எழுதி முடித்த பிறகு பெருமாளிடமிருந்து ஃபோன் வந்தது.
கதைக்கு சரியான முடிவு இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தானாம் பெருமாள். அந்த முடிவைக் கொடுத்தாளாம் வைதேகி.
மடிப்பாக்கத்திலிருந்து திரும்பியவள் பெருமாளிடம் “வெளீல போயிருந்தியோ?” என்று திருடனை கையும் களவுமாகப் பிடித்த போலீஸ்காரன் கேட்பதைப் போல் கேட்டாள்.
“ஏன், அதுக்குள்ள வத்தி வச்சிட்டாங்களா?”
பெருமாள் சற்று ஆக்ரோஷமாகக் கேட்டான்.
(கீழே பணியில் இருக்கும் செக்யூரிட்டிகளின் பிரதான வேலை அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள குடும்பங்களில் இருப்பவர்களிடையே வத்தி வைப்பதுதான்).
பெருமாள் அப்படிக் கேட்டதும் வைதேகி கொஞ்சம் உஷாராகி விட்டாள்.
“அதெல்லாம் யாரும் சொல்லல. நானா கேட்டேன்.”
“அது எப்படிக் கேட்பே? வந்ததும் வராததுமா அது எப்படிக் கேட்கத் தோணும்? இங்கே உள்ளதுங்களுக்கெல்லாம் வத்தி வைக்கிறது மட்டும்தானே வேலை? ஆமாம். வெளியில்தான் போயிருந்தேன். பக்கத்து ஓட்டலில் போய் மீன் குழம்பு வாங்கி வந்தேன். அப்போதே கீழே பெருக்கித் துடைக்கும் பெண்மணி ‘அம்மா இல்லையா சார்?’ என்று கேட்டது.”
”அந்தப் பொம்பள இப்போ எங்கே இருக்கு? நான் சும்மாதான் கேட்டேன்.”
வைதேகி சும்மா கேட்டிருக்க மாட்டாள் என்று உறுதியாக நம்பினான் பெருமாள். ஆனாலும் யார் சொல்லியிருக்கக் கூடும் என்று தெரியவில்லை. அவள் சொல்வது போல் பெருக்கித் துடைக்கும் பெண்மணிக்கு மாலை நேரத்தில் வேலை இல்லை. மற்றபடி பெருமாள் வெளியே சென்று வந்தது எந்த செக்யூரிட்டிக்கும் தெரியாது. அவன் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குப் பின்னால் உள்ள வாசல் வழியாகத்தான் போனான், வந்தான். அந்த வாசல் வழியாகப் போனால் செக்யூரிட்டிகள் பார்க்க முடியாது. அப்படியும் வைதேகி ஏன் கேட்டாள், எப்படிக் கேட்டாள் என்று தெரியவில்லை…