கோபி கிருஷ்ணன் மாஸ்டர் கிளாஸ் – 1

கொரோனா காலகட்டத்தில் நான் நம்முடைய தமிழ் இலக்கிய முன்னோடிகளைப் பற்றிப் பேருரை ஆற்றிக் கொண்டிருந்தேன். காலையில் ஆறு மணிக்குத் தொடங்கும் உரை அநேகமாக ஒன்பது மணிக்கு முடியும். பிறகு ஒரு மணி நேரம் கேள்வி பதில் பகுதி இருக்கும். கேள்விகள் மிகச் சுருக்கமாகவும் பதில்கள் மீண்டும் ஒரு உரை போன்றும் இருக்கும்.

ஆறு மணிக்கு ஆரம்பித்தால் ஒன்பது மணிக்கு உரையாற்றி முடித்து விட்டுத்தான் தண்ணீரே குடிப்பேன். இடையில் எது குறுக்கிட்டாலும் என் சிந்தனை ஓட்டம் தடைபடும்.

பத்து மணிக்குக் கொலைப்பசியுடன் சமையலறைக்கு ஓடினால் அங்கே அந்த இடம் துடைத்து விட்டுப் பளீரென்று இருக்கும். நான் வகுப்பில் இருந்ததால் ஸ்விக்கியிலும் ஆர்டர் கொடுத்திருக்க முடியாது. அந்தக் கொலைப்பசியுடன்தான் தோசை போட்டு சாப்பிட்டு விட்டு அவந்திகாவுக்கும் தோசை போட்டுக் கொடுப்பேன். அவந்திகாவே இதையெல்லாம் செய்ய வேண்டுமானால் அது காலை உணவாக இருக்காது. மதிய உணவு ஆகி விடும். அவளுக்கு வீடு பெருக்கித் துடைத்த பிறகுதான் வேறு எதையுமே செய்ய முடியும். அதற்குப் பத்தரை ஆகி விடும். அவள் நள்ளிரவு ஒரு மணிக்குப் படுத்து ஒன்பது மணிக்கு எழுந்து கொள்ளும் வழக்கம் உள்ளவள்.

இப்படி மூன்று மணி நேரம் தங்குதடையில்லாமல் பேசினாலும் தமிழில் நல்ல முறையில் உரையாற்றும் எழுத்தாளர் பட்டியலில் என் பெயர் இடம் பெறாது. ஜெயமோகன், எஸ்.ரா., இருவர் பெயர் மட்டுமே இருக்கும். காரணம், அப்படிப் பட்டியல் இடுபவர்கள் என் பேச்சைக் கேட்டதில்லை. ஏன், என் நெருங்கிய நண்பர் ஒருவரே என் பேச்சு எதையும் கேட்டதில்லை. கேட்டாலும் நல்ல பேச்சு என்ற ரகத்தில் சேர்க்க மாட்டார்.

நான் ஒன்றும் தமிழருவி மணியன் போலவோ, பாரதி பாஸ்கர் போலவோ பேச மாட்டேன். ஆனால் உலகின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் ஓஷோவை விட சிறந்த முறையில் பேசுவேன். சந்தேகம் இருப்பவர்கள் இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இந்த சுய மதிப்பீடு இருப்பதாலேயே என்னை சிறந்த பேச்சாளர் பட்டியலில் சேர்க்காதது பற்றியும் நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அவதானித்துக் கொள்கிறேன்.

இத்துடன் கோபி கிருஷ்ணன் பற்றிய மாஸ்டர் கிளாஸ்:

Gopikrishnan | Part 1 | Charu Nivedita Master Class Series | கோபிகிருஷ்ணன் – சாரு நிவேதிதா உரை – YouTube