ஔரங்ஸேபின் ஆங்கில வடிவம் பற்றி…

நான்தான் ஔரங்ஸேப் நாவலை நீங்கள் தமிழில் படித்திருந்தாலும் அதன் ஆங்கில வடிவத்தைப் படித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். காரணம், அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நந்தினியையே ஒரு பாத்திரமாக மாற்றி நந்தினி என்ற பெயரைக் கூட மாற்றாமல் ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறேன். அதை நந்தினியே மொழிபெயர்த்தது அவரது பெருந்தன்மை. இன்னொரு முக்கியமான விஷயம், நந்தினி மொழிபெயர்ப்பாளர் அல்ல. அடிப்படையில் அவர் ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய நூல்களில் மிகவும் விவாதிக்கப்பட்டு, சர்ச்சையைக் கிளப்பிய நூல் invisible men. மொழிபெயர்ப்பில் அவர் ஈடுபட்டது தற்செயலாக நிகழ்ந்தது. அவ்வளவே.

ஹார்ப்பர்காலின்ஸ் எடிட்டர் கேட்டார், இந்த கொக்கரக்கோ என்ற பாத்திரம் கொஞ்சமாக எட்டிப் பார்த்து விட்டுப் போய் விடுகிறாரே, அவரை இன்னும் கொஞ்சம் விவரிக்க முடியுமா என்று. அதனால் கொக்கரக்கோவுக்கு இரண்டு அத்தியாயம்.

இப்படியாக, தமிழ் வடிவத்திலிருந்து ஆங்கில வடிவம் பெரிதும் மாறியிருக்கிறது. அது தவிர, நான் ஒவ்வொரு பதிப்பிலும் என் பிரதியை செப்பனிட்டுக் கொண்டும், சேர்த்துக் கொண்டும் இருப்பேன் என்பதால், ஆங்கில வடிவத்தில் மேலும் சில மாற்றங்களும் உண்டு.

அதனால்தான் நீங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

என் தமிழ் பற்றி நான் பெருமிதம் கொள்வதுண்டு. என் நடை எனக்குக் கிடைத்த வரம். அந்த அளவுக்கு நந்தினியின் ஆங்கிலம் அழகானது. இந்தியாவில் தருண் தேஜ்பாலுக்கு நிகராக ஆங்கிலம் எழுதக் கூடியவர்கள் யாரும் இல்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால் நந்தினியின் ஆங்கிலம் தருணை விட சிறப்பாக உள்ளது. காரணம், தருணின் நடை கடினமாக இருக்கும். அகராதியைப் பார்க்க வேண்டியிருக்கும். நந்தினியின் ஆங்கில நடை தென்றலைப் போல் நளினம் கூடியது. ஒரு அழகான கவிதையை ஒரு இனிமையான குரலில் வாசிக்கக் கேட்பது போல் உள்ளது. “ஒரிஜினலை விடப் பிரமாதப்படுத்தியிருக்கிறாயே நந்தினி!” என்று சொன்னேன். அதனால்தான் சொல்கிறேன், Conversations with Aurangzeb நாவலைப் படித்துப் பாருங்கள் என்று.

புத்தகத்தை வாங்க:

Conversations with Aurangzeb : A Novel : Nivedita, Charu, Krishnan, Nandini: Amazon.in: Books