ஔரங்ஸேப் பற்றி ஒரு கடிதம்

அன்புள்ள சாரு,

சில நாட்களாக இரவு ஆரம்பிக்கையிலே ஏதோ விபரீதமான எண்ணங்களும், மனிதர்களின் மேலுள்ள அபிமானமும் மாறிமாறி கேள்விகளாகத் துன்புறுத்திக் கொண்டே வந்தன. இப்படி இருக்கையில்தான் சில வாரங்களுக்கு முன்னர் தங்களுடைய ‘நான்தான் ஔரங்ஸேப்’ நாவலை வாசிக்கலாம் என்று எடுத்தேன். இதற்கு முன்னர் நான் படித்த உங்கள் எழுத்தில் இருந்து இது வேறு ஒன்றாக இருக்கிறது. உங்கள் பாணியில் சொல்ல வேண்டுமானால் முழுவதுமாக ரகளையான மொழிநடையில் மீறல் நிரம்ப பயணிக்காமல் ஔரங்ஸேப் பேசுவதில் இருந்தே மிகவும் அமைதியான ஒரு பாணியில் தொடங்குகிறது. அந்த அமைதியைக் கடைப்பிடித்தவாறு நான் தொடர்ந்து ஒவ்வொரு இரவிலும் இதனை வாசித்து வருகிறேன். இந்தப் புத்தகத்தில் முதல் பாகத்தை மட்டுமே வாசித்துள்ளேன். இந்த முதல் பாகத்தை முடிக்கும் முன்னர் ஔரங்ஸேப் பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டென ராணி துர்காவதி நுழைந்து பேசுவது ஒரு படபடப்பைக் கொடுத்தது என்றுதான் சொல்ல வேண்டும். இதனை ஒட்டி நிகழ்ந்த உரையாடல்கள் எல்லாம் வரலாற்றின் மீதான பார்வையை இன்னமும் விசாலப்படுத்தாமல் இருப்பதால்தான் வரலாற்றின் மீது ஏற்பட்ட ரத்தக்கறையை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லி வேறு ஒன்றாய்த் திரிக்கும் சுயநலமிக்க மனிதர்கள் தைரியமாக உலாவுகிறார்கள் என்று தோன்றுகிறது. (உதாரணமாக: Gandhi was Assassinated என்பதை மாற்றி Gandhi Had died என்று பாடப்புத்தகத்திலே இந்த திரிதல் தொடர்கிறது).

ஷா ஷூஜா, முராத் – ஔரங்ஸேப் சொல்வது போல இந்த இருவரும் ஒரு சாம்ராஜ்ஜியத்தை ஆள்வதற்கு லாயிக்கில்லாதவர்கள் என்று சொல்வது சரியெனப்படுகிறது. முராத்தின் இறுதி நிமிடங்களை உங்கள் எழுத்துக்களில் படிக்கையில் என் கண்முன்னே ஒரு மனிதன் சகலமும் கிடைக்கப் போகிறது என்கிற கொண்டாட்டத்தில் துச்சமான கனவானாக மாறிப்போய் அழிவை நோக்கி நகர்வது கூட அழகாகத்தான் தெரிகிறது. (அவ்வப்போது பேசும் ஔரங்ஸேபின் வார்த்தைகளும் கூட).

அதே போல ஷா ஷூஜாவை தற்போதைய அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. ஏனெனில் இக்காலத்திலும் கூட அரசியல்வாதிகள், அதிகாரம் உள்ளவர்கள் போகிற போக்கில் செய்வது போல கோவிலுக்குள்ளும், வெளியிலும் சிறு பெண்களை வன்புணர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக, ஔரங்ஸேப் தன் மகள் மீது வைத்த அன்பினை வைத்து தனியாக ஒரு குறுநாவல் நீங்கள் எழுதலாம் போல. ‘ஸெபுன் நிஸா’ – இவள் எழுதி வைத்த கவிதைகள் மீதும், சிறைப்பட்ட போது எழுதியதன் மீதும், ஔரங்ஸேப் இவள் மீது அன்பு வைத்திருந்து பின் சிறைக்குத் தள்ளி வருந்திய காலங்கள் மீதும் ஆர்வம் கூடுகிறது.

இப்படி இந்நாவலின் ஒரு பாகத்தை வாசித்து முடிக்கையில் இன்னும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. இப்போதைக்கு இந்த இரவில் மனதில் தோன்றியதை எல்லாம் எழுதிவிட்டேன். விரைவில் இந்நாவலை வாசித்து முடித்து விடுவேன் என்று நம்புகிறேன்.

சிவசங்கரன்