குவாட்டர் ஓல்ட் மாங்க் (சிறுகதை)

பொதுவாக பெருமாளுக்கு வருடம் தேதியெல்லாம் ஞாபகம் இருக்காது. அதற்கு மாறாக இப்போது அவன் விவரிக்கப் போகும் சம்பவங்கள் எப்போது நடந்தன என்று நன்றாக ஞாபகம் இருந்தன. எல்லாம் நடந்து முப்பத்தைந்து ஆண்டுகள் இருக்கும். 

பெருமாளின் நண்பன் பெயர் குமார்.  உண்மைப் பெயர் அல்ல. கற்பனைப் பெயர்.  உண்மைப் பெயரைச் சொல்லத்தான் விருப்பம்.  ஆனால் அப்படிச் சொன்னால் அப்போது எனக்கு பெருமாள் என்றால் யார் என்றே தெரியாது என்று அவனுடைய ப்ளாகிலோ ஃபேஸ்புக்கிலோ பச்சைப் பொய் புளுகுவான் நண்பன்.  அதனால்தான் கற்பனைப் பெயரை வைக்க வேண்டியிருக்கிறது. சரி, பெயரா முக்கியம்? கதையைப் படியுங்கள்…

குமாரைத் தன் உயிர் நண்பராக நினைத்தான் பெருமாள்.  இப்போது அவன் கொக்கரக்கோவை எப்படி நினைக்கிறேனோ அவ்வாறே குமாரையும் நினைத்தான்.  இன்னும் அதிகப்படியாகவே என்று வைத்துக் கொள்ளலாம். குமாரும் ஒரு  எழுத்தாளன் என்பதால் பொறாமையின் காரணமாக அவன் பெருமாளுக்குப் பல துரோகங்களைச் செய்து அவனாகவே பெருமாளிடமிருந்து விலகியும் விட்டான். ஆனாலும் உயிருக்கு உயிராகப் பழகிய நாட்களை மறக்க முடியுமா என்ன என்று கேட்கிறான் பெருமாள். 

இந்தக் கதையை பெருமாள் சொல்லி நான் எழுதுவதால் இப்படிச் சொல்கிறேன்.  ஒருவேளை குமார் சொல்லி நானோ நீங்களோ எழுதினால் பெருமாள்தான் குமாருக்கு துரோகங்கள் செய்ததாக எழுதப்பட்டிருக்கும்.  விடுங்கள்.  அது இப்போது முக்கியமில்லை. 

இப்போது பெருமாளுக்கு ஒரு சந்தேகம்.  நாம்தான் குமாரை அப்படி உயிருக்கு உயிராக நினைத்தோம், அவன் அப்படி நினைக்கவில்லை என.  எப்படியோ போகட்டும்.  குமாருடன் பெருமாள் கழித்த பத்து ஆண்டுகள் பெருமாளின் வாழ்வில் மறக்க முடியாதவை. 

பணக்கார வீட்டுப் பிள்ளை.  உடம்பெல்லாம் மூளை.  இப்போது ஜெயமோகன் இருக்கும் இடத்தில் இருந்திருக்க வேண்டியவன் குமார்.  தன் துஷ்ட குணத்தினால் சீரழிந்து போய் விட்டான். 

ஒரு கட்டத்தில் விதி வசத்தினால் குமார் குடும்பத்தின் நிதி நிலைமை மோசமாயிற்று.  அப்போது பெருமாள் தான் பார்த்துக் கொண்டிருந்த மத்திய அரசு வேலைக்குப் போகாமல், வேலைக்குப் போகாததால் சம்பளம் இல்லாமல் தினச்சோறுக்கே சிங்கியடித்துக் கொண்டிருந்த காலகட்டம்.  குமார் வீட்டில் பெண்கள் இல்லை.  தந்தையும் மகனும்தான்.  அதனால் அங்கே போனாலும் சாப்பாடு கிடைக்காது.  குமாரின் பாட்டி இருந்தால் அற்புதமாக சமைத்துப் போடுவார்.

பல சமயங்களில் ஒரு குவார்ட்டர் ஓல்ட் மாங்க் வாங்கக் காசு இல்லாமல் தெருத்தெருவாக அலைந்து கொண்டிருப்பார்கள் நண்பர்கள் இருவரும். சமயங்களில் இண்டியன் எக்ஸ்பிரஸ் வளாகத்துக்குப் போய் (இப்போதைய எக்ஸ்ப்ரஸ் அவென்யூ) தினமணியில் வேலை பார்த்த சிவகுமாரிடம் ஐம்பது ரூபாய் கேட்பான் பெருமாள்.   அவரிடம் அவ்வளவு இருக்காது.  எல்லா பாக்கெட்டையும் துளாவிப் பார்த்து இருபது ரூபாயை எடுத்துக் கொடுப்பார்.  இன்னும் எப்படி எப்படியோ தேற்றி இருபத்தைந்து ரூபாய்க்கு குவாட்டர் ஓல்ட் மாங்க்கை வாங்கிக் கொண்டு பெருமாள் வீட்டுக்குப் போவார்கள்.  பெருமாளின் வீடு அப்போது மைலாப்பூர் சாய்பாபா கோவிலுக்குப் பின்னால் உள்ள வி.சி. கார்டன் முதல் தெருவில் இருந்தது. 

