இலங்கைப் பயணம் (2)

நேற்று ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து, கொழும்பு செல்கிறீர்களே, கையில் போதுமான பணம் இருக்கிறதா என்று கேட்டார்.

பண விஷயம் கொஞ்சல் சிக்கல்தான். ஆனால் அதைத் தீர்த்து வைக்கும் மந்திரம் என் டிஸைனர் ஸ்ரீபத் கையில்தான் இருக்கிறது என்றேன்.

என்ன என்று கேட்டார். பெட்டியோ முதல் பிரதி இரண்டு லட்சம் ரூபாய். பிறகு இரண்டாம் பிரதியிலிருந்து பத்தாவது பிரதி வரை ஒரு லட்சம் என்று விலைப் பட்டியலை மாற்றி அமைத்திருக்கிறேன். ஒரு ஐந்து நண்பர்கள் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். பிரச்சினை தீர்ந்து விடும். ஆனால் பெட்டியோ டிஸைன் முடிந்தால்தான் நாவலை என்.எஃப்.டி.யில் விட முடியும். எல்லாம் விளக்கமாகச் சொன்னேன்.

அதெல்லாம் மெதுவாக நடக்கட்டும். இப்போதைக்கு 25000 ரூ. அனுப்பியிருக்கிறேன் என்றார்.

லௌகீக வாழ்வில் எனக்குக் கடன் பட்டிருக்கும் ஆத்மா எல்லாம் நடுவிரலைக் காண்பித்து விட்டுப் போய் விட்டது. ஆனாலும் என்னைச் சுற்றி மேலே குறிப்பிட்ட மாதிரியான நண்பர்கள் குழாம் நிறைந்திருக்கிறது.

நான் நண்பரிடம் சொன்னேன், ”இப்போதைக்கு இந்த இருபத்தைந்தாயிரத்தை வரவு வைத்துக் கொள்கிறேன். மீதி எழுபத்தைந்தாயிரத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வருடத்திலோ இரண்டு வருடத்திலோ அனுப்புங்கள். பெட்டியோ ஐந்தாவது பிரதியை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.”

***

இலங்கையில் நடக்க இருக்கும் சந்திப்புகள் பற்றி கேகேயிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறேன். ஆவணப்படம் என்றதும் பெரிதாகக் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். கையில் பரம்பைசா கிடையாது. நான் கட்டிக் கொண்டிருக்கும் கிழிந்த லுங்கிதான் நம் படத்துக்குத் தேவையான வெளிச்சத்தைக் கூட்டியோ குறைத்தோ தருவதற்கான ஸ்க்ரீன். கேமரா கடன் வாங்கியது. இந்தியத் துணைக்கண்டத்தில் எடுக்கப்படும் மிக மட்டரகமான porn படங்கள் மட்டுமே எடுக்கக் கூடிய கேமரா அது. மற்றபடி யாரிடமும் ஏன் பணம் இல்லை என்றால், இந்த ஏற்பாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள். Rasu Sulangi Thumberlina கேகேயின் மகள்.

இன்னொரு விஷயம். இத்தனை பெரிய உரையாடல்களையும் சந்திப்புகளையும் ஒரே இடத்தில் நடத்துவது என்றாலும் அதற்குப் பெரிய காசு வேண்டும் என்பதால் கேகே அதற்கு ஒரு மாற்று ஏற்பாடு சொன்னார். ஒவ்வொரு அமர்வையும் வெவ்வேறு தினங்களில் வெவ்வேறு இடங்களில் நடத்தலாம். நதீகா நாடகம் பற்றிய உரையாடல் மற்றும் விவாதத்தை நாடகம் முடிந்த பிறகு வைத்துக் கொள்ளலாம். உத்தேசமாக நவம்பர் 19. கேகேயின் இல்லத்தில். அனுசுராவுக்குப் பல்கலைக்கழகத் தேர்வுகள் இருப்பதால் அது முடிந்ததும் அவர் என்னோடு விவாதிக்கும் அமர்வை 21 அல்லது 20 இரவு வைத்துக் கொள்ளலாம். காவ்யா மற்றும் சுஜித் அக்கரவத்தா என்னை சந்திக்கும் அமர்வுகளை சரிதா திஸ்ஸநாயகாவின் ரெஸ்டாரண்டில் நடக்கும். இனோகா பள்ளியகுரு என்னை சந்திக்கும் அமர்வு ஜனகா லியனகேவின் பாலலாய்க்கா ரெஸ்டாரண்டில் நடக்கும். பாலலாய்க்கா கொஞ்சம் புத்திஜீவிகளிடையே பிரபலமான இடம். இது கொழும்புவிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நுகேகோடாவில் உள்ளது.

