து பதில் வந்தது. ஜப்பான் பயணம் எப்படி இருந்தது?
அது கிடக்கட்டும். நதீகாவின் நாடகம் அரங்கேறி விட்டதா?
நீங்கள் இங்கே வரும்போதுதான் அரங்கேறும்.
அப்படியானால் நவம்பர் முதல் தேதி அங்கே இருப்பேன்.
அடுத்த நாள்தான் சூரத்திலிருந்து கடிதம். நவம்பர் நான்கு, ஐந்து தேதிகளில் சூரத்தில் இலக்கியம் பேச வேண்டும்.
சரி கே.கே. தேதியில் மீண்டும் ஒரு மாற்றம். நவம்பர் முதல் தேதிக்குப் பதிலாக ஒன்பதாம் தேதி வருகிறேன், என்ன ஆனாலும் சரி.
அப்படியானால் நதீகாவைக் கேட்கிறேன், தேதி.
நதீகா நவம்பர் பதினொன்று என்றார்.
ஒன்பதாம் தேதி கிளம்பி கொழும்பு சென்று அங்கிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதுக்கை என்ற சிற்றூரில் உள்ள கே.கே. வீட்டிலேயே தங்கியிருப்பேன். பத்து நாட்கள். பத்து நாட்களும் சிங்கள இலக்கியவாதிகளுடன் விவாதம். சிங்களக் கள்ளான கித்துள். கூடவே அனோஜனும் இருப்பார். இந்த அனோஜன் இலக்கிய வாசகர் மட்டுமே. மற்றபடி இலக்கிய உலகுக்கு வெளியே இருப்பவர். அராத்துவின் வாசகராக இருந்து இப்போது என்னையும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒருபோதும் எழுத மாட்டார். தைரியமாகப் பழகலாம். நீங்கள் கேட்கலாம், கே.கே.யும் எழுத்தாளர்தானே என்று. எனக்குப் பல மொழிகளில் நண்பர்கள் உண்டு. தமிழில் மட்டும்தான் யாரோடும் ஒத்து வர மாட்டேன் என்கிறது. ஜெ. விதிவிலக்கு.
இடையில் நவம்பர் பதினொன்று நதீகாவின் நாடக அரங்கேற்றம்.
குறைந்த பட்சம் பத்து நாட்கள் என்னோடு தங்க வேண்டும் என்பது கே.கே.யின் கட்டளை. மீதி பத்து நாட்கள் தெற்கு இலங்கை. இனிமேல் ஜென்மத்துக்கும் வடக்கேயும் கிழக்கேயும் போக மாட்டேன். கிழக்கில் எனக்கு அநேக நண்பர்கள் உண்டு. அவர்கள் என்னை பாதுக்கை வந்து சந்திக்கலாம்.
Stills Courtesy:
Nadeeka Bandara- art of feminine wisdom (solanasarchive.blogspot.com)