ஜெயமோகனும் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காயும்…

நேற்று தருண் தேஜ்பால் தொலைபேசியில் அழைத்து ஜெயாமோகனுக்கு என்னுடைய நூல்களை நீ அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்டார்.  ஜெயாமோகனை இவருக்கு எப்படித் தெரியும் என்று ஆச்சரியப்பட்டேன்.  இன்று விடை கிடைத்து விட்டது. 

வாழ்த்துக்கள் ஜெயமோகன். 

இதைத்தான் கடந்த முப்பது ஆண்டுகளாக சொல்லி வருகிறேன்.  தமிழில் எழுதும் பெரும்பாலானவர்கள் சர்வதேச எழுத்தாளர்களுக்கு நிகரானவர்கள்.  ஆனால் சரியான மொழிபெயர்ப்பு இல்லாததால் நாம் சர்வதேச அளவில் தெரிய வராமல் இருந்தோம்.  இப்போது பல மொழிபெயர்ப்பாளர்கள் தோன்றி விட்டார்கள். 

சர்வதேச அளவில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கான போட்டியின் குறும்பட்டியலில் ஜெயமோகனின் The Stories of the True இடம் பெற்றிருக்கிறது.  அந்தக் குறும்பட்டியலில் இடம் பெற்றுள்ள இன்னொரு எழுத்தாளர் László Krasznahorkai.  ஹங்கேரியைச் சேர்ந்தவர்.  ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரும் நானும் ஒரே கருத்தரங்கில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தோம்.  எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளரான லாஸ்லோ க்ராஸ்னஹோர்காயைச் சந்திக்கும் ஆர்வத்தில் இருந்தேன்.  ஆனால் உடல்நலமின்மையால் அவரால் அக்கருத்தரங்கில் கலந்து கொள்ள இயலாமல் போனது. 

krasznahorkai

அவருடைய Satan Tango என்ற நாவலை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே படித்திருந்தேன்.  ஆனால் க்ராஸ்னஹோர்க்காயை நான் மிகவும் மதிப்பதற்குக் காரணம், அந்த நாவலை விட அவர் ஒரு திரைப்படத்திற்கு எழுதிய கதையும் வசனமும்தான்.  (உண்மையில் அந்தப் படத்தின் பாதி வரை வசனம் இல்லை.)

உலகில் உங்களுக்குப் பிடித்த ஒரே படம் எது என்று என்னைக் கேட்டால், தெ ட்யூரின் ஹார்ஸ் என்றே சொல்வேன்.  அந்தப் படத்தை உருவாக்கிய இருவரில் ஒருவர் க்ராஸ்னஹோர்க்காய்.  இவர் நோபல் பரிசு பெற்றாலும் ஆச்சரியம் இல்லை. அந்த அளவுக்கு சர்வதேச அளவில் பிரபலம் ஆனவர். 

அவரோடு ஜெயமோகனின் பெயரைப் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.  மீண்டும் சொல்கிறேன், நம்முடைய தமிழ் எழுத்தாளர்களில் பலரும் நோபல் பரிசு பெற்ற, நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட எல்லோரையும் விட சிறந்த படைப்புகளை அளித்தவர்கள். 

இந்தக் குறும்பட்டியலில் லாஸ்லோ க்ராஸ்னஹோர்க்காயையும் தாண்டி ஜெயமோகனின் தொகுப்பு வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.