ஜப்பான் பயணம் பற்றி ஏன் தொடர்ச்சியாக எழுதவில்லை என்று கேட்டு சில கடிதங்கள் வந்தன. ஒரே காரணம்தான். எழுத வேண்டிய பல விஷயங்கள் ரொப்பங்கி இரவுகளில் வருகின்றன. ரொப்பங்கி இரவுகளுக்காக பல நாவல்களைப் படித்துக் கொண்டும், பல திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். இங்கே இப்போது எழுதினால் நாவலை வெளியிடும்போது ஏற்கனவே படித்ததாக ஆகி விடும். நாவலில் வராத விஷயங்களை வேண்டுமானால் இங்கே எழுதலாம்.
ஜப்பானில் பத்து நாட்கள் இருந்தேன். அதில் ஒருநாள் செந்தில் அவர் இல்லத்துக்கு என்னை இரவு உணவுக்கு அழைத்திருந்தார். தாய்லாந்து மற்றும் இத்தாலிய உணவு. நான் பொதுவாக இரவில் ஒரு ஆப்பிளோ அல்லது வாழைப்பழமோதான் சாப்பிடுவேன். அதனால் அந்த அளவுக்கு உண்டானதை சாப்பிட்டேன். ஆனால் உணவு அதிருசியாக இருந்ததால் நான் எப்போதும் சாப்பிடுவதை விட இரண்டு மடங்கு சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்த பிறகுதான் பார்த்தேன், அமர்க்களமான தயிர் சாதம் இருந்தது. நான் ஒரு தயிர்சாதப் பக்கி. மதுபான இரவுகளில் கூட எனக்கென்று தனியாக ஒரு கிண்ணத்தில் தயிர் சாதத்தை எடுத்து மறைத்து வைத்து விடுவார் சீனி. அப்படி ரகசியம் செய்யாவிட்டால் மற்றவர்கள் காலி பண்ணி விடுவார்கள். நான் மூன்று மணிக்குத் தேடும்போது இருக்காது. எவ்வளவு குடியிலும் எனக்கான தயிர் சாதத்தை எடுத்து ஒளித்து வைக்க சீனி மறந்ததே இல்லை.
அதனால் வயிறு மிதமிஞ்சி நிரம்பியிருந்தாலும் தயிர் சாதத்தை எடுத்துக் கொண்டேன். செந்தில் வீட்டுக்கு வரும் வழியில் செந்தில் “எங்கள் வீட்டில் மாகாளிக் கிழங்கு ஊறுகாய் இருக்கிறது” என்று சொன்னது ஞாபகம் வந்தது. என்னைத் தவிர இன்னொரு மனித ஜீவி மாகாளிக் கிழங்கு ஊறுகாய் பிடிக்கும் என்று சொல்லி, அதை வீட்டிலும் வைத்திருப்பது என் வாழ்வில் நடந்த அதிசயங்களில் ஒன்று. பிராமண வீடுகளில் மட்டுமே – அதிலும் ஆயிரத்தில் ஒரு வீட்டில் – காணப்படும் அந்த சமாச்சாரம் தோக்கியோவில் என்னைப் போல் ஒரு அ-பிராமண நண்பர் வீட்டில் இருக்கிறது என்பது என்னைப் பொருத்தவரை அதிசயம்தான். காரணம், நம் தமிழ்ப் பண்பாட்டில் மொழியைப் போலவே வேகமாக அழிந்து வரும் இன்னொரு விஷயம், உணவு. உதாரணமாக, என் பால்ய காலத்தில் தினந்தோறும் இட்லிக்கு சென்னாங்குன்னிப் பொடி தொட்டுக் கொள்வேன். இப்போது அதன் பெயர் சொன்னால்கூடத் தெரியாது. முழுமையாக அழிந்து விட்டது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் சென்ற அன்று மாகாளிக் கிழங்கு ஊறுகாய் தீர்ந்துபோய் இருந்தது.
ஆனாலும் தயிர் சாதத்தை ஒரு வெட்டு வெட்டினேன். அதற்குப் பிறகுதான் நண்பர்களில் பலர் சேர்ந்து ரொப்பங்கி கிளம்பினோம். அதிலும் காரில் வந்த நண்பர்கள் வீட்டுக்குப் போய் விட்டார்கள். கார் இருந்தால் குடிக்க முடியாது. கார் இல்லாத நண்பர்கள் மட்டும் ரொப்பங்கி பக்கம்.
புகைப்படத்தில் இருப்பவர்கள்: (இடமிருந்து வலமாக) கௌரி ஷங்கர் (அமர்ந்திருப்பவர்), ஹரி, குறிஞ்சி, சாரு, ரா. செந்தில்குமார், கோவிந்த பாசம், ஆரோக்கியராஜ், முத்து (அமர்ந்திருப்பவர்)
இந்தப் புகைப்படம் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். செந்திலும் நானுமாக க்யோத்தோ, நாரா, மற்றும் ஹிரோஷிமா ஆகிய ஊர்களுக்குச் சென்றோம். இரவு முழுதும் நடனம். பகல் முழுவதும் அலைச்சல் என்று பயங்கரமாகப் போய்க் கொண்டிருந்தது. ஒரு மாதம் சுற்ற வேண்டிய இடங்களை பத்தே நாளில் பார்த்து முடித்தோம். இரவு மூன்று மணிக்குத்தான் படுக்கச் சென்றிருப்போம். காலை ஏழு மணி ரயிலைப் பிடிக்க ஆறு மணிக்கே எழுந்து பெட்டியையும் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும். ஆனால் அங்கே நான் இருந்த பத்து தினங்களில் என் பையை யாருமே என்னைத் தூக்க விடவில்லை. அவர்கள் பையோடு என் பையையும் எடுத்துக் கொண்டார்கள். அதை மறக்கவே மாட்டேன். என்னால் ஒரு கிலோ கூட எடை தூக்க இயலாது. சில இடங்களில் படி ஏற முடியாமல் மலைக் கோவில்களை வெளியே இருந்தபடியே பார்த்து முடித்துக் கொண்டேன். ஆனால் இரவு எட்டு மணிக்கு ஆரம்பித்தால் அதிகாலை ஐந்து மணி வரை கூட சாக்கே குடித்தபடி டான்ஸ் ஆடுவதற்கு மட்டும் உடம்பு நன்றாக இடம் கொடுக்கிறது. களைப்பே தெரிவதில்லை. (அந்தப் புகைப்படங்கள், விடியோக்கள் எல்லாம் நான் பூமியிலிருந்து விடை பெற்றுக் கொண்ட பிறகு வெளிவரும்.)
மேற்கண்ட புகைப்படம் நானும் செந்திலும் மியாஜிமா தீவில் உள்ள இட்சுகுஷிமா கோவிலில் எடுத்துக் கொண்டது. பின்புறம் தெரிவது தோரி எனப்படும் வாசல். (ஷிந்த்தோ கோவில்களில் இந்த ஜப்பானிய கேட் இருக்கும், ஷிந்த்தோ கோவில்களின் அடையாளம் இது என்று சொன்னார் செந்தில். இந்தத் தோரியை மிதக்கும் தோரி என்கிறார்கள். கடலில் மிதப்பது போல் அமைக்கப்பட்டிருப்பதால்.