சித்த மருத்துவம்

ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் எந்த மருத்துவ முறைகளுக்கும் எதிரானவன் அல்ல. ஆனால் சித்த மருத்துவம் நம் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

காரணம்?

ஆங்கிலேயர்கள்.

நான் ஏற்கனவே இது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் சுருக்கமாகச் சொல்கிறேன். Zoltan Fabri ஹங்கேரிய சினிமா உருவாக்கிய மேதைகளில் ஒருவர். அவர் இயக்கிய எல்லா திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். அதில் ஒன்று The Fifth Seal. 1976இல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தை நான் 1979இல் பார்த்தேன். தில்லியின் மையப்பகுதியான கனாட் சர்க்கஸ் என்ற வட்டத்திலிருந்து கிளை பிரியும் கர்ஸன் ரோட்டின் நடந்தால் நம்பர் 1 என்ற கட்டிடம் ஹங்கேரியக் கலாச்சார மையம். அங்கே எப்படியும் வாரம் இரண்டு முறை ஹங்கேரியத் திரைப்படத்துக்குச் சென்று விடுவேன். படம் முடிந்து உயர்தரமான மதுவகைகள் பரிமாறுவார்கள். இப்போது டீ கூடக் கொடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் சொல்வது 44 ஆண்டுகளுக்கு முந்திய கதை. ஆனால் நேற்று நடந்தது போல் இருக்கிறது. இப்போது கர்ஸன் ரோட் கஸ்தூர்பா காந்தி மார்க். அந்தக் கர்ஸன் ரோட்டில்தான் தி. ஜானகிராமனின் அடுக்குமாடிக் குடியிருப்பு இருந்தது.

ஃபிஃப்த் சீலில் ஒரு இடம் வரும். நாஜிப் படைகள் ஹங்கெரியைப் பிடித்து விட்டன. நாஜிகளுக்கு எதிராக ஹங்கெரிய இளைஞர்கள் புரட்சிப் படைகளை அமைக்கிறார்கள். புரட்சியாளர்களைப் பிடித்துக் கொல்கிறது நாஜி ராணுவம். இரண்டு புரட்சியாளர்களும் அவர்களின் நண்பன் ஒருத்தனும் மதுபானம் அருந்திக் கொண்டிருக்கும்போது நாஜிகள் அவர்களைக் கைது செய்கிறார்கள். விசாரணையில் ஒரு புரட்சிக்காரன் சுட்டுக் கொல்லப்படுகிறான். மற்ற இருவரையும் கூட அப்படியே சுட்டுக் கொன்று விடலாமா என்று ஒரு சிப்பாய் தன் அதிகாரியைக் கேட்கிறான். அதற்கு அதிகாரி, “சுட்டுக் கொல்வதில் அர்த்தமில்லை, இவர்களை நடைப்பிணமாக்கி விட வேண்டும், இவர்களை நினைத்து இவர்களே வெட்கப்பட வேண்டும், நான் செய்வதை கவனி” என்று சொல்லி விட்டு, இரண்டு புரட்சிக்காரர்களின் நண்பனை அழைக்கிறான்.

“ஒரு புரட்சிக்காரன் கொல்லப்பட்டு விட்டான். இன்னொருவன், கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு இரண்டு கைகளும் கயிறுகளால் கட்டப்பட்ட நிலையில் இதோ நம் முன்னே தொங்குகிறான். இன்னும் சிறிது நேரத்தில் அவன் இறந்து விடுவான். அவன் கன்னத்தில் நீ மூன்று முறை அறைய வேண்டும். நீ புரட்சிக்காரன் இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் என் சிப்பாய் நம்ப மாட்டேன் என்கிறான். நீ இவனை அறைந்தால் நீ புரட்சிக்காரன் இல்லை என்று நிரூபணம் ஆகும். அறைந்து விட்டு நீ வீட்டுக்குச் செல்லலாம். இல்லையென்றால் என் சிப்பாய் உன்னையும் சுட்டுக் கொன்று விடுவான்.”

