சில மாதங்களுக்கு முன்பு நான் அருஞ்சொல்லில் சமஸுக்கு அளித்த நேர்காணல் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அது இப்போது புத்தகமாக வர இருக்கிறது. நேர்காணலை செப்பனிட்டிருக்கிறேன். நிறைய சேர்த்திருக்கிறேன். அந்த நேர்காணலை என்னுடைய சுயசரிதை என்றும் சொல்லலாம். கலையும் மீட்சியும்: ஒரு நேர்காணல் என்று தலைப்பு வைத்திருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் நூல் வெளிவரும். போகன் சங்கர் முன்னுரை தர இசைந்துள்ளார். அந்த நேர்காணலில் என்னுடைய சிவில் சப்ளைஸ் துறை அனுபவங்கள் சிலவற்றை விவரித்திருக்கிறேன். அதை அருஞ்சொல்லில் படித்த என் தில்லி நண்பர் கே. பெண்ணேஸ்வரன் இன்னும் மேலதிக விவரங்களை அப்போதே ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். அதை இங்கே தருகிறேன்.
இனி கே. பெண்ணேஸ்வரன்:
பேராசிரியர் செ. ரவீந்திரன் மற்றும் வெங்கட் சாமிநாதன் மூலம் எங்களுக்கு சாரு நிவேதிதா அறிமுகம் ஆனார். இந்த அறிமுகத்துக்கு முன்பே அவருடைய எழுத்துக்கள் மூலம் நான், என் நண்பர்கள் சுரேஷ், விஜய ராகவன் ஆகியோர் அவரை அறிந்திருந்தோம். அவரை சந்திக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தோம்.
ரவீந்திரனின் கரோல் பாக் வீடு அந்தக் காலத்தில் எங்களுக்கு மடம். ஞாயிற்றுக்கிழமை மாலைகள் அது எங்கள் மதுக்கூடம்.
நிறைய குடிப்போம். நிறைய பேசுவோம். நிறைய சண்டை போடுவோம்.
ரவீந்திரன் புதுப்புது புத்தகங்களாக எங்களுக்கு அறிமுகப்படுத்துவார். பல நாடகப் பிரதிகளை எனக்குக் கொடுத்திருக்கிறார்.
எங்கள் யதார்த்தா நாடக ஒத்திகைகளுக்கு சாரு மாலை நேரங்களில் தொடர்ச்சியாக வருவார். எந்த ஈகோவும் பார்க்க மாட்டார். பின்னால் நின்று கொண்டிருப்பார். திடீரென்று திரும்பிப் பார்த்தால் கையில் தேனீர்க் கோப்பையுடன் நிற்பார். “முதல்ல சாப்பிடுங்க கேபி” என்று வற்புறுத்துவார்.
ரொம்பவும் கூச்சமாக இருக்கும். மோகன் என்று எங்களுக்கு ஒரு நண்பர். எஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்தார். அவரும் சாருவும் எங்களை எங்கள் ஒத்திகை நேரங்களில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதைப் போல அன்பு செலுத்தியிருக்கிறார்கள்.
மிகவும் மிருதுவான குரலில் அன்பு ததும்பப் பேசும் சாருவை எங்கள் யதார்த்தா நண்பர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போயிற்று.
இது ஒருபுறம் இருக்க, சாரு சொல்லியிருப்பதைப் போல என்னுடைய உள்துறை அமைச்சகத்தின் நண்பர்களுக்கு மட்டும் அல்ல, எனக்குத் தெரிந்த எல்லோருக்கும் – தெருவில் போகிற வருகிறவர்களுக்கெல்லாம் கூட அவர் ரேஷன் கார்டு செய்து கொடுத்திருக்கிறார்.
அப்போதெல்லாம் எங்களுக்கு தில்லியில் அரசு வீடு ஒதுக்கப்படாத நேரம். ஏதாவது ஒரு அரசுக் குடியிருப்பில் சட்ட விரோதமாக சப்-லெட்டிங் முறையில் வாடகைக்கு இருப்போம். அந்த வீட்டின் முகவரியை எங்கள் முகவரியாக நாங்கள் யாருக்குமே தர முடியாது. தில்லியில் அப்போது மத்திய அரசு உத்தியோகத்தில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பல ஊழியர்களின் நிலையும் இதேதான். அதனால் அந்த முகவரியைக் கொடுத்து ரேஷன் கார்டு வாங்குவது சாத்தியமே இல்லாத விஷயம்.