குவாட்டர் ஓல்ட் மாங்க் எங்கே இரண்டு பேருக்குக் காணும்?  தொண்டை லேசாக நனைந்திருக்கும்.  ஐந்து மணி வாக்கில் யாராவது நண்பர்கள் வருவார்கள்.  ஓல்ட் மாங்க் பாட்டிலோடு. 

பிறகு குமாருக்கு வேலை கிடைத்தது.  முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம்.

சமயங்களில் குமாரை அவனுடைய அலுவலகத்தில் சந்திப்பான் பெருமாள்.  குமாருக்குக் கீழே பத்துப் பதினைந்து பேர் வேலை பார்த்தார்கள்.  அமெரிக்க நிறுவனம். 

எல்லோரும் போன பிறகு குடிக்கலாமா என்று கேட்பான் குமார்.  பெருமாளை விட பதினைந்து வயது சிறியவன் குமார்.

ஓ, குடிக்கலாமே.

தன் நேப்பாளி வேலையாளை அழைத்து நூறு ரூபாய் கொடுத்து ஹாஃப் ஓல்ட் மாங்க் வாங்கி வரச் சொல்லி அனுப்புவான் குமார். 

இத்தனைக்கும் எத்தனை செலவு ஆனாலும் அதை நிறுவனத்திடமிருந்து விருந்தினர் செலவு என்று சொல்லி வாங்கிக் கொள்ளலாம்.  அது எப்படி பெருமாளுக்குத் தெரியும் என்றால், டீக்கடையில் இருவரும் மிளகாய் பஜ்ஜி சாப்பிடும்போது அதற்கு ஒரு ரசீது போட்டு வாங்கிக் கொள்வான் குமார்.  நிறுவனத்திடம் கொடுத்தால் பணம் கிடைத்து விடும்.

இது எல்லாமே பெருமாளுக்கு இன்று நினைவு வந்த காரணம் என்ன தெரியுமா?

வைதேகி காலை எட்டரை மணிக்கு மடிப்பாக்கம் சென்றாள்.   மாலை ஐந்தரைக்குத் திரும்புவதாகச் சொன்னாள்.  அப்படி அவள் வெளியே செல்வது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சம்பவம் என்பதால் பெருமாளும் அதற்குத் தயாரானான். 

இரண்டு கிளாஸ் வைன் அருந்தலாம்.  வாசனை வராது.  ஆனால் இரண்டு மணிக்குள் முடித்து விட வேண்டும்.  வீட்டில் ஒரு பதுங்குமிடத்தில் ஒரு கிளாஸ் வைன் மீதம் இருந்தது.  இன்னொரு கிளாஸ் வைன் தேவை.

இருங்கள்.  இங்கே கொக்கரக்கோவைக் கொஞ்சம் நுழைக்க வேண்டும். 

தமிழர்களுக்குப் பிளானிங் சென்ஸே இல்லை என்பான் கொக்கரக்கோ.  எப்படியென்றால், சனிக்கிழமை மாலைக் காட்சி சினிமாவுக்குப் போக வேண்டும் என்றால் புதன்கிழமையே அதற்காக முன்பதிவு செய்ய ஆயத்தமாவான் கொக்கரக்கோ.  நண்பர்களிடம் கேட்பான். ஒருத்தனும் ஒத்து வர மாட்டான். வேண்டாம் மச்சி, மூட் இல்லை. 

டேய் இன்னிக்கு இல்லடா, சனிக்கிழமைக்குத் தாண்டா.

இல்ல மச்சி.  வேணாம்.  சனிக்கிழமை வேற வேலை இருக்கு.  ஆளை விடு. 

ஆனால் சனிக்கிழமை ஐந்து மணிக்கு கொக்கரக்கோவுக்கு சம்பந்தப்பட்ட ஆத்மாவிடமிருந்து ஃபோன் வரும்.  டிக்கட் கிடைக்குமா? 

செருப்பால் அடிப்பேன், நாயே.

நாமும் இந்த கோஷ்டியில் சேர்ந்து விட்டோமே என்று இன்றைய தினம் தன்னிரக்கத்தில் ஆழ்ந்தான் பெருமாள். 