குற்றுயிராகத் தொங்கும் மனிதன் இவனுடைய உயிர் நண்பன். சாகப் போகும் நிலையில் உள்ள அவனை எப்படி மூன்று முறை அறைவது? ஆனாலும் நண்பன் அவனை அறைந்து விட்டுச் செல்கிறான். காரணம், நாஜிகளின் சித்ரவதைக் கூடங்களில் பெற்றோரைப் பறி கொடுத்த அனாதையான யூதக் குழந்தைகளைப் பாதுகாக்கும் விடுதி ஒன்றைப் பராமரித்துக் கொண்டிருக்கிறான். அவன் அங்கிருந்து தப்பிக்காவிட்டால் அத்தனை குழந்தைகளும் பட்டினியால் மரித்துப் போகும்.

ஆனால் அவன் தன் ஆயுள் முழுவதும் ஒரு நடைப்பிணமாகவே வாழ்கிறான். அவன் ஆத்மா செத்து விட்டது. சாகப் போகும் நிலையில் குற்றுயிராகத் தொங்கிய நண்பனை அடித்துக் கொன்று விட்டான். அவன் ஒரு புழு.

இந்தியர்களை அடிமைப்படுத்திய வெள்ளையர்கள் அவர்களிடம் சொன்னார்கள். நீங்கள் காட்டுமிராண்டிகள். சாதியின் பெயரால் உங்களில் ஒரு பகுதியைத் தீண்டாமையில் வைத்திருக்கிறீர்கள். பெண்களை எரித்துக் கொல்கிறீர்கள். நீங்கள் மிருகங்கள். கலாச்சாரம் இல்லாதவர்கள். நீங்கள் மூடர்கள். உங்களிடம் இருக்கும் எல்லாமே எரித்து அழிக்கப்பட வேண்டியவை. நீங்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள்.

இந்தியர்கள் அதை நம்பினார்கள். தாங்கள் கல்வியறிவில்லாதவர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் நினைத்தார்கள். அவர்களில் சிலர் வெள்ளையரின் மதத்தைத் தழுவினார்கள். வெள்ளையரின் கல்வியை ஏற்றார்கள். தங்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் தீயூட்டி எரித்தார்கள். அப்படி எரிக்கப்பட்டவைகளில் ஒன்றுதான் சித்த மருத்துவம். சித்தர்கள் மூடர்கள். ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் எழுதியதெல்லாம் வெற்றுக் குப்பை. ஆங்கிலேயரின் மருத்துவமே சிறந்தது.

குற்றவுணர்ச்சியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள். அதனால் அந்தக் குற்றவுணர்விலிருந்து மீள்வதற்காகத் தங்களுக்கு ஒத்தே வராத சிக்கன் ஃப்ரையும் சாப்பிடுகிறார்கள். இதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஃபிஃப்த் சீல் படம்தான் ஞாபகம் வரும்.

ஃபிஃப்த் சீல் படத்துக்கும் நம் நிலைமைக்கும் உள்ள ஒற்றுமை இப்போது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

எத்தனையோ முறை இங்கே நான் எழுதி விட்டேன். ஐயா, ஷுகர் ஷுகர் என்று கூவாதீர்கள். என் நண்பரும் சித்த மருத்துவருமான பாஸ்கரனிடம் சென்றால் அவர் சர்க்கரை வியாதியை குணப்படுத்துகிறார். சர்க்கரை வியாதியால் மிகப் பெரிய பிரச்சினையை சந்தித்தவர்களையெல்லாம் அவர் குணப்படுத்துவது பற்றி ஃபேஸ்புக்கில் பலரும் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். இது பாஸ்கரனின் கண்டுபிடிப்பு அல்ல. அகத்தியரும் போகரும் மற்ற பல சித்தர்களும் கண்டு பிடித்து எழுதி வைத்திருக்கிறார்கள். பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன். நேற்று கூட ஒருவர் அவருடைய அலுவலகத்தில் எல்லோருக்குமே ஷுகர் ப்ராப்ளம் என்கிறார். என் தளத்தை தினமும் படிப்பவர்தான். நான் வாயே திறக்கவில்லை. ஏனென்றால், பாஸ்கரனிடம் செல்லவில்லையா என்று நான் கேட்டால் அதற்கு ஏதாவது பதில் சொல்லி ஹி ஹி என்று இளிப்பார்கள். எதற்கு என்று விட்டு விட்டேன்.

