ஹார்ப்பர்காலின்ஸ் பதிப்பகத்தில் Conversations with Aurangzeb நாவல் இருபதாம் தேதி வரும் என்று சொல்லியிருந்தார்கள். என் நண்பர் ஒரு 150 பிரதிகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். அது எப்போது வருமோ என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். பொதுவாக எனக்கு மாதம் தேதி வருடம் எதுவுமே தெரியாது. இன்னிக்கு எதுக்கு விடுமுறை என்பேன். காந்தி ஜெயந்தி என்பார்கள். இல்லாவிட்டால் சுதந்திர தினம் என்பார்கள். தீபாவளி மட்டும் தெரிந்து விடும், பட்டாசின் காரணமாக. இந்த நிலையில் ரொம்பப் புதிதாக காலண்டரைப் பார்க்க ஆரம்பித்தேன். பதிப்பாளர் ராகுல் சோனி எதற்காகவோ அழைத்தார். மேற்கண்ட விஷயத்தைச் சொன்னேன். சொல்லி விட்டு, எப்போதடா நவம்பர் இருபது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன் என்றேன். அவர் சிரித்தபடி இது அக்டோபர் சாரு என்றார். அதன் பிறகு இன்னும் மூன்று நாள், இன்னும் இரண்டு நாள் என்று எண்ண ஆரம்பித்தேன். ஒன்றுமில்லை. புத்தகத்தைப் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில் இன்று பன்னிரண்டு மணி அளவில் இயக்குனர் வஸந்திடமிருந்து ஒரு புகைப்படம். அவர் ஒரு புத்தகக் கடையில் நிற்கிறார். அவர் கையில் Conversations with Aurangzeb நாவல்.
என்னது, புத்தகம் வந்து விட்டதா? உடனே ராகுல் சோனியைத் தொடர்பு கொண்டேன். அவரும் ஆச்சரியப்பட்டார். என்னது, புத்தகம் வந்து விட்டதா?
விற்பனை என்றால் இப்படி இருக்க வேண்டும். தலைமை நிறுவனத்துக்கே தெரியாமல் விற்பனைக்கு வந்து விட்டது புத்தகம். தெரிய வேண்டிய அவசியம் இல்லை. விற்பனைப் பிரிவு என்பது வேறு.
பிறகு வஸந்திடம் கேட்ட போது எந்தப் புத்தகக் கடை என்று தெரிந்தது. வஸந்த் தாதா சாஹேப் ஃபால்கே விருதுகளின் Non feature films பிரிவின் சேர்மனாக விருது வழங்கும் விழாவுக்கு தில்லி சென்றிருக்கிறார். அப்போது தில்லி விமான நிலையத்தின் புத்தகக் கடையில் ஔரங்ஸேபைப் பார்த்திருக்கிறார். விற்பனையில் ஏழாவது இடத்தில் இருக்கிறதாம். பெரிய விஷயம்தான். சாரு நிவேதிதா வட இந்தியர்களுக்குத் தெரியாத பெயர். அந்த நிலையில் இந்த ஏழாவது இடம்.
ஆச்சரியம் என்னவென்றால், புத்தகம் கடைக்கு வந்த முதல் நாள் இது!
இதை சாத்தியப்படுத்திய நந்தினிக்கும், ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகத்துக்கும், குறிப்பாக ராகுல் சோனிக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்.
வஸந்த் சொல்லாவிட்டால் இது எனக்குத் தெரிந்திருக்காது. பதிப்பகத்தாருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. வஸந்த் பற்றிக் கேட்டார்கள். வஸந்தின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது படங்கள் பற்றியும் சொன்னேன்.
புத்தகத்தை வாங்க:
Conversations with Aurangzeb : A Novel : Nivedita, Charu, Krishnan, Nandini: Amazon.in: Books