பெருமாளின் பக்கத்துத் தெருவில் இருப்பவர் கிருஷ்ணா.  அவர் வீட்டில் எப்போதுமே வைன் பாட்டில் இருக்கும்.  நேற்றே சொல்லியிருந்தால் இன்று அவர் அலுவலகம் செல்லும்போது கொண்டு வந்து கொடுத்திருப்பார்.  அது கூட வேண்டாம்.  காலையில் வைதேகி கிளம்பிய பிறகு சொல்லியிருந்தால் கூட கிடைத்திருக்கும்.

சாவகாசமாக பதினோரு மணிக்கு ஒரு கிளாஸ் வைனை முடித்த பிறகு கிருஷ்ணாவுக்கு ஃபோன் பண்ணினான் பெருமாள்.  அவரும் அதையே சொன்னார்.  (ஒன்பது மணிக்கு சொல்லியிருக்கலாமே பெருமாள்?)

இதற்கிடையில் பெருமாளின் வாசகி ஒருவர் அமெரிக்கா போய்த் திரும்பியபோது கையில் ஒரு வைன் போத்தலை பெருமாளுக்காக வாங்கி வந்தார்.  பெருமாளின் வீட்டுக்கு வந்து கொடுக்க முடியாது. வீட்டில் பெருமாள் டீட்டோட்டலர்.  அதனால் ஈஸ்வரியிடம் கொடுத்து விடுங்கள் என்று வாசகியிடம் சொல்லியிருந்தான் பெருமாள்.  ஈஸ்வரி பெருமாளின் உற்ற தோழி.  அவனிடம் எப்படியும் சேர்த்து விடுவாள்.  ஆடவர்களாக இருந்தால் குடித்து விடுவார்கள்.  ஆனால் வாசகி ஈஸ்வரியைப் பார்ப்பதற்குள் ஈஸ்வரி அலுவலகத்திலிருந்து கிளம்பி விட்டாள்.  இன்றைய தினம் அந்த வைன் அவனுக்கு இல்லை. 

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எலீட் டாஸ்மாக்கில் சீலே வைன் கிடைக்கும், வாங்கிக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தான் பெருமாள்.  அதில் பல இடைஞ்சல்கள் இருந்தன.  எல்லா ஆட்டோ டிரைவர்களும் வைதேகிக்குத் தெரிந்தவர்கள்.  டாஸ்மாக் போனது தெரிந்தால் உடனடியாக அது வைதேகிக்கு வத்தி வைக்கப்படும். 

சரி, கொஞ்ச தூரம் நடந்து போய் ஆட்டோ பிடிக்கலாம் என்று முடிவு செய்து எலீட் டாஸ்மாக்கின் வேலைநேரத்தை இணையத்தில் பார்த்தான்.  பதினொன்றிலிருந்து இரவு பத்து வரை என்று இருந்தது. 

கிளம்பினான்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எலீட் டாஸ்மாக் யாருமே கண்டு பிடிக்க முடியாதபடி ரகசியமாக இருக்கும் என்பதால் அதன் பக்கத்தில் உள்ள பழமுதிர் நிலையத்தையே அடையாளமாகச் சொல்வது பெருமாளின் வழக்கம்.  அதையே அந்தப் புதிய ஆட்டோக்காரரிடம் சொன்னான்.  பாட்டிலை ஒளித்தபடி எடுத்துக் கொண்டு வருவதற்கு ஒரு பிளாஸ்டிக் கவரையும் எடுத்துக் கொண்டான்.

எவ்வளவு?

அதைக் கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் சார்.

போன பிறகுதான் தெரிந்தது, டாஸ்மாக் பன்னிரண்டு மணிக்குத்தான் திறக்கும் என்பது. 

வந்த ஆட்டோவிலேயே திரும்பினான்.

வீட்டுக்கு வந்ததும் ஆட்டோக்காரர் முந்நூறு கேட்டார்.  அடப்பாவி. பக்கத்துத் தெருவுக்குச் சென்று வர முந்நூறு ரூபாயா?

பெருமாள் சராசரிகளோடு விவாதிப்பது இல்லை என்பதால் முந்நூறை அழுது விட்டு வந்தான். 

பிறகு என்ன?

மீண்டும் பன்னிரண்டு மணிக்குப் போய் ஒரு பாட்டில் சீலே வைன் வாங்கி வந்து இரண்டு கிளாஸ் குடித்து விட்டு பாட்டிலை ஒளித்து விட்டான்.  இந்த ஆட்டோக்காரர் நல்லவர்.  இருநூற்றைம்பதுதான் வாங்கிக் கொண்டார்.

குமாரையும் குவாட்டர் ஓல்ட் மாங்க்கையும் தினமணி சிவகுமாரையும் நினைத்துக் கொண்டான் பெருமாள்.