என் நண்பர் ஒருவர். கொரோனாவில் அடிபட்டு, நுகரும் நரம்புகளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. கொத்தமல்லிக் கீரை பெட்ரோல் நாற்றம் நாறுகிறது. காஃபி வேறு ஏதோ நாற்றம் வருகிறது. இப்படிப் பெரும் குழப்பம். எந்த மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியவில்லை. பாஸ்கரனிடம் சொன்னேன். மருந்து கொடுத்தார். ஒரே மாதத்தில் பெரும் மாற்றம் தெரிகிறது. இப்போது கொத்துமல்லியில் பெட்ரோல் மணம் இல்லை. பூரண குணம் இல்லை. ஆனால் குணமாகி வருகிறது. பாஸ்கரனிடம் சொன்னேன். சித்தர்களின் சாதனை என்றார். அவருக்கே இது ஒரு சவால் என்றுதான் சொல்லியிருந்தார்.

இரண்டு மூன்று தினங்களாக என் வலது கண் துடித்துக் கொண்டே இருந்தது. வேலை செய்வதற்கு அது இடைஞ்சலாக இருந்ததால் கண் மருத்துவரிடம் போகலாமா, பாஸ்கரனைக் கேட்கலாமா என்று குழம்பினேன். கண் மருத்துவர் கேடராக்ட் என்பார். பாஸ்கரனை நாடினேன். அவர் அகத்தியரின் நயன விதி நூலின் பிரகாரம் மருந்து செய்து தருகிறேன் என்றார். உடனே இணையத்தில் அகத்தியரின் நயன விதி நூலைத் தேடினேன். கிடைத்தது. அது ஒரு புதையல். உங்களுக்கும் புரியும் என்றார் பாஸ்கரன். நான் ஆழமாக வாசிக்கவில்லை. நான் அர்ஜுனன் மாதிரி. என் இலக்கைத் தவிர வேறு எதிலுமே கவனம் கொள்ள மாட்டேன். மருத்துவத்துக்கு எனக்கு பாஸ்கரன் இருக்கிறார். என் நேரத்தை அதில் செலவிட மாட்டேன்.

சித்த மருத்துவத்தின் மூலம் புற்று நோயைக் கூட குணப்படுத்தலாம். சிறுநீரகப் பிரச்சினையை குணப்படுத்தலாம். இதய நோயைக் குணப்படுத்தலாம். நான் பாஸ்கரனின் பி.ஆர்.ஓ. அல்ல. உங்களின் நலம் விரும்பி. எல்லோரும் இன்புற்றிருப்பதுதான் என் நோக்கம். ஜப்பானில் மருத்துவர்களைத் தேட வேண்டியிருக்கிறது. அவர்களின் உணவும், அவர்களின் மதுவான சாக்கேயும், அவர்களின் நடையும் மட்டுமே காரணம். ஒரு நாளில் அவர்கள் பத்து கி.மீ. நடக்கிறார்கள். நடைப் பயிற்சியாக அல்ல. தினசரி வாழ்வே அப்படி. அந்த உலகில் பாஸ்கரன் தேவையில்லை. நோய்மையில் வாழும் நமக்கு அவர் தேவை.

அவரைத் தொடர்பு கொள்ள:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd0y47S8cloYqsqRYsz-J6RYVsRxy0ZG78kps7D3bvRkWEsgw/viewform?pli=1