இன்னொன்று, அப்போது தில்லியில் சர்க்கரை கடைகளில் கிடைக்காது. கிடைத்தாலும் யானை விலை. ரேஷன் கடைகளில் மட்டும்தான் சர்க்கரை கிடைக்கும். இதுவும் தவிர, ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டுமானால் ரேஷன் கார்டைக் காண்பிக்க வேண்டும். இப்படி எல்லா காரியத்துக்குமே அடிப்படையாக இருந்தது ரேஷன் கார்டுதான்.
இந்த நிலையில் எங்களுக்கு ஆபத்பாந்தவனாக வந்தவர் சாரு. ஒருநாள் மடத்தில் எங்கள் சிரமம் குறித்துப் பேச்சு வந்த போது சாரு தானாக முன்வந்து, “இது என்ன பெரிய வேலை கேபி? நான் அந்த இலாகாவில்தான் இருக்கிறேன்” என்றவர் தன் ஜோல்னா பையிலிருந்து ரேஷன் கார்டு விண்ணப்பத்தை எடுத்துக் கொடுத்தார். (உண்மைதான், அந்தக் காலத்தில் எப்போதுமே என் ஜோல்னாப் பையில் ரேஷன் கார்டு விண்ணப்பத்தை வைத்திருப்பேன் – சாரு).
”இதை நிரப்பி ரெண்டு ஃபோட்டோவோட நாளைக்குக் கொடுங்க” என்றார்.
அடுத்த நாள் காலையில் நான் சற்றும் எதிர்பாராத விதமாக அவரே என் வீட்டுக்கு வந்து “என்ன கேபி, ஃபார்ம் ஃபில்லப் பண்ணிட்டீங்களா?” என்று கேட்டு நின்றார்.
அவசர அவசரமாக அந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அவரிடம் கொடுத்தேன்.
அன்று மாலையே – நம்புங்கள் – அன்று மாலையே எங்கள் வீட்டுக்கு ரேஷன் கார்டுடன் அவரே வந்தார். ஜோல்னா பையிலிருந்து என் ரேஷன் கார்டை எடுத்துக் கொடுத்தார்.
எங்களால் நம்ப முடியவில்லை. இன்ப அதிர்ச்சியாக இருந்த்து. இப்போது இதை மிகச் சாதாரணமாக எழுதினாலும் அந்த நேரத்தில் அந்த ரேஷன் கார்டின் அருமை எங்களுக்கு மட்டும்தான் தெரியும்.
அடுத்த்துதான் அவருக்கு வந்தது சோதனை.
எங்கள் வட்டத்தில் ஒவ்வொருவராக அவரிடம் விண்ணப்பம் பெற்று ரேஷன் கார்டுகள் பெற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
உள்துறை அமைச்சகத்தில் என்னோடு பணி புரிந்த பல தமிழ் நண்பர்களுக்கும் கேட்டுக் கேட்டு ரேஷன் கார்டு செய்து கொடுத்தார் சாரு.
மட்த்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் வரும்போது ஒரு கத்தை ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் கொண்டு வந்து கொடுப்பார். நண்பர்கள் பூர்த்தி செய்து கொடுத்த ஓரிரு நாட்களில் அவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைத்தது.
மிகுந்த நன்றியுடன் இதை நான் பதிவு செய்ய வேண்டும். தில்லியில் அலுவலக ரீதியாக முகவரி இல்லாத என் போன்றவர்களுக்கு முகவரி ஏற்படுத்திக் கொடுத்தவர் சாரு என்றால் மிகையாகாது.
அப்போதெல்லாம் ரேஷன் கார்டு செய்து கொள்வதற்கு மிகுந்த லஞ்சம் கொடுக்க வேண்டும். அதிலும் சரியான ஆளைப் பிடிக்க வேண்டும். அவன் ஏமாற்றாமல் இருக்க வேண்டும். அவன் பின்னால் தெருத் தெருவாக அலைய வேண்டும். இது போன்ற சிரமங்கள் எதுவும் இன்றி எங்களில் பலருக்கும் உட்கார்ந்த இட்த்தில் இலவசமாக ரேஷன் கார்டு கிடைக்கச் செய்தவர் சாரு.
இதில் அவர் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவரால் எளிதாக தில்லியிலும், சென்னையிலும், புதுச்சேரியிலும் தலா இரண்டு வீடு வாங்கியிருக்க முடியும். ஆனால் இப்படி உதவுவதில் அவருக்கு ஏதோ இன்பம் இருந்திருக்கிறது. அந்த இன்பம் ஒன்றுக்காகவே அவர் நண்பர்களைத் தேடித் தேடி இப்படி உதவியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.