இது எல்லாமே ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சீலேயிலும் மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இருந்த கலாச்சார சூழலை எனக்கு நினைவுபடுத்துகிறது. இப்படித்தான் அவர்கள் நாடகம், கவிதை, இசை, இலக்கியம் மூலமாக ஒரு மேன்மையான கலாச்சாரம் வளர்வதற்கு வித்திட்டார்கள். இன்றைய தினம் சீலேயில் ஒரு டாக்ஸி டிரைவர் Jose Donosoவின் நாவலைக் கையில் வைத்துக் கொண்டிருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு விக்தர் ஹாராவும், வியலதா பார்ரா (Violeta Parra) போன்றவர்களும் போட்ட வித்துதான்.

ஸீரோ டிகிரி நாவல் பற்றிய அமர்வும் உண்டு. அதில் விவாதிப்பவர்கள் காவ்யாவும் அனுசுராவும்.

மீண்டும் சொல்கிறேன். ஏற்கனவே நூறு முறை சொன்னதுதான். இலங்கையில் தமிழருக்கும் சிங்களவருக்குமான அரசியல் பகையை ஒரு பக்கம் வைத்து விட்டு, கலாச்சாரம் பற்றி யோசியுங்கள். நான் இலங்கையில் மூன்று வாரம் இருந்தேன். சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் வாகனங்களின் குறுக்கே நாய்கள் ஓடுகின்றன, உயிருக்கு பயமாக இருக்கிறது என்று எழுதினேன். உடனே இலங்கை மக்களை நாய்கள் என்று திட்டி விட்டார் தமிழ்நாட்டிலிருந்து வந்த ஒரு எழுத்தாளர் என்று போலீஸில் புகார் கொடுத்து என்னை ஊர் ஊராகத் துரத்தி அடித்தவர்கள் தமிழர்கள். இப்போது சிங்களவர்கள் என் எழுத்தை மொழிபெயர்த்துப் படித்து கிட்டத்தட்ட எட்டு அமர்வுகளை ஒழுங்கமைக்கிறார்கள். படப்பிடிப்பு நடக்கும்போது ஒளியை சீர்படுத்த வேண்டும் அல்லவா, அதற்கு என் லுங்கியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார் கேகே. தமிழ் இனம் ஏன் இப்படி சினிமாவின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறது என்று புரியவில்லை.

எப்பாடுபட்டாவது பணம் சேர்த்து பெட்டியோவை வாங்கிப் படியுங்கள்.

***

கலையும் மீட்சியும் போன்ற ஒரு பாடாவதி தலைப்பை நீங்கள் எப்படி வைக்கப் போயிற்று என்று கேட்டார் வினித். உண்மைதான். வண்ணதாசன் புத்தகத் தலைப்பு போல் உள்ளது. தலைப்பை மாற்றி விடுவோம். வழக்கமாக என் புத்தகங்களுக்குத் தலைப்பு வைப்பது நேசமித்ரனும் சீனியும். சீனி ஒரு மாதம் வனவாசம் போய் விட்டார். நேசமித்ரனையே எப்போதும் தொந்தரவு செய்ய வேண்டுமா என்று நினைத்து நான் வைத்த தலைப்புதான் கலையும் மீட்சியும். உண்மையில் அந்த நூலுக்கு என் கதை என்றுதான் தலைப்பு வைக்க வேண்டும். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பே என் சின்நைனா நாமக்கல் கவிஞர் அந்தத் தலைப்பை வைத்து விட்டதால் அதை இனி வைப்பதற்கில்லை. வினித் சில அட்டகாசமான தலைப்புகளைச் சொன்னார். ஆனால் எல்லாமே ஆங்கிலம். அதேபோல் தமிழில் இருந்தால் தேவலாம். வினித் சொன்ன தலைப்புகள்:

MOM with Charu Nivedita (Minutes of the Meeting)

Song of the Ice and Fire: Unbarring Charu Nivedita (GOTயில் வந்தது)

Riot in the Garden: Encounters with Charu Nivedita

இம்மாதிரி ரகளையான ஒரு தலைப்பு தமிழில் சொல்லுங்